19 செப்டம்பர் 2011

ஒலிமாசு02

        
          அன்பு நண்பர்களே,வணக்கம். 

      அனைவரும் கற்றுணர வேண்டிய நிகழ்வுகளில் ஒலிமாசு மிக முக்கியமானதாகும்.

          நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு மாசுகளைப் போன்றே ஒலி மாசும் மனித வாழ்நிலையைப் பெருமளவு பாதிக்கின்ற காரணியாகத் திகழ்கிறது. உலகத்தில் மனிதர்களால் பேசப்படும் மொழிகள் அனைத்தும் ஒலிகளை அடிப்படையாகக் கொண்டே தொடங்கின.


பறவைகள், விலங்குகள், பூச்சிகள், வாகனங்கள், தொழிற்சாலைகள் என ஒலிகளின் பிறப்பினை எத்தனையோ வடிவங்களில் நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். செவிக்கும், புலனுக்கும் இனிமை தருகின்ற இசை, பாடல் ஆகியவையும் ஒலியிலிருந்தே பிறக்கின்றன. ஏதோ ஒரு சூழலில் ஏதுமற்ற அமைதி நிலவினால் கூட, நம்மால் அதனைச் சகித்துக் கொள்ள இயலுவதில்லை.


        நம்மைச் சுற்றி ஏதேனும் ஒலித்துக் கொண்டிருப்பதை மனித மனம் எப்போதும் விரும்புகிறது. அந்த அளவிற்கு சத்தங்களோடு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரம் அளவுக்கு மீறிய ஒலியையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இசையின் ஒலியில் மயங்கிப் போகின்ற நமது மனம், அதே இசை பெரும் இரைச்சலோடு வெளிப்படும்போது முகம் சுழித்துக் கொள்கிறது.


        காதொலிக் கருவியின் மூலம் பண்பலை வானொலியில் பாடல் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே பாடல் கூம்புக் குழாயில் நம் வீட்டுத் தெரு முனையில் ஒலிபரப்பானால், நம்மால் கேட்க முடிவதில்லை. 

              இதற்குக் காரணம் ஒலியின் அளவு. நம் காதால் கேட்கப்படும் இசையானது, அளவினை மீறும்பட்சத்தில் இரைச்சலாக மாறிவிடுகிறது. உடனே இரு காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டு, அந்த ஒலி கேட்கும் அளவைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்கிறோம்.



     அதிலும் தொலைக்காட்சி, வானொலி ஆகியவை பல்வேறு புதிய வடிவங்களில் நமக்குள் ஊடுருவிக் கொண்டேயிருக்கின்றன. இன்று பண்பலை ஒலிக்காத வீடுகளே இல்லை, தொலைக்காட்சியின் தொடர்கள் ஒலிக்காத இல்லங்களைக் காணுவது அரிது என்ற நிலைக்கு ஒலி-ஒளியின் அத்துமீறல் மிகப் பெரும் வீச்சில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
     

          பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்களின் படிப்பு, உடம்பிற்கு இயலாமல் படுத்துக் கிடக்கும் முதியவர்கள், மருத்துவமனைப் பகுதிகள், குடியிருப்புகள், பள்ளிகள், கோவில்கள் ஆகியவை அதிகபட்ச ஒலிச்சூழலால் தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. 


          ஒலி அத்துமீறல் நிகழ்கின்ற களங்களின் எண்ணிக்கையும், சராசரியான ஒலி அளவும் தற்போது மிகவும் அதிகரித்துவிட்டது. உலக நலவாழ்வு நடுவம் அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, உலகிலுள்ள 10 வயதிற்குட்பட்ட சிறார்களில் 5 விழுக்காட்டினர் ஒலி மாசு காரணமாக தங்களது செவியின் கேட்புத்திறனை இழந்துள்ளனர். உச்ச அளவான 75 டெசிபல்லுக்கும் மேலாக இரைச்சலை உணரும் அனைவரும் தலைவலி, சோர்வு, தலைசுற்றல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். 

       இயந்திரத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரில் நான்கில் ஒரு பகுதியினர் செவித்திறனை இழந்து, பல்வேறு நோய்களால் அவதிப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

       தற்போது இந்தியாவில் ஆயிரத்தில் 35 பேருக்கு காது இரைச்சல் நோய் உள்ளதாகவும், புறநகர்ப் பகுதிகளில் வசிப்போரில் 10 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் வசிப்போரில் 7 விழுக்காட்டினரும் ஒலியுணரும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர். 

         ஒலியளவு அதிகரித்துள்ள பகுதிகளில் வாழ்கின்ற நபர்களில் பெரும்பாலானோருக்கு நரம்புத்தளர்ச்சி மற்றும் இதயநோய் பாதிப்புகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தொடரும் இரைச்சல் நிலை மனித இறப்புக்கும் கூட வித்திடக்கூடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.


       அதிகமாய் ஒலியை எழுப்பும் ராக் இசையின் அதிகபட்ச அளவு 150 டெசிபல்,   அவசர மருத்துவ ஊர்தி, விமானங்களின் இரைச்சல் 140 டெசிபல், ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதால் ஏற்படும் சத்தம் 130 டெசிபல், பரபரப்பான கடைத்தெருவில் ஏற்படும் இரைச்சல் 80 டெசிபல், 
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எழும் இரைச்சல் 70 டெசிபல், சத்தத்துடன் பொழியும் மழையின் அளவு 50 டெசிபல், 
அமைதியாகக் காணப்படும் நூலகங்களில் ஒலி அளவு 30 டெசிபல் 
(நன்றி தினகரன், அக்டோபர் 19 2010) 

      பொதுவாக 50லிருந்து 75 டெசிபல் வரை நம் காதுகள் கேட்கும் சராசரி அளவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த அளவைக் காட்டிலும் அதிகமாகவே ஒலி மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.


        தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 84 விழுக்காடு ஆசிரியர்களுக்கும், 92 விழுக்காடு மாணவர்களுக்கும் செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

          வாகனப் போக்குவரத்து நடைபெறும் இடங்களைக் காட்டிலும் கடைத்தெருக்களில் இரைச்சலின் அளவு அதிகமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

         மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 55 டெசிபல் அளவை பகலிலும், 45 டெசிபல் அளவை இரவிலும் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

      அதிகபட்ச வரம்பிற்கு மேல் ஒலி அளவு வெளியிடப்படுவதைக் கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள ஏழு நகரங்களில் ஒலி மாசு கண்காணிப்பு நடுவம் அமைக்கப்படும் என நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெ.ரமேஷ் கடந்த சனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

         தற்போதைய நிலையில் மிகவும் அவசியமான, தேவையான ஒன்றாகக் கருதப்படும் இந்த ஒலி மாசு நடுவங்கள், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் விரைந்து உருவாக்கப்படுதல் வேண்டும். இதன் மூலம் ஒலி அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், வரையறுக்கப்பட்ட ஒலி அளவை அந்தந்த இடங்களில் எச்சரிக்கைப் பலகையாக அமைத்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்துதல் மிகவும் அவசியம்.


          ஒலி மாசு தொடர்பான தேசிய மற்றும் மண்டல அளவிலான கொள்கையினை வகுப்பதற்கு இந்த ஒலி மாசுக் கண்காணிப்பு நடுவங்கள் பேருதவியாக இருக்கும். 

        ஒலி மாசு ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் கடந்த 2000ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மிக அண்மையில் அதில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

        மேலும் இச்சட்டத்தை திறம்படச் செயல்படுத்தவும், மாநில அரசுகளை ஊக்குவிக்கவும் ஒலி மாசு கண்காணிப்பு நடுவங்கள் உதவியாக இருக்கும் என்று நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

       விரைந்த நகர்மயமாதல், தொழில்மயமாதல் ஆகியவற்றின் பக்க விளைவுகளாக நிலம், நீர், காற்று, ஒலி ஆகியவற்றில் கட்டுக்கடங்காத வகையில் மாசு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 


             இதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், மேலும் தொடர்ந்து கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த சட்டம் மற்றும் நிர்வாக முறை அவசியமாகிறது.


       இந்தியாவின் மென்பொருள் தயாரிப்பில் முக்கியமான நகரமாகக் கருதப்படும் பெங்களூருவில் ஒலி மாசு மற்றும் சூழல் மாசு ஆகியவற்றின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10 போக்குவரத்துக் காவலர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். 

         தற்போது நகருக்குள் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை 35 இலட்சத்தைத் தாண்டிவிட்டன. பெங்களூரு நகருக்குள் அலுவல் நாட்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கவே இயலாத ஒன்றாகிவிட்டது. போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் மட்டும் ஏறக்குறைய மூவாயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

        வாகனங்களின் இடைவிடாத ஒலி, தொடர்ந்த இரைச்சல், பரபரப்பு ஆகியவற்றால் மூச்சுவிடுதலில் கோளாறு, காதுகேளாமை, மந்தம், தூக்கமின்மை, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற உடற்கோளாறுகள் இயல்பாகிவிட்டன.

         போக்குவரத்தினை ஒழுங்கு செய்யும் காவலர்களுக்கே இந்தப் பாதிப்பென்றால், ஒலி மாசு நிகழும் இடங்களுக்கு அருகே வாழ்கின்ற பொதுமக்களின் நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

          இங்குள்ள வாகனங்கள் 100 டெசிபலுக்கும் மேலான ஒலியை எழுப்புவதால், போக்குவரத்துக் காவலர் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர் என்று பெங்களூரு மாநகராட்சியின் மேற்கு மண்டல துணை போக்குவரத்து ஆணையர் இராணே தெரிவிக்கிறார். இது பெங்களூருக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநகராட்சிகளிலும் இந்த நிலைதான்.


           போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்னனு ஒலிப்பான்களை போக்குவரத்துக் காவல் துறை திட்டவட்டமாக வரையறை செய்ய வேண்டும். அவரவர் விருப்பம்போல் பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்து, 80லிருந்து 85 டெசிபலுக்கு மேற்படாத அளவினைக் கொண்ட மின்னனு ஒலிப்பான்களைப் பயன்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். 


       தொழிற்சாலைப் பகுதிகளில் 75 டெசிபல், வணிகப்பகுதிகளில் 65 டெசிபல், குடியிருப்புப் பகுதிகளில் 55 டெசிபல், அமைதிப்பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களில் 50 டெசிபல் என மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் ஒலியின் அளவை இடத்திற்கேற்ப இசைவளித்துள்ளது. 


       இந்த அளவினை மீறும் தனிநபர்களையும், அமைப்புகளையும் கடும் தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.
    

        'ஓரிடத்தில் ஒலியளவு அதிகரிப்பதால் மனித நடத்தையிலேயே மாற்றம் ஏற்படுகிறது. அதிகபட்ச ஒலி மாசு, போதிய உறக்கமின்மை, எரிச்சல், செரிமானக்கோளாறு, நெஞ்சுஎரிச்சல், உயர்ரத்த அழுத்தம், அல்சர், இதயநோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.



        சில சமயங்களில் குறைந்தபட்ச ஒலியளவு கூட மேற்கண்ட பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை படைத்தவை' என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை நடத்திய ஒலி மாசு குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


        அத்துறையின் பேராசிரியர் முத்துச்செழியன் 'ஒலியளவைக் கட்டுப்படுத்த ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல, வாகனங்களில் 'மின்னனு காற்று ஒலிப்பான்களை' அறவே தடை செய்ய வேண்டும். சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் ஒலி மாசின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்' என்கிறார்.

         மதுரை நகருக்குள் ஒலி மாசு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2004ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2010இல் பல்வேறு இடங்களில் ஒலி மாசு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 25 டெசிபலுக்கும் கூடுதலாகவே அதிகரித்துள்ளதை மதுரை காமராசர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை கண்டறிந்துள்ளது.


          'சுற்றுச்சூழல் என்பது தனி மனித சொத்து அல்ல. பொதுச்சொத்து. மனித வாழ்க்கையை ஆரோக்கியமாக பேணிக் காக்க சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். 


        சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கும் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கும். ஆனால் பல்வேறு காரணிகளால் இன்று சுற்றுச்சூழல் மாசடையும் நிலை உள்ளது. 

        காற்று வெளி மாசு, நீர் மாசு, மண் மாசு, கடல் மாசு, உணவு மாசு, கதிரியக்க மாசு, ஒலி மாசு எனப் பல உதாரணங்களைக் கூற முடியும். 

               சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாதவாறு கட்டுப்படுத்துவது அல்லது கண்காணிப்பது முழுக்க முழுக்க அரசின் கடமை என எண்ணிவிடக்கூடாது. தனி மனிதன் ஒவவொருவருக்கும் சுற்றுச்சூழலைக் காக்கும் கடமை உள்ளது. குறிப்பாக இரைச்சல் மிகுந்த இன்றைய சூழலில் ஒலி மாசை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' 

              இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், மின்னனு காற்று ஒலிப்பான்களை தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். தடை செய்யப்பட்ட இடங்களில் அதனைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியேற்பும் மிக அவசியம்.

          ஒலி மாசு மனிதனை மட்டுமன்றி, இயற்கையையும், அந்த இயற்கையைப் பெரிதும் சார்ந்து வாழும் உயிரினங்களையும் பாதிக்கிறது. குறிப்பாக பறவை இனங்களின் வாழ்க்கைத் திறனை ஒலி மாசு அதிகளவில் பாதிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

             அமெரிக்காவின் வாசிங்டனிலுள்ள கொலாராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பிரான்சிஸ் தலைமையிலான ஆய்வுக்குழு, 32 வகையான பறவையினங்களை சத்தம் இல்லாத அமைதியான சூழலில் வைத்து வளர்த்தது. 21 வகையான பறவையினங்களை ஒலி மாசு அதிமுள்ள இடங்களில் வைத்து வளர்த்தது. 

        குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர், இந்தப் பறவை இனங்களை ஆய்வு செய்தபோது, ஒலி மாசு அதிகம் உள்ள இடங்களில் 3 வகையான பறவையினங்கள் மட்டுமே இருந்தன. மற்றவை வேறிடம் நோக்கிப் பறந்து விட்டன. 


            ஆனால் ஒலி மாசு தொந்தரவு இல்லாத அமைதியான சூழலில் வளர்க்கப்பட்ட பறவைகளில் 14 இனங்கள் அங்கேயே வசித்து வந்தன.
இந்த ஆய்வின் வாயிலாக ஒலி மாசு பறவைகளின் வாழ்நிலையைத் தீர்மானிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 


              அதே போன்று கடல் பகுதியில் மனிதர்களால் நிகழ்த்தப்படும் ஒலி மாசின் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், சில நேரங்களில் இறந்துபோகின்ற நிலைக்கும் கூட தள்ளப்படுகின்றன. 


          அண்மையில் அமெரிக்கக் கடற்பகுதியில் ஆயுதக்கப்பல்களால் எழுப்பப்பட்ட மிகு ஒலியின் காரணமாய், அக்கடல் பகுதியில் வாழ்ந்த திமிங்கலங்கள் அதிர்ச்சியில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் கடற்கரையோரம் படையெடுத்து ஒட்டுமொத்தமாய் இறந்து கரை ஒதுங்கின. 

          கடலில் பெருகிவிட்ட கப்பல் போக்குவரத்தால் கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் தங்களின் சுதந்திரத்தை இழந்து தவிக்கின்றன. தங்களுக்குள் தகவல்களைக் கூட பரிமாறிக் கொள்ள முடியாமல் பல்வேறு இடர்ப்பாடுகளுடன் வாழ்கின்றன.


          சுற்றுலா என்ற பெயரில் காடுகளுக்குள்ளும், மலை வாழிடங்களிலும் நடைபெறும் ஒலி மாசால் அங்குள்ள காட்டு விலங்குகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகின்றன. 


             அமைதியான சூழலில் வாழ விரும்பும் அனைத்து காட்டுயிர்களின் நிம்மதி மனிதர் நடமாட்டத்தால் குலைக்கப்படுகிறது. இதனால் பல்லுயிர்ச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. 


        மனிதன் தனது சுயநலத்தால் பிற உயிர்களை மட்டுமன்றி, தன்னையும் அழித்துக் கொள்கின்ற பேரவலம் ஒலி மாசின் காரணமாக நிகழ்த்தப்படுகிறது. 



          இதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை நடுவண் மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் மட்டுமன்றி தனி நபர்களும் முன் வருதல் வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலுள்ள ஆடியோ மற்றும்  வீடியோ வசதிகளை உடனடியாக நீக்கம் செய்திட வேண்டும்.
வாகனங்களின் மின்னணு ஒலிப்பான்களை வாகனங்களுக்கு ஏற்றாற் போல், ஒவ்வொரு வாகன வகைகளுக்கும் 75 டெசிபல் அளவை மீறாத வகையில் ஒலிப்பான்களை வரையறை செய்தல் வேண்டும். 


           அதனை மட்டுமே பொருத்துவதற்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும். பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களை நகருக்குள் அனுமதித்தல் கூடாது. பள்ளி, கல்லூரி, வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பேரணி நடத்தவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ இசைவளிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். 

            இயற்கை சார்ந்த சுற்றுலாவை குறிப்பாக வனச் சுற்றுலாவை ஊக்குவிப்பது சிறிதுசிறிதாகக் குறைக்கப்பட வேண்டும். பொதுவாக அனைத்து நகர்ப்பகுதியிலும் மரங்கள் பெருமளவில் நடப்பட்டு, பேணிப் பாதுகாக்கப்படுதல் வேண்டும். 

         கடல் பகுதியில் நடைபெறும் கப்பல் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்குட்படுத்தப்பட வேண்டும். கடல் வாழ் உயிரினங்களுக்கும் பல்லுயிர்ச் சூழலுக்குக் குந்தகம் நேராத வகையில் கப்பல் போக்குவரத்தை ஒழுங்கு செய்வது அவசர அவசியம்.


PARAMESDRIVER.BLOGSPOT.COM
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...