13 செப்டம்பர் 2011

மைக்ரோவேவ் அடுப்பு 01


 மைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம்

மைக்ரோ வேவ் (Microwave) என்பது சமையல் அறையில் சில பொருள்களை சூடுபடுத்த பயன்படும் சாதனம் ஆகும். இதில் ஒரு விதமான் மின்காந்த அலைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை மைக்ரோ வேவ் (micro wave) என்று சொல்லப்பட்டாலும், இவற்றின் அலை நீளம் (Wave length) சில செ.மீ. அளவில் இருக்கும். இவை மைக்ரோ வேவ் என்று சொல்லப்படுவது வழக்கினால்தான். முதலில் ரேடியோ அலை (வேவ்) பற்றி ஆராய்ச்சி செய்தார்கள். ரேடியோ அலைகள் மீட்டர் கணக்கில் இருக்கும். அதைவிட சிறிதாக அலை நீளம் கொண்ட இந்த அலைகளைப் பற்றி அடுத்து ஆராய்ந்தார்கள். இவை சிறிய அலை நீளம் கொண்டவை என்று குறிக்க ”மைக்ரோ வேவ்” என்ற பெயரை பயன்படுத்தினார்கள். உண்மையில் இவற்றின் அலை நீளம் மைக்ரான் அளவில் இல்லை. மைக்ரான் அளவில் அலை நீளத்துடன் இருப்பவை அகச்சிவப்பு கதிர்கள் ஆகும்.

சரி, அது பழைய கதை. இந்த மைக்ரோ வேவ் என்ற அலைகளை, வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் கருவியில், மின்சாரத்தை இந்த அலைகளாக மாற்ற ஒரு ”மைக்ரோ வேவ் ஜெனரேட்டர்” என்ற பாகம் உண்டு. இதன் மூலம் 2.45 GHz அதிர்வெண்ணில் இந்த அலைகள் உருவாகும்.

சமையலைப் பொறுத்த வரை இந்த மைக்ரோவேவின் நிறை என்ன? குறை என்ன?

ஒரு பிளாஸ்டிக் குவளையில் தண்ணீரை வைத்து, இந்த மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்தால், தண்ணீர் சூடாகிவிடும். ஆனால், குவளை நேரடியாக மைக்ரோ வேவில் சூடாகாது. சுடுநீர் பட்டதால், குவளை கொஞ்சம் சூடாகி விடும்.

இதனால், பாத்திரம் சூடாகாமல், பொருள் மட்டும் சூடாகும். செலவு மிச்சம். தவிர, மைக்ரோ வேவ், தண்ணீர் முழுவதையும் சூடாக்கும். இதை சரியாக விளக்க வேண்டும் என்றால், ஒரு காஸ் அடுப்பில் பாத்திரம் வைத்து, தண்ணீர் அல்லது அரிசியை சூடாக்கினால், முதலில் பாத்திரம் சூடாகும். அடுத்து பாத்திரத்தை ஒட்டி இருக்கும் தண்ணீர் அல்லது அரிசி சூடாகும். அரிசியை கிளறாமல் வைத்தால், பாத்திரத்தை ஒட்டி இருக்கும் அரிசி தீய்ந்து விடும். அதே சமயம், பாத்திரத்தில் மேலிருக்கும் அரிசி சூடாகாது.

ஆனால் மைக்ரோ வேவில், அரிசி முழுவதும் ஒரே சமயத்தில் சீராக சூடாகும். அதனால், ‘வெளியில் கருகி, உள்ளே வேகாமல் இருக்கும்' பிரச்சனை வராது.

மைக்ரோ வேவில் தண்ணீர் விரைவாக சூடாகும். இதுவும் ஒரு நிறைதான்.

குறைகள் என்ன? தண்ணீருக்கு பதில், மைக்ரோ வேவில் நல்லெண்ணையை வைத்தால், சூடாகாது. இரண்டு நிமிடம் வைத்தால் கூட மிஞ்சிப்போனால் மிதமான சூடு அடையலாம். தேங்காய் எண்ணெய், வெண்ணெய் என்று நாம் பயன்படுத்தும் தாவர மற்றும் விலங்கின கொழுப்புக்கள் எல்லாம் இப்படி மிகக் குறைந்த அளவே சூடாகும். ரொம்ப நேரம் இப்படி வைத்தால், மைக்ரோ வேவ் கெட்டுப்போக வாய்ப்பு உண்டு.

அதனால்தான் மைக்ரோவேவில் காபி அல்லது டீ போடலாம். அரிசி சாதம் வைக்கலாம், அப்பளம் சுடலாம், ஆனால் அப்பளம் பொரிக்க முடியாது. ஏனென்றால் எண்ணெய் சூடாகாது.
அப்பளம் பொரிப்பதோ, கடுகு கறிவேப்பிலை தாளிப்பதோ நடக்காது. அதனால் தான், இந்திய சமயல்களில் இது அதிகம் பயன்படுவதில்லை. ஃப்ரிஜ்ஜில் இருந்து எடுப்பதை மறுபடி சூடு செய்யவே (reheating) இது அதிகம் பயன்படுகிறது.

இது தவிர பெட்ரோலியத்தை சார்ந்த 'வாகனங்களில் பயன்படுத்தும் எண்ணெய்' (lubricating oil) எடுத்தால் ? பல நிமிடங்கள் வைத்தாலும் கொஞ்சம் கூட சூடே ஆகாது.
(இதை எதற்கு மைக்ரோ வேவில் வைத்தாய் என்று கேட்க வேண்டாம், எனக்கு இந்த வேண்டாத ஆராய்ச்சிகள் கொஞ்சம் பிடிக்கும்).


ஏன் தண்ணீர் சூடாகிறது? ஏன் நல்லெண்ணை கொஞ்சம் தான் சூடாகிறது? ஏன் பெட்ரோலிய எண்ணெய் சூடாவதில்லை? உலோகத்தை மைக்ரோவேவில் வைத்தால் ஏன் பிரச்சனை? இவை அடுத்த பதிவில்.


சில ‘சுவையான' விவரங்கள்:
  1. மைக்ரோ வேவில் முந்திரி, பாதாம் பருப்புகளை ஒரு நிமிடம் சூடு படுத்தினால் சுவையாக இருக்கும். உருளைக் கிழங்கு சிப்ஸ் கூட அப்படித்தான். இதை கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். அதிக நேரம் வைத்தால் தீய்ந்து விடும். ஆனால் இவற்றுக்கு பதில் ரொட்டியை (bread) வைத்தால் நைந்து ‘கொச கொச' என்று ஆகிவிடும்.
  2. இதே தண்ணீரையோ, வேறு பொருளையோ எவர்சில்வர் டம்ளரில் வைத்து மைக்ரோ வேவில் வைத்தால் என்ன ஆகும்? எவர்சில்வர் டம்ளரை மைக்ரோ வேவில் வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். மீறி வைத்தால், மின்னல் அடிப்பது போல பொறி பறக்கும். மைக்ரோ வேவ் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் அல்லது பெயிண்ட் கருகி துர்நாற்றம் வரலாம். இது ஒரு சில விநாடிகளில் நடக்கும்.
    • ஆனால், எல்லா சமயங்களிலும் இப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது. சில டம்ளர்களில் வராமல் இருக்கலாம். கூர் முனை (Sharp edges) கொண்ட பொருள்களில், இது வர வாய்ப்பு அதிகம். Fork என்ற முள் கரண்டியை வைத்தால் நிச்சயம் பொறி பறக்கும். இது கொஞ்சம் ஆபத்தான Experiment. கூர் முனைகளில் மின்காந்தப்புலம் அதிகமாக இருப்பதால் இப்படி நடக்கும். கட்டிடங்களின் மேல் இருக்கும் இடிதாங்கிகள் கூர் முனையுடன் இருக்கும். அதுவும் இதே அடிப்படை தத்துவத்தில் வேலை செய்கிறது.
  3. மைக்ரோ வேவில் முட்டையை வைத்தால், சில நிமிடங்கள் சூடு படுத்தினால் முட்டை ‘வெடிக்கும்'. இதுவும் கொஞ்சம் ஆபத்தான experiment தான். இதில் சுத்தப்படுத்தும் வேலை நிறைய இருக்கும் :-) . இதற்கு காரணம், முட்டைக்குள் இருக்கும் நீர் ஆவியாக மாறி, திடீரென்று முட்டையை உடைத்து வெளிவருவதால்தான். சாதாரணமாக தண்ணீரில் வேகவைத்தால், உள்ளே இருக்கும் நீர் அதிக அளவில் ஆவியாக மாறாது.
  4. இது தவிர, மைக்ரோ வேவில், ஒரு குவளையில் தண்ணீரை வைத்து, அது கொதிப்பதற்கு ஒரு சில விநாடிகள் முன் எடுத்து விட்டு, அந்த தண்ணீரில் சக்கரை அல்லது உப்பு அல்லது காப்பித்தூள் போட்டால், தண்ணீர், குபீரென்று பொங்கி வழியும். இதில் supersaturation என்ற ஒரு காரணம் உள்ளது.


இவற்றிற்கான காரணங்களை கூகிளில் தேடினால் இன்னும் விவரமான பதிவுகள்(ஆங்கிலத்தில்) கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...