04 நவம்பர் 2015

வீடு கட்டப் போறீங்களா?

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். காலம் செல்லச்செல்ல எனது வீடு சிறியதாகிவிட்டதாக உணர்ந்ததன் விளைவு? நாமும் வீட்டை சற்று பெரியதாக்கலாம்! என ஆரம்பித்த வீட்டு பராமரிப்புப் பணி இரண்டு மாதங்களாகியும் இன்னும் தரைமட்டத்திற்கு மேல் எழும்பவில்லை..இருப்பினும் நான் சேகரித்த  தகவல்களை தங்களுக்காக பகிர்கிறேன். புதிய வீடு கட்டுபவர்களுக்கு சில டிப்ஸ்:

மனையை சதுரம் செய்யும் போது மூலை மட்டம் கொண்டு 90 டிகிரி இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். அஸ்திவாரம் அமைக்கும் போது மண்  பிடிமானம் இல்லாத போது கன்சாலிடேசன் செய்து திமிசு கட்டையில் நன்றாக அடித்த பிறகு கான்கிரீட் போட வேண்டும். சாலை மட்டத்தில் இருந்து  கட்டிடத்தின் பேஸ்மென்ட் தேவையான அளவு உயரமாக வைக்க வேண்டும்.

கட்டுமானத்தின் போது கவனிக்க வேண்டியவை

கட்டுமானத்தின் போது வாட்டர் லெவல் டியூப் கொத்தனார் பயன்படுத்துகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். அஸ்திவாரம், பெல்ட், லிண்டல்,  கான்கிரீட் என அனைத்து நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும். செங்கற்களை நனைத்த பிறகே கட்ட அனுமதிக்க  வேண்டும். செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போதும் முடிவில் குத்து கல்லாக வைத்து கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

சுவர் கட்டும்போது இணைப்பு வரும்போது கண்டிக்கல் உடைத்து போட்டு கட்ட வேண்டும். ஒரே நாளில் 5 அடிக்கு மேல் கட்ட அனுமதிக்க கூடாது.  இதற்கு மேல் அனுமதித்தால் தரம் குறைந்துவிடும். செங்கல் சுவருடன் காலம், பீம் போன்றவை இணைக்கும் போது கம்பிவலை வைத்து தேவைக்கு  ஏற்ப 6,8 எம்.எம் கம்பி துளையிட்டு கட்டுதல் வேண்டும்.

கலவையின் போது மணல், ஜல்லி, சிமென்ட், தண்ணீர் ஆகியவை தேவையான அளவில் கலக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக  மணலில் வரும் களிமண் கட்டிகள், சிறிய கற்கள் ஆகியவற்றை அகற்றிய பிறகு கலவை போடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பூச்சு  வேலை செய்வதாக இருந்தால் நன்றாக மணல் சலித்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும். கதவு, ஜன்னல்களை பொருத்துவதற்கு முன்பாக வாட்டர்  லெவல் டியூப் உபயோகிக்கப்படுகின்றதா என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

தரையில் வாட்டத்தை வைத்து கிரானைட், டைல்ஸ், மார்பில் ஆகியவை போட வேண்டும். கட்டிடத்திற்கு காலை, மாலை கட்டாயம் தண்ணீர்  விடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாடிப்படிகள் அல்லது வீட்டின் முன் படிகள் அமைக்கும் போது அனைத்து படிகளும் ஒரே சீரான  முறையில் அமைக்கப்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.

எலக்ட்ரிக்கல் பாயின்ட் அமைக்கும் போது அனைத்து இடங்களில் சம அளவு உயரத்தில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். போர்டிகோ  அமைக்கும் போது தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் வாட்டம் வைக்கப்படுகிறதா, லெவல் டியூப் கொண்டு சரிபார்க்கப்படுகின்றதா என்பதை  கண்காணிக்க வேண்டும்.

கான்கிரீட் நிலைத்து நிற்க சிமென்ட், கம்பி தரம் அவசியம்

             நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று யாருக்குதான் ஆசை இருக்காது? என்னதான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்து வீடு வாங்கினாலும், அந்த வீடு பல தலைமுறைகளாக நீடித்திருக்க வேண்டும்.  இது வீட்டிற்கு நாம் எந்த அளவுக்கு தரமான பொருட்களை பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. சிமென்ட், கம்பி, ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்கள் எந்த அளவுக்கு தரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தலைமுறைகளாக வீடு தாங்கியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிமெண்ட் கட்டுமானத்திற்கு உறுதி, தரம் சேர்ப்பதில் பிரதானமானது. வீடுகட்டும் நிறுவனம்(பில்டர்ஸ்) என்ன வகையான சிமெண்ட்டை பயன்படுத்திறது என்பதை வைத்தே பில்டர்ஸின் தரத்தை கண்டுபிடித்துவிடலாம். வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை பெறவிரும்பும் பில்டர்ஸ் எப்போதும் தரமான சிமெண்ட்டை பயன்படுத்துவார்கள். தரமான சிமெண்ட்டை கண்டுபிடிக்க அளவு கோல் என்ன, சிமெண்டின் வகைகள் என்ன என்பதை அறிந்துகொண்டால், நம் கனவு இல்லத்தை அழகானதாக மட்டுமின்றி அசைக்க முடியாத வலுவானதாகவும் இருக்கும்.

சிமெண்ட்டின் வகைகள், தரங்கள்: சிமெண்ட்டில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. ஆனால், பெரும்பாலும், வீடுகள், அடுக்குமாடிவீடுகள் ஆகியவற்றுக்கு “ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்ட்” எனும் வகையே பெரும்பாலான பில்டர்களால் பயன்படுத்தப்படுகிறது. சிமெண்ட்களின் தரக்குறியீட்டை வைத்தே, அதன் உறுதித்தன்மை, இறுகும் தன்மை (செட்டிங்), நீடித்து உழைக்கும் தன்மையும் மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில், 33 கிரேடு, 43 கிரேடு, மற்றும் 53 வகை கிரேடு என 3 வகை சிமெண்ட் மட்டும் பெரும்பாலும் வீடுகட்ட பயன்படுத்தப்படுகிறது. இந்திய தர நிர்ணய அமைப்பு மூலமே அனைத்து வகை சிமெண்ட்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.

இதில் 33 கிரேடு “போர்ட் லேண்ட் சிமெண்ட்”(ஒ.பி.சி) என்பது சிறிய பணிகள், சாதாரண பூச்சு வேலை போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவை தற்போது குறைவாகவே புழக்கத்தில் உள்ளன. விலையும் குறைவு. 43 கிரேடு ஒ.பி.சி சிமெண்ட் அனைத்து வகை வீடுகள், கட்டிடங்கள் எழுப்ப ஏற்றது. இந்தியாவில் பெரும்பாலும் இத்தகைய சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது. இது 33 கிரேடு வகையைக் காட்டிலும் தரமானது, பலமானது. இந்த வகை சிமெண்ட் மூலம், வீடுகள், கட்டிடங்கள் முழுமை பணி, சுற்றுச்சுவர், வீட்டின்அடித்தளம், வெளிப்பூச்சு, உள்பூச்சு, டைல்ஸ், மார்பில், கிரானைட் ஒட்டுதல், தரைப்பூச்சு போன்ற பணிகளுக்கு மிகச்சிறந்தது. 53 கிரேடு ஒ.பி.சி சிமெண்ட் என்பது 33 கிரேடு, 43 கிரேடு சிமெண்ட் வகையைக் காட்டிலும் மிகவும் உறுதியானது, தரம்கூடியது.

இந்த வகை சிமெண்ட் அடுக்குமாடி குடியிருப்புகள், உயர்ந்த கட்டிடங்கள், பாலங்கள், உள்ளிட்ட பெரிய வகை கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வீடுகள், அடுக்குமாடிகள் கட்டுவதற்கு கிரே வண்ணத்தில் சிமெண்ட்டும், அழகிய வேலைபாடுகள், கட்டிடத்தின், உள்புற, வெளிப்புறத்தை அழகுபடுத்தும் பணிக்கு வெள்ளை நிற சிமெண்ட்டும் பயன்படுத்தப்படுகிறது. வலுவான வீட்டை அமைக்க, தரமான சிமெண்ட்டை எப்படி ஆய்வு செய்து வாங்குவது?. நாம் வாங்கும் சிமெண்ட் எல்லாம் நல்ல சிமெண்டா?, அதை எப்படி தெரிந்துகொள்வது.

இதோ சில டிப்ஸ்..

வீடுகட்ட தேவையான சிமெண்ட்டை தேர்வு செய்யும் போது, நம்பிக்கையான, பி.ஐ.எஸ் தர சான்றிதழ் பெற்ற நிறுவனத்தின் சிமெண்ட்டை தேர்வு செய்வது தரத்தை உறுதிசெய்ய உதவும். நாம் தேர்வு செய்யும் நிறுவனத்தின் சிமெண்ட் மூட்டை மீது அந்த நிறுவனத்தின் பெயர் முறையாக அச்சிடப்பட்டுள்ளதா, மூட்டையின் வாய் கையால் தைக்கப்படாமல், இயந்திரத்தால் தைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பார்க்க வேண்டும். மூட்டையின் வாய்ப்பகுதியின் தையல் பிரிக்கப்பட்டுள்ளதா, அல்லது கிழிந்திருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி மூட்டையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த தேதியிலிருந்து 6 வார காலத்திற்குள் இருக்கும் சிமெண்ட்டை வாங்குவது பணிகளுக்கு சிறந்தது. தரமான சிமெண்ட்டா என சோதிக்கும் போது, மூட்டையினுள் கைவிட்டு சிமெண்ட்டை தொடும்போது, ஒருவித குளிர்ச்சி உணரப்பட வேண்டும். ஒரு கை சிமெண்ட்டை அள்ளி ஒருவாளி நீருக்குள் போடும் போது, சிமெண்ட் சில நிமிடங்கள் மிதந்து, அதன்பின்பு, கரைய வேண்டும்.

உடனடியாக நீரில் கரையும் சிமெண்ட் ஏதேனும் குறைபாடு இருக்கும். சிறிது சிமெண்ட்டை எடுத்து அதை பேஸ்ட் போல் குழைத்து ஓர் அட்டை அல்லது பிளேட்டில் சதுரவடிவத்தில் செய்ய வேண்டும். அதை அப்படியே மெதுவாக நீரில் மூழ்கடிக்கும் போது, அந்த வடிவம் கரையக்கூடாது. அதனை வெளியே எடுத்து, 24 மணிநேரம் சென்றபின்பு, அந்த வடிவம் இறுகி கடினமானதாக மாறவேண்டும். சிறிதளவு சிமெண்ட்டை எடுத்து கைகளில் , விரல் இடுக்கில் தேய்கும்போது மிருதுவாக, கொரகொரப்பு இன்றி இருக்க வேண்டும். சிமெண்ட்டை வாங்கியபின்பு காற்று அதிகம் செல்லாத இடத்தில் அடுக்கிவைத்து பத்திரப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில், சிமெண்ட் மூட்டையை பாலிதீன் உறை போட்டு மூட வேண்டும்.வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் Laurie Baker “லாரி பேக்கர் தொழில்நுட்பம்”

சில விஷயங்கள் சாதாரணமாக ஆரம்பித்து சுவாரஸ்யமாக மாறி நம் நேரங்களை அபகரித்து கொள்ளும் என்பதை எனக்கு இந்த லாரிபேக்கர் குறித்த தேடல் எனக்கு உணர்த்தியது. இதற்கு முன் அவரை குறித்து அறிந்திருந்தாலும் அவையெல்லாம் கடுகளவு என தோணச்செய்தது அவரின் சாதனைகள். கட்டிட கலைக்காக தன்னையே அர்பணித்தவரின் செயல்முறைகளில் கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

இது குறித்து லாரி பேக்கர் அவர்கள்  ‘A Manual of Cost cut for Strong Acceptable Housing’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார் அவர் எழுதிய Life,Work&Writings - Laurie Baker பதிப்பகத்தின் பெயர்   G.Bhatia Penguin Publishers என்ற புத்தகத்தையும் வாங்கிப் படியுங்க.
SHAPE ( அமைப்பு )


கட்டிடத்தின் அமைப்பும் கட்டுமான செலவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக 20 மீ2 அளவுள்ள ஒரு கட்டிட்த்தை 4 மீ அகலமும் 5 மீ நீளமுமாக சதுர வடிவில் அமைத்தால் கட்டுமான செலவு மிகவும் கூடும். ஏனென்றால் சுவரின் சுற்றளவு (Perimeter) 18 மீ வரும் இதையே செவ்வக வடிவிலோ , அரை வட்ட அல்லது வட்ட வடிவில் அமைத்தால் சுவரின் சுற்றளவு குறையும். தேவையான ஏரியாவும் நமக்கு கிடைக்கிறது அதே சமயம் சுவரின் சுற்றளவு குறைவதால் செங்கல் கட்டும் கணிசமான அளவில் குறைகிறது. கீழ்காணும் அட்டவணையில் 20 மீ2 பயன்பாட்டு ஏரியாவிற்கு பல அமைப்பு(Shape)களில் வெளிச்சுவர்களின் சுற்றளவு மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சதுரமான அமைப்பை விட செவ்வகமான மற்றும் வட்ட வடிவ அமைப்பே செலவை குறைக்கும் வழிமுறைகளில் சிறந்தது என அறியலாம்.

வட்ட வடிவும் செவ்வக அமைப்பும் ஒரே சுற்றளவுதான் என்றாலும் நம்முடைய தேவைகளை கருத்தில் கொண்டு அமைப்புகளை முடிவு செய்வது நலம். ஒரே கட்டிட ஏரியா அதன் அமைப்பின் மூலம் மனையில் அதிக அளவு காலியிடத்தை ஏற்படுத்துகிறது என்பதை கீழ் உள்ள படத்தின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நமக்கு தேவையான இடமும் கிடைக்கும் அதே நேரத்தில் அதிக அளவு காலியிடங்களின் மூலம் வீட்டிற்கு கிடைக்கும் காற்றோட்டமும் அதிகரிக்கும். ஆரோகயமாக வாழ்வதற்கு வீட்டினுள் கிடைக்கும் காற்றோட்டம் முக்கிய பங்களிப்பு ஆற்றும்.
செங்கல் சுவர்

செங்கல் சுவர்களை பூசாமல் விடுவதன் மூலம் கணிசமான அளவு செலவை குறைக்கலாம். செங்கல் சுவர்களுக்கு அது போண்ற பூச்சுமானமும் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது. சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.

செங்கல் கட்டும்போது வழக்கமான ”இங்கிலீஸ் பாண்ட் (Engilish Bond)” க்கு பதிலாக ”ரேட் டிராப் பாண்ட் (Rat trap Bond)” உபயோகித்தால் செலவும் குறையும், அதே நேரத்தில் சுவரில் கேவிட்டி அமைப்பும் இருப்பதால் எந்தவிதமான தட்பவெப்ப நிலைக்கும் வீட்டினுள் இதமான அமைப்பை ஏற்படுத்துகிறது. இந்த இரு அமைப்பையும் கீழ் உள்ள பட்த்தின் மூலம் தெளிவாக அறியலாம்

”இங்கிலீஸ் பாண்ட் (Engilish Bond)”

”ரேட் டிராப் பாண்ட் (Rat trap Bond)”சுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன

லாரி பேக்கர் கட்டிய உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவநிலையங்கள் போன்றவை இயற்கை சூழலுடன் இணைந்து ஆடம்பரம் இல்லாத அழகுடன் திகழ்பவை. மருத்துவர்கள் லாரிபேக்கர் பாணி கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக கூறினார்கள்.

குளிரூட்டும் வசதிக்காக லாரி பேக்கர் உருவாக்கிய உத்தியும் அபாரமானது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்கி அதனை சுற்றி சுட்ட செங்கலால் ஆன சுவரை அமைத்து விடுவார். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியை செய்யும்.


ரூஃப் கான்கிரீட் (Roof Concrete) எனப்படும் கூரைக் கான்கிரீட்க்கு இவரின் முறை மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். சிவில் இன்ஜியரிங்கின் மிகநுட்பமான விஷயங்களை பயன்படுத்தி செலவுகளை குறைக்கும் வழிமுறைகளை கூறியிருப்பார்.

02 நவம்பர் 2015

தாளவாடி வட்டம்- THALAVADY TALUK - ತಾಲವಾಡಿ: பயணிகள் நூலகம்-தாளவாடி வட்டம்.

தாளவாடி வட்டம்- THALAVADY TALUK - ತಾಲವಾಡಿ: பயணிகள் நூலகம்-தாளவாடி வட்டம்.: பயணிகள் நூலகம் மலைக்கிராம மக்களுக்காக பயணிக்கும் நூலகம். வளர்ப்போம் மலைவாழ் மாணவர்களின் அறிவை வளர்ப்போம்.   புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஞ...

இரட்டைக்கிளவி

   இரட்டைக்கிளவி கலகல காட்சியில் திமு திமுவென மழலைகள் சுறுசுறுப்பாக  ஓடுவதேன்! சுளீர் சுளீரெனும் வெயிலில் மளமளவெனப் பொறுக்குவதென்ன! வளவளவெனப...