23 மே 2017

நெற்பானையும் எலியும்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது குழந்தைப்பாடல்கள் மிகவும் எளிமையானவை,இனிமையானவை.கொளப்பலூர் புனித மரியன்னை நடுநிலைப்பள்ளியில் நான் தொடக்கக்கல்வி பயின்றபோது கி.பி.1971ல் இரண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில்  படித்து இன்புற்ற பாடல்! 

பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் - அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா!
உள்ளே புகுந்து நெல் தின்று தின்று - வயிறு
 ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெல்ல வெளியில் வருவதற்கும் - ஓட்டை
 மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா!

பானையைக் காலை திறந்தவுடன்-அந்தப்
 பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா!-ஓடிப்
போய் அதைக் கவ்வியே சென்றதடா!

 கள்ளவழியில் செல்பவரை - எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ளபடியே நடப்பவர்க்குத் - தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!


எம்மதமும் சம்மதமே!


மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் ''எம்மதமும் சம்மதம்'' என்ற தலைப்பிலான மத ஒற்றுமைக் கவிதை  தங்களுக்காக.........


 எம்மதமாயினும் சம்மதம்

கோபமும் கொதிப்பும் குமுறிடும் படிபல
       கொடுமைகள் நடக்குது வடநாட்டில்
தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்
       தமிழா! உன்குணம் தவறிடுமோ?       1

அன்னிய மதமென அடிக்கடி பழகிய
       அயலுள மக்களைக் கொல்லுவதை
என்னென உரைப்பது ஏதென வெறுப்பது
       எண்ணவுங் கூடத் தகுமோதான்?       2

வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்
       வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ?
ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்
       அழகிது தானோ? ஐயையோ!       3

பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்
       பிள்ளையை மடிப்பதும் பேய்செய்யுமோ?
வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்
       விட்டிடப் படுமோ? தமிழ் மகனே!       4

அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்
       அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால்
இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை
       எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ?       5

தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது
       தீயினைத் தீயால் அவிப்பதுபோல்
வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!
       வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ?       6

அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல
       அன்புள்ள நம்தமிழ்த் திருநாட்டில்
கொடைக்குணம் மிகுந்தநம் குலத்தவர் காத்தனர்
       கொள்கையை நாம்விடக் கூடாது.       7

வேற்றுமை பலவிலும்  ஒற்றுமை கண்டிடும்
வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு
மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்
 மதமெனக் கொண்டவர் தமிழர்களே . 8

எம்மதம் ஆயினும் சம்மதம்  என்பதை
ஏந்தி நடப்பது தமிழ்நாடு
அம் மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்
அசைந்திடலாமோ தமிழறிவு?9

மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை
மாநிலம் இன்னமும்  சகித்திடுமோ?
விதவிதம் பொய் சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்
வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம்.10


தீண்டாமை ஓட்டடா!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் தீண்டாமை ஒழிப்புக் கவிதை..சிந்திக்க படியுங்க!

                          தீண்டாமை என்ற தீமையை  ஓட்டடா!

ஓட்டடா! ஓட்டடா!


நாட்டைவிட்டே ஓட்டடா!
தீட்டடா மனிதருக்குள்
தீண்டாலென்ற தீமையே.

தொத்து நோய்கள் மெத்தவும்
தொடர்ந்து விட்ட பேரையும்
தொட்டுக் கிட்டிச் சொஸ்தமாக்கல்
தர்ம மென்று சொல்லுவார்.
சுத்த மேனும் ஜாதியால்
தொடப்ப படாதிங் கென்றிடில்
தொத்து நோயைக் காட்டிலும்
கொடிய ரென்று சொல்வதோ?

நாய்கு ரங்கு பூனையை
நத்தி முத்த மிடுகிறோம் ;
நரக லுண்ணும் பன்றியும்
நம்மைத் தீண்ட ஒப்புவோம் ;
ஆயும் நல்ல அறிவுடை
ஆன்ம ஞான மனிதனை
அருகி லேவ ரப்பொறாமை
அறிவி லேபொ ருந்துமோ?

செடிம ரங்கள் கொடிகளும்
ஜீவ ரென்ற உண்மையை
ஜெகம றிந்து கொள்ளமுன்பு
செய்த திந்த நாடடா!
முடிவ றிந்த உண்மைஞானம்
முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த
முறையி லாவ ழக்கமேன்?

உயிரி ருக்கும் புழுவையும்
ஈச னுக்காம் உறையுளாய்
உணரு கின்ற உண்மைஞானம்
உலகி னுக்கு ரைத்தநாம்
உயருகின்ற ஜீவருக்குள்
நம்மொ டொத்த மனிதனை
ஒத்திப் போகச் சொல்லுகின்ற
தொத்துக் கொள்ள லாகுமோ?

அமல னாகி அங்குமிங்கும்
எங்கு மான கடவுளை
ஆல யத்துள் தெய்வமென்றே
அங்கி ருந்தே எண்ணுவோம் ;
விமல னான கடவுள்சக்தி
மனிதன் கிட்டி விலகினால்
வேறு ஜீவன் யாவும்அந்த
விமல னென்ப தெப்படி?

ஞாய மல்ல ஞாயமல்ல
ஞாய மல்ல கொஞ்சமும்
நாடு கின்ற பேர்களை
நாமி டைத்த டுப்பது ;
பாயு மந்த ஆற்றிலே
பருகி வெப்பம் ஆறிடும்
பறவை யோடு மிருகமிந்தப்
பாரி லார்த டுக்கிறார்?

இடந்தடுமாற்றம்

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நாமக்கல் கவிஞரின் கவிதைகள் மிகவும் எளிமையாக கருத்து நயமிக்கதாக உள்ளன கண்டு பேருவகை அடைந்தேன்.விரும்பாத தொழிலை விதியால் செய்து வரும் நமது மக்களின் நிலை பற்றி ''இடந் தடுமாற்றம்'' என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய கவிதை இதோ....
அறிவுக் கேற்ற அலுவல் கிடைப்பதோ
படிப்புக் குகந்த காரியம் பார்ப்பதோ
விரும்பிய படிக்கொரு வேலையில் சேர்வதோ
தகுதியைப் பற்றிய தன்மை யுள்ளதாய்
உத்தியோகம் அடைவதோ ஊதியம் பெறுவதோ
இந்திய நாட்டில் இப்போ தில்லை.
இலக்கிய ஞானம் இணையிலா ஒருவன்
கல்வியே வேண்டாக் காரியம் செய்வதும்
கணித சாத்திரம் கைதேர்ந்த ஒருவன்
எண்ணிக்கை வேண்டா வேலையில் இருப்பதும்,
ரஸாய னத்தில் ரஸனை மிகுந்தவன்
கச்சேரி மேசையில் கவிழ்ந்து கிடப்பதும்
சங்கீத வித்தையில் சமனிலாக் கலைஞன்
தபால் ஆபீஸ் தந்திய டிப்பதும்,
சித்திரக் கலையில் கைத்திறம் சிறந்து
பத்திரம், 'ரிஜிஸ்டர்' பதிவு செய்வதும்,
சத்தியம் தவறா உத்தம குணவான்
வக்கீல் தொழிலில் வருத்தப் படுவதும்,
கொல்லா விரதமே கொண்டுள ஒருவன்
பட்டாள வீரனாய்ப் பதிந்து கொள்வதும்,
விஞ்ஞா னங்களில் விருப்புள இளைஞன்
'டிக்கட் கலெக்டராய்'த் திண்டாட நேர்வதும்,
புத்தகம் படிப்பதில் பித்துள்ள புலவன்
'புக்கிங் கிளார்க்காய்'ப் புழுங்கு கின்றதும்,
உருட்டி மருட்டத் தெரியா ஒருவன்
போலீஸ் காரனாய்ப் பொழுதுபோக் குவதும்,
திட்டிப் பேசவும் தெரியா நல்லவன்
அமீனா வேலையில் அடிபட்டு வருவதும்,
கள்ளுச் சாராயம் கடிந்திடும் கருத்தன்
கலால் வேலையில் 'டிகிரி' கணிப்பதும்,
மாமிச உணவை மறுக்கும் மனத்தன்
ஆட்டுக் கறிவையும் மாட்டுக் கறியையும்,
சுத்தம் பார்த்தலில் முத்திரை குத்தலும்,
இப்படிப் பற்பலர் இடந்தடு மாறுவர்.

மது குடிப்பதைத் தடுப்போம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். குடிப்பதை தடுப்போம் என்ற தலைப்பில் நாமக்கல்.வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய கவிதை இதோ தங்களுக்காக..
   

குடிப்பதைத் தடுப்பதேகோடிகோடி புண்ணியம்
அடிப்பினும் பொறுத்துநாம்
அன்புகொண்டு வெல்லுவோம்! . .(குடி)

மக்களை வதைத்திடும்
மனைவியை உதைத்திடும்
துக்கமான கள்ளினைத்
தொலைப்பதே துரைத்தனம். . .(குடி)

பித்தராகி ஏழைகள்
பேய்பிடித்த கோலமாய்ப்
புத்திகெட்டுச் சக்தியற்றுப்
போனதிந்தக் கள்ளினால். . .(குடி)

பாடுபட்ட கூலியைப்
பறிக்குமிந்தக் கள்ளினை
வீடுவீட்டு நாடுவிட்டு
வெளியிலே விரட்டுவோம்! . .(குடி)

கஞ்சியின்றி மனைவிமக்கள்
காத்திருக்க வீட்டிலே
வஞ்சமாகக் கூலிமுற்றும்
வழிபறிக்கும் கள்ளினை . . .(குடி)

மெய்தளர்ந்து மேனிகெட்டுப்
போனதிந்தக் கள்ளினால் ;
கைநடுக்கங் கால்நடுக்கங்
கண்டதிந்தக் கள்ளினால். . .(குடி)

தேசமெங்கும் தீமைகள்
மலிந்ததிந்தக் கள்ளினால் ;
நாசமுற்று நாட்டினார்
நலிந்ததிந்தக் கள்ளினால். . .(குடி)

குற்றமற்ற பேர்களும்
கொலைஞராவர் கள்ளினால் ;
கத்திகுத்துச் சண்டைவேண
கள்ளினால் விளைந்தவே. . .(குடி)

குற்றமென்று யாருமே
கூறுமிந்தக் கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை
விதைப்பதென்ன விந்தயே! . .(குடி)
==========================================================
(2)போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
புத்தி யுடைஓர் அரசாமோ?

   விட்டது சனியன் விட்டது சனியன்


விட்டது நம்மை விட்டதடா!
கொட்டுக முரசு கொம்பெடுத் தூது
கொடும்பாவி கள்ளைக் கொளுத்திவிட்டோம்!

செத்தது கள்பேய் இத்தினம் ; இதையினி
தீபா வளிபோல் கொண்டாடு ;
பத்திரம் கள்மேல் சித்தம்வா ராவிதம்
பார்ப்பதும் காப்பதும் உன்பாரம்!

ஈஸ்வர வருஷம் புரட்டா சியிலே
இங்கிலீஷ் ஒன்றுபத்து முப்பத்தேழில்
சாஸ்வதம் போலவே நமைப்பிடித் தாட்டிய
சனியன் கள்கடை சாத்திவிட்டார்!

கூலியைத் தொலைப்பதும் தாலியை இழுப்பதும்
கூசிட ஏசிடப் பேசுவதும்
சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும்
சந்தி சிரிப்பதும் இனியில்லை!

அழுதிடும் மக்களும் தொழுதிடும் மனைவியும்
ஐயோ! பசியுடன் காத்திருக்க,
பொழுதுக்கும் உழைத்தது முழுவதும் கூலியைப்
போதையில் இழப்பதும் இனியில்லை!

பெற்றதன் குழந்தைகள் சுற்றி நடுங்கிப்
பேயெனும் உருவொடு வாய்குளற
உற்றவர் உறவினர் காறி உமிழ்ந்திட
ஊரார் நகைப்பதும் ஒழிந்ததினி!

விடிகிற வரையிலும் அடிதடி ரகளை
வீதியில் மாதர்கள் ரோதனமும்
குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும்
கூண்டோ டொழிந்தன இனிமேலே!

எல்லா விதத்திலும் கள்ளால் வரும்பணம்
ஏளனத் துக்கே இடமாகும் ;
நல்லார் சரியெனக் கொள்ளா வரியிதில்
நம்மர சடைந்திட்ட பழிநீங்கும்.

போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
புத்தி யுடைஓர் அரசாமோ?
பேதைக ளாக்கிப்பின் பிழைபுரிந் தாயெனல்
பேச்சுக் காகிலும் ஏச்சன்றோ?

காந்தியின் அருந்தவம் சாந்தமும் பலித்தது ;
காங்கிரஸ் ஆட்சியும் ஓங்கிடுமே ;
போந்தது புதுயுகம் ; தீர்ந்தது கலிபலம் ;
பூமிக் கேஒரு புதுமையிது!

சக்கர வர்த்திநம் ராஜா ஜீக்கொரு
சன்மா னம்நாம் தந்திடுவோம் ;
அக்கறை யோடவர் ஆணைப் படிகள்ளில்
ஆசை புகாவிதம் காத்திடுவோம்.

பாழும் கள்ளால் பட்டதை நினைத்தால்
பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா!
வாழும் நாடினி ; ஏழைக ளில்லை ;
வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம்!

20 மே 2017

நூலகத்தைக் காணவில்லை!

அறிவுக் கிடங்கினைத் திறக்க அரசின் கண்களைத் திறப்போம் வாங்க!.

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.ஈரோடு மாவட்டம்,நம்ம தாளவாடியில் செயல்பட்டு வந்த அரசு பொது நூலகம் தற்போது நகரின் கடைக்கோடியில்  சந்தின் மூலையில் மதுவில் மயங்கிய மனிதனைப்போல களையிழந்து முடங்கிக் கிடக்கிறது. தனிமையைப் போக்க,தன்னம்பிக்கை வளர,சமூகத்தைப் படிக்க,சராசரி மனிதனாக வாழ,கற்பனை பிறக்க,சிந்தனை பெருக,நினைவாற்றல் வளர,பொது அறிவு கிடைக்க நூலகமே சிறந்த தளம் என சான்றோர்கள் சொல்லக்கேட்கிறோம்.ஆனால் நம்ம தாளவாடியில் அறிவுத்திருக்கோயிலாம் பொது நூலகம் ,கிளை நூலகமாகவே அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல்,வாசகர்கள் அமர்ந்து படிக்கக்கூட இடமில்லாமல்,இருக்கை வசதியில்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் பார்வைக்காக மட்டுமே அமைந்துள்ளது கண்டு மிகவும் வேதனையளிக்கிறது.
  அண்ணல் அம்பேத்கர்  உட்பட ,பகத்சிங்,மகாத்மா காந்தியடிகள்,நேரு,அறிஞர் அண்ணா,அப்துல் கலாம்,புரட்சித்தலைவி ஜெயலலிதா,கலைஞர் கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்களும்,சமகாலத்தலைவர்களும்,சாதனையாளர்களும், நூலகத்தைப் பயன்படுத்தி புத்தகங்களைப் படித்தே படைப்பாளி ஆகி இருக்கிறார்கள். சாதனைகள் பல செய்து தம் வாழ்க்கையில் வெற்றி பெற்றதோடு,சமூகத்தில் விழிப்புணர்வு பெறவும் சான்றோர்கள் பலர் உருவாகவும் ,சாதனையாளர்கள் பலர் தோன்றவும் வழிகாட்டியிருக்கிறார்கள்.

              நூலகத்தின் முக்கியத்துவம் அறிந்த சான்றோன் புதுக்கோட்டை மாவட்டத்தைச்சார்ந்த கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியினர் தனி நபர் நூலகத்தை அதாவது தம்பதியினர் இருவரின் உழைப்பின் ஊதியத்தை புத்தகங்களாக மாற்றி சமூகத்திற்கு பயன்பெற தனியோருவராக நூலகம் அமைத்து செயல்படுத்தி வருகிறார்கள்.தங்களது ஓய்வூதியப்பணம் முழுவதையும் செலவிட்டு பல லட்ச ரூபாய் செலவில் 'ஞானாலயா' என்ற பெயரில் அறிவுத்திருகோயில் ஒன்றையும் மூன்றடுக்கு மாடிகளாக கட்டி நூலகமாக செயல்படுத்தி,சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை முதல் பதிப்பு நூல்களாக,சட்ட நூல்கள்,சித்த மருத்துவ நூல்கள்,பைபிள்,இசுலாமிய நூல்கள்,துணியினால் ஆன பகவத்கீதை போன்ற சமய நூல்கள் உட்பட முதல் பதிப்பு நூல்களாக லட்சக்கணக்கில் சேகரித்து மக்களின் பயன்பாட்டிற்கு மாதந்தோறும் பல்லாயிரம் ரூபாய் பராமரிப்பு செலவு செய்து   இன்றும் இலவசமாக நடத்தி வருகிறார்கள்.தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி gnanalayapdk@gmail.com 

                               (புதுக்கோட்டையில் நடைபெற்ற கணினித்தமிழ்ச்சங்கம் நடத்திய உலக வலைப்பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது ஞானாலயா புத்தகாலயத்தை நேரில் பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்.புதுக்கோட்டை செல்லும் வாய்ப்புள்ளவர்கள் அவசியம் 'ஞானாலயா' என்ற தனி நபரின் இலவச நூலகத்தையும் பார்வையிட்டு வாங்க.)

இவ்வாறு வெளியுலகத்தில் சமூக நலனுக்கான நூலகச்சேவையை பார்க்கும்போது தாளவாடியில்  அரசு பொது நூலகத்தை தொலைத்துவிட்டோமோ?என்ற ஐயப்பாடு நிலவுகிறது.எனவே அறிவுமிகுந்த சான்றோர்களே,ஊடகங்களே,மாணவர்களே,சமூக அக்கறையுள்ளவர்களே,அனைவரும் வாங்க!. தாளவாடி நகரின் மையத்தில் நூலகம் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் ''சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு''க்கு ஆதரவளிப்போம்.சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்துவோம்......................
என அன்புடன் அழைக்கும்,
சமூக நலனில் அக்கறையுள்ள அன்பன்,
 C. பரமேஸ்வரன்,
தாளவாடி-ஈரோடு மாவட்டம்.
+919585600733,
 paramesdriver@gmail.com