02 ஏப்ரல் 2020

திருக்குறள் மலையில் கல்வெட்டுக்களாக- பகுதி07

                                 திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி 07
  மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம். கொங்குத் தென்றல் வலைப் பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.இந்தப் பகுதியில்
திருக்குறள் கல்வெட்டுக்களாக்கும் குறள்மலைச் சங்கம்-சென்னை
               பற்றிய தகவல்களை அறிவோம்.

 (1) www.thirukkuralmalai.org
(2) http://thirukkuralkalvettukkal.blogspot.com
(3 )kuralmalai-sangam /facebook.com குறள் மலைச்சங்கம்.
(4) kuralmalaisangam /youtube.com
(5) 'கல்வெட்டில் திருக்குறள்' தொகுதி 1,2 நூல் வெளியீடு,
(6) திருக்குறள் மாமலை - மாத இதழ் வெளியீடு..


                              சுமார் 700சிற்பிகள் மாமல்லபுரம் பெருஞ்சிற்பி திரு.அரவிந்தன் அவர்களது தலைமையில் குறள்மலையாம் மலையப்பாளையம் மலைக்கு வருகைபுரிந்து 1330குறட்பாக்களையும் தெளிவுரை விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாகப் பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 ஆமாங்க....
                                      திருக்குறள் பித்தன் திரு. பா.ரவிக்குமார் அவர்களது தலைமையிலான குறள்மலைச்சங்கம்  மேனாள் குடியரசுத் தலைவர் திரு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுடன் கலந்தாலோசித்து 2014ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரைஐ.நா.சபையையும் உறுப்பினராக இணைத்துக்கொண்டு  உலகளவில் ஐநூறுகளுக்கும் அதிகமான கலந்தாய்வுக்கூட்டங்களை  நடத்தி திருக்குறள் கல்வெட்டுக்கள் பணியமைக்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்கள்.

                     அனுபவமிக்க சிற்பிகள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் ஆகியோருடன் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில்,பழனிமலை,பச்சைமலை,பவளமலை,சிவன்மலை,ஓதிமலை,உதயகிரிமலை என தமிழகத்திலுள்ள பெரும்பாலான மலைகளை ஆய்வுசெய்துள்ளனர்.

  இறுதியாக பாறையின் உறுதியான தன்மை,  நூறுஅடி மட்டுமே கொண்ட வாட்டமான உயரம், இருபதுக்கும் சற்று அதிகமான (20.5 ஏக்கர்)  ஏக்கர் பரப்பு, ஒரே பாறையினால் ஆன வட்டமான வடிவமைப்பு போன்ற காரணங்களால் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்து உள்ள நம்பியூர் வட்டம், மலையப்பாளையம் உதயகிரி மலையைத் தேர்வு செய்து உள்ளனர்.

          அதன் பின்னர் குறள் மலைச்சங்கமானது, 'திருக்குறள் தன்னிகரில்லாப் பெருநூல்' என்ற துண்டறிக்கையோடு இந்தியா உட்பட உலகநாடுகளுக்குப் பயணம் செய்து தமிழறிஞர்களையும், உலகமொழி இலக்கியச் சிந்தனையாளர்களையும் சந்தித்தும்,தொடர்புகொண்டும்  திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைப்பதற்கான பணியை இடைவிடா முயற்சியுடன் செய்து வருகின்றனர்.
                    கோயம்புத்தூரில் வெளியாகும் நட்பு மாத இதழின் பின் பக்கத்தில் வெளியிட்டுஇதழாசிரியர் திரு.கண்ணப்பன் வெளியிட திருக்குறள் கல்வெட்டுக்களாக்கும் பணி பரவலாக பரவியது.
  அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களுக்குத் தகவல் செல்லவே,அம்மா அவர்களும் உடனடியாக திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைக்க உத்தரவிட்டார்.
      
                14 - 04 2014 அன்று  ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. வெ.க.சண்முகம் ஐ.ஏ.எஸ்.அவர்கள் தலைமையில் கோபி கோட்ட வருவாய் அலுவலர்,  கோபி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிருவாக அலுவலர், கல்வெட்டு ஆய்வாளர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் அடங்கிய குழுவானது குறள் மலைச் சங்கத்துடன் இணைந்து   மலையப்பாளையம் மலையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தது.

                     25 -04- 2014 அன்று திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைக்கும் பணியை ஆய்வு செய்ய உத்தரவு இட்ட தமிழக அரசுக்கு, தலைவர் விக்கிரமன் அவர்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் -சார்பாக நன்றிகளும்,பாராட்டுக்களும் தெரிவித்து கடிதம்  அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

              11 - 05 -2014 அன்று குறள்மலைச் சங்கமானது நம்பியூர் அரிமா சங்கத்துடன் இணைந்து மலையப்பாளையம் மலையிலுள்ள மண்டபத்தில் தற்போதைய கல்வி அமைச்சர் மாண்புமிகு K.A.செங்கோட்டையன் அவர்களை சிறப்புவிருந்தினராக அழைத்து முன்னாள் அமைச்சர்.திரு. V.K..சின்னச்சாமி அவர்களது தலைமையில்அமைச்சர்கள் கலந்துகொண்ட முதல் கலந்தாய்வு கூட்டம் ஒன்றினை நடத்தி கருத்துப் பதிவு செய்தது.
     குறள் மலைச்சங்கமானது சோர்வடையாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும்,உலகத்தமிழ் சங்கங்களிலும் திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வுக் கருத்தரங்கங்கள் நடத்தி தமிழ்ச் சான்றோர் மேன்மக்களின் கருத்துக்களை பதிவு செய்து வருவது போற்றத்த தக்கது ஆகும்.

        தமிழ் வளர்ச்சித் துறையின் இணை இயக்குநர் திருமதி.சந்திரா அவர்கள், ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை செயற்பொறியாளர் திரு.S.சேகர் அவர்கள்,இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையாளர் அவர்கள்,செயல் அலுவலர் திருமதி.மாலா அவர்கள், தமிழறிஞரும்,எழுத்தாளருமான சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முத்து ரத்தினம் அவர்கள், குறள் மலைச்சங்கம், மாமல்லபுரம் சிற்பி திரு.அரவிந்தன் அவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர் அவர்கள், அந்த பகுதி  கவுன்சிலர் அவர்கள், உள்ளூர்ப்  பொதுமக்கள் ஆகியோர் அடங்கிய குழுவானது மீண்டும்,மீண்டும் ஆய்வு செய்து மலையப்பாளையம் உதயகிரி மலையானது 1330குறட்பாக்களும் உரிய தெளிவுரையுடன் கல்வெட்டுக்களாக பொறிக்க ஏற்புடைய தகுதியான மலை என ஆய்வறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைத்தது.
            27 - 10 - 2015 ஆம் தேதியன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.பிரபாகரன் அவர்கள்  சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் மலையப்பாளையம் உதயகிரி மலையை இறுதிக்கட்ட ஆய்வு செய்து  குறட்பாக்கள் அமைக்க உறுதியானமலை என தேர்ந்தெடுத்து இறுதிக்கட்ட ஆய்வறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைத்தார்.

         குறள் மலைச்சங்கம், 'கல்வெட்டில் திருக்குறள்'  என்ற ஆய்வறிக்கை நூல்கள் இரண்டு தொகுதிகளை வெளியிட்டு கன்னிமாரா பொது நூலகம் உட்பட உலகத்திலுள்ள  பெரும்பாலான நூலகங்களுக்கும், தமிழறிஞர்களுக்கும், அனைத்துலக இலக்கிய ஆர்வலர்களுக்கும்,கல்விநிலையங்களுக்கும்,அனுப்பி திருக்குறள் கல்வெட்டுக்கள் பற்றிய பெருமைகள் அறிவித்துள்ளது.

                  19 - 05 -2019 அன்று உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் கிருபாகரன் அவர்கள் கரங்களால், சென்னையிலிருந்து  'திருக்குறள் மாமலை' என்ற மாத இதழை குறள் மலைச் சங்கம் சார்பாக வெளியிட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

          உயர்நீதிமன்றத்தின்   மாண்புமிகு  நீதியரசர் பெருமக்கள் உட்பட,உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.வி.ஜி.சந்தோசம் அவர்கள்,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் திரு.விசயராகவன் அவர்கள்,தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்  தொல்லியல்துறைத் தலைவர் கல்வெட்டு ஆய்வாளர் புலவர் செ.ராசு அவர்கள்,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அவர்கள், கோவை மெடிக்கல் மருத்துவமனையின் நிறுவனர் திரு.நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள்,கோவை இந்துஸ்தான் கல்லூரியின் செயலர் அவர்கள்,மேட்டுப்பாளையம்,பர்லியாறு சச்சிதானந்தா ஜோதிநிகேதன் பன்னாட்டுப் பள்ளி,ஈரோடு வேளாளர் கல்லுரி,கே.கே.சி.கல்லூரிகள்,மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் அவர்கள்,பேரூர் ஆதினம் அவர்கள்,கௌமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,இலண்டன் தமிழ்ச் சங்கம்,இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு,ஜெர்மனி  ஹம்பர்க் பல்கலைக் கழகம்,மொரீசியஸ் தமிழ்ச் சங்கம், என உலகத்தின் அனைத்து தமிழார்வலர்களும்,திருக்குறளின் பெருமையறிந்த அனைத்துஉலக இலக்கிய ஆர்வலர்களும் திருக்குறட்பாக்களை கல்வெட்டுக்களாக்க வேண்டும் என்று  ஆதரவளித்து ஆவலுடன் காத்திருப்பது  மகிழ்ச்சியடைய வைக்கிறது.

           பிரபலமான தமிழ் ஊடகங்களான தினத்தந்தி, தினமணி, தினகரன், தமிழ்க்குரல், கல்கி வார இதழ், நட்பு மாத இதழ், இந்தியன் எக்ஸ்பிரஸ் (பிரபல ஆங்கில இதழ்) ஆகிய ஊடகங்கள் அவ்வப்போது திருக்குறள் கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டு  முக்காலத்தும் உலகமாந்தர்களின் வாழ்வியல் வழிகாட்டுதல் நூலான  திருக்குறள் சிறப்புக்களை எழுதி திருக்குறளை கல்வெட்டுக்களாக பதிக்கவேண்டும் என பதிவிட்டு வருகின்றன.
          திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைத்து தமிழ்ப் புனித நூலான திருக்குறளின் சிறப்புக்கள்  நிலைத்து நீடிக்கச் செய்திட வேண்டும்! என்ற தீராத வேட்கையோடு பல ஆண்டுகளாக தமிழுக்குத் தொண்டாற்றி வருகின்ற சென்னை  குறள் மலைச்சங்கத்திற்கு நன்றிகளும்,பாராட்டுக்களும் தெரிவிப்பதோடு நாமும் கரம் கோர்த்து ஆதரவளிப்போம் வாங்க...

  என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
தேதி;3-4-2020
                    (konguthendral.blogspot.com)                                இன்னும் தொடரும்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...