09 செப்டம்பர் 2011

அணு சக்தி அறிவியலார்-ஜெயபாரதன் அவர்கள்

தமிழில் முதல் அணுசக்தி நூல்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அன்புள்ள நண்பர்களே,
“அணுசக்தி” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த 41 கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1964 இல் வெளிவந்த “ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” என்னும் எனது முதல் நூல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது.
“யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்”, என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகளால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும் [Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும் [Fusion Bomb]. பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது! ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும் மாற்ற முடியும். உலகெங்கும் தற்போது நூற்றுக் கணக்கான அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பெரும்பான்மையான அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்க முடியாத பயங்கர அணு உலை விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின் செர்நோபில் நிலையத் திலும், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகளிலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தீராத இன்னல்களில் இன்னும் வருந்தி வருகிறார்கள்.
அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.
நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகளை வாரந் தோறும் தளராது வலைப் பதிப்பில் பொறுமையாக வண்ணப் படங்களுடன் ஏற்றிய மதிப்புக்குரிய திண்ணை அதிபர்கள் ராஜாராம், துக்காராம் எனது பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள். மேலும் நூலை வெளியிட என்னை ஊக்குவித்த மதிப்புக்குரிய நண்பர் ஜெயமோகனும், அவர் தூண்டிச் சிறப்பாக வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தின் அதிபர் வசந்த குமாரும் என் நன்றிக்கு உரியவர்கள்.

என்னைப் பற்றி :
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++
அணுசக்தி நூல் விலை : ரூ 270
(415 பக்கங்கள்)
நூல் கிடைக்குமிடம்
தமிழினி பதிப்பகம்
63. பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை: 600014, தமிழ் நாடு
இந்தியா
    ************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...