21 ஜூன் 2020

உலக இசை தினம்-ஜூன் 21

                                                   WORLD MUSIC DAY - JUNE 21
 



  மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். சர்வதேச மொழியாம் இசையின் பெருமையை பறைசாற்றும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 உலக இசைதினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி இன்று ஜூன் 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை உலக நாடுகளில் இசை தினமாக கொண்டாடப்படுகிறது.

                 இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.  சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். இது சிறந்த கலைகளில் ஒன்று.இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது.
        தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்.
                    இந்நிலையில், இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக  ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந்தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இந்தியா உட்பட  110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.

 அன்புடன் இசை தினத்தை வாழ்த்தும் ,
 செ.பரமேஸ்வரன், சத்தியமங்கலம்.ஈரோடு மாவட்டம்.

16 ஜூன் 2020

பதிவு-5 நீங்களும் கீ போர்டு வாசிக்கலாம்!

                                                       MUSIC KEY BOARD-  
                             பதிவு-5    நீங்களும்  கீ போர்டு வாசிக்கலாம்.
                                                -----------------------------------
                                           மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.இந்தப் பதிவில் இசைக்கருவிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மியூசிக் கீ போர்டு வாசிப்பது பற்றி அறிந்துகொள்வோம் வாங்க.

                 கீ போர்டு வாசிக்க கற்றுக்கொள்வதற்கு முன்னாடி இசையைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
            இசையை எந்த கருவியில் வாசித்தாலும் , வாசிப்பதற்கு முன்னாடி இசையைப் பற்றிய புரிதல் வேண்டும்.ஐம்புலன்களில் காற்றின் மூலமாகவே ஒலியினை பரப்பமுடியும்.அதேபோல ஐம்புலன்களில் செவியின் மூலமாகவே ஒலியினை கேட்டுணர முடியும்.அவ்வாறு எழுப்பப்படும் ஒலிஅலைந்து நகர்ந்து  கேட்போரின் காதுகளுக்கு சென்றடைகிறது.இசைக்கருவிகளிலிருந்து எழுப்பப்படுகின்ற ஒலியானது ஒழுங்குபடுத்தப்பட்டு சீராக இனிமையாக சென்று கேட்பவர்களை இசையச் செய்கின்றது.
இவ்வாறு இசையச் செய்கின்ற ஒலிகளை நமது முன்னோர்கள் அவைகளின் அதிர்வுகளுக்கேற்ப சுரங்களாக வகையறிந்து உள்ளனர்.
அவைகளே ச,ரி,க,ம,ப,த,நி என்னும் ஏழு வகை சுரங்களாகும்.இந்த சுரங்களை ஒன்றுக்கொன்று கலந்து பல்வேறு ராகங்களை உருவாக்குகின்றனர்.
இனி இசையின் கீ போர்டு பற்றி அறிவோம் வாங்க!.
 இந்த கீ போர்டில் பல்வேறு இசைக்கருவிகளையும் அதாவது பியானோ,கிட்டார்,ட்ரம்ஸ்,புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளையும் வாசிக்கும் வசதிகளை கொடுத்துள்ளனர்.ஆதலால் கீ போர்டு வாசிக்கத் தெரிந்துகொண்டாலே பல்வேறு இசைக்கருவிகளையும் வாசித்து இன்புறலாம்.
 மியூசிக்  கீ போர்டில் வரிசையாக WHITE KEYS வெள்ளை பட்டன்களும், BLACK KEYS கருப்பு பட்டன்களும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.அவற்றில்  WHITE KEYS வெள்ளை பட்டன்கள் அனைத்தும்  NATURAL KEYS இயற்கையான ஒலியெழுப்பும் பட்டன்கள் என்கிறோம். BLACK KEYS  கருப்பு பட்டன்கள் அனைத்தும்  SHARP KEYS கூர்மையான ஒலிகளை எழுப்பும் பட்டன்கள் என்கிறோம்.BLACK KEYS கருப்பு பட்டன்களுக்கு  FLATE KEY குறைந்த ஒலி பட்டன்கள் என்றும் அழைக்கப்படுகின்றது.அதாவது ஷார்ப் கீ அல்லது பிளாட் கீ என்றழைக்கின்றோம்.
 கீ போர்டில் இடது  பக்கத்தில் கருப்பு பட்டன்கள்  இரண்டு சேர்ந்து ஒரு இணையாகவும்,அடுத்து மூன்று கருப்பு பட்டன்கள் சேர்ந்து ஒரு இணையாகவும் அமைந்திருக்கும்.இவைகளின் நடுவில் விட்டு விட்டு வெள்ளை பட்டன்கள் அமைந்திருக்கும்.இந்த பட்டன்களில்தாங்க இசைக்கு தேவையான சுருதிகள் அதாவது  நோட்ஸ் அமைந்து உள்ளன.
அதாவது  முதல் இரண்டு கருப்பு பட்டன்களின் முதல் பட்டனின் இடது அருகிலுள்ள வெள்ளை பட்டன் 'ச' சுருதி அதாவது 'C ' NOTE  என்று அழைக்கப்படுகிறது.அடுத்து உள்ள வெள்ளை பட்டன் ரி சுருதி D NOTE அடுத்து உள்ள வெள்ளை பட்டன் க சுருதி E NOTE, அடுத்து உள்ள வெள்ளை பட்டன் ம  F NOTE இவ்வாறாக தொடர்ந்து வரிசையாக உள்ள வெள்ளை பட்டன்களை ச,ரி,க,ம,ப,த,நி என சுருதிகள் வரிசை என்கிறோம்.ஆங்கிலத்தில் C,D,E,F,G,A,B   என ஏழு சுரங்களின் பெயர்களாக எழுதுகிறோம்.
                                      விரைவில்  (தொடரும்)

பகுதி - 4 இசையின் அடிப்படை

                                          பகுதி-4 இசையின் அடிப்படை.
                                           ----------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
      இந்தப் பதிவில் இசையின் அடிப்படை விசயங்களைத் தெரிந்துகொள்வோம் வாங்க..
            இசையின் முதல் பாகமே   சுதி எனப்படும் சுரங்கள் ஆகும். சுருதியை ஒலி அதிர்வுகள் என்போம்.மேற்கத்திய இசையில் சுரங்களை  NOTES நோட்ஸ் என்பர்.  https://konguthendral.blogspot.com

     இந்திய இசையில் ஏழு சுரங்களை ச,ரி,க,ம,ப,த,நி, (மறுபடியும்)ச என்று எட்டு சுரங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.இந்த எட்டு சுரங்களும் அடங்கிய ஒரு தொகுப்பு ஒரு ஸ்தாயி எனப்படும்.  https://konguthendral.blogspot.com
                 மேற்கத்திய இசையில் ச,ரி,க,ம,ப,த,நி, ஆகிய ஏழு சுரங்களையும் C,D,E,F,G,A,B ஆகிய எழுத்துக்களால் குறிக்கப்பட்டு ஒவ்வொரு எழுத்தும் ஒரு NOTE என்றழைக்கப்படுகின்றது.
          C,D,E,F,G,A,B, மறுபடியும் C   ஆகிய எட்டு NOTESகளும் அடங்கிய ஒரு தொகுப்பு  ஒரு  OCTAVE அல்லது ஒரு செட் என்றழைக்கப்படுகின்றது.
              இந்திய இசையில் எல்லாப் பாடலும் 'ச' என்ற முதல் சுருதியில்தாங்க தொடங்கும்.
             மேற்கத்திய இசையில் C,D,E,F,G,A,B,ஆகிய ஏழு (NOTES) நோட்ஸ்களில் எந்த ஒரு ( NOTE) நோட்ஸிலும்  தொடங்கும்.அந்த ஆரம்ப நோட்ஸின் ( SCALE) ஸ்கேல் என்று பெயரிட்டு அழைக்கப்படும்.உதாரணமாக  C யில் தொடங்கினால் அந்த பாடலுக்கு 'C' SCALE என்றழைப்பர்.G யில் தொடங்கும் பாடலுக்கு 'G' SCALE என்றழைப்பர்.   https://konguthendral.blogspot.com
         
            இந்திய இசையில் சுரங்களின் வரிசையை அதாவது ச,ரி,க,ம,ப,த,நி,ச ஆகிய அமைப்புகொண்ட சுரங்களை 'சுவராவளி' அல்லது 'சரளிவரிசை' என்றுதாங்க அழைப்பார்கள்.

                 இசையானது சுழற்சிமுறையில் பயணிப்பதால்தாங்க 'ச' மீண்டும் சேர்க்கப்படுகிறது.பயிற்சி பெற,பெற தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.ஆதலால் குழப்பம் விளைவிக்கும் பகுதியை விட்டு கடந்து செல்லுங்க.பின்னர் தாங்களாகவே புரிந்துகொள்வீங்க....

      ச,ரி,க,ம,ப,த,நி,சஆகிய எட்டு சுரங்களும் அடங்கிய தொகுப்பு ஒரு ஸ்தாயி எனப்படும் அல்லவா!.அந்த ஸ்தாயி ஆனது மத்திய ஸ்தாயி,மந்திர ஸ்தாயி,அனுமந்திர ஸ்தாயி ,தார ஸ்தாயி,அதிதார ஸ்தாயி என சூருதிகளை கூட்டி இசைப்பதற்கேற்பவும்,சுருதிகளை குறைத்து இசைப்பதற்கேற்பவும் விரிவுபடுத்தி அழைக்கப்படுகின்றது.
                 மேற்கத்திய இசையில் LOW OCTAVE,MIDDLE OCTAVE,HIGH OCTAVE என விரிவுபடுத்தி அழைக்கப்படுகின்றது.
                   சரளி வரிசையானது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அதாவது ச,ரி,க,ம நான்கு சுரங்களும் - பூர்வாங்கம் எனவும்,ப,த,நி,ச நான்கு சுரங்களும்- உத்திராங்கம் எனவும் அழைக்கப்படுகின்றது.   https://konguthendral.blogspot.com

ஆரோகணம் எனப்படுவது  ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற வரிசையில் அதாவது சுரங்களின் ஏறுவரிசையில் இசைக்கப்படுவது ஆகும்.இதனையே, ச,நி,த,ப,ம,க,ரி,ச என்ற வரிசையில் அதாவது இறங்கியவரிசையில் இசைக்கப்படுவது அவரோகணம் என்றழைக்கப்படுகின்றது.

                ஆவர்த்தனம் எனப்படுவது ச,ரி,க,ம,ப,த,நி,ச என சுரங்களின் ஏறுவரிசையில் இசைத்து மீண்டும், ச,நி,த,ப,ம,க,ரி,ச என்ற இறங்கு வரிசையில் சுரங்களை இசைக்கப்படுவது ஆகும்.

               ஒவ்வொரு சுரமும் இரட்டையாக பாடப்பட்டால் அதனை ஜண்டை வரிசை என்றழைப்பார்கள்.

               சுரங்களானது இராகத்தின் இடையிடையே தாண்டிச் சென்றால் அந்த சுரங்களின் வரிசையை தாண்டுவரிசை அல்லது தாட்டு வரிசை என்றழைப்பார்கள்.

                இராகம் எனப்படுவது நாம் கேட்பதற்கு இனிமையைத் தருகின்றவகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையே ஆகும்.

          தாளம் எனப்படுவது ஒரு பாடலின் நடைமுறையை வரைமுறைப்படுத்துவது ஆகும்.  https://konguthendral.blogspot.com

          அலங்காரம் எனப்படுவது வெவ்வேறு தாளங்களின் அமைப்புகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறுவிதமாக அமைக்கப்பட்ட சுரவரிசையாகும்.அதாவது உள்ளோசையாகும்.அலங்காரத்தை கமகம் என்றழைப்பாங்க.
சுருக்கமாக சொல்லப்போனால்...சுருதி எனப்படும் சுரங்களைக் கொண்டு இராகமும்,இராக விளக்கத்திற்கு ஆரோகணமும்,அவரோகணமும் கிடைக்கின்றது.இராகத்திற்கான கீர்த்தனை அதாவது பாடல் பல்லவி,அனுபல்லவி,சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடப்படுகின்றது.
இராக வகைகளை காலை,மதியம்,மாலை,இரவு,என காலத்திற்கேற்ற ராகங்களாகவும்,கருணை,அன்பு,கோபம்,வீரம்,மகிழ்ச்சி,மங்கலம்,விந்தை,வெறுப்பு,பயம்,சாந்தம் என இயல்பு நடைக்கேற்ற ராகங்களாகவும் பாடப்படுகின்றன.
வாயால் பாடப்படும்போது சப்தம்,அர்த்தம்,லயம் அனைத்தும் சேர்ந்து இன்பம் அளிக்கிறது.  https://konguthendral.blogspot.com
இசைக்கருவிகளால் இசைக்கும்போது அதாவது காற்று வாத்தியங்களிலும்,தந்திக் வாத்தியங்களில் சப்தமும்,லயமும் சேர்ந்து இன்பத்தைத் தருகின்றன.
தோல் வாத்தியங்களில் இசைக்கப்படும்போது சப்தமும்,தாளநடையும் சேர்ந்து இன்பத்தைத் தருகின்றன.
 பதிவின் நீளம் கருதி இந்தப் பதிவு இத்துடன் நிறைவு செய்கிறேன்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.இசைக்கு வசமாவோம்.
 என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (5) கீ போர்டு வாசிக்கலாம் வாங்க!
என்ற தலைப்பில்..............


விரைவில்  தொடரும்.



15 ஜூன் 2020

(3) இசைக் கருவிகள் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

                                   (பதிவு - 3 )         இசைக் கருவிகள்

                                       
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
                 தமிழர்களின் இசைக்கருவிகளின் எண்ணிக்கையே  நூற்றுக்கணக்கில் இருக்கும்போது,இந்தியா உட்பட உலக நாடுகளின் இசைக் கருவிகளை இங்கு பட்டியலிட இயலாத அளவுக்கு ஆயிரக்கணக்கில் உள்ளதாக அறிய நேரிடுகிறது. https://konguthendral.blogspot.comஆதலால் தமிழர்களின் மிக முக்கியமான இசைக் கருவிகளை மட்டும் இங்கு காண்போம்.

                மிடறு என்றழைக்கப்படும் கற்தூண்கள் இசையை எழுப்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது தமிழர்களின் கட்டிடக்கலையில் நுட்பமானதாகும்.மிடறு எனப்படும் இந்த இசைத்தூண்கள் இன்றும் கோயில்களில் உள்ளன.சென்னையில் உள்ள யானைக்கோயில் உதாரணமாகும். https://konguthendral.blogspot.comமேலும் இசைத்தூண்கள் மதுரை,சுசீந்திரம்,திருநெல்வேலி,புதுக்கோட்டையிலும் உள்ளதாக அறியமுடிகிறது.
 தமிழ் இலக்கியத்தில்  இசைக் கருவிகளின் பட்டியல்.....
 இசைப்புலவர்: தமிழிசை மரபின் ...

(1) விண் அதிர் இமிழ் இசை கடுப்ப,பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு,ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும்பீலி அணித்தழைக்க்க் கோட்டோடு,
கண் இடை விடுத்த களிற்று உயிர்த்தும்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தும்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்க குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி,
நொடி தரு பாணிய பதலையும்,பிறவும்
             என 'மலைபடுகடாம்' என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.

(2)மண் குடங்களின் வாயில் தோல் கட்டி விலங்குகளையும்,பறவைகளையும் ஓட்டத் தினைப்புனத்தில்(கழனிகளில்) பயன்படுத்தப்பட்ட குடமுழவு என்ற கருவி  பின்னர் இது இசைக்கருவியாக விளங்கியது.
‘‘பாடுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பாணித்தே‘‘
                                                - குறுந்தொகை 291 (2–3)


(3) தூம்பு என்பது மூங்கிலை அறுத்து குழல் போன்று செய்யப்பட்ட கருவியாகும். இதனை வாங்கியம் என்றும் நெடுவாங்கியம் என்றும் கூறியுள்ளனர். இது யானையின் துதிக்கையைப் போன்றது.தற்காலத்தில் பித்தளையில் கொம்பு என்ற பெயரில் செய்யப்பட்டு இசைக்கப்படுகிறது. https://konguthendral.blogspot.com
‘‘விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப
முரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத
யாணர் வண்டினம் யாழிசை பிறக்க‘‘
                          - பரிபாடல் 21 (31–35)

தமிழர் இசைக் கருவிகளை இரு கூறாகப் பிரிக்கலாம். பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.  https://konguthendral.blogspot.com
தற்காலங்களில் நான்கு வகை இசைக்கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அவை..
(1)நரம்புக் கருவிகள்
 உதாரணம்-யாழ்,தம்புரா,வீணை,வயலின்,கோட்டு வாத்தியம் முதலியன.,(2)தோல் கருவிகள் 
உதாரணம் - பறை,தவில்,மிருதங்கம்,கஞ்சிரா,உடுக்கை முதலியன,
(3)துளைக் கருவிகள்
 உதாரணம் - நாதசுரம்,புல்லாங்குழல்,கிளாரிநெட் முதலியன,
(4)கன கருவிகள் 
உதாரணம்- ஜால்ரா எனப்படும் பாண்டில்(தாளம்),சேமக்கலம், முதலியனவாகும்.

  என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (4) இசையின் அடிப்படை  
என்ற தலைப்பில்..............


விரைவில்  தொடரும்.

12 ஜூன் 2020

(2) இந்திய இசை மரபுகள்

                  ( பதிவு -2) இந்திய இசை மரபுகளும்,மேற்கத்திய இசையும்.
                                                                  ---------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
             இசையானது   பண்டையகாலம் தொட்டே உலகமக்களின் வாழ்க்கையில்   ஒரு அங்கமாக திகழ்ந்து வருகின்றது.அவரவர் ரசனைக்கேற்ப   வாயால் பாடியும்,பல்வேறு கருவிகளால் மீட்டும் இசையை கேட்டு மகிழ்வுற்று வருகின்றனர்.இசைக் குறிப்புகளும் பல்வேறு நாடுகளில் பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் பல இசை மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.அவற்றுள் முக்கியமானவைகளில் சில...
(1)கருநாடக இசை,(2)இந்துஸ்தானி இசை,(3)கிராமிய இசை,(4)பழந்தமிழர் இசை என வகைப்படுத்தலாம்.
                

இசைக் குறியீடு அமைப்புகள் பல நூற்றாண்டுகளாக எழுத்துக்களின் எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன.https://konguthendral.blogspot.com
           இந்திய இசையில்  ச,ரி,க,ம,ப,த,நி ஆகிய இசைக்குறிப்புகளைப் பயன்படுத்திவருகின்றது. இந்த ஏழு இராகங்களையும் ச,ரி,க,ம,ப,த,நி,ச ஆகிய எழுத்துக்களால் அடையாளப்படுத்தி பயன்படுத்துகின்றனர்.மேற்கண்ட ஏழு ராகங்களும் சேர்ந்து ஒரு ஸ்தாயி என்றழைக்கப்படுகிறது.இயற்கையாக ஒலிகளைக் கொண்ட சுரங்கள் மத்திய ஸ்தாயி என்றும் குறைந்த ஒலிகளைக் கொண்ட சுரங்கள்  மந்த்ர ஸ்தாயி என்றும்,உயர்ந்த ஒலிச் சுரங்களை தாரா ஸ்தாயி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலம் & டச்சுமொழி பேசும் நாடுகள் இலத்தீன் எழுத்துக்களால் குறிக்கப்பட்டு இசைக்குறிப்புகளை C,D,E,F,G,A,B,C  ஆகிய ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.உலகின் பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக இத்தாலி,ஸ்பெயின்,பிரான்சு,ருமேனியா,ரஷ்யா,மற்றும் அரபுநாடுகளில்  (Doh,Re,Mi,Fa,So,La,Ti,Doh)  டோ,ரீ,மி,ஃபா,சோ,லா,டி  என Solfege முறையில் இசைக்கின்றனர்.இந்த ராகங்களை  C,D,E,F,G,A,B,C ஆகிய ஆங்கில எழுத்துக்களால் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
 ஆக முதல் பதிவில் குறிப்பிட்டது போன்று இசையானது கடலுக்கு ஒப்பானது.பல்வேறு நாடுகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப இசைக் குறிப்புகளை பயன்படுத்தி இசைக்கின்றனர்.இந்த தகவல்களெல்லாம் நமது அடிப்படைப் புரிதலுக்காக மட்டுமே.ஆதலால் நாம் அவற்றை கருத்தில் கொள்ளாமல் நமக்கேற்றவாறு இசைத்துப் பழகுவோம் வாங்க.

இனி தொடர்ந்து இசைப்பதிவுகளைப் பார்வையிடுங்க...குறைகள் இருப்பின் திருத்தம் செய்ய ஆலோசனை கூறுங்க!..
என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (3) இசைக் கருவிகள் என்ற தலைப்பில்..............


விரைவில்  தொடரும்.

09 ஜூன் 2020

இசை பழகலாம் வாங்க!

                                        மியூசிக் என்னும் இசை...
                                                         [MUSIC ]

                                         ---------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

                      வழிப்போக்கர்கள்  சுற்றுலா,திருவிழா போன்ற நிகழ்வுகளில் தேங்காய்த்தொட்டி,பெயிண்ட் காலிடப்பா போன்ற வீணான பொருட்களில் வீணைபோல செய்யப்பட்ட கருவியில் இனிமையான பாடல்களை இசைப்பதைக் கேட்டு வியப்படைந்திருப்போம்.அதாவது கையில் கிடைத்த பொருட்களில் இனிமையாக தாளமிடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருப்போம்.
(சுற்றுலாத் தளங்களான மைசூரு,பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் தற்போதும் காணலாம்.)இசைக் கச்சேரிகளில் இசைகளைக் கேட்டு இன்புறுவோம்.
இதனால் நம்மவர்களும்  இசையின் மீது ஆர்வம்கொண்டு மௌத் ஆர்கன்,புல்லாங்குழல்,எலக்ட்ரானிக் கீபோர்டு என வாங்கி வருவோம். அவற்றை வாசிக்கத் தெரியாமல் வீட்டில் கிடப்பில் போட்டுவிடுவோம்.இவ்வாறாக ஆர்வமிருந்தும் தக்க வழிகாட்டுதல் இல்லாமல், வாசிக்க இயலாமல் ஏக்கமுறும் இளைய சமூகத்திற்கு உதவலாம் என்ற எண்ணத்தில் ....
       கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையத்தில் நான் கற்ற பாடங்களை தங்களுக்காக  பதிவிடுகிறேன்.
   இசைக்கு காரணமே ஒலியலைகள் (Frequency) என்னும்  அதிர்வுதாங்க.அவ்வாறான ஒலியலைகளை ஒழுங்குபடுத்தும்போது செவிக்கு இனிய ஒலியான இசையை தருகிறது.
 (ஒலியலைகள் ஒழுங்கற்றுப்போனால் அதனை சப்தம் என்றும் இரைச்சல் என்றும் அழைக்கிறோம்)
                     இசையானது மகிழ்ச்சையைத் தரவும், மனதை ஒருநிலைப்படுத்தவும்,உயர்சிந்தனை பெறவும்  உதவுகிறது.
                        இசை என்பது கடல் போன்றது.நீர்த்தேக்கத்தைப்போன்றது.நமது தாகத்திற்கேற்ற அளவுதாங்க நீரை பருகமுடியும்.அதுபோல நமக்குத் தேவையான அளவு அறிந்துகொள்ள,இசை பற்றிய அடிப்படை அறிந்துகொள்ள வாங்க.
நான் கற்றறிந்தவைகளை ......
கீழ்கண்டவாறு
(1)அறிமுகம் - இசையான இயற்கை ஒலிகள்
(2)இந்திய இசைமரபுகள்,
(3)இசைக் கருவிகள்,
(4) இசையின் அடிப்படையே ஏழுசுரங்கள்,
(5) கீ போர்டு வாசிப்பது ஒரு கலை,
(6)புல்லாங்குழல்,மௌத் ஆர்கன் ஆகிய கருவிகளிலும் இசைத்து மகிழலாம்,(7)எனக்கு உதவிய இசைக்கலை இணையதள முகவரிகள் பட்டியல்.............
     என தொடர்ந்துபல பதிவுகளாக இடுகையிடுகிறேன் https://konguthendral.blogspot.com.அதாவது  இசை பற்றி என்னறிவுக்குப் பட்டதை பகிர்ந்தளிக்கிறேன்.
           
    (1)இயற்கை ஒலிகளே இசையாக.....

                          பழங்காலத்தில் நாடோடிகளாகத் திரிந்த மனிதன்  ஓய்வு நேரங்களில்  தன்னைச் சுற்றி கவனத்தை செலுத்தினான்.வனவிலங்குகளின் சப்தங்களையும்,பறவைகளின் கத்துதலையும்,தாவரங்களிலும்,பாறைகளிலும், மோதும் காற்றலைகள் ஏற்படுத்தும் ஓசைகளையும் உன்னிப்பாக கேட்டபோது அந்த ஓசைகளிலும் இனிமையைக் கண்டான்.அவைகளில்  தன்னை மயக்கும் இனிய ஓசைகளைத் தேர்ந்தெடுத்தான்.
     ரிக் வேத காலத்தில்
                  மாடுகளின் சப்தத்திலிருந்து (துத்தம்) 'ரி' ,யானைகளின் சப்தத்திலிருந்து (தாரம்) 'நி', மயில்களின் சப்தத்திலிருந்து (குரல்) 'ஸ' ஆகிய ஒலிகளை தேர்ந்தெடுத்து 'ரி,நி,ஸ' இந்த மூன்று ராகங்களில் இசைத்து மகிழ்ந்தான்.
(ரிக் வேத காலத்தின் இசைகள் யாவும் ரி,நி,ஸ ஆகிய மூன்று ராகங்களில்தாங்க கேட்கமுடியும்).
யஜூர் வேதகாலத்தில்
                  ஆடுகளின் சப்தத்திலிருந்து (கைக்கிளை) 'க',     குதிரைகளின் சப்தத்திலிருந்து (விளரி) 'த' ஆகிய ஒலிகளை பிரித்தேடுத்து 'ரி,நி,ஸ,க,த', ஆகிய ஐந்து ராகங்களின் துணையோடு இசைத்து மகிழ்வுற்றான்.
 சாமவேத காலத்தில்
   கூடுதலாக குயில்களின் சப்தத்திலிருந்து (இளி) 'ப', புறாக்களின் சப்தத்திலிருந்து (ஊழை) 'ம',  ஆகிய ஓசைகளைப் பிரித்தெடுத்து  ஸ,ரி,நி,க,த,ப,ம, ஆகிய ஏழு ராகங்களை பயன்படுத்தி இசைத்தும்,பாடியும் மகிழ்ந்தான். https://konguthendral.blogspot.com

   இவ்வாறாக கேட்பதற்கு இசைவான ஏழு  ஸ,ரி,நி,க,த,ப,ம, ஓசைகளையும் பிற்காலத்தில் தனக்கு வசதியாக  ஒழுங்குபடுத்தினான். இசைப்பதற்கேற்ப ச,ரி,க,ம,ப,த,நி என்று வரிசைப்படுத்தினான்.

         காலங்காலமாக இசையையும் குருகுலவழியில் கற்று பயன்படுத்திய மனிதன்  இசையொலிகளை அடையாளப்படுத்தி குறியீடுகளாக்கி  பிற்காலத்தில் கற்றுக்கொள்வதற்கேற்ற இசைச்சொற்களாக்கி எழுதிவைத்து இசைக்கத் தொடங்கினான்.

            
                          ஒரு பாடலின் பொருள் உணர்வதைவிட அந்தப் பாடலின்  நயமான ஒலிதாங்க நமக்கு மகிழ்வினைத் தருகின்றது.அதனால்தாங்க எந்தமொழிப் பாடலாக இருந்தாலும்  நாம் ரசித்து இன்புறுகிறோம்.ஆகவே இசையை உலகப் பொதுமொழி என்கிறோம்.

இனி தொடர்ந்து இசைப்பதிவுகளைப் பார்வையிடுங்க...குறைகள் இருப்பின் திருத்தம் செய்ய ஆலோசனை கூறுங்க!..
என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (2) இந்திய இசை மரபுகள் தலைப்பில்..............

விரைவில்  தொடரும்.


சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...