22 செப்டம்பர் 2011

ஊடகங்களின் பங்கு        

 அன்பு நண்பர்களே,வணக்கம். 
       சமூகநல்லொழுக்கத்திற்கு ஊடகங்களின் பங்கு பற்றி இந்தப்பதிவில் காண்போம்.

                            சிந்தையை மயக்கும் ஊடகங்கள்

         பூ உலகின் பெரும்பான்மை மக்களை தன்னிடம் மயக்கி வைத்துள்ள இந்த ஊடகத்துறை தான். இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்லும் பணியை பெற்ற தாய் தந்தையர்களை விடவும் ஆசிரியர்களை விடவும் அதிகமான அக்கறையை எடுத்துக் கொண்டுள்ளது இன்றைய ஊடகத் துறை 

          இன்றைய இளைஞர்களின் சரியான அல்லது தவறான செயல்பாடுகளுக்கு தெரிந்தோ! தெரியாமலோ!! ஊடகத்துறையே பெரும் பொறுப்பேற்கின்றது. 

          காரணம் இன்றைய இளைய தலைமுறைகள் தன்னுடைய அறிவு தேடலுக்கு பொழுது போக்கிற்கு என்று ஊடகத்துறையில் சரணாகதி அடைந்து கிடக்கின்றது.


       இப்படி இன்றைய சமூகம் தன்னிடம் சரணாகதி அடைந்துள்ளதை இந்த ஊடகத்துறை சரியான முறையிலே உணர்ந்து தனக்கான சமூகப் பொறுப்பை சரியான முறையில் செய்கின்றதா என்பதை சுய பரிசோதனை செய்யவேண்டிய நேரம் இது. 

     காட்சி ஊடகம் இதன் பங்கு மிக முக்கியம். 

       ஆபாசங்களும் வன்முறைகளும் இந்த காட்சி ஊடகத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

       இதில் சிக்கிக் கிடக்கும் இந்த மனித சமூகத்தை மீட்டெடுப்பது எப்படி? இந்த மயக்கத்தில் இருந்து இவர்களை விழித்தெழச் செய்வது எப்படி? அப்படி வெளிவந்தவர்களை ஆரோக்கியமான சமூகச் சூழலுக்காக அமைதியாய் ஒரு சமுதாய புரட்சிக் குறித்து சிந்திக்கக் கூடியவர்களாக மாற்றியமைப்பது எப்படி... எப்படி... எப்படி...?


      முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்று சொல்வார்களே அதை போல காட்சி ஊடகம் விதைத்த இந்த நச்சு விதையை இந்த ஊடகத்துறையே வேரறுக்க வேண்டும்.


       அறிவுபூர்வமான விவாதங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகள் எழிச்சி மிக்க சொற்பொழிவுகள் ஆகியவை  அதிகம் இடம் பெற வேண்டும். 

       இந்த மனித சமூகத்தில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சமூகநீதியையும் சரியாக விதைக்கின்ற சமத்துவ போராளிகளின் பங்களிப்பு இந்த ஊடகத்துறைக்கு மிக மிக அவசியம், 

      இந்த ஊடகத்துறை உடனடியாக ஒரு சபதத்தை மேற்கொள்ளவேண்டும். இனிமேல் இந்த மனித சமூகத்தின் சிந்தையை சீர்கெடுக்கக்கூடிய வன்முறை ஆபாசங்கள் போன்றவற்றை எந்த ஒரு காரணத்துக்காகவும் இடம் பெறச் செய்ய மாட்டோம், நாளைய சமுதாயத்தின் எழுச்சியும் வளர்ச்சியும்தான் எங்களுக்கு முக்கியம் என்று சபதம் மேற்கொள்ள வேண்டும்! செய்யுமா இந்த ஊடகத்துறை?


         இது மட்டுமா இன்றைய சூழலில் அதிகரித்து வரும் கள்ளக் காதல், கற்பழிப்பு, புது யுத்திகளை பயன்படுத்தி நடத்தப்படும் திருட்டு, இளம்பெண்கள் ரவுடிகளைக் கதாநாயகனாக நினைத்து , அவர்கள் பின்னால் போவது . 

      கல்லூரிப்பருவத்தில் கல்வி கற்பதையும் நாளைய இலட்சியங்களையும் மறந்து காம கலியாட்டங்களின் ஈடுபடுவது போன்ற இந்த செயல்கள் அனைத்தையும் இந்த ஊடகங்களே தெள்ள தெளிவாக கற்று கொடுக்கின்றது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.


       இதற்கு என்னதான் தீர்வு சமூகத்தில் நடைபெறும் இத்தனை தவறுகளுக்கும் ஊற்றுக்கண்ணாக இந்த ஊடகத்துறை செயல்படுகின்றது என்று கூறிவிட்டு அனைத்தையும் ஊடகத்துறையின் மீது சுமத்தி விட்டு ஒதுங்கிக்கொள்வதும் நாகரீகம் அல்ல. 

      வீட்டை விட்டு வெளியே செல்லும் நமது பிள்ளைகள் தங்களது பொழுது போக்கிற்காக, அறிவுத் தேடலுக்காக தங்களது நேரத்தை எங்கே செலவு செய்கின்றார்கள்.? எந்த மாதிரியான ஊடகத்தின் துணையை தேடுகின்றார்கள்? யார் யாரை நண்பர்களாக சேர்த்துக் கொண்டுள்ளார்கள்? என்பதை ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் கண்காணிக்க வேண்டும்.


     இவர்களின் தேர்வு சரியில்லாதபோது அதை அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும்,

      எங்கே சரியான வழிகாட்டுதல் இல்லையோ அங்கு தவறுகள் நடைபெறுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். 

      இதை உணர்ந்து சமூக நீதியை விரும்பும் சகோதரர்களே! உங்கள் கண் முன்னே நிலை தடுமாறும் ஒரு இளைஞர் இருந்தால் இவர் என்ன நமது சகோதரரா அல்லது சகோதரியா அல்லது நமக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத இவருக்கு நாம் ஏன் வழிகாட்டவேண்டும்? என்று எண்ணாதீர்கள். 

       நீங்கள் கருதும் இந்த சொந்தங்களில் எதாவது ஒன்று இவர்களோடு பழகும் சந்தர்பம் ஏற்பட்டால் இந்த சீர்கேடு இவர்களுக்கும் வரக்கூடும்.
இவர்கள் வழியாக வீட்டிற்கு வீட்டின் வழியாக தெருவிற்கு தெருவின் வழியாக ஊருக்கு இந்த சமூகத்தை சீர் கெடுக்க ஒரு சின்ன தீப்பொறி போதும் .

      எனவே, உங்கள் கண் முன்னால் நடக்கும் தவறுகள் அது சிறியதோ பெரியதோ தட்டிக் கேளுங்கள் ,தடுத்து நிறுத்துங்கள் இல்லையேல் நாளைய நமது தலைமுறைகள் சீர்கேட்டில் சிக்கித்தவிப்பது உறுதி........ சிந்திப்பீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக