31 அக்டோபர் 2018

கோவை கோலிவுட்டான கதை.....

                


முகநூல் நண்பர்   Abdul Samath Fayaz
அப்துல் சமத் பயஸ் அவர்களுக்கு உளம் கணிந்த பாராட்டுக்கள், மற்றும் வாழ்த்துக்கள்.. தங்கள் பதிவுகள் அனைத்தும் ஆஹா, அருமை, அற்புதம், அபாரம், அதிசயம் எனக் கூறவைக்கின்றன. நீங்கள், அந்தக்கால வெள்ளித்திரை பற்றிய தகவல்களின் அபூர்வ களஞ்சியம். கலைஞர், ஒரு நாளில் 16 மணி நேரம் உழைப்பது வழக்கம் எனக் கூறுவார்கள். ஆனால் நீங்கள் இத்தனை சேதிகளைத் திரட்ட எவ்வளவு நேரம் உழைத்திருந்து எங்களுக்குஅளித்திருக்கிறீர்கள் என எண்ணும்போது மிகவும் வியப்பளிக்கிறது.

                        ஆங்கிலேய அரசின் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த ஒருவர் பணி ஓய்வு முடிந்து பேக்கரி ஒன்றை கோவையில் தொடங்கினார்.அவர் பணியாற்றிய திருச்சியிலிருந்து தன் குடும்பத்தை மொத்தமாகக் கொண்டு வந்து கோவையில் போட்டார். அவரது பெயர் முனிசாமி நாயுடு.
கோவை ரயில் நிலையம் எதிரே தேவி பேக்கரி என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நிறுவி நடத்திக்கொண்டிருந்தவருக்கு ஒரு மகன்.படித்துக்கொண்டே தந்தைக்கு உதவியாக அவரும் பேக்கரித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.அவரது பெயர் ஸ்ரீராமுலு.
அது இந்திய சினிமா பேசத் தொடங்கிய காலகட்டம்.முதல் பேசும் படம் காளிதாஸ் தமிழகத்தில் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.ஏற்கனவே ஆலம் ஆரா என்ற படம் இந்தி மொழி பேசி இந்தியாவை வியக்க வைத்தது.இந்த காலகட்டத்தில் தான் இளைஞர் ஸ்ரீராமுலு தனது பேக்கரி போரடிக்க கோவை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தனது ஓய்வு நேரத்தைக் கழிப்பார். நகரத்தின் பெரிய மனிதர்கள் கூடும் இடமானதால் அன்றைய பெரிய மனிதர்களான ரங்கசாமி நாயுடு ஆர்.கே.ராமகிருஷ்ணன் செட்டியார் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆகியோரின் நட்பு ஸ்ரீராமுலுக்குக் கிடைத்தது.நண்பர்கள் நால்வரது கவனமும் திரைத் துறையில் பதிய கோவை முதன் முதலில் கோலிவுட்டானது.
அப்போதெல்லாம் சென்னையில் சென்னையில் எந்த ஸ்டுடியோவும் வருவதற்கு முன்பே நான்கு நண்பர்களின் ஒருவரான சாமிக்கண்ணு வின்சென்ட் ஊமைப் படங்களை நகரில் ஓட்டிக்கொண்டிருந்தார்.உண்மையாகச் சொல்லபாபோனால் தமிழகத் திரையின் பிதா மகன் அவர் தான்.அவரைப் பற்றி விரிவாக இன்னொரு நாள் பார்க்கலாம்.ஸ்ரீராமுலு மற்றும் மூன்று நண்பர்கள் இணைந்து தான் கோவையில் முதல் ஸ்டுடியோவான சென்ட்ரல் ஸ்டுடியோவை ஆரம்பித்தார்கள்.
ரங்கசாமி நாயுடு கோவையின் புகழ் பெற்ற குடும்பமான பி.எஸ்.ஜி.குடும்பத்தைச் சேர்ந்தவர்.ராமகிருஷ்ணன் செட்டியார் இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே.சண்முகம் செட்டியாரது சகோதரர்.சாமிக்கண்ணு வின்சென்ட் தமிழகத் திரையின் முன்னோடி.இவர்களோடு இணைந்த ஸ்ரீராமுவிற்கு திரையின் அரிச்சுவடி கூடத் தெரியாது.பேக்கரித் தொழிலைச் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் பிற்காலத்தில் புகழ் பெற்ற பல படங்களை எடுத்துத் தள்ளியது ஆச்சர்யமான ஒன்று.
கோவை சிங்காநல்லூரில் 1936ல் தொடக்கப்பட்ட சென்ட்ரல் ஸ்டுடியோ தான் தமிழக திரைத் துறையின் தலையெழுத்தையே மாற்றியது என்பதை திரை வரலாறு அறிந்தவர் மறுக்க முடியாது.இங்கு தான் பம்பாய் கல்கத்தாவிற்கு அடுத்தபடியாக நவீன தொழில் நுட்பத்தோடு கூடிய ஸ்டுடியோ இயங்கியது.ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் கூடிய பி.என்.ஸி.மிட்ஸெல் கேமிராக்கள் லைட்டிங் பத்து கி.வாட் ஐந்து கி.வாட் செட்கள் அன்றைய மதிப்பில் லட்சக்கணக்கான ரூபாய்களைப் போட்டு வாங்கப்பட்டது.டெக்னீஸியன்கள் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள்.ஒப்பனையாளர்கள் உடை அலங்கார நிபுணர்கள் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள்.தனியாக ஒரு மியூசிக் ட்ரூப் இயங்கியது.
முதல் படமான துக்காராம் தொடங்கப்பட்டது.அதிலிருந்து ஏகப்பட்ட படங்கள் இந்த ஸ்டுடியோவில் எடுத்துத் தள்ளப்பட்டது.நடிகர்கள் மாதச் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டனர்.நண்பர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இளைஞர் ஸ்ரீராம் தனியாக தனக்கென ஒரு ஸ்டுடியோவை கொஞ்சம் தள்ளி நிர்மானித்துக்கொண்டார்.அதற்கு பக்ஷி ராஜா ஸ்டுடியோ என பெயரிட்டார்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில் கிடைத்த அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இவர் பிற்காலத்தில் பல புகழ் பெற்ற படங்களை தமிழகத் திரைக்குத் தந்தார்.அன்றைய சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யு.சின்னப்பா ஆகியோரின் நெருங்கிய நண்பரானார்.பாகவதரின் சிவகவி மற்றும் சின்னப்பாவின் ஆர்யமாலா ஜகதலப் பிரதாபன் படங்களை தயாரித்து இயக்கியவர் ஸ்ரீராமுலு.
தென்னிந்தியாவின் புகழ் பெற்ற இயக்குநராக இருந்த ஸ்ரீராமுலு லட்சுமி காந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் கலைவாணரோடு கைது செய்யப்பட்டவர். தனக்காக வாதாட நூகண்ட் கிராண்ட் என்ற ஆங்கிலேய வழக்கறிஞரை நியமித்த ஸ்ரீராமுலு வழக்கு தொடங்கும்போது கிராண்ட் இறந்து விட புகழ் பெற்ற லாயரான கே.எம்.முன்ஷியை நியமித்தார்.முன்ஷியின் வாதத் திறமையால் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையானார்.
சென்னையில் இருந்தால் மீண்டும் வம்பு தான் என எண்ணி உடனே கோவை திரும்பினார்.உடனடியாக கன்னிகா என்ற படத்தைத் தொடக்கினார்.அன்றைய பட்டதாரியான டி.ஈ.வரதனைக் கதாநாயகனாக்கி வழக்கமான தனது நாயகியான எம்.எஸ்.சரோஜினியை நாயகியாக்கி படத்தை சூப்பர் ஹிட்டாக்கினார்.
ஸ்ரீராமுலு அன்றைய பிரபலமாகக் காரணம் அவரது படங்கள் தான்.கை தேர்ந்த இயக்குநராக அவர் அவதாரம் எடுத்தது அவரது படங்களைப் பார்த்தாலே தெரியும்.சிவகவியை அருமையாக இயக்கி படத்தை வெற்றிப் படமாக மாற்றிக் காட்டினார்.பாபநாசத்தின் பல பாடல்கள் இன்றும் பேசும்படி எடுத்துத் தந்திருப்பார்.அதே போல் அவரது பவளக்கொடி படமும் அன்று பரவலாகப் பேசப்பட்டது.ஏற்கனவே பாகவதரின் முதல் படமான பவளக்கொடியும் ஒரு வெற்றிப் படம் தான்.இதை இயக்கியது.கே.எஸ்.
போட்டி போட்டுக்கொண்டு பாகவதருக்கு எதிராக நடித்துக்கொண்டிருந்தார் சின்னப்பாவை வைத்தும் வெற்றிப்படங்களைத் தந்தவர் ஸ்ரீராமுலு.அவரது ஆர்யமாலா மற்றும் ஜகதலப் பிரதாபன் அன்றைய காலகட்டங்களில் பரவலாகப் பேசப்பட்ட படங்கள்.அதிலும் ஜகதலப் பிரதாபனில் சின்னப்பா அருமையாக நடித்திருந்தார்.பிற்கால புகழ் பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே பாடலில் பல சிவாஜி வருவது போல அன்றே பல சின்னப்பாகக்கள் வாத்திய வித்தை புரிந்ததை முதன் முதலில் திரையில் காட்டியவர் ஸ்ரீராமுலு.ஜி.ராமநாதனின் அருமையான இசை சின்னப்பாவிற்கு புகழைத் தேடித் தந்தது.பனிரெண்டு மந்திரிமார் கதையில் ஒரு கதை தான் ஜகதலப் பிரதாபன்.அன்றைய சகலகலா வல்லவனை இப்படித் தான் அழைப்பார்கள்.அம்பா அகில லோக பிரியா , பாக்கியசாலிகள் உண்டோ, எனக்கு சிவ குருபை வருமா?., எங்கே செல்லுவேன் இறைவா?. தருணமிது அம்பா என பாபநாசத்தின் பல பாடல்களை அருமையாகப் பாடினார் சின்னப்பா. சிவ கவி கன்னிகாவைத் தொடர்ந்து காஞ்சனா என்ற படத்தையும் எடுத்தார் ஸ்ரீராமுலு.
பக்சிராஜாவின் மற்றுமொரு சிறந்த படைப்பு ஏழை படும் பாடு.1950ல் வெளியான இந்தப் படத்தை ராம்ராத் இயக்கியிருந்தாலும் ஸ்ரீராமுலு இந்தப் படத்தின் பின்னணியில் நின்றார்.தமிழின் முதல் எதார்த்த சினிமா.சித்தூர் நாகையா ஜாவர் சீதாராமன் பத்மினி ஆகியோர் நடித்த பிரமாண்டமான படமிது.
இந்த நிறுவனத்திலிருந்து வந்த புகழ் பெற்ற மற்றொரு படம் மலைக்கள்ளன்.மக்கள் திலகத்திற்கு ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்த படம்.முதல் தேசிய விருது பெற்ற படம்.மர்மயோகிக்குப் பிறகு கலைஞரின் கை வண்ணத்தில் மக்கள் திலகம் வெற்றிக் கனியை சுவைத்த படம்.
நாமக்கல் கவிஞரின் கதைக்கு கலைஞர் உரையாடல் எழுதியது அன்று பரவலாகப் பேசப்பட்டது.1954ல் வெளியான இந்தப் படத்தை எடுத்த ஸ்ரீராமுலு யாருமே செய்யாத சாதனையை இந்தப் படத்தில் செய்தார்.ஆறு மொழிகளில் வந்த ஒரே படம் என்ற பெருமையை மலைக்கள்ளன் பெற்றது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்பதோடு நில்லாமல் சிங்களத்திலும் இந்த மலைக்கள்ளன் வந்து போனான்.மக்கள் திலகத்தின் முதல் கொள்கை விளக்கப் பாடலான எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் டி.எம்.எஸ்ஸூக்கு ஒரு பலமான அஸ்திவாரம் போட்டுக் கொடுத்தது.இதில் பூங்கோதை என்ற கேரக்டரில் வருவார் பானுமதி.
இருப்பவனிடம் எடுத்து இல்லாதவனிடம் தரும் ராபின் ஹூட் கதைக்கு அருமையாகப் பொருந்தினார் எம்.ஜி.ஆர்.பிற்கால பல ராபின் ஹூட் படங்களுக்கு முன்னோடி மலைக்கள்ளன் தான்.
கோவை மண் அந்தக் காலத்தில் புகழோடு விளங்கக் காரணம் ஸ்ரீராமுலு தான்.பிரபலமான திலீப் குமார் மீனா குமாரி இங்கு வந்து பக்ஷி ராஜாவில் நடித்துக் கொடுத்த படம் தான் ஆஸாத்.இந்தியில் பெரு வெற்றி பெற்ற இந்தப் படத்தை இயக்கியது ஸ்ரீராமுலு தான்.சூப்பரான பாடல்களோடு வெள்ளி விழா கொண்டாடிய படமிது.இந்தக் கணையே அக்கி ராமுடு என தெலுங்கில் வந்து என்.டி.ஆருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.ஜோடியாக இதே பானுமதி நடித்திருந்தார்.ஏற்கனவே ஸ்ரீராமுலு பல தெலுங்குப் படங்கள் மலையாளப் படங்களை இயக்கியிருக்கிறார்.கல்யாண் குமாரை கன்னடத்தில் பிரபலமாக்கியதும் இவர் தான்.
ஸ்ரீராமுலுவின் மற்றொரு படம் மரகதம்.டி.எஸ்.துரைசாமி எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கினார் ஸ்ரீராமு.இது சர் வால்டர் ஸ்காட் எழுதிய நாவலைத் தழுவியது.திரைக் கதையை எஸ்.பாலச்சந்தர் எழுதினார். நடிகர் திலகம் பத்மினி ஜோடியான இந்தப் படத்திற்கு இசை சுப்பையா நாயுடு.சந்திரபாபுவின் வெற்றிப் பாடலான குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடல் இதில் தான்.
காவிரி பாயும் கன்னித் தமிழ்நாடு டி.எம்.எஸ்.குரலில் அருமையாக ஒலித்தது.மாலை மயங்குகிறவர்களை நேரம் பச்சை மலை அருவி ஓரம் போன்ற சூப்பர் பாடல்களும் உண்டு.பத்மினி லலிதா சகோதரிகளை திறமையாகப் பயன்படுத்தியவர் ஸ்ரீராமுலு.
தமிழகத் திரைத் துறை என்ன தான் சென்னையை மையம் கொண்டிருந்தாலும் ஆரம்பப் பாடசாலை கோவை தான் என்பதை பிற்காலத் தலைமுறை மறக்கக் கூடாது.இங்கு தான் பிற்காலத் தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் சாதாரணமாக நடமாடினார்கள்.அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர் மற்றும் மக்கள் திலகத்தை வார்த்தெடுத்த பூமியிது.பத்து ரூபாய் மாத வாடகைக்கு கோவையில் வாழ்ந்த வரலாறை கலைஞரின் நெஞ்சுக்கு நீதியில் காணலாம்.மக்கள் திலகத்தின் சுய சரிதையில் கோவையில் அவர் கழித்த காலங்களைக் காணலாம்.பாகவதர் சின்னப்பா தொடங்கி பல பிரபலங்களை மக்களுக்கு அடையாளம் காட்டியது கோவை மண்.தென்னிந்தியாவின் புகழ் பெற்ற ஆரம்ப ஸ்டுடியோக்கள் இரண்டு இருந்தது இங்கு தான்.அதில் ஒன்று தான் ஸ்ரீராமுலு நாயுடுவின் பக்ஷி ராஜா.கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும் உன்னதமான வரலாற்றைத் தாங்கி நிற்கிறது இந்த இரண்டு ஸ்டுடியோக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக