27 அக்டோபர் 2018

கற்பு எனப்படுவது

 

 

கற்பு!

     பெண்ணுக்கு இலக்கணம் கூறுமிடத்து அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவற்றைக் கூறுவர்.

அதென்ன அச்சமட நாணம் பயிர்ப்பு?

அச்சம் - புதியவரை புதியவற்றைக் காணும் போதும் கேட்கும் போதும் அஞ்சுதல்.

மடம் -அதிகம் தெரிந்திருந்தும் தெரியாதது போலிருத்தல்.

நாணம் - ஆடவரைக் கண்டால் இயற்கையாக ஏற்படும் வெட்கம்.

பயிர்ப்பு - அன்னிய ஆடவரின் உடலோ, உடையோ தன்மீது பட்டவுடன் அருவருத்தல்.

ஆக நாற்குணங்களும் நாற்படையாக விளங்கும் ஓர் பெண் தன்னை மணந்து கொண்ட கணவனுக்கு இல்லாளாகி அவன் இல்லத்தை ஆட்சி செய்பவளாகப் புகுகிறாள். அவள் ஆட்சியின் கீழ் அம்மனை விளங்கப் பெறுகையில் அவளுக்கு மனைவி என்ற பதவியுயர்வு கிடைக்கிறது. விளங்கிய மனையின் நாயகனாக வீற்றிருக்கும் கணவனின் இன்ப துன்பங்களில் துணைநின்று காக்குங்கால் அவள் துணைவியாகிறாள்.

நல் மனைவியாய், நற்றாயாய், மாமியார் மெச்சும் மருமகளாய் விளங்கும் பெண்ணைக் கற்புடையாள் எனலாம். ஓர்பெண் இல்லாளாகி மனைவி நிலைக்கு உயர்ந்து துணைவி என்னும் உச்ச நிலையை அடைய கற்பை உயிரினும் மேலாக போற்றப்படவேண்டியிருக்கிறது.

ஆக கற்பு என்பதென்ன? அது உடலில் எவ்விடத்தில் உள்ளது? சிறுகுடலிலா? பெருகுடலிலா? கல்லீரலிலா?கற்பு என்பதற்கு நாம் தற்காலத்தில் எண்ணிக்கொண்டிருக்கும் பொருளில் காண்போமானால் இதுபோன்ற வினாக்கள் எழத்தான் செய்கிறது.

உண்மையில் கற்பு என்பதென்ன?

ஓர் பெண் தான் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் நின்று வழுவாமை கற்பாகும். ஆக கற்பு என்பதன் பொருள் ஒழுக்கமாகும். பிறகேன் நாம் கற்பொழுக்கம் (கற்பு ஒழுக்கம்) என வழங்கிவருகிறோம்? கரணியம் யாதெனில் கற்பு என்பதற்கு நாம் தவறான பொருள் கொண்டதனால்தான் பிற்காலத்தில் கற்பு என்ற ஒழுக்கத்தின் பின் மீண்டும் ஓர் ஒழுக்கம் ஒட்டிக்கொண்டு விட்டது எனலாம்.

மேலும் கற்பிக்கப் படுவது கற்பாகும். தாய் தந்தையால் ஆசானால், மாமன் மாமியாரால், கணவனால் ஓர் பெண் இப்படி இருக்கவேண்டும் நடக்கவேண்டும் எனக்கற்றுக்கொடுத்தல் கற்பாகும்.

ஒருவனுக்கு எத்துணை செல்வங்கள் அமையப்பெறினும் நற்குணம் நல்லடக்கம் இல்லாள் இல்லாக அமையப்பெறாவிடின் அவ்வில் இல்லாயிராது.

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்!


ஆக ஒழுக்கம் என்பது இன்றியமையாததாகிறது.

கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை என விளங்கும் கொழுநன் உண்டபின் தானுண்ணுதல் அவன் துயின்றபின் தான்துயிலுதல் அவன் எழுமுன்எழுதல் போன்றவை ஒழுக்கத்திற் சிறந்த நங்கையரின் செய்கைகள் என்கிறது காசி காண்டம்:-

கொழுந னுண்டபின் தானுகர் கொள்கையும்
விழிதுயின்றபின் துஞ்சலு மென்றுயி
லெழுதன் முன்ன மெழுதலு மேயன்றோ
பழுதிற் கற்புடைப் பாவையர் செய்கையே!

ஒழுக்கத்திற் சிறந்த மங்கை என்பவள் கொண்டவனுக்குத் தாயாயும் ஆண்டானுக்கு அடிமையாயும் புவியின் பொறுமையோடும் இரவில் கணவன் இன்புற்று மகிழ வேசையர் போலும் நாட்டை வழிநடத்தும் மன்னனுக்கு மதியுரை நல்கும் மந்திரிபோலும் இருத்தல் வேண்டும்.

அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் -வன்னமுலை
வேசி துயிலும் விறன்மந் திரிமதியும்
பேசி லிவையுடையாள் பெண்!

கற்படைய மாதரார் பற்றிக் கூறுகையில் என்னாசான் பாத்தென்றலார் கற்புடையவள் என்பவள் மாற்றானை மனதாலும் தீண்டாதவள் அல்ல. மாற்றான் ஒருவன் மோகிக்கும் வன்னம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளாமலும் பேச்சில் செயலில் அவ்வன்னம் நடவாதிருத்தலுமே ஆகும் என்பார்.

ஆக கற்புடையாள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பல உண்டென உணர்த்தும் பழம்பாடல்கள் பல உண்டெனினும் தற்காலத்திற்கு உகந்ததாயில்லாத காரணத்தால் தவிர்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...