15 அக்டோபர் 2018

தமிழின் பெருமை:

தமிழின் பெருமை:
~~~~~~~~~~~~~
                            செந்தமிழ் பழமைக்கும் பழமையானது; புதுமைக்கும் புதுமையானது; வடமொழி ஒரு காலத்தில் திருத்தமற்ற மொழியாக வழங்கியது. பின்னால்தான் திருத்தியமைக்கப்பட்டது. இப்பொழுதுள்ள வடமொழி திருத்தியமைக்கப்பட்ட மொழி. "சம்ஸ்கிருதம்' என்றால் திருத்தியமைக்கப்பட்டது என்று பொருள். தமிழ், செந்தமிழாகவே பிறந்தது; செந்தமிழாகவே வளர்ந்து வருகின்றது. "உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாமல்' ஓங்கி வளர்வது. இந்தச் சிறப்பை எண்ணித்தான் இதற்குக் "கன்னித் தமிழ்' என்ற பெயரையும் வைத்தனர் ஆன்றோர்கள்.
தமிழர்கள் "தமிழ்' என்று குறிப்பிடும்போது அதனோடு மற்றொரு சொல்லையும் சேர்த்து வழங்குவார்கள். பேசும்போது தமிழ் என்று தனியாகக் குறிப்பிட்டாலும், எழுதும்போது அதனுடன் ஒரு சிறப்புச் சொல்லை இணைத்தே எழுதுவார்கள். இது பழந்தமிழர் பண்பு. தமிழோடு இணைத்து எழுதுகின்ற அச்சொல் தமிழின் சிறப்பை - தன்மையை - விளக்குவதாகவே அமைந்திருக்கும்.

செந்தமிழ், பைந்தமிழ், தண்டமிழ், நற்றமிழ், இன்றமிழ், வண்டமிழ், தன்றமிழ், முத்தமிழ், தெய்வத்தமிழ், அன்னைத் தமிழ், கன்னித் தமிழ், அருந்தமிழ்.

செந்தமிழை இத்தகைய அடைமொழிகளோடு இணைத்தே சொல்லுவார்கள். இதைக்கொண்டே தமிழர்கள் தங்கள் தாய்த் தமிழை எவ்வளவு அருமையாக, இன்னுயிரைப்போல் போற்றி வந்தனர் என்பதைக் காணலாம்.
இவற்றிலே கன்னித் தமிழ் என்னும் தொடர் மிகவும் அருமையானது; அழகானது; தமிழின் அழியாத தன்மையை அறிவிப்பது. உலகம் தோன்றிய காலத்திலே தோன்றியது; உலகம் உள்ள வரையிலும் உயிருடன் வாழ்வது தமிழ் என்னும் உண்மைப் பொருள் பொதிந்த தொடர். இத்தொடர் பொருட்செறிவாயுள்ள பொன்மொழியாகும்.
மணமாகாத பெண் கன்னிப் பெண். கன்னிகையின் வனப்பு என்றும் வாடாத மலர். அவள் அழகு, காண்போர் கண்ணையும் கருத்தையும் கவரும். அது பெண் தன்மை குன்றாத பேரழகு. இவை மட்டும் அன்று; கன்னிகைக்கு மற்றொரு தனிச் சிறப்பும் உண்டு. அவள் யாருக்கும் அடிமைப்படாதவள்; வேண்டுமானால்-விரும்பினால்-அவள் பிறரைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ளலாம். அவள் யாருக்கும் அடிமையாகமாட்டாள்; தன்மையும், தூய்மையும் குன்றாமல் தலைநிமிர்ந்து அவளால் வாழ முடியும். இது கன்னிகைக்குள்ள ஒரு தனிச் சிறப்பும் பண்புமாகும்.
நலம் எல்லாம் நிறைந்தது:
தமிழ்மொழியும் கன்னிப் பெண்ணைப்போல் விளங்குவது; கன்னிப் பெண்ணுக்குள்ள நலமெல்லாம் கனிந்து நிரம்பித் ததும்புவது. அழகிலே - இனிமையிலே - பயனிலே - எம்மொழிக்கும் அடிமையாகாத தன்மையிலே - தமிழுக்கு நிகரான மொழி தரணியில் வேறு ஒன்றுமேயில்லை. தமிழுக்கு நிகர் - சமம் - ஒப்பு - தமிழேதான்!
நிற்பது திருவள்ளுவர் மொழி என்று கூறினார் ஒரு புலவர். "என்றும் வாடாது; எவ்வளவு நாள்களானாலும் அன்றலர்ந்தது போலவே காட்சியளிக்கும்; தேனைச் சிந்தி. குறையாத, செழுமையான தளிர்களையுடைய கற்பக மரத்தின் மலர் இத்தகைய தெய்வத் தன்மையும் அழகும் நிறைந்தது. இது போன்றது வள்ளுவர் வாய்மொழி' என்று திருக்குறளுக்குக் கூறிய இப்பாராட்டு, கன்னித் தமிழுக்கும் பொருந்துவதாம்.

""உன்-சீர் இளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே''

உன்னுடைய சிறந்த கன்னித் தன்மையைப் புகழ்ந்து எங்கள் செயலை மறந்து, உன்வசமாகி, உன்னை, "கன்னித் தமிழ்' என்று வாழ்த்துகின்றோம்''. இது "மனோன்மணீயம்' என்னும் நாடகத் தமிழ் நூலை இயற்றிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் பாட்டு. இப்படி மனமார, வாயாரப் புகழ்ந்து தமிழ்த்தாயை வாழ்த்துகின்றார். அவர் தான் மட்டும் வாழ்த்துவதாகச் சொல்லவில்லை; தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து இறைஞ்சுகிறோம் என்று பாடுகின்றார்.
கன்னித் தமிழே முத்தமிழ்:
செந்தமிழை முத்தமிழ் என்று பாராட்டுகின்றோம். செந்தமிழ் எப்போது முத்தமிழ் ஆயிற்றோ! அதை அறிவார் யார்? அதன் காலத்தைக் கணக்கிட முடியாது. தொல்காப்பியத்திலே முத்தமிழ் முழங்குகின்றது. தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்; இன்றுள்ள தமிழ் நூல்களில் காலத்தினால் முற்பட்டது தொல்காப்பியம் ஒன்றேதான். தொல்காப்பிய காலத்திலே தண்டமிழ்மொழி முத்தமிழாக வழங்கியதென்றால், முத்தமிழ் பிறந்த காலத்தைக் கணக்கிடுவது எப்படி?
÷முத்தமிழ் - மூன்று வகையான தமிழ். மூன்று பிரிவான தமிழ், மூன்று இனமான தமிழ் என்று மட்டும் பொருள் சொல்லுவது பொருந்தாது. செந்தமிழின் சிறந்த தன்மையை அதன் ஒப்பற்ற பண்பை-மாசுமறுவற்ற கன்னித் தன்மையைக் கண்டறியாதவர் சிலர் உண்டு. அவர்கள்தான் செந்தமிழ், கருந்தமிழ், கொடுந்தமிழ் என்று குருட்டாம்போக்கிலே கூறுவர். முத்தமிழுக்குப் பொருள் இதுதான் என்று மொழிவர். இவர்கள் செந்தமிழின் கன்னித் தன்மையைக் கண்டுணராதவர்கள்.
÷முத்தமிழ் - மூன்று துறையில் பயன்படும் தமிழ் மூன்று வகையில் உதவி புரியும் தமிழ்; மூன்று வகைப்பட்ட மக்களுக்கும் அறிவும் இன்பமும் சுரக்கும் தமிழ். இதுதான் முத்தமிழின் பொருள். இந்த முத்தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று துறைகளில் பயன்படும் தமிழாகும்.
படிக்கும் தமிழ்:
இயற்றமிழ் என்பவர்கள் கற்றவர்கள் மட்டும் எளிதிலே பொருள் தெரிந்துகொள்ளும்படி நிற்பது, இயற்றமிழிலே பேச்சு வழக்கில் இல்லாத சொற்களும் கலந்து வழங்கும். இயற்றமிழைப் "படிக்கும் தமிழ்' என்று சொல்லிவிடலாம்.
கேட்கும் தமிழ்:
இசைத் தமிழ் என்பது பண்ணோடு கூடியது. இசை-பண்; சங்கீதம். இசைக் கருவிகளின் துணையுடனோ, துணையில்லாமலோ பாடும்படி அமைந்திருப்பது இசைத்தமிழ். படித்தவர்களின் உள்ளத்தையும் இசைத்தமிழ் கவரும். படிக்காதவர்களின் நெஞ்சையும் இசைத்தமிழ் இழுத்துக்கொள்ளும். இசையோடு சேர்ந்த தமிழ், இசைத்தமிழ் . இசைத்தமிழைக் "கேட்கும் தமிழ்' என்று இயம்பலாம்.
பார்க்கும் தமிழ்:
நாடகத் தமிழ் என்பது ஒரு நிகழ்ச்சியைக் கண்ணாற் காணும்படி நடத்திக் காட்டுவதற்கு உதவுவது. பிறர் பேசியதை அப்படியே-அவரைப்போலவே-சொல்லிக் காட்டுவது; நடந்த ஒரு வரலாற்றை அல்லது புதிதாகப் புனைந்த ஒரு கதையை மற்றவர்கள் கண்டு சுவைக்கும்படி நடித்துக் காட்டுவதற்கு உதவுவது நாடகத் தமிழ். ஒருவரைப் பார்த்துப் பேசுவது, ஒருவரோடு ஒருவர் உரையாடுவது நாடகத் தமிழில் அடங்கும். இவ்வாறு உயர்ந்த படிப்பாளிகள் சிறிது கற்றவர்கள், கற்காதவர்கள் ஆகிய இம் முத்திறத்தாரையும் நல்வழிப்படுத்தவே செந்தமிழ் அன்னை முத்தமிழ் உருவாகி நிற்கிறாள்.
÷இயற்றமிழிலே இசையும் உண்டு; நாடகமும் உண்டு. இசைத் தமிழிலே இயலும் உண்டு; நாடகமும் உண்டு. நாடகத் தமிழிலே இயலும் உண்டு; இசையும் உண்டு. இந்த மூன்று தமிழும் ஒரு மரத்தின் கிளைகள், ஆனால், இவற்றைப் பிரித்து வெட்டித்தள்ள முடியாது.
÷கன்னிப்பெண் எல்லோர் நெஞ்சையும் கவர்வதுபோலவே இந்த முத்தமிழும் அனைவர் உள்ளத்தையும் அள்ளிக்கொள்வது. எல்லோருக்கும் இன்பமும், மகிழ்ச்சியும் அறிவும் ஊட்டுவது. கன்னித் தமிழின் இயல்புக்கு இந்த முத்தமிழ் அமைப்பும் ஓர் எடுத்துக்காட்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழ் என்று பெயர் பெற்று நிற்கின்றது. இதுபோன்ற பெயர்-சிறப்பு வேறு எம்மொழிக்கும் இல்லை.
காவியத்தில் கன்னித் தமிழ்:
கவிதைகளால் இயற்றப்படுவன காவியங்கள். தமிழ்க் கவிதைகளிலும், கவிதைகளின் பொருள்களிலும் கன்னித் தன்மையுண்டு; கவிதைகளால் செய்யப்பட்ட காவியங்களிலும் கன்னித் தன்மை உண்டு. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்ற நான்கு பகுதியுடையது என்பர். இவையே பாடல் வகையில் விரிவாகும்.÷தொல்காப்பியர் காலத்திலும் அவர் காலத்திற்கு முன்னும் இந்த நால்வகைப் பாடல்களையும் இவற்றின் பகுதிகளையுமே காவியங்கள் செய்வதற்குக் கருவியாகக் கொண்டனர். இந்த நான்கு வகைப் பாடல்களிலே மூன்று வகைப்பொருள்களை அமைத்துப் பாடி வந்தனர். அந்த மூன்று பொருள்கள் அறம், பொருள், இன்பம் என்பன. காவியங்களிலும், கவிதைகளிலும் இந்த முப்பொருள்களையே அமைத்துப் பாடிவந்தனர்.
இத்தகைய கவிதையும் பொருளும் கொண்ட காவியங்களிலே தமிழ்க் காவிய அமைப்பு மிகவும் சிறந்தது. தமிழ்க் காவிய அமைப்பு ஒரு தனித் தன்மையுள்ளது. வடமொழிக் காவிய அமைப்புக்கு மாறானது.
இன்றைய யுகம்:
இன்று நடப்பது பொதுமக்கள் யுகம். அரச குடும்பங்களின் தனி அதிகார ஆட்சிக்காலம் மறைந்து வருகின்றது. கதைகளும், காவியங்களும் காலத்தின் சூழ்நிலையை ஒட்டியே பிறக்கும். அரச குடும்பக் கதைகளுக்கு இக்காலத்தில் மதிப்பில்லை. அரச குடும்பங்களின் வாழ்க்கையை-அரசர்களின் சர்வாதிகாரப் பெருமையை - அளவுகோலாகக்கொண்டு எழுதப்படும் கதைகளை இக்காலத்தினர் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.
தமிழ் நாட்டிலே பன்னூறாண்டுகளுக்கு முன்னே பல மொழியினர் குடியேறினர். அவர்களிலே பலர் தமிழர்களாகவே உருமாறிவிட்டனர். தமிழ்மொழியையே தாய்மொழியாகக் கொண்டுவிட்டனர்.
தமிழகத்திலே புகுந்த எந்த மொழியினராலும் தமிழின் கன்னித் தன்மையைக் கலைக்க முடியவில்லை; தமிழின் தனிச் சிறப்பைத் தகர்க்க முடியவில்லை. இதற்கு மாறாக, எல்லோரும் செந்தமிழ்க் கன்னியின் சிறந்த புன்முறுவலிலே சிந்தனையைப் பறிகொடுத்தனர். அருந்தமிழ்க் கன்னியின் அழகு சிந்தும் நடையிலே அன்பு கொண்டனர்; அவளுடைய வனப்பையும் பண்பையும் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தும் அடியார்களாகத் திரும்பிவிட்டனர். இது வரலாறு கண்ட உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...