08 மார்ச் 2015

மது போதை தவிர்ப்போம் நம்ம சமூகத்தைக் காப்போம்.

மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம்.போதைப்பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்..குடிபோதையின்சீரழியும் குடும்பங்களின் வேதனைகளை கண்டு பொறுக்கமுடியாமல் நாங்கள் மாணவர்களையும் இணைத்துக்கொண்டு எட்டு நாட்கள் இயக்கம் கூட நடத்தினோம்.
  போதையின் தீங்குகள் பற்றி பிஞ்சுக்குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ள நிலை பற்றி திருமிகு.தங்கர்பச்சான் இயக்குநர் அவர்கள் தி இந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையை படியுங்க,சிந்தனை செய்யுங்க....

சொல்லத் தோணுது 24: கருகும் பிஞ்சுகள்!  
தங்கர் பச்சான்

        ஊரைவிட்டுத் துரத்துவதற்காக வும், பிரிப்பதற்காகவுமே பள்ளிக்கூடங்கள். அதை சிறப்பாக செய்து தருவதுதான் சிறந்த பள்ளி. உடன் பயின்றவர்களைப் பின்னாளில் காணாமலே போக நேரிடுகிறது. நடுவில் சேர்ந்துகொண்டவர்களோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் திருப்பித் தருவதற்கு, கடந்துபோன பள்ளி நாட்களாலும் இழந்த காதலி, காதலனாலும் மட்டுமே முடியும்.
             ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்குப் பின் ஏராளமான பள்ளிகளுக்கு நான் செல்ல நேர்ந்தது. இரண்டு ஆண்டு களுக்கு முன்பு மட்டும், ஒரே ஆண்டில் 60 பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடினேன். நான் கூர்ந்து கவனிக்கக்கூடிய முகங்கள் அவர்களுடையதாகவே இருக்கின்றன.
அந்தப் படத்துக்குப் பின் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எத்த னையோ பள்ளிக்கூடங்கள் முன்னாள் மாணவர்களால் மீண்டும் உயிர்பெற்றன. அத்துடன் இளமைக் கால நட்புகளும் உயிர்பெற்றன. தாய் தந்தையர், உற வினர் போலவே தன்னை உருவாக்கிய பள்ளியையும் நன்றிப் பட்டியலில் சேர்த்துக்கொண்டார்கள்.
                எனது படைப்பின் பாத்திரங்கள் போலவே, அண்மையில் நான் பங் கேற்ற பாலக்கோடு அரசினர் பள்ளியின் மாணவர்கள் சந்திப்பும் இருந்தது.
இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்து அந்த அரசுப் பள்ளியில் கல்விப் பயின்று, அஸ்ஸாம் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றும் முன்னாள் மாணவரையும் அந்த நிகழ்வுக்கு அழைத் திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் அவரின் காலடி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் நடந்தபோது அவருக் குள் ஏற்பட்ட நெகிழ்ச்சியும், மாணவர் களுடனான உரையாடலும், அவரின் ஆசிரியர்களைப் பற்றிய பின்னோக்கிய நினைவுகளும் மீண்டும் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்கே என்னை அழைத்துச் சென்றன.
           தன்னை மீட்டெடுத்து சமூகத்தில் தன்னை அடையாளப்படுத்தக் காரண மாக இருந்த அந்தப் பள்ளிக்கு, அவர் நன்றி செலுத்திய விதம் என் கண்களைக் கலங்கச் செய்தது. ‘பள்ளிக்கூடம்’ படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் கதை நாயகன் பேசுவது போலவே அது இருந்தது.
     அதன்பின் நான் அந்த மாணவர்களு டன் நெருக்கமாக உரையாடினேன். ஏற்கெனவே எல்லா தளத்திலும் முன்னேறிய கல்வி பெற்ற குடும்பத்தில் இருந்து ஒருவனை உருவாக்குவது எளிது என்பதையும், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய படிப்பறிவற்ற குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறை கல்வியைப் பெறுகிற, ஏழைக் குழந் தையை வளர்த்தெடுப்பதில் இருக்கின்ற தடைகளையும் எடுத்துக்கூறினேன்.
இப்படிப்பட்டவர்கள் அனைவருமே தஞ்சம் அடையும் புகலிடம் அரசுப் பள்ளிதான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? குரோட்டன் செடிகள் போல ஒவ் வொரு நாளும் பார்த்து நீர் ஊற்றி பராமரித்து வளர்ப்பது போல வளரும் பிள்ளைகளுக்கு இடையில்தான் இவர் களும் வளர்கிறார்கள்.
எப்போது மழை வரும்? எப்போது புயல் வரும்… எனத் தெரியாது.
             நீரில்லாதக் காட்டில் உயிரைப் பிடித்துக் கொண்டு நாலு இலைகள் துளிர்விட்டால் திடீரென ஆடு, மாடு கடித்துவிடும். மீண் டும் துளிரெடுத்து ஆளாகி மரமாக… காட்டுச் செடிகள் படும் போராட்டங்களைப் போன்றதுதான் அரசுப் பள்ளி களில் பயிலும் பிள்ளைகளின் நிலை!
              அரசாங்கம் நடத்துகின்ற அரசுப் பள்ளிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளை களோ, மற்ற எந்த அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகளோ படிப்பதில்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை. அந்தப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளி களுக்குத்தான் அனுப்புகிறார்கள்.
எதற்கெல்லாமோ சட்டம் இயற்றுபவர்கள் மனது வைத்தால் அடுத்த ஆண்டி லேயே இதற்கு ஒரு சட்டத்தை இயற்ற முடியாதா? அந்தச் சிந்தனைக் கூட இல்லாமல் காரணம் தேடி, இப்படிப்பட்ட பள்ளிகளை வரிசையாக மூடிக்கொண்டு வர எப்படித்தான் மனசு வருகிறதோ தெரியவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் எங்கு  பார்த் தாலும் மலைகள், வேளாண்மை நிலங் கள், பயிர் செய்யத்தான் ஆட்கள் இல்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், இந்த மாவட்டத்து மக்கள்தான் கூலியாட்களாக இருக்கிறார்கள்.
கர்நாடகத்துக்கும், ஆந்திராவுக்கும் பஞ்சம் பிழைக்க ஓடிய இவர்கள், ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊர்த் திருவிழாவுக்குத் திரும்புகிறார்கள். மீதியிருக்கிற மக்களையும் விட்டு வைக்காத மதுக்கடைகள் இல்லாத இடங்களே இல்லை. நூறு குடிசைகள் இருந்தாலும் அங்கும் பெயர்ப் பலகையோடு அரசு மதுக்கடை கடமையாற்றிக் கொண்டிருக்கிறது. குடிப்பதற்கு நீண்டதூரம் நடந்து போக வேண்டியது இல்லை. குழந்தைகளைப் படிக்க வைக்கவும், மருத்துவமனைக்கும்தான் நீண்ட தூரம் நடந்து போக வேண்டும்.
     விபத்துக்களின் இறப்பானாலும், மதுக்குடியால் இறப்பவர்களானாலும், ஊட்டச் சத்து இல்லாமல் நோய் நொடியில் இறப்பவர்களானாலும் இந்தப் பகுதி மக்களுக்குத்தான் முதல் இடம்.
மாணவர்களுடனான எனது உரையாடல்களுக்கு இடையே அவர்களின் எதிர்காலம் பற்றியும் கேட்டேன். எல்லோரும் ‘கலெக்டராக வேண்டும், ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும்’ எனச் சொன்னார்கள். அதன் பின்தான் டாக்டர் கள், இன்ஜினீயர்கள் மற்ற படிப்பெல்லாம். ‘யார் யாரெல்லாம் தாத்தா, அப்பா செய்த விவசாயத் தொழிலைச் செய்யப் போகிறீர்கள்’ எனக் கேட்டேன். தயங்கித் தயங்கி மூன்று பேர் மட்டும் அதுவும் என் விருப்பத்துக்காக கையை உயர்த்தினார்கள். எல்லோருமே ஊரை விட்டு ஓடிவிட்டால் பின் யார்தான் மக் களுக்கு உணவைத் தருவது எனக் கேட்டேன். யாரிடமிருந்தும் பதில் இல்லை.
அதேபோல் அன்போடு மேலும்,
                ‘மறைக்காமல் சொல்லுங்கள், யார் யாரின் பெற்றோர் மதுக் குடிப்பவர்கள்’ எனக் கேட்டேன். ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு மெதுவாக பாதி பேருக்கு மேல் கையை உயர்த்தினார்கள். பின், ‘யார், யாருக்கு பெற்றோர்கள் இல்லை, எதனால் இல்லை’ எனவும் கேட்டேன். அந்த நேரத்தில் அந்த முகங்களைப் பார்த்தவர்களுக்குத்தான் உண்மை நிலை  புரியும். கால் பகுதிக்கு மேல் தலை கவிழ்ந்து கை உயர்த்தியவர்களின் கண்களில் இருந்து முட்டிய  கண்ணீரை மறைக்க பெரும்பாடுபட்ட அந்த பிஞ்சுகளின் முகங்கள் கண்களிலேயே நிற்கிறது. அருகில் இருந்த தலைமையாசிரியரும், முன்னாள் ஐஏஎஸ் மாணவரும் பதைத்துப் போனார்கள். குடியினால் அப்பா இறந்த பின் பள்ளிக்கு வராமல் படிப்பை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை இதில் அடங்காது.
இலவசப் புத்தகம், புத்தகப் பை, மிதி வண்டி, மடிக்கணினி கொடுப்பவர்கள் ஒருநாள் இந்த மாணவர்களைத் தேடிச் சென்று சந்தியுங்கள். அதன் பிறகாவது அவர்களுக்குத் தர வேண்டியது எது என்பது புரியும்.
            ‘எல்லாவற்றையும் கொடுத்து அப்பாவை உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களே… உங்களுக்கு அப்பா வேண்டுமா? இந்த இலவசங்கள் வேண்டுமா’ எனக் கேட்டேன். ‘அப்பாதான் வேண்டும்’ என உரக்கச் சொன்னார்கள்.
       எதையும் காதில் போட்டுக்கொள்ளாதவர்களிடத்தில் ‘உயிருடன் இருக்கிற எங்கள் அப்பாக்களின் உயிராவது எங்களுக்கு வேண்டும். உடனே மதுக் கடைகளை மூடுங்கள். அப்போதுதான் நாங்கள் தேர்வு எழுதுவோம்…’ என ஒவ்வொரு மாணவரும் சொன்னால்தான் இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு கிடைக்கும் போலிருக்கிறது. அதுவரை யார் யாருக்கு என்ன கொடுக்கலாம் எனப் பட்டியல் தயாரித்துக் கொடுப்பவர்கள், தயவு செய்து அப்பாவை இழந்தவர்களின் பட்டியலையும் அரசிடம் தயாரித்துக் கொடுங்கள். அதற்கும் ஒரு திட்டத்தை உருவாக்கட்டும்!
- சொல்லத் தோணுது…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

Monday, 14 October 2013

குடிபோதையா?..

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.
             நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
      TASMAC-Tamilnadu State Marketing Corporation 
                                  பற்றி எதற்காக கவலைப்படணும்?
         இதை படியுங்க முதலில்....
              அரசு மதுபானக்கடையில் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு புத்தகம் போன்று ஒரு அடையாள அட்டை கட்டாயப்படுத்தி கொடுக்க வேண்டும்.
        தினசரி அல்லது ஒரு மாதத்தில் எவ்வளவு குடிக்கிறார்கள் என்று அந்த அட்டையில் பதிவு செய்ய வேண்டும்.
           குடித்த அளவு விவரத்தையும்,எப்போதெல்லாம் குடிக்கிறார்கள்? என்ற நேரத்தையும்,எத்தனை ரூபாய்க்கு குடித்திருக்கிறார்கள்?,குடித்த பிறகு மருத்துவத்திற்கு எத்தனை செலவு செய்துள்ளார்கள்?என்ற விவரத்தையும் ஊரறிய தெரிவிக்க வேண்டும்.அல்லது அவர்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்க வேண்டும்.
         எந்தப்பகுதியில் குடித்தாலும் அடையாள அட்டையில் பதிய வைக்க வேண்டும்.அதாவது பதிவை கட்டாயமாக்க வேண்டும்.
        இருபத்தொரு வயதுக்குள் குடிப்பவர்களை அடையாளம் காண வேண்டும்.அதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தி இளவயதுடையவர்களை  கண்டறிந்து தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.மாணவப்பருவத்தில் குடிக்க பழக்கியவர்களை அறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
       அரசு மருத்துவ மனைகளில் குடிபோதைக்கு அடிமையானவர்களை திருத்த ஆலோசனை மையம் அமைத்து அனைவருக்கும் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.குடிபோதையின் தீமைகளை விளம்பரப்படுத்த வேண்டும்.இதனை போர்க்கால நடவடிக்கையாக கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.இல்லையேல் வருங்கால இந்தியா?  கேள்விக்குறியாகிவிடும்.என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை. என்பதை அரசாங்கம் மட்டுமின்றி அனைவரும் உணர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக