26 ஜனவரி 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் பற்றிய தகவல் இதோ........

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் துறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் சமூகநலத் துறையின் ஓர் அங்கமாக ஊனமுற்றோர் துறை செயல்பட்டு வந்தது. 1995-ம் ஆண்டு ஊனமுற்றோர் துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. இத்துறை 2010-ம் ஆண்டில் ‘மாற்றுத் திறனாளிகள் துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் துறை செயல்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றனர்?
மாற்றுத் திறனாளிகள் 8 பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றனர். அதன்படி கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், பார்வையற்றோர், மன வளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதம், புற உலகு சிந்தனையற்றோர் (ஆட்டிசம்), பல்வகை ஊனம், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் என 8 வகையாக மாற்றுத் திறனாளிகள் பிரிக்கப்படுகின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடுவதற்கு உடல் குறைபாட்டில் அளவு ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம். உடலில் 40 சதவீதம் உடல் குறைபாடு இருந்தால் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் பேருந்து, ரயிலில் பயணம் செய்வதற்கான சலுகை அட்டை, தேசிய அடையாள அட்டை போன்ற அரசின் சலுகைகளைப் பெற தகுதி உடையவர்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகையில் இட ஒதுக்கீடு உண்டா?
அரசின் அனைத்து சலுகைகளையும் மாற்றுத் திறனாளிகள் பெற முடிவதுடன், அவர்களுக்கு அனைத்து சலுகையிலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. அதன்படி அரசின் சலுகையில் 3 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் என அடையாளம் காண்பதற்கு யாரிடம் சான்றிதழ் பெறவேண்டும்?
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாரத்தின் குறிப்பிட்ட நாளில் 4 வகை மருத்துவர்கள் அந்த அலுவலகத்துக்கு வருவார்கள். அப்போது அங்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பரிசோதனை செய்து சான்று வழங்குவார்கள். அரசு மருத்துவர்களிடமும் சான்று பெறலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன?
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தால் அளிக்கப்படும் அடையாள அட்டையில் சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுவிடமிருந்து மாற்றுத் திறனுக்கான சான்றிதழ் பெறுதல் வேண்டும்.
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் யார்?
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் யார்?
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்,
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392 / 2829 0409
     
1) கல்வி உதவித் தொகை:
********************************************
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 500 ரூபாய்
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 1,500 ரூபாய்
9-முதல் 12-ஆம் வகுப்பு வரை 2,000 ரூபாய்
இளநிலை பட்டப்படிப்பு 3,000 ரூபாய்
முதுநில பட்டயப் படிப்பு 3,500 ரூபாய்

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
9-ஆம் வகுப்புக்கு மேல் முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல்
குடும்ப அட்டை நகல்

எப்போது விண்ணப்பிப்பது?
கல்வி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்

2) வங்கிக் கடன் உதவி
***********************************
வங்கிக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதிகபட்சமாக 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
குடும்ப அட்டை நகல்

எப்போது விண்ணப்பிப்பது?
ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை
குறிப்பு: பெட்டிக்கடை வங்கிக் கடனுக்கு அரசு மானியம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

3)மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும்
**************************************************************************************** மாற்றுத் திறனாளி இல்லாதவர்களுக்கான நிதியுதவித் திட்டம்
*********************************************************************************************
அளிக்கப்படும் பணம் எவ்வளவு?
ரொக்கத் தொகை 25,000.
டிகிரி முடித்தவர்களுக்கு 50,000 ரூபாய், மற்றும் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். கொடுக்கப்படும் தொகையில் பாதி தேசிய சேமிப்புப் பத்திரமாக வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
பார்வையற்றவரைத் திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு
கை கால் ஊனமுற்ற (ஆர்த்தோ)திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.
பேசும் திறன் அற்ற காது கேளாதோரை திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
வயதுச் சான்று
திருமணப் பத்திரிகை மற்றும் சான்று
குடும்ப அட்டை நகல்

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

4) மாற்றுத் திறனாளிகளுக்கான
**************************************************
மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை
************************************************************
மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
குடும்ப அட்டை நகல்
ஊனத்தின் தன்மை 40 சதவிகிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அனைத்து அரசாங்க வேலை நாட்களும்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

5) இலவசப் பேருந்து சலுகை யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
******************************************************************************************
பார்வையற்றோர் மாவட்டத்திற்குள்ளே பயணம் செய்யலாம்.

இதர மாற்றுத் திறனாளிகள் இருப்பிடத்திலிருந்து பணி செய்யும் இடம், கல்வி பயிலும் இடம் வரை பயணம் செய்யலாம்.
இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்
மூன்று புகைப்படங்கள்
கல்வி, தொழிற்கல்வி நிலையம் (அ) பணிபுரியும் இடத்தின் சான்று.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
மார்ச் மாதம் முதல்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
ஒரு மாதத்திற்குள்.

6)தேசிய அடையாள அட்டை
*******************************************
தேசிய அடையாள அட்டை பெற்றவர்களே மாற்றுத் திறனாளிகளாக உதவி பெற ஏற்றுக் கொள்ளப்படுவர். இந்த அட்டை பெற சிறப்பு மருத்துவர், மாற்றுத் திறனுடையோர் எனச் சான்று அளிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
இரண்டு போட்டோ மற்றும் மாற்றுத் திறனுடையோர் பற்றிய விவரம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
ஒரே நாளில் வழங்கப்படும்.

7) உபகரணங்கள் உதவி
***************************************
சிறப்பு மருத்துவர் கருத்துரைக்கு இணங்க கீழ்க்கண்ட உபகரண உதவி வழங்கப்படும்.
அ) மூன்று சக்கர வண்டி
ஆ) சக்கர நாற்காலி
இ) காதொலிக் கருவி
ஈ) பார்வையற்றோர் கைக்கடிகாரம்
உ) பார்வையற்றோர் ஊன்றுகோல், கண்ணாடி
ஊ) காலிப்பர்
எ) கைதாங்கி ஊன்றுகோல்
ஏ) செயற்கைக் கால்
ஐ) சூரியஒளி பேட்டரி

இணைக்க வேண்டிய சான்றுகள் :
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்
சிறப்பு மருத்துவச் சான்று
வருமானச் சான்று

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அனைத்து அரசு வேலை நாட்களிலும் விண்ணப்பிக்கலாம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர்.

மாற்றுத் திறனாளிகளின் கவனத்திற்கு...
***********************************************************

பேருந்தில் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் ஓர் உதவியாளருடன் பயணம் செய்யலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலை நடத்துநரிடம் அளித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் மாற்றுத் திறனாளிகள் தனியாகவும் பயணம் செய்யலாம். உதவியாளருக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள், அதன் நகலையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் அளித்து, இருவரும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்யலாம்.
உதவியாளருக்கான பேருந்து சலுகைப் படிவம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். இதனைப் பெற்று முறையாக மருத்துவரிடம் கையொப்பம் வாங்கி, அதன் நகலையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் பயன்படுத்தலாம். புதுப்பிக்கத் தேவையில்லை. நிரந்தரமானது.
இந்திய ரயில்வேயில் முழுமையான பார்வையற்றவர்களும், காது கேளாத, வாய் பேச இயலாதவர்களும் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்துடன் தனியாகப் பயணம் செய்யலாம். முதல் வகுப்பு, குளிரூட்டப்பட்ட வகுப்புகளில் 50 சதவிகிதம் கட்டணத்தில் பயணம் செய்யலாம். முறையான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ரயிலில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய, குறிப்பிட்ட படிவத்தில் மருத்துவச் சான்றிதழ் பெற்று அதன் நகலைக் கொடுத்து பயணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 5 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். 35 வயதுக்குப் பின்னர் பெறப்படும் சான்றிதழானது நிரந்தரமானது. அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டாம். ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம்.
இரண்டு கால்களும் செயலிழந்து, கைகள் நல்ல முறையில் இயங்கும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தல் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் அதே அலுவலகத்தில் கிடைக்கும்.
கல்லூரியில் பயிலும் கை, கால் ஊனமுற்ற மாணவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் கைகள் நன்கு இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். தற்போது இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு செய்பவர்களுக்கும், பணிக்குச் செல்பவர்களுக்கும் என்று அனைத்து கை, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கே முன்னுரிமை. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து மத்திய, மாநில அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளிலும் 3 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்திய ஆட்சிப் பணியில் இருந்து, கடைநிலை ஊழியர் வரை அனைத்துப் பணிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். இதில் பார்வையற்றோர், காது கேளாதோர், கை, கால் ஊனமுற்றோர் தலா ஒரு சதவிகிதத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை 100 கிலோமீட்டர் வரை இலவசப் பேருந்துப் பயணம்
என்ன மாதிரி ஊனம் உள்ளதோ, அந்தப் பிரிவு சிறப்பு மருத்துவர் உள்ளிட்ட 3 நபர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விக் கூடத்திலேயே விண்ணப்பப் படிவம் கிடைக்கும். வேறு ஏதும் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்று பள்ளித் தலைமை ஆசிரியர் சான்றளிக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------

தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (NHFDC) National Handicapped Finance and Development Corporation) வழங்கும் கடன் உதவி:-
1) மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் பலவித சலுகைக் கடன்களை வழங்குகிறது.
2) விற்பனை, வியாபார நடவடிக்கைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், சேவைப்பிரிவுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் கடன் பெறலாம். தொழில் செய்ய ஆட்டோ ரிக்சா, வேன் போன்ற வாகனங்கள் வாங்க, விவசாயப் பணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். பொருட்கள் உற்பத்தி, தயாரிப்புக்காக சிறு தொழிற்கூடங்கள் அமைக்க 25 லட்சம் ரூபாய் கடன் உதவி.
3) மன்நலம் பாதிக்கப்பட்டவர்கள், செரிபிரல்கஃபேல்சி மற்றும் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்கள் சுயதொழில் தொடங்க அவர்களின் வாழ்க்கைத்துணை, பெற்றோர் 5 லட்சம் ரூபாய் கடன் பெறலாம்.
4) இந்தியாவில் படிக்க ரூ.7.50 லட்சம், வெளிநாடுகளில் படிக்க ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன் கிடைக்கும்.
5) நுண் கடன் திட்ட்த்தின் கீழ் (Micro Credit Scheme) தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம், பயனாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரப்படும்.

நிபந்தனைகள்:
1) இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும். 40% அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் திறன் பாதிப்பு.
2) 18லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
3) நகர் பகுதியில் வசிப்பவராக் இருந்தால் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகவும், கிராமப் பகுதியில் வசிப்பவராக ரூ.3 லட்சத்துக்குக் குறைவாகவும் ஆண்டு வருமானம் இருக்கவேண்டும்.
4) தொடர்புடைய கல்வி, தொழில்நுட்பச் சான்றிதழ்களை வைத்திருக்கவேண்டும். தேவையான் அனுபவமும் பெற்றிருக்கவேண்டும்.

வட்டி விகிதம்:
5) 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 5%. 50 ஆயிரத்துக்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு 6%. 5 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு 8%.

திருப்பிச்செலுத்தும் காலம்:
6) பொதுக் கடன்களை 10 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.
7) கல்விக் கடன்களை 7 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும். (படிப்பு முடித்த 6 மாதங்கள் அல்லது வேலை கிடைத்த பிறகு எது முன்னதாகவோ அதிலிருந்து தவணை).

கடன் தள்ளுபடி:
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் பெண்களுக்கு வட்டியில் 1 சதவிகிதமும், சில திட்டங்களுக்கு 0.5 சதவிகிதமும் சிறப்புத் தள்ளுபடி உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில முகவர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தமிழக முகவரி: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC Bank), 233, நேதாஷி சுபாஷ் சந்திரபோஷ் சாலை, சென்னை-600001. போன்: 044-25302300
2) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெறலாம்.

3) கடன் உதவி பெற கால தாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய: முதன்மைச் செயலாளர்/ மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை-600078. போன்: 044-24719948, 044-24719949
நன்றி= திரு;செல்வம் பழனிச்சாமி அவர்களுக்கு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...