26 ஜனவரி 2015

வாக்காளர் தினம் ஜனவரி-25 ஆம் தேதி..

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
       ஜனநாயகம் காப்போம்
By வை. இராமச்சந்திரன் - Dinamani
First Published : 24 January 2015 03:02 AM IST
வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டு, அந்த நாளில் தேர்தல் ஆணையம் சார்பில் புதிய வாக்காளர்களுக்கு அந்தந்தப் பகுதிக்கான வாக்குச்சாவடி மையத்தில் வண்ண அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்களும், தங்களுக்கு இரண்டு இடங்களில் பெயர் பதிவு உள்ளவர்கள் தங்களது முந்தைய முகவரியில் உள்ள பதிவை நீக்கம் செய்யவும் அன்று விண்ணப்பிக்கலாம்.
18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே வாக்குரிமை, வாக்காளர் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வாக்காளர் தினத்தையொட்டி ஆங்காங்கே விழிப்புணர்வுப் பேரணிகளும், மனிதச் சங்கிலி, பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன.
தேர்தல் ஆணையமும் தொண்டு நிறுவனங்களும் மேற்கொள்ளும் இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால், அண்மைக்காலமாக வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, தேர்தலின்போது வாக்குப் பதிவும் அதிகரித்து வருகிறது.
வாக்காளர்களாகிய நாம் வாக்கின் முக்கியத்துவத்தை எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம்? அதுபற்றிச் சிந்திக்கும் நாளாகவே இந்த தினத்தைக் கருத வேண்டியுள்ளது.
ஒரு வாக்காளனின் கடமை என்ன என்பதும், வாக்கின் முக்கியத்துவம் என்ன என்பதும், விலை மதிப்பற்ற வாக்கை பணத்துக்கு விற்பது தவறு என்பதும் வாக்காளர்களுக்குப் புரிந்திருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
பொதுவாக, ஒரு குறிப்பிட்ட வாக்காளரிடம் "நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள்' என்று கேட்டால், அவர் குறிப்பிட்ட ஒரு கட்சியைக் கூறி "அந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பேன். எங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அந்தக் கட்சிக்குத்தான் வாக்களித்து வருகிறது' என்று கூறுவார்.
குடும்பத் தலைவர் சொல்வதைக் கேட்டு வாக்களிப்பது; வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனையின்போது சொல்வதைக் கேட்டு வாக்களிப்பது; பணம், பரிசுப் பொருள்கள் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது; மதுவுக்கும், பிரியாணிக்கும்கூட அடிமையாகி வாக்களிப்பது இப்படி வெவ்வேறு காரணங்களுக்காக வாக்களிப்போர் இருக்கத்தான் செய்கின்றனர்.
தாங்கள் வாக்களிக்கும் கட்சியின் கொள்கைகளை ஆராயாமல், தகுதியான வேட்பாளர்தானா என்று பார்க்காமல், தங்கள் வாக்கின் வலிமையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்திவிட்டு வந்தால் தங்கள் கடமை முடிந்துவிட்டது என நினைக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் வேதனையளிக்கிறது.
படித்த, நடுத்தர வர்க்கத்தினர் எப்போதுமே வாக்களிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை.
வாக்குரிமை ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அதனைக் கட்டாயமாக்க முடியாது. ஏனெனில், வாக்களிப்பது எப்படி ஒருவரின் உரிமையோ, அதேபோன்று வாக்களிக்காமல் இருப்பதும் அவரின் உரிமையே.
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை பாமரர்களிடம் இருக்கும் அளவுக்கு படித்தவர்களிடம் இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும், பாமரர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நம்பிக்கையுடன் வாக்களித்தாலும் அவர்களது நிலை இன்னும் உயர்ந்தபாடில்லை.
தேர்தல் நேரங்களில் வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் ஆட்சியாளர்களை குறை கூறுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆட்சியாளர்கள் தவறான பாதைக்கு செல்ல காரணமே, வாக்காளர்கள் சரியான முறையில் வாக்குகளைப் பதிவு செய்யாததும், வாக்குப் பதிவை தவிர்ப்பதுமே ஆகும்.
வாக்கின் வலிமையை ஒவ்வொரு வாக்காளரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு முன்புவரை நரேந்திர மோடிக்கு விசா வழங்க மாட்டோம் என அமெரிக்க அரசு அடம் பிடித்தது.
ஆனால், அவருக்கு இந்திய மக்கள் அளித்த வாக்குகள், அதே அமெரிக்க அரசை அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கச் செய்திருக்கிறது.
ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்த் கேஜரிவாலை தில்லி முதல்வராகும் அளவுக்கு உயர்த்தியது மக்கள் அவருக்கு அளித்த வாக்குகளே.
அண்டை நாடான பாகிஸ்தானில், ராணுவப் புரட்சியின் போது நாடு கடத்தப்பட்ட நவாஸ் ஷெரீப், தற்போது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சி அமைக்க உதவியது அந்நாட்டு மக்களின் வாக்குகள்தான்.
தனக்காக சட்டத்தையே மாற்றி அமைத்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச, அவருக்கு எதிராகப் பதிவான வாக்குகளால் இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.
மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு கிடைத்த அதிக வாக்குகளால் அவர் அதிபராகியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மூலம் வாக்குகளின் வலிமையைப்பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை கண்டிப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சியில் இருந்து மக்களவைத் தேர்தல் வரை எந்தத் தேர்தலையும் புறக்கணிக்காமல் தகுதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் அவர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
எந்த நிலையிலும் இலவசங்கள் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். ஆட்சியாளர்கள் தவறு செய்தால் தட்டிக்கேட்கும் உரிமை நமக்கு உள்ளது என்பதை உணர வேண்டும்.
வாக்களிப்பது நமது உரிமை; நமது கடமை. வாக்குச் சீட்டை விற்கமாட்டோம். ஜனநாயகம் காப்போம். சாதி, மத, இனப் பாகுபாடு கடந்து மக்களாட்சி தத்துவத்தை நிலை நிறுத்த ஒன்றுபடுவோம். பணநாயகம் நீங்கி ஜனநாயகம் தழைக்கட்டும் என ஒவ்வொரு வாக்காளரும் இந்த வாக்காளர் தினத்தில் சூளுரைப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...