02 ஆகஸ்ட் 2015

Dr.APJ.அப்துல் கலாம் .... சர்ச்சையும் சரித்திரமும் !

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். Dr.APJஅப்துல் கலாம் அவர்கள் பற்றிய கருத்துப்பதிவு பற்றி தாங்களே சிந்தனை செய்துகொள்ளுங்க....
Dr.APJ.அப்துல் கலாம் ....
சர்ச்சையும் சரித்திரமும் !
( சற்றே பெரிய கட்டுரை. பொறுமையுள்ளவர்களுக்கு மட்டும் )

டாக்டர் அப்துல் கலாம் குறித்து பலவிதமான கருத்துக்களை பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.... நல்லதாகவும் கெட்டதாகவும். !
அவர் உயிரோடு இருக்கும்போதும் சொன்னார்கள்.
இறந்த பிறகும் சொல்கிறார்கள்.

ஒரு மனிதனின் சிறப்பை அவன் இறந்த பிறகு அவன் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தை வைத்துதான் அளவிட முடியும்.
அப்படிப் பார்க்கும்போது அப்துல் கலாம் ஒரு உன்னதமான மனிதர் என்பதில் சந்தேகமில்லை.

கலாமை குடியரசுத் தலைவராக்கியது அன்றைய பாரத ஜனதா கட்சிதான்.
ஆனால் ... கலாம் பாஜக கட்சியைச் சேர்ந்தவரல்ல.
எந்த கட்சியையும் சேராத ஒரு விஞ்ஞானி அவர்.
அவர் முஸ்லிம் என்பதாலேயே சில " முஸ்லிம்களால் " கல்லெறியப்படுகிறார்.

" அவர் சாமியார்களை சந்தித்தார்.
சாமியார்களிடம் ஆசி வாங்கினார் .
அவர் இஸ்லாமிய பெயர்தாங்கி முஸ்லிம்.
அவர் ஒரு முஷ்ரிக் ."
என்றெல்லாம் வசைபாடுகிறார்கள்.

இதுவெல்லாம் நிறை அறிவு பெற்றவர்கள் சொல்லக்கூடியதல்ல.
சுய அறிவோ சுய சிந்தனையோ இல்லாத சிலரால் சொல்லப்படும் குறைகள்.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதோ
இங்கே ஒரு முஸ்லிம் உயர் பதவிக்கு வருவதென்பதோ சாமானிய விஷயமல்ல என்பதும் கூட அவர்களுக்கு விளங்கவில்லை.

இந்தியாவில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவர்.
ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.
இந்திய ஜனாதிபதி ...
தீபாவளிக்கும் வாழ்த்து சொல்வார்
கிருஸ்துமஸ் பண்டிகைக்கும்
ரம்ஜான் பெருநாளைக்கும் வாழ்த்து சொல்வார்.
காந்தி சமாதியில் மலர் வளையமும் வைப்பார்.
இவை எல்லாம் இந்த நாட்டில் ஜனாதிபதி கடைபிடிக்க வேண்டிய மரபுகள்.

ஜனாதிபதி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ...
அவர் எல்லா மதத் தலைவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.
அவர்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் .
அவர்களின் கலாச்சாரத்திற்கு உரிய கண்ணியத்தை வழங்க வேண்டும்.
பல மாநில மொழிகளை மதிக்க வேண்டும்.
அதுதான் ஜனாதிபதியின் இலக்கணம்.

அதைத்தான் அப்துல் கலாமும் செய்தார்.
இதற்கு முன்னாலும் பல ஜனாதிபதிகள் இருந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் கிட்டாத பெரும் புகழும் கலாமுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்றால் ...

மற்றவர்கள் எல்லோரும் ஜனாதிபதிகளாக இருந்தார்கள்.
கலாம் மட்டுமே மக்களின் ஜனாதிபதியாக இருந்தார்.

இன்றைய ஜனாதிபதியையே எடுத்துக் கொள்வோம்.
மக்களுக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா ?
ஆனால் கலாம் ஜனாதிபதி ஆனாலும் மக்களோடு ஒருவராக வாழ்ந்து கொண்டிருந்தார்.

ராமேஸ்வரம் என்ற ஊரில் வறுமை மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்து வாழ்க்கை நடத்துவதே கஷ்டம் என்ற சூழ்நிலையில் மாற்றுமத மக்களின் ஆதரவோடு படித்து அரசுப் பணியில் சேர்ந்தது அவரது திறமை.
வேலையிலும் படிப்படியாக முன்னேறி தனது அறிவால் திறமையால் பல சாதனைகளைச் செய்து நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக உருவெடுத்தார்.
இந்த அத்தனை முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் இன்று அவரை குறை சொல்லக் கூடியவர்கள் அல்ல.
அவரது அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் நாட்டின் உயர்ந்த பதவியை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.
அப்போதும் அவர் தன்னிலை மறக்கவில்லை.
அடக்கமும் எளிமையும் அவரோடு இணைந்தே இருந்தது.

" அடக்கம் அறிவின் அணிகலன் " என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர் கலாம்.
சென்ற இடமெல்லாம் தாய்த்தமிழை தாய்நாட்டை சிறப்பித்து வந்தவர் கலாம்.
பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும்
மாணவர்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு புதிய தலைமுறைக்கு எழுச்சியை ஏற்படுத்தியவர் கலாம்.

இந்து கிருஸ்தவ முஸ்லிம் மாணவர்கள் என்ற எந்த பாகுபாடுமின்றி இந்திய மாணவ மாணவிகளின் லட்சியத் தலைவராக வாழ்ந்து காட்டியவர் கலாம் மட்டுமே.
அதனால்தான்...
அவர் மறைந்துவிட்டார் என்றதும் கதறியழுது அவரது கடைசிப் பயணத்தைக் காண வந்து குவிந்தது இளைஞர் கூட்டம்.

அவருக்காக அழுதவர்கள் எல்லோரும் காவிகள் இல்லை.
பாஜகா ஆட்கள் இல்லை.
ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களோ
ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களோ இல்லை.
இந்த தேசமே அழுதது.
மதவெறி பிடிக்காத மக்கள் அழுதார்கள்.
வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த தங்கள் தலைவருக்காக மக்கள் அழுதார்கள்.

அவரை பாராட்ட மனமில்லாதவர்கள்
" கலாம் காவிகளின் கைக்கூலி "
" அவர் அப்துல் கலாம் அல்ல... அப்துல் கலாம் அய்யர் "
என்கிறார்கள்.

இவர்கள் சொல்வதுபோல் இதற்கு முன்னரும் ஒரு அய்யர் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்.
ஆர். வெங்கட்ராமன் என்பவர்.
மத்திய அமைச்சர் . படித்தவர். பண்புள்ளவர். திறமையாளர்.தமிழர். எல்லாவற்றுக்கும் மேலாக பிராமணர் என்ற சகல தகுதிகளும் பெற்றிருந்தவர்.
அவர் வாழும்போதும் வாழ்ந்து மறைந்தபோதும்
ஒட்டுமொத்த தேசமும் அவரை கொண்டாடவில்லை.
போற்றிப் பாராட்டவுமில்லை. அவரது இனத்தைச் சேர்ந்தவர்களே இன்று அவரை மறந்து விட்ட நிலை.
இப்படித்தான் எல்லோரும் வாழ்ந்தார்கள். மறைந்தார்கள். மக்களும் மறந்தார்கள்.

அவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மனிதராக வாழ்ந்தவர் டாக்டர் கலாம்.
பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகும் ஒய்ந்துபோகாமல்
மக்களை சந்தித்துக் கொண்டே இருந்தார். மாணவர்களோடு வாழ்ந்துகொண்டே இருந்தார்.
அந்த நிலையிலேயே மறைந்தும் விட்டார்.
அவரது தன்னலமற்ற வாழ்க்கையை தெரிந்து கொண்டதால்தான் எங்களைப்போன்ற முஸ்லிம்களும்
நாட்டிலுள்ள ஜாதி மத பேதமில்லாத கோடிக்கணக்கான மக்களும் அவரை போற்றுகிறார்கள்.

மதத்தை தலையில் வைத்துக் கொண்டு மதம் பிடித்து அலையும் கூட்டத்திற்கு ...
மார்க்கத்தின் அருமை பெருமைகள் தெரியாது.
மனித நேயமும் மத சார்பற்ற நல்லிணக்கமும் இஸ்லாம் மார்க்கம் போதிக்கும் மகத்தான குணங்கள் என்பது தெரியாது.
கலாம் ஒரு முஸ்லிம் என்பதாலேயே
அவர் கலீபா உமரைப்போல ஆட்சி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையின் உச்சம்.
அப்படி ஆட்சி செய்ய இந்தியா ஒரு இஸ்லாமிய நாடுமல்ல...
இங்கே வாழ்பவர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்களுமல்ல என்பதை உணர்வுள்ளவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முற்றிலும் இஸ்லாமிய நெறிகளின்படி ஆட்சி நடக்கும்
அரபு நாடுகளின் ஆட்சியாலர்களைவிட இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகச் சிறந்த பண்பாளராக இறையச்சமுள்ளவராக சிறந்த மனிதராக வாழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை.

ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்து
உழைப்பால் உயர்ந்து
திறமையால் சாதனைகள் பல புரிந்து
சரித்திரமாகிவிட்ட
சரித்திர நாயகர்
அப்துல் கலாம் !
சர்ச்சைகளால் அந்த சாதனை மனிதரை
சிதைக்க நினைப்பவர்கள்தான் சிறுமைக்கு ஆளாவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...