29 ஆகஸ்ட் 2015

நதிகள் இணைப்புத் திட்டம்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நதிகளை இணைப்போம் - நாடு முன்னேறும்..விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்..நம் வாழ்வு முன்னேறும்.



நீர்வழி திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்!
கடந்த இரு நாட்களாக, இந்தியாவின் நீர் பயன்பாடு மற்றும் தமிழக ஆறுகளை எவ்வாறு இணைக்கலாம் என்பது குறித்து பார்த்தோம்.இனி, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கக் கூடிய தென்னக இணைப்பை, எப்படி உருவாக்குவது எனப் பார்ப்போம்.

இந்த மாநிலங்கள் அனைத்தும், கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, தாமிரபரணி, முல்லைப் பெரியாறு, வைகை, பாலாறு ஆகிய ஆறுகளையே, நீர்பாசனத்துக்கு பெரிதும் சார்ந்திருக்கின்றன. வெள்ளம் ஏற்படும்போது, இம்மாநிலங்களில், நீருக்கு பிரச்னை இருப்பதில்லை. 30, ஜனவரி 2013 அன்றைய மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, தென்னிந்திய ஆறுகளின் மொத்த நீர் கொள்திறன், 15 ஆயிரத்து 300 கோடி கன அடி தான். அவற்றில், தற்போதுள்ள நீர் சேகரிப்பு இடங்கள் அனைத்தும் சேர்ந்து, 4,800 கோடி கன அடி நீரை மட்டுமே, தேக்கக் கூடிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
ஆனால், வெள்ளப் பெருக்கின்போது, கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் மட்டும், 2,000 - -3,000 டி.எம்.சி., நீர் ஆந்திராவின் அணைகள், நீர்த் தேக்கங்கள், ஏரிகள் ஆகியவற்றை நிரப்பிய பிறகும், கடலில் சென்று கலக்கிறது. அதே நேரத்தில், தெலுங்கானாவில் பல பகுதிகளில், நீர்ப்பற்றாக்குறை நிலவுகிறது.வறட்சி பருவங்களில், தென் மாநிலங்கள் அனைத்துமே வறண்டு விடுகின்றன. இந்தப் பிரச்னை, மாநிலங்களில் அரசியல் மயமாகிறது. அரசுகளும், கட்சிகளும், கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து, மாநிலங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்குகின்றன. முன் முடிவுடன் இந்தப் பிரச்னையை அணுகினால், பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையாமல் போய் விடும்.நீதிமன்ற வழக்குகள், தீர்ப்பாய முடிவுகள், கோரல்கள், எதிர்கோரல்கள் என, இந்தப் பிரச்னைகள் நீள்வதால், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் போகும் நிலை ஏற்படுகிறது. நீதிமன்ற உத்தரவை நிராகரிக்கும் முடிவுகள், சட்டமன்ற தீர்மானங்கள் மூலம் எடுக்கப்படுகின்றன.மோசமான நீர் மேலாண்மை காரணமாக ஏற்படும் இந்தநிலை, குழப்பத்துக்கு காரணமாகி, யாருக்கும் எந்த மாநிலத்துக்கும், நன்மை உருவாக்கக் கூடிய வாய்ப்பையும் கெடுக்கிறது. இறுதியாக, எல்லா மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளும், மக்களுமே பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையை தவிர்க்க, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக மாநிலங்களில் உருவாகும் வெள்ளப் பெருக்கை, அதி -திறன் நீர்வழிகளில் செலுத்தி, சேகரித்து, வறட்சி ஏற்படும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம். ஆந்திர பிரதேச அதி -திறன் நீர்வழிகளும், தமிழக அதி -திறன் நீர்வழிகளும் ஒரே மட்டத்தில் இணையக் கூடியவையாகவும், தமிழக - -ஆந்திர எல்லையில், வேலுார் அருகே இணையக் கூடியதாகவும் இருக்கின்றன. கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கையும், இந்த இணைப்பு தவிர்க்கும். வெள்ள காலத்தில், 3,000 முதல் 4,000 டி.எம்.சி., நீரை, தென்னக நீர்வழி இணைப்பு பெற முடியும். இது, எல்லா பருவ காலங்களிலும், எல்லா மாநிலங்களுக்குமான தேவையைப் பூர்த்தி செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...