20 ஜனவரி 2025

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்...

அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthendral.blogspot.com )



           தமிழார்வலர்கள் ஒன்றிணைந்து ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில்....மரியாதைக்குரிய ஆனைக்கொம்புஸ்ரீராம்அவர்கள் தலைமையில் 

                    ''சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம்''

                            என பெயரிட்டு கடந்த 15-01-2025 அன்று தொடங்கினோம்.

           அப்போது மனதில்  எழுந்த , முத்தமிழ் என்றால் என்ன? என்னும் கேள்விக்கு தெளிவடையும்விதமாக இந்தப் பதிவு....

         நம்முடைய மனதின் எண்ணங்கள் அறிவு,உணர்வு,செயல் என்னும் மூன்று வடிவங்களாலும் வெளிப்படுகின்றன. நமதுமனதின் சிந்தனைகள் எழுதும்போதும் உரையாற்றும்போதும் சொற்களாக வெளிவருகின்றன.

             நமது முன்னோர்கள்  இயற்கையிடமிருந்து தாம் இயல்பாக அறிந்தவற்றை மற்றவர்களுக்குக் கூறியதால்  அதனை இயற்றமிழ் என்றனர். அதாவது இயல்பாகப்பிறந்த அறிவுசார்ந்த தமிழ் இயற்றமிழ் என்றாயிற்று.

                 இன்பமோ,துன்பமோ,கோபமோ,அழுகையோ,வீரமோ, எதுவாயினும் அங்கு உணர்ச்சியே முன் நிற்கும்.மற்றவர்களையும் தாக்குதலுக்குள்ளாக்கும்.உதாரணமாக இசைக்கு மயங்காதவர் யார் உள்ளனர்.இசைக்கு உணர்ச்சிவசப்படாதவர்கள் உள்ளனரா? இவ்வாறு உணர்ச்சியைத்தூண்டும் தமிழ் இசைத்தமிழ் என்றாயிற்று.

            அறிவும் உணர்ச்சியும் ஒன்றுசேரும்போது செயல் நிகழும்.அதாவது இயலும்,இசையும் சேரும்போது நடிப்பு நிகழும். இவ்வாறு செயல்வடிவில் வெளிப்படும் தமிழை நாடகத்தமிழ் என்கிறோம்.

               இதனடிப்படையில்  சிலப்பதிகாரத்திற்கு முத்தமிழ்க் காப்பியம் என்ற பெயரும் உண்டு.காரணம் பாடல்கள் இடையே உரைநடை வருவதோடு இசையுடன்கூடிய நாடக வெண்பாக்களும் இருக்கின்றன.

              பாண்டியமன்னர்கள் தமிழ்ச்சங்கம் அமைத்து, ''இயற்றமிழ்,இசைத்தமிழ்,நாடக‍த்தமிழ்'' மூன்றும் வளர்த்தனர்.

    என அறிகிறோம். 

ஔவையார் இயற்றிய நல்வழி ''கடவுள் வாழ்த்து'' பகுதியில்,

 ""பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்

துங்கதுங்க‍க் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு

சங்கத்தமிழ் மூன்றும் தா""- 

 என 'முத்தமிழ்' குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்க.

கவிச்சக்கரவர்த்தி கம்பன்  கூற்றில்,

''அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு

ஒத்திருக்குமென்றால் அது ஒக்குமோ

எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்

முத்தும், முத்தமிழும்  த‍ந்து முற்றலால்'' 

                   என  முத்தும் தமிழும் கடவுள் நாடான தேவர்நாட்டில் கிடைக்காது ஆதலால் தமிழ்நாட்டிற்கு கடவுள்தேசமான தேவர் நாடுகூட ஒப்பாகாது என்று 'முத்தமிழை' குறிப்பிட்டிருப்பதையும்  கவனியுங்க..

குதம்பை சித்தர் தம்பாடலில்,

          ''முத்தமிழே! கற்று முழங்கு, மெய்ஞானிக்குச்  சத்தங்கள் ஏதுக்கடி! குதம்பாய் சத்தங்கள் ஏதுக்கடி!'' என 'முத்தமிழை' குறிப்பிட்டிருப்பதையும் கவனியுங்க.

சித்த மருத்தவத்தின் த‍ந்தை என போற்றுதலுக்குரிய தமிழ் சித்தர் அகத்தியர் முனிவரை ''முத்தமிழ் முனிவர்'' என காஞ்சிபுராணமும்  கூறியிருப்பதையும் கவனியுங்க. 

    செ.பரமேஸ்வரன்,

 செயலாளர், 

சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...