13 மே 2017

தைராய்ட்


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். தைராய்டு பற்றி தெரிந்துகொள்வோம்.
.
தைராய்ட் என்பது கழுத்துக்கு கீழே பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் ஒரு உறுப்பு. இதில் தைராய்ட் எனும் ஹார்மோன் சுரக்கிறது. நீங்கள் சிக்கன் சாப்பிட்டாலோ, கொண்டைக்கடலை சாப்பிட்டாலோ அது உங்கள் உடலில் ப்ரோட்டீனாக மாற இது உதவுகிறது. தவிர, உங்கள் உடலின் எனர்ஜி சரியான அளவில் இருக்க சில வேலைகளை செய்கிறது.
இந்த தைராய்ட் நிறைய நேரம் சரியாக சுரக்காமல் போகக்கூடும். அப்படி ஆகும் போது ஒன்று ஹார்மோன் மிக அதிகமாக சுரக்கத் துவங்கலாம், அல்லது மிகக் குறைவாக.
அதிகமாக தைராய்டு சுரப்பதை 'ஹைப்பர்' என்று சொல்வார்கள். கடகடவென்று உடல் எடை குறையும். கபகபவென்று பசிக்கும். அவ்வப்போது கைகால் நடுங்கும். எதற்கெடுத்தாலும் கவலை, பயம் வரும்.
குறைவாக சுரப்பதை 'ஹைப்போ' என்று சொல்வார்கள். உடல் எடை அதிகரித்து குண்டடிக்கும். அடிக்கடி மலச்சிக்கல் வரும். பெண்களுக்கு மாதவிடாயில் ரத்த இழப்பு அதிகரிக்கும், முடி கொட்டும், இதயத் துடிப்பு மந்தமாகும். குறிப்பாக, பெண்களுக்கு குழந்தைப் பேறு கைகூடாமல் இருப்பதற்கு தைராய்டு வில்லன் நிறைய நேரம் காரணமாக இருக்கக்கூடும்.
மேற்சொன்னதெல்லாம் வெறும் அறிகுறிகள்தான். இதய நோயில் இருந்து கான்ஸர் வரை பல்வேறு நோய்களுக்கு தைராய்டு பிரச்னை காரணமாக ஆகி விடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு தைராய்ட் தரும் பிரச்சனைகளை சொல்லி மாளாது. ஆண்களை விட பெண்களைத்தான் இது பெரிதும் பாதிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், இது பெரிய பிரச்னை. சுகர், பிபி, கான்சர் அளவுக்கு தைராய்ட் பற்றிய விழிப்புணர்வு நம்மிடை இல்லாதது பிரச்சனையை மோசமாக்குகிறது. சொல்லப்போனால் நேரத்தில் இதை கண்டறிந்து மருத்துவம் மேற்கொண்டால் இது சப்பை மேட்டர்தான். ஆனால் நிறைய நேரம் தாமதமாக கண்டுபிடிப்பதால் பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கிறது. அதுவுமின்றி, இதய நோய், கான்ஸர் மாதிரி தைராய்ட் நோயை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக பெண்கள். டாக்டர் 'உங்களுக்கு தைராய்ட் பிரச்னை இருக்கு,' என்று சொல்லி மருந்து கொடுத்தால் ஒரு மாதம் எடுத்துக் கொண்டு நிறுத்தி விடுகிறார்கள், அல்லது கொடுத்த மாத்திரையையே தொடர்ந்து அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் போட்டுக் கொண்டு வருகிறார்கள். அது எப்படி நம்மை பாதிக்கும், நாளைக்கு என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதை உணருவதில்லை. டாக்டர்களும் பெரும்பாலும் சொல்வதில்லை.
தைராய்டு மாத்திரை பெரும்பாலும் அதிகாலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ள வேண்டி இருக்கும். இது குணமாக முடியா விஷயம்.பெரும்பாலும் தைராய்டு பிரச்னை என்றால் வாழ்நாள் முழுவதும் மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அதே மாத்திரையை அல்ல. குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்து வரும் ரிசல்ட்டை வைத்து டாக்டர் உங்கள் மாத்திரையை குறைக்கலாம், கூட்டலாம், அல்லது மாற்றலாம்.
தைராய்டு குறைபாட்டை கண்டுபிடித்து மாத்திரை எடுக்கத் துவங்கிய உடனே பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். எனர்ஜி கூடும், ஒரு பத்து வயது குறைந்தது மாதிரி உணர்வு வரும். மன அழுத்தங்கள் விலகும். Anxiety attack என்று சொல்வார்கள். திடீரென்று பெரிய ஒரு பயம் மனதை தாக்கும். மூச்சு விடக்கூட முடியாமல் போய் பயம் கவ்விக் கொள்ளும். இதெல்லாம் சரியாகலாம். சட்டென்று மனைவி கர்ப்பம் தரிக்கலாம்.
உங்கள் அம்மா, அப்பா, மாமா யாருக்காவது தைராய்டு குறைபாடு இருந்தால் நீங்கள் 20 வயதில் இருந்தே டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். செய்து நார்மல் என்று தெரிந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து திரும்பவும் டெஸ்ட் செய்து கொள்ளலாம். அப்படி குடும்ப வரலாறு இல்லை என்றால், சுமார் முப்பத்தைந்து வயதில் இருந்து டெஸ்ட் செய்யத் துவங்கலாம். ஆறு மாதத்துக்கு ஒரு முறை தைராய்ட் செக்கப் செய்து கொள்வது நல்லது. ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்,’ என்றால் குறைந்தது வருடத்துக்கு ஒரு முறை. அதுவும் பெண்களுக்கு இது மிக மிக முக்கியமான விஷயம். முக்கால்வாசி லேப்களில் 300 ரூபாய்க்கும் குறைவாக இந்த டெஸ்ட் செய்து கொள்ள முடியும்.
குறிப்பாக ஆண்களுக்கு இந்தக் கடமை இருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ள பெண்களைக் கூட்டிக் கொண்டு போய் தைராய்டு டெஸ்ட் செய்து கொள்ள அறிவுரையுங்கள். யாராவது கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கூட்டிச் செல்லுங்கள். தைராய்ட் பிரச்னை இருந்தால் பரிந்துரைத்த மாத்திரையை ஒழுங்காக எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணியுங்கள். தொடர்ந்து செக்கப் செய்து மருந்தின் அளவை ஏற்றி இறக்க உதவுங்கள். மனைவி, அம்மா இவர்களுக்கு பிறந்த நாளுக்கு கேக் வாங்குவதோடு சேர்த்து ஒரு செக்கப்பையும் ‘பரிசாக’ வழங்குங்கள். அப்படி செய்தால் அவர்கள் உங்களை கண்டிப்பாக திட்டுவார்கள். ஆனால் அவர்களின் உடல் உங்களுக்கு நன்றி சொல்லும்!
=============================================================
 கட்டுரை-2
 தைராய்டு என்பது 

தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான, முதன்மை நாளமில்லா சுரப்பி இது. சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது. நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று அர்த்தம்.
தைராய்டு ஹார்மோன்கள்
'தைராக்சின்' (T4), 'டிரைஅயடோதைரோனின்' (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களை இது சுரக்கிறது. இப்படிச் சுரப்பதற்கு அயோடின் சத்து தேவை. இந்த இரண்டு ஹார்மோன்கள் பெரும்பாலும் புரதத்துடன் இணைந்திருக்கும். சிறிதளவு ஹார்மோன்கள் புரதத்துடன் இணையாமலும் இருக்கும். அவற்றுக்கு FT3, FT4 என்று பெயர். இவை உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. இவற்றின் செயல்பாடுகளை முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற thyroid-stimulating hormone (TSH, thyrotropin)‘தைராய்டு ஊக்கி ஹார்மோன்' (TSH) கட்டுப்படுத்துகிறது.
குறை தைராய்டு
தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் 'குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்பநிலையில் உடல் சோர்வாக இருக்கும்; செயல்கள் மந்தமாகும்; சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது; முகம் வீங்கும்; முடி கொட்டும்; இளநரை தோன்றும்; தோல் வறட்சி ஆகும்; பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும்.
தைராய்டு வீக்கம்
உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயோடின் சத்து கிடைக்காவிட்டால், தைராய்டு சுரப்பி தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் சுரக்கத் தூண்டும். ஆனாலும், அதனால் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று வீங்கிவிடும். அதற்கு 'முன்கழுத்துக் கழலை' (Goitre) என்று பெயர். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாகத் தைராய்டு சுரப்பியில் அழற்சி (Thyroiditis) ஏற்பட்டு வீக்கமடைவதும் உண்டு. இது ஒரு தன்தடுப்பாற்றல் நோயாகவும் (Auto immune disease), கட்டியாகவும் (Thyroid adenoma) ஏற்படலாம்.
மிகைத் தைராய்டு
தைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக வீக்கமடைந்து அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் சுரப்பு பல மடங்கு அதிகரித்துவிடும். இந்த நிலைமையை ‘மிகை தைராய்டு' ( Hyperthyroidism ) என்கிறோம். இந்த நோய் உள்ளவர்களுக்கு அதிகமாகப் பசிக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும்; நாடித்துடிப்பு அதிகரிக்கும்; விரல்கள் நடுங்கும்; உள்ளங்கை வியர்க்கும்; அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழியும்; சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும்.
பரிசோதனைகள் என்ன?
வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் T3, T4,TSH, FT3, FT4 , anti TPO ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். பொதுவாக T3 0.7 2 .04 ng/dL என்ற அளவிலும், T4 4.4 11.6 ng/dL என்ற அளவிலும் TSH 0.28 6.82 IU/dL என்ற அளவிலும் FT3 1.4 - 4.2 pg/dL, FT4 0.8 2 ng/dL இருக்க வேண்டும்.
இந்த இயல்பு அளவுகள் ஆய்வகத்தைப் பொறுத்தும், நோயாளியின் நோய்நிலை, அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், வயது, கர்ப்பம், வயது ஆகியவற்றைப் பொறுத்தும் சிறிதளவு மாறலாம். எனவே, நோயாளியானவர் தான் எடுத்துக்கொள்ளும் மருந்து விவரத்தையும் கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
முடிவுகள் எப்படி இருக்கும்?
l குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும்.
l மிகை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் அதிகமாகவும், TSH அளவு குறைவாகவும் இருக்கும்.
l இந்த மூன்று அளவுகளும் குறைந்திருந்தால், முன்பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று பொருள்.
l சிலருக்குக் குறை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு அதிகமாக இருக்கும்.
l சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு குறைவாக இருக்கும்.
l FT3, FT4 அளவுகள் அதிகமானால் மிகை தைராய்டு உள்ளது என்று அர்த்தம்.
l குறை தைராய்டு உள்ளவர்களுக்கு ரத்த ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருக்கும்.
l anti TPO பரிசோதனை ‘பாசிட்டிவ்’என்றால் முன்கழுத்துக் கழலைக்குக் காரணம் தன்தடுப் பாற்றல் நோய் என்றும், ‘நெகட்டிவ்’என்றால் சாதாரணக் கழலை என்றும் அறிய உதவும்.
எப்படிச் செய்வது?
l இந்தப் பரிசோதனையை வெறும் வயிற்றில் செய்வது நல்லது.
l பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தி யிருக்கக் கூடாது; புகைபிடிக்கக் கூடாது.
இதர பரிசோதனைகள்
l அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும்.
l இப்போது 'ஐசோடோப் ஸ்கேன்' பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிவிக்கிறது.
l வீக்கம் காணும் தைராய்டு சுரப்பியிலிருந்து ஊசி மூலமாகச் சிறிய அளவில் திசுவை அகற்றி செல்களைப் பரிசோதிப்பதன் (FNAC) மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முடியும்.
யார், எதற்குச் செய்துகொள்ள வேண்டும்?
l குறை தைராய்டு, மிகை தைராய்டு பிரச்சினை உள்ளதாகச் சந்தேகப்படுபவர்கள் முதலில் நோயைக் கணிப்பதற்குப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் நோயின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்குப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l தைராய்டு சுரப்பியில் வேறு பிரச்சினை உள்ளவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l தைராய்டு சுரப்பிக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்சினை உள்ளவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l இளம்பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l இதயநோய்க்காக அமிய்டோரான் (Amiodarone) மாத்திரையை எடுத்துக்கொள்பவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...