08 டிசம்பர் 2015

அடையாறு ஆற்றின் படுகையும்,கடல் மட்ட அளவும்.......

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.அடையாறு ஆற்றின் படுகை அமைந்துள்ள விதமும்,அதன் போக்கு இடங்களின் கடல் மட்டமும் தெரிந்துகொள்ளுங்க..ஆக்கிரமிப்பே பெரும் சேதத்தை கொடுத்துள்ளது என்பதையும் அறிந்துகொள்ளுங்க..

            அடையாறு ஆற்றின் படுகை, கடலை நோக்கி எவ்வாறு சரிந்து இறங்குகிறது என்பதை ஆராய்ந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. கடல்மட்டத்தை நோக்கிய ஆற்றின் பயணம் எவ்வாறு அடி அடியாக இறங்கி வருகிறது என்பதை கூகுள் எர்த் கூறுகின்ற கடல்மட்ட உயரத்தளவின்படி கணக்கிட்டுப் பார்க்கலாம். எவ்வளவோ வெள்ளம் சென்றாலும் காவிரி பள்ளிபாளையத்திற்குள் புகுந்ததில்லை, பவானியை மேவியதில்லை. இந்த ஆறு மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொண்டது ?
ஆற்றின் தோற்றுவாயான செம்பரம்பாக்கம் ஏரி, கடல்மட்டத்திலிருந்து 62 அடி உயரத்தில் இருக்கிறது. சென்னையின் பெருவாரியான பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து சுமார் 25 முதல் 35 அடி வரையிலான உயரத்தில் இருக்கின்றன.
திருவல்லிக்கேணி 30 அடி உயரத்திலும் சென்ட்ரல் இருப்பூர்தி நிலையம் 18 அடி உயரத்திலும் புரசைவாக்கம் 23 அடி உயரத்திலும் இருக்கின்றன. இதில் வேளச்சேரியிலுள்ள ஏரிக்குத் தெற்குப் பகுதி கடல்மட்டத்திலிருந்து வெறும் 14 அடி உயரமே இருக்கிறது. கொட்டிவாக்கத்திலுள்ள கண்ணகி நகர் என்னும் பகுதி கடல்மட்டத்திலேயே ( 0 அடி) இருக்கிறது. ஒவ்வொரு பகுதியின் தாழ்வான நிலமட்டத்தைப் பற்றிய எளிய கணக்கீடு இருந்தாலே எங்கெங்கு வெள்ளம் தேங்கி நிற்கும் என்பதை யாரும் உணரலாம்.
62 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 0 அடி உயரமுள்ள கடல்மட்டத்திற்கு அடையாற்றில் திறந்துவிடப்படுகின்ற தண்ணீர் ஆற்றுப் படுகையின் வழியே வடிந்து செல்லவேண்டும். அவ்வாறு செல்வதற்கு ஆற்றின் வழி சிறிதளவே ஆனாலும் தொடர்ச்சியாக, சரிவாக இருக்கவேண்டும் என்பதை நாம் அறிவோம். கடல்மட்டத்திலிருந்து ஆற்றுப் படுகையின் உயரத்தைக் காண்பதன்மூலம் அந்தச் சரிவைப் புரிந்துகொள்ள முடியும்.
செம்பரம்பாக்கத்திலிருந்து இறங்கி வரும் அடையாற்றுத் தண்ணீர் குரோம்பேட்டைக்கு மேற்கே சென்னை வெளிவட்டச் சாலையை (பைபாஸ்) ஒட்டிப் பாய்கையில் கடல் மட்டத்திலிருந்து 35 அடி என்னும் அளவுக்குத் தாழ்ந்து வந்துவிடுகிறது. அடுத்து மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதையை ஒட்டிய அடையாற்றுப் படுகை கடல்மட்டத்திலிருந்து வெறும் 12 அடி என்ற தாழ்நிலையை அடைந்துவிடுகிறது.
அங்கிருந்து கடலைச் சேரும்வரை அடையாறு தொடர்ச்சியாகச் சரிந்து இறங்குவதில்லை. அடுத்தடுத்து வரும் அடையாற்றின் படுகைகள் 10 முதல் 20 அடிவரை உயர்வதும் பின்பு சரிவதுமாகவே இருக்கிறது. இதை கூகுள் எர்த் செயலியில் ஒவ்வொரு இடத்தையும் சுட்டி வைத்து அளந்து உணரலாம். திறந்துவிடப்படும் வெள்ளம் ஆற்றின் தங்குதடையின்றிப் பாயாமல் தேங்கி நிரம்பிய பின் வழிவது என்னும் முறைப்படிதான் நகர்கிறது.
விமான நிலையத்திலேயே 12 அடிக்குத் தாழ்ந்த அடையாற்றுப் படுகை, அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்புகையில் 35 அடி உயரம் வரை தேங்கிய பின்பே வழிய நேர்கிறது. 35 அடிவரை முன்னுள்ள வழி உயரமாய் இருக்கப்போய் பக்கவாட்டில் வெள்ளம் கரையுடைத்து விமான நிலையத்தில் தேங்கியிருக்க வேண்டும்.
விமான நிலையத்தைவிட்டு வெளியேறிய் அடையாறு நந்தம்பாக்கத்தையொட்டிய இடத்தில் மீண்டும் 15 அடி அளவுக்குத் தாழ்கிறது. அதற்கடுத்து ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாற்றுப் படுகை 30 அடி என்னும் அளவுக்கு உயரமாக இருக்கிறது. நந்தம்பாக்கம் பகுதியிலிருந்து ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள பாலத்திற்கு வரும்வரை (NH 45) இந்தப் பத்தடிக்கு நீர் நின்று படுகை முழுக்கத் தேங்கவேண்டும்.
பாலம் தாண்டியவுடன் திருவிக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை ஒட்டி 12 அடி அளவுக்கு மீண்டும் தாழ்கிறது. அன்னை வேளாங்கண்ணி பள்ளி மற்றும் கல்லூரியை ஒட்டிய அடையாற்றுப்படுகை மீண்டும் 28 அடிக்கு உயர்ந்திருக்கிறது. 28அடி வரை தேங்கும்போது தண்ணீர் பக்கவாட்டில் உடைத்துவிட்டிருக்க வேண்டும்.
அங்கிருந்து அண்ணாசாலைப் பாலத்தை நெருங்கும் முன் படுகை மீண்டும் 12 அடிக்குத் தாழ்கிறது. சைதைப் பாலத்தைத் தாண்டியபின் ’டர்ன்பல்ஸ் சாலை’ என்ற பாலத்தை அடுத்து மீண்டும் 28 அடி உயரம். அதைத் தாண்டி திடீர்நகர் என்ற பகுதியை வந்தடையும் அடையாறு கடல்மட்டத்திலிருந்து 0 அடி என்ற நிறைவை அடைந்துவிடுகிறது. அங்கிருந்து கடல்வரை சென்று கலப்பது ‘முழுக்க முழுக்கத் தேங்கி அதன்பின் வழியும்’ வகையால்தான்.
அடையாற்றுவழி முழுக்கவே ‘தேங்கி தேங்கி பத்து அல்லது இருபது அடியுயர வெள்ளத் தேக்கமாகி பிறகு வழிந்து, மீண்டும் தேங்கி மீண்டும் சரிந்து’ என்பதாகவே இருக்கிறது. இத்தகைய ஆற்றுப் படுகையால் திடீரென்று ஏற்பட்ட மிகுவெள்ளம் வலுவில்லாத கரைப்பகுதியை மீறிப்பாய்ந்து ஊருக்குள் புகுந்துவிட்டது. ஆற்றுப்படுகையே ஏற்றத் தாழ்வாக இருக்கும்போது அதன் வழிநெடுக ஆக்கிரமிப்புகளும் அடைப்புகளுமாக இருந்தால் என்னாவது ? அதுதான் நடந்தது.
திருமிகு.கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களுக்கு நன்றிங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...