30 நவம்பர் 2019

திருக்குறட்புலம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறார்.
########எளிய திருக்குறள் உரை-1 (25-11-2019)#######
வழங்குபவர்:
குறள்வாணன் கண்ணாடிக்கலைஞர்.
---------------------------------------------------------------
குறள் எண் : 1. இறைவாழ்த்து.
மூலக்குறள்: (பழமையில் எழுதப்பட்டவாறுள்ளது)
"அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு".
‎-----------------------------------------
கொண்டுகூட்டு: (சொற்களைமாற்றிப்பொருள்காணல்)
எழுத்து எல்லாம், அகரம், முதல;
உலகு, ஆதிபகவன் முதற்றே.
-------------------------------------------------
எளிய பிரிப்பு:
எளியபிரிப்பு என்பது, புதிதாய்க்-
-குறள்கற்பவர்க்கும், மாணாக்கர்க்கும் ஆனதால், இப்பிரிப்பிலுறும் சொற்கள் இலக்கணத்துடன்
ஒன்றிடாது நிற்கும் என்பதையறிக.
இது குறட்பாக்களை எளிமையாய்ப்புரிந்து
கொள்வதற்கான பிரிப்புமட்டுமே என்பதைக்-
-கருத்தில் இருத்துக.
-‎--------------------------------------
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு". ‎----------------------------------------
‎சொல்லுரை:
‎எழுத்தெல்லாம்= (உலகிலுள்ள அனைத்து
‎மொழிகளிலுமுள்ள) எல்லா எழுத்துகளும்
‎அகர= 'அ' என்னும் எழுத்து
‎முதல> முதன்மையாகக்கொண்டுள்ளன
‎(அதுபோல)
‎உலகு= இவ்வுலகமானது
‎ஆதிபகவன்= ஆதியான முதல் இறைவனை
‎முதற்று= முதன்மையாக உடையது
-------------------------------------------------------------
கருத்துரை:
எழுத்துகள் எல்லாம் 'அ' என்னும் அகரத்தை
முதலாய்- முதலெழுத்தாய் உடையன. அதைப்போன்று, இவ்வுலகானது முதற்பகவனை- அஃதாவது, வாழ்வியலுக்கேற்ற நெறிமுறைகளைப்பகுத்து வழங்கியவனான முதல் அறிவனை, இறைவனை
முதன்மையாய்க்கொண்டு விளங்குகிறது.
-----------------------------------------------------------------------
இலக்கணக்குறிப்புகள்:
அகரம்> சாரியைபெற்ற எழுத்து = சாரியை-
-பெற்ற உயிர் முதலெழுத்து.
முதல> அஃறிணைப்பலவின்பால் படர்க்கைக்-
-குறிப்பு வினைமுற்று.
எழுத்து> செயப்பாட்டு வினைஆட்சி பொருட்பெயர்.
எல்லாம்> அனைத்தும், முழுவதும், எவையும்.
எல்லாம்> அஃறிணைப்பலவின்பாற்படர்க்கைப்-
-பொதுப்பெயர்.
****************************************************************
'ஆதி' என்ற சொல் தமிழ்ச்சொல்லே.
(இச்சொல் வடமொழியிலும் உள்ளதான் கருத்தில் குழப்பங்கொள்ளவேண்டா.)
'ஆதி: என்ற சொல்லை வள்ளுவப்பெருந்தகை அவர்கள், 'செங்கோன்மை' அதிகாரத்தில்' 543ஆம் குறட்பாவழி, தமிழ்ச்சொல்லே என்று நிலைப்படுத்துகிறார்கள்.
"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்" என்ற குறள்வழி
'ஆதி' என்ற சொல்,
முதன்மையாய்,
அடிப்படையாய்,
தொடக்கமாய் எனற பொருளிற்றான் அமைந்துள்ளது என்பதையறிந்து,
'ஆதி'யென்றசொல் தமிழ்ச்சொல்லேயென்று தெளிக.
இக்கருத்தை, 'மொழிஞாயிறு' தமிழறிஞர்
தேவநேயப்பாவாணர் அவர்களுமேற்று, தம் திருக்குறள் உரைநூலில் வலியுறுத்தியும் உள்ளார்கள்.
****************************************************************
பகவன்= இறைவன் = கடவுள்.
###வடசொல்: பகவான் (பக்வான்?)
பகவன்> உயர்திணை ஆண்பாற்படர்க்கைப்-
-பொருட்பெயர்.
முதற்று= முதலையுடையது.
முதற்று> அஃறிணை ஒன்றன்பாற்படர்க்கைக்-
-குறிப்பு வினைமுற்று.
உலகு= உலகம்.
உலகம்> இடப்பெயர் (பொது).
இக்குறட்பாவில் 'எடுத்துக்காட்டு உவமையணி'
அமைந்துள்ளது.
உவமை ஒரு சொற்றொடர் (வாக்கியம்) ஆகவும்,உவமேயம் மற்றொரு சொற்றொடராகவும், இடையே, 'அதுபோல' என்ற உவமவுருபு மறைந்துவருதலே 'எடுத்துக்காட்டு உவமையணி' ஆகும்
-----------------------------------------------------------------------------------------------------
குறட்பாக்களில் அமைந்துள்ள சொற்களின் பொருளையும், அதற்குரிய இலக்கணக்குறிப்புகளையும் அறிந்தாலன்றிக்- குறட்பாக்களின் முழுக்கருத்தினையும் செம்மையாய்
அறியவியலாதென்பதை அறிந்து குறள் கற்கவும்.
-----------------------------------------------------------------------------------------------------
எனவே நண்பர்களே, நாடோறும்
'உலகப்பொதுமறை'யாம் திருக்குறளைப்பயின்று,
நற்றமிழையும் இலக்கணத்தையும் நன்கறிவீர் !
பரவுக பைந்தமிழ் ! ஓங்குக குறள்நெறி !
நன்றி.
(இவ்விடுகைபற்றிய உங்கள் கருத்துகளை ஆவலுடன் காணக்காத்திருக்கிறேன். பிழைகளைச் சுட்டி.காட்டுக.)
----------------------------------------------------------------
(முன்பு இடுகையிட்டநாள் : 14-08-2017.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...