30 நவம்பர் 2019

திருக்குறள் உரை-02


திருக்குறட்புலம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறார்.
######எளிய திருக்குறள் உரை- 2 ( 29-11-2019)######
வழங்குபவர்:
குறள்வாணன் கண்ணாடிக்கலைஞர். ----------------------------------------------------------------------------------------------------
குறள் எண் : 2. இறைவாழ்த்து.
மூலக்குறள்: (பழைமையில் எழுதப்பட்டவாறுள்ளது)
"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்".
----------------------------------------------------------------------------------------------------
கொண்டுகூட்டு: ( செய்யுளின் அமைப்புநலன்கருதி
மாற்றி அமைக்கப்பட்டுள்ள சொற்களை எளிமையாய்
மாற்றியமைத்துப்பொருள்கொள்ளும் முறை. )
வாலறிவன், நற்றாள், தொழாஅர், எனின்,
கற்றதனால், ஆய, என்பயன்கொல்?
-----------------------------------------------------------------------------------------------------
எளிய பிரிப்பு:
எளியபிரிப்பு என்பது, புதிதாய்க்-
-குறள்கற்பவர்க்கும், மாணாக்கர்க்கும் ஆனதால், இப்பிரிப்பிலுறும் சொற்கள் இலக்கணத்துடன்
ஒன்றிடாது நிற்கும் என்பதையறிக.
இது குறட்பாக்களை எளிமையாய்ப்புரிந்து
கொள்வதற்கான பிரிப்புமட்டுமே என்பதைக்-
-கருத்தில் இருத்துக.
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் ?"
-‎----------------------------------------------------------------------------------------------------
சொல்லுரை:
வால்அறிவன்=தூயஅறிவினை உடையவனது~
நற்றாள்=நல்தாள்=நல்லதிருவடிகளை~
தொழாஅர் எனின்=வணங்காவிடில்~
கற்றதனால்=(எல்லா நூல்களையும் கற்றவராயினும்)
அக்கல்வியறிவால்~
ஆய பயன் என்? =உண்டாகிய பயன் யாது? (ஒன்றுமில்லை !)
கொல்=அசைச்சொல்+இடைச்சொல்~
-----------------------------------------------------------------------------------------------------கருத்துரை:
ஒருவற்கு, தான்கற்ற கல்வியால் நற்பயன் ஏற்படவேண்டுமாயின், அவன், தூய அறிவாற்றலில்
சிறந்தோனின்(வாலறிவனின்) அறிவுரைப்படி
நடக்கவேண்டும். (அஃதே இறைவன் திருவடிகளை
வணங்குதலும் ஆம்.)
----------------------------------------------------------------------------------------------------
இலக்கணக்குறிப்புகள்:
கற்றதனால்=ஓதியதால்.
கற்றதனால்>அஃறிணை ஒன்றன்பாற்படர்க்கை
இறந்தகாலத்தொழிற்பெயர்-3ஆம் வேற்றுமை.
ஆய=ஆகிய.
ஆய>பெயரெச்சம்=செய்த எனும் இறந்தகாலப்
பெயரெச்சம்.
பயன்=நன்மை=விளைவு.
கொல்>அசைச்சொல்;இடைச்சொல்லும் ஆம்.
வாலறிவன்=வால்+அறிவன்.
"வால்"என்பது தூய்மையைக்குறிக்கும்.
அறிவன்=அறிவினையுடையவன்.
வாலறிவன்=தூய அறிவினை உடையவன்.
தொழாஅர்>இசைநிறைஅளபெடை.
###"தொழார்" என்ற சொல்லே, இசையளவு நீட்டற்காக,
"தொழாஅர்" என்றாயிற்று.
###யாப்பிலக்கணவழி, ஓசையை நீட்டற்குதவிய
'அ' என்ற எழுத்தை நீக்கிப்படித்தால், "தொழார்"
என்ற மிகவெளிய சொல்லாயமையும்.###
மாணவர்களைக்குழப்பத்திலாழ்த்தும் அளபெடைச்சொல்லாதலின் விரிவான இவ்விளக்கம்.
எனின்=என்றால்.
எனின்>செயின் எனும் வினையெச்சவிகுதி.
----------------------------------------------------------------------------------------------------
சிறப்புக்குறிப்பு :
குறட்பாக்களில் அமைந்துள்ள சொற்களின் பொருளையும், அவற்றிற்குரிய இலக்கணக்குறிப்புகளையும் ஐயமற அறிந்தாலன்றிக்குறட்பாக்களின் முழுக்கருத்தினையும் செம்மையாய் அறியவியலாதென்பதை அறிந்து குறள் கற்கவும்.
----------------------------------------------------------------------------------------------------
வேண்டல் :
எனவே நண்பர்களே, நாடோறும்
'உலகப்பொதுமறை'யாம் திருக்குறளைப்பயின்று,
நற்றமிழையும் இலக்கணத்தையும் நன்கறிவீர் !
சிறந்த தமிழறிஞராவீர் !
பரவுக பைந்தமிழ் ! ஓங்குக குறள்நெறி !
நன்றி.
(இவ்விடுகைபற்றிய உங்கள் கருத்துகளை ஆவலுடன் காணக்காத்திருக்கிறேன். பிழைகளைச் சுட்டி.காட்டுக.
பிழைகளை நீக்கிக்கொள்ளலாம். )
###########################################
29-11-2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...