15 நவம்பர் 2019

நூலக வாரவிழா-2019 சத்தியமங்கலம் கிளை

                                      தொட்டனைத்தூறும் மணற்கேணி
                                         மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு.- 393
       அவைசார்ந்த மேன்மக்களே,மாணவ,மாணவியரே,வாசகப்பெருமக்களே,
  17-11-2019 ஞாயிறு இன்று சத்தியமங்கலம் கிளை நூலகத்தில் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
               நமது மொழிவளத்தைப் பெருக்கவும்,வாசிப்பை சரளமாக்கவும் ,வாசிப்பினால் உருவாகும் நற்சிந்தனைகளும்,பொது அறிவுப் பெருக்கமும் நம்மை சராசரியான நிலையிலிருந்து உயர்த்தி மேம்பட்டநிலைக்கு கொண்டு செல்லும்.
   அவ்வாறான வாசிப்பிற்கு ஏற்ற இடம் நம்ம சத்தியமங்கலம் நூலகம்தாங்க.அதாவது மனித சமூகத்தை பண்படுத்துவது நூலகம்தாங்க.
நம்ம சத்தியமங்கலம் கிளைநூலகத்தில்,கலை,இலக்கியம்,அறிவியல்,மருத்துவம்,கணிதம்,வரலாறு,வாழ்வியல்,பொருளியல்,அரசியல்,கணிதம்,பொறியியல்,தத்துவம்,தொழில்நுட்பம்,நிலநூல்,நீதிபோதனை,சுற்றுச்சூழல்,பொதுஅறிவு,கதை,கவிதை,நாடகம்,சட்டம்,வாணிபம்,வேளாண்மை,பயன்படுகலைகள் என ஏராளமான தலைப்புகளில் பல்துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் பழையதும்,புதியதுமாக வாசிப்புக்காக ,வகைவகையாக ,துறைவாரியாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.தவிர அன்றாடம் உலக நடப்புகளை அறிந்துகொள்ள செய்தித்தாட்கள்,நாளிதழ்,வார இதழ்,மாத இதழ்,பருவ இதழ்,வேலைவாய்ப்புச் செய்திகள் என வாங்கி வாசகர் பயன்பாட்டிற்காக வைக்கப்படுகின்றன.

                             மாணவர்களை அறிஞர்களாக்குவதில் பள்ளி,கல்லூரி போன்ற வகுப்பறைகளுக்கு இணையானது நூலகமாகும்.
பள்ளி என்பது பாடநூல்களைக்கொண்டு அறிவை விதைக்கும் இடம் என்றால் நூலகமானது அறிவை வளர்த்து செழுமையாக்குவதாகும்.ஒரு மாணவர் பாடப்புத்தகங்களோடு நூலகத்திலுள்ள பொது அறிவுநூல்களை வாசிக்குமளவு  பலதுறை சார்ந்த அறிவினைப் பெறுவர்.அவ்வாறான அறிவுசார்ந்த நூல்கள்  மாணவர்களின் வயதிற்கும்,மனநிலைக்கும் ஏற்றவாறு நம்ம நூலகத்தில் ஏராளமாக உள்ளன.
 இதையே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ,
        ''புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
               புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்''
  என வலியுறுத்தினார்.

    எனவே  இந்திய நூலகச் சங்கமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில்  நூலக வாரவிழாவினை  நடத்தி அறிஞர்களும்,சிந்தனையாளர்களும் வாழுமிடமான நூலகத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்கான போதிய விழிப்புணர்வினை தருகின்றது.நாமும் தேசிய நூலக வாரவிழாவினை முன்னிட்டு நமது சத்தியமங்கலம் நூலகத்தின் அவசியத்தை சத்தியமங்கலம் சுற்றுவட்டார மக்களிடையே பரப்புவோம்.பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே பரப்புவோம்.நூலக வாரவிழாவினால் நூலகர்-வாசகர் உறவு மேம்படுகிறது.புதிய,புதிய வாசகர்களை நூலகம் வரவழைக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது.புதிய உறுப்பினர்கள்  சேர்க்கை கூடுகின்ற வாய்ப்பு ஏற்படுகிறது.
    ஆக நாம் அனைவரும்  நூலக வாரவிழாவில் பங்கேற்று நமது அறிவைப்பெருக்கி,எண்ணங்கள் நேர்பட்டு,உயர்சிந்தனைகள் உருவாகி,திறமையும் ஆற்றலும் பெருக்கி,தன்னம்பிக்கை வளர்க்கும்,நூலகத்தின் மகத்துவத்தை மக்களிடையே பரப்புவதோடு
நாளெல்லாம் நூலகத்தைப் பயன்படுத்துவோம்,
பொழுதெல்லாம் புத்தகசாலையைப் போற்றுவோம்.
 என உரையாற்ற வாய்ப்பளித்த அவையோருக்கு நன்றிபாராட்டி நிறைவு செய்கிறேன்.
என
செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடிகிளை.
ஈரோடு மண்டலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...