30 நவம்பர் 2019

உதடொட்டாக் குறட்பாக்கள்-24

திருக்குறட்புலம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறார்.
######திருக்குறள் சிறப்பு######01-12-2019######
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
##########உதடொட்டாக்குறட்பாக்கள்##########
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவள்ளுவப்பெருந்தகை அவர்கள் மாந்தர்வாழ்வு
சிறக்க, திருக்குறளை யாத்து நமக்களித்தார்கள்.
திருக்குறளின் சிறப்புகளை முற்றிலும் அறிந்தவர்கள்
எவருமே இலர் எனலாம்.
அத்துணைச்சிறப்புகள் திருக்குறளிலே நிறைந்துள்ளன.
எல்லாவற்றையும் இங்கே பட்டியலிட்டு விளக்கிட
இயலாதாகையால், எனக்குத்தெரிந்தவற்றை யான்
விளக்குகிறேன்.
யான் இடுகையாய் இட்டு, நிறைவுசெய்தபின்னர்,
நல்நண்பர்களாகிய உங்களுக்குத்தெரிந்தவற்றை
நீங்கள் வாய்ப்பின்வழியே, தெரிவித்தாலும்/
இடுகையாய் இட்டாலும் அனைவரும் திருக்குறளின் சிறப்புகளாய் அறிய அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இவ்வேண்டுகோளையேற்று உதவிட / இடுகைகளிட
நீங்களெல்லாம் மிக அணியமாக இருப்பீர்கள் என்று
திண்ணமாக எண்ணுகிறேன்.
***********************************************************
இன்று முதற்சிறப்பாக,
"உதடு ஒட்டாமல்ஒலிக்கும் குறட்பாக்கள்"பற்றி
அறிவோம்.
உங்களில் பலரும் இதைப்பற்றி அறிந்திருப்பீர்கள்.
ஆயினும், அவற்றைப்பற்றி விரிவாக அறிவோமா?
பொதுவாக, "ப" என்ற எழுத்தையும், "ம" என்ற எழுத்தையும் அல்லது இவ்வெழுத்துகள் அடங்கிய சொற்களையும் நாம் ஒலிக்கும்போது உதடுகள் ஒட்டும்.
அஃதாவது, உதடுகள் இரண்டும் ஒட்டினாற்றான்
"ப" + "ம" ஆகிய ஈரெழுத்துகளும் தமக்குரிய ஒலியுடன் இயையும்.
( உதடுகள் ஒட்டவில்லையாயின், "ப" + "ம" என்ற
ஒலி பிறக்காது.)
இவ்விரு எழுத்துகளும் இல்லாத ஒரு குறட்பாவினை
ஒலிக்கும்போது(சொல்லும்போது) உதடுகளொட்டா.
----------------------------------------------------------------------------------------------------
நம்மில் பலரும் அறிந்த இவ்வகையிலான ஒரு குறட்பா :
----------------------------------------------------------------------------------------------------
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்".
****************************************************************
இற்றைநாள்வரை இக்குறள்பற்றி அறியாதவர்கள் இக்குறளைச்சொல்லி / ஒலித்துப்பாருங்கள்.
உறுதியாக உதடுகள் ஒட்டாமல் எழுத்தோசை
வரும். ஒரு விரலால் கீழுதட்டையோ அல்லது மேலுதட்டையோ அழுத்திக்கொண்டு இக்குறளை
சொல்லிப்பாருங்கள். ஓர் உதட்டுடன் மற்றோர் உதடு
ஒட்டாமலே சொல்லொலிப்பு உருவாவதை அறியலாம்.
------------------------------------------------------------------------------------------------------
தமிழ்மொழிக்கே இத்தனிச்சிறப்பு அமைந்துள்ளது என்று
எண்ணுகிறேன். வேறெம்மொழியாவது இச்சிறப்பைப்பெற்று
இருக்கிறதா ? தெரிந்தவர் கூறிடின் நன்றியுடனேற்பேன்.
*****************************************************************
இதுபோன்ற திருக்குறட்பாக்கள், அஃதாவது,
உதடுகளொட்டாக்குறட்பாக்கள் மொத்தம்
24 (இருபத்துநான்கு) உள்ளன. இவை யானறிந்தவை.
நுண்நாடலால் வேறுளவாவெனக்காணவேண்டும்.
***********************************************************
இவ்வாறு, உதடுகள் ஒட்டாக்குறட்பாக்களை
"இதழகல் குறட்பாக்கள்" என்றும் சொல்வதுண்டு.
வாயிதழ்கள் ஒட்டாமல், அவை அகன்ற நிலையில்,
ஒட்டாமல் இருக்கும்போதே சொல்லொலிப்பைச் சரியாகப்பெறமுடிவதால் இவ்வாறு குறிப்பிடுகின்றோம்.
***********************************************************
'உதடுகளொட்டாக்குறட்பாக்களைப்பின்வருமாறு
வரிசைப்படுத்திப்பட்டியலிடுகிறேன்.
1. "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று". (208)
2. "வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்". (240)
3. "அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்". (286)
4. "இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை". (310)
5. "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்". (341)
6. "நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது". (419)
7. "அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்". (427)
8. "ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்லார்க்குச் செல்லாதது இல்". (472)
9. "எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்". (489)
10. "செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்". (516)
11. "அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
( கோடுஇன்றி நீர்நிறைந் தற்று". (523)
12. "வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று". (678)
13. "நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்". (679)
14. "கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்
ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்". (894)
15. "எற்றிற்கு உரியவர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து". (1080)
16. "நோக்கினால் நோக்கெதிர் நோக்குதல்
தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து". (1082)
17. "உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்". (1177)
18. "வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை
ஆரஞர் உற்றன கண்". (1179)
19. "காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து". (1211)
20. "நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டுஎன் உயிர்". (1213)
21. "நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்". (1219)
22. "தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து". (1236)
23. "காணுங்கால் காணேன் தவறாய; காணாக்கால்
காணேன் தவறல் லவை". (1286)
24. "தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு". (1296)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்நண்பரீர்,
இச்சிறப்பிடுகை உங்கள் கவனத்தை ஈர்த்திருக்கும்
என்று நம்புகிறேன்.
இத்தொகுப்பினைச்சேர்த்துவைத்துக்கொள்ளவும்.
எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகட்கு மிகவுதவும்.
ஓர் ஒளியச்சுப்படி(Zerox) எடுத்துவைத்துக்கொள்ளல்
நலம்.
பெரிய இடுகையாயினும் உங்களுக்குப்பயனளிக்கும்
என்றெண்ணுகிறேன்.
------------------------------------------------------------------------------------------
உங்கள் மேலான கருத்துகளைப்பதிவு செய்யுங்கள்.
பிழைகளைச்சுட்டிக்காட்டுங்கள். திருத்தியிட உதவுங்கள்.
மிகுநன்றி நண்பர்களே.
01-12-2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...