30 நவம்பர் 2019

துணி துவைக்க இயற்கை திரவம்-பூந்திக்கொட்டை














பூந்திகொட்டை "..
நகைபட்டறையில் தங்க நகைகளை சுத்தம் செய்ய இந்த பூந்திகொட்டையைத்தான் பயன்படுத்துகின்றனர்..
#செய்முறை..
இந்த பூந்திகொட்டை நாட்டு மருந்து கடைகளிலில் கிலோ 80 ரூபாய்க்கு முதல் கிடைக்கிறது.
அதை வெயிலில் நன்கு காய வைத்து,
உரலில் இடித்து,
பிறகு மிக்சியில் அரைத்து,
ஒரு லிட்டர் தண்ணீரில் ஐம்பது கிராம் பூந்திகொட்டை தூளை சில்வர் பாத்திரத்தில் கலக்கி ஒரு வாரம் வெயிலில் காய வையுங்கள்..
(இதற்கு மழை நீரை நான் பயன்படுத்துகிறேன்.
நீங்கள் எந்த நீரை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள்..)
அதன் பிறகு பாட்டிலில் ஊற்றி
நன்கு குலுக்கி துணிதுவைக்கும் இயந்திரத்தில் வடிகட்டி இருநூற்று ஐம்பது மில்லி வீதம் ஊற்றுங்கள்.. (இருபதுநாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்..)
இயந்திரம் தண்ணீர் எடுத்தபிறகு பத்து நிமிடம் நிறுத்தி வையுங்கள்.
இப்படி செய்யும் போது துணி நன்கு ஊறிவிடும்.
அதன் பின் இயந்திரத்தை ஓடவிடுங்கள்..
பிறகு வெண்மையை பாருங்கள் இயற்கை நறுமணத்துடன்..
இதே முறையை கையில் துவைப்பவர்களும் பயன்படுத்தலாம்..
நேரம் செலவாகுதுனு எல்லாம் பார்க்காதீங்க..
தொலைகாட்சி பெட்டியில் காசுக்காக ஆடற ஆட்டக்காரிகள் சொல்றதைக் கேட்டு நாமும்
நச்சுக்களை எல்லாம் பயன்டுத்தி இப்போ இயற்கையை அழித்து மருத்துவமனைக்கு படை எடுத்துட்டு லட்சம் லட்சமா கப்பம் கட்டீட்டு இருக்கோம்..
இதை நான் #விற்பனைக்குக்கு தயார் செய்யல..
உங்களுக்கு பயன்படுமேனுதான் பகிர்ந்திருக்கேன்..
நீங்களே தயாரிச்சு சுயசார்போட வாழத்தான் இந்த வழியை சொல்கிறேன்..
நதிகளை இணைக்கிறது,
அண்டை மாநிலத்தாத்துகாரர்களிடம் தண்ணீருக்காக கையேந்துவது,
இதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்..
இப்போ ஓடுகிற தண்ணி 70 சதவீதம் நச்சுஆலைகளால் மாசைடையுதுனா,
மீதி 30 சதவீதமும் நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் நச்சு கழிவுகளால்தான் ஆகிறது என்பதை நன்கு உணர வேண்டும்.
இப்போ மாற்றத்தை நம்ம வீட்டிலிருந்து ஆரம்பிப்போம்..
கெட்டுப்போன முப்பது சதவீதத்தை மீட்டாலே இந்த நூற்றாண்டில் நாம செய்த பெரும் சாதனையாகிடும்..
நல்ல ஆடைகளையும்,
ஆபரணங்களையும்,
அடுக்குமாடி வீடுகளையும்,
விலை உயர்ந்த மகிழ்வுந்துகளையும்,
பணத்தையும்,
கல்வியையும் மட்டும் நம் பிள்ளைகள் கொடுத்துட்டு போனா நம்ம பிள்ளைகள் நல்லா வாழாது.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டா இயற்கையை சூரையாடி, பல்லுயிர்களோட சாபத்துக்கு
நாம ஆளாகியிருக்கோம்..
அந்த சாபத்தை போக்கவேண்டும் என்றால்
இயற்கைக்கு திரும்புகிற
பரிகாரத்தை செய்து
இம்மண்ணில் பல்லுயிர்களும்
வாழ விட்டாத்தான்
நம்ம அடுத்த சந்தததியும் வாழ
முடியும்னு மனசில
ஒரு ஓரமா வச்சுக்கோங்க..


#சைக்கிள்_சவாரி.."
அப்போதெல்லாம்
வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது.
அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால்,
அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள்.
இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் அப்போது
சைக்கிள் ஓட்டத் தெரியாமல்,
அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள்.
’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.
சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது..?
அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன.
இப்போதும்
உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன.
ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம் 50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும்.
அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.
கேரியர் வைத்த சைக்கிள்,
கேரியர்இல்லாத சைக்கிள்,
டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.
‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ..’ என்று விசிறிக்கொண்டே,
தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள்.
உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும்
10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள்.
அந்த ஒரு பத்து நிமிஷம்,
இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது..!
வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள்.
’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா..’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.
இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.
சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு,
தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள்.
பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு.
பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.
‘செகண்ட் ஹேண்ட்’ சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது.
அந்த வண்டியைத் துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன,
உப்புத்தாள் கொண்டு,
வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன...
என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.
எண்பதுகளில் ராலே சைக்கிள்தான் கதாநாயகன்.
ராலே சைக்கிள் கமல் என்றால் ஹெர்குலிஸ் சைக்கிள் ரஜினி.
நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் மாதிரி அட்லஸ், ஹீரோ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன.
‘ராபின்ஹூட்’ என்றொரு சைக்கிள். அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும்.
பத்துமுறை பெடல் செய்தால், ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்று
அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள்.
ஆனால் அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம்...
என சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.
டைனமோ இல்லையெனில்
போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும்.
அதேபோல்,
சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது,
அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது, கையெல்லாம் மையாகியிருக்கும்.
‘இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது..’ என்று அலுப்பும்சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.
‘ஓவராயிலிங்..’ சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர்.
அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு,
அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி,
ஹேண்டில் பார் கைப்பிடி,
சீட்டுக்கு முன்னே இருக்கும்
பார் பகுதிக்கு ஒரு கவர்,
சீட்டுக்கு குஷன் கவர்,
இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது
ஒரு கலை.
இன்னும் சிலர்,
சின்னச்சின்ன மணிகளை,
வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்துவிடுவார்கள்.
டைனமோவுக்கு மஞ்சள் துண்டு அல்லது
மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.
இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம்.
கறிவேப்பிலை வாங்கவே,
டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம்.
அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு,
கெத்துக் காட்டுவோம்.
சைக்கிளின் ரெண்டுபக்கமும்
பெல் வைத்து,
வித்தியாச ஒலி எழுப்புவார்கள்.
மாற்றங்கள்...
வேகங்கள்..
சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன.
‘என்னடா மாப்ளே...
இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே.
இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா.
இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்’ என்றார்கள்.
அப்பா ஓட்டிய சைக்கிள்,
முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம்
மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.
இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன.
அப்பாவுக்கு பைக்,
மனைவிக்கு ஆக்டீவா,
மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன.
குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன.
வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை.
’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது..’ என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.
காலச் சுழற்சியில்...
தொப்பையைக் குறைக்கவும்
சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.
ஸ்டாண்ட் போட்டு,
சைக்கிளிங் பண்ணுவதற்கு,
காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.
சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது.
எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும்,
நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா..?
உங்கள் நினைவுகளை
கொஞ்சம் தட்டி விடுங்கள்....

உதடொட்டாக் குறட்பாக்கள்-24

திருக்குறட்புலம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறார்.
######திருக்குறள் சிறப்பு######01-12-2019######
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
##########உதடொட்டாக்குறட்பாக்கள்##########
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவள்ளுவப்பெருந்தகை அவர்கள் மாந்தர்வாழ்வு
சிறக்க, திருக்குறளை யாத்து நமக்களித்தார்கள்.
திருக்குறளின் சிறப்புகளை முற்றிலும் அறிந்தவர்கள்
எவருமே இலர் எனலாம்.
அத்துணைச்சிறப்புகள் திருக்குறளிலே நிறைந்துள்ளன.
எல்லாவற்றையும் இங்கே பட்டியலிட்டு விளக்கிட
இயலாதாகையால், எனக்குத்தெரிந்தவற்றை யான்
விளக்குகிறேன்.
யான் இடுகையாய் இட்டு, நிறைவுசெய்தபின்னர்,
நல்நண்பர்களாகிய உங்களுக்குத்தெரிந்தவற்றை
நீங்கள் வாய்ப்பின்வழியே, தெரிவித்தாலும்/
இடுகையாய் இட்டாலும் அனைவரும் திருக்குறளின் சிறப்புகளாய் அறிய அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இவ்வேண்டுகோளையேற்று உதவிட / இடுகைகளிட
நீங்களெல்லாம் மிக அணியமாக இருப்பீர்கள் என்று
திண்ணமாக எண்ணுகிறேன்.
***********************************************************
இன்று முதற்சிறப்பாக,
"உதடு ஒட்டாமல்ஒலிக்கும் குறட்பாக்கள்"பற்றி
அறிவோம்.
உங்களில் பலரும் இதைப்பற்றி அறிந்திருப்பீர்கள்.
ஆயினும், அவற்றைப்பற்றி விரிவாக அறிவோமா?
பொதுவாக, "ப" என்ற எழுத்தையும், "ம" என்ற எழுத்தையும் அல்லது இவ்வெழுத்துகள் அடங்கிய சொற்களையும் நாம் ஒலிக்கும்போது உதடுகள் ஒட்டும்.
அஃதாவது, உதடுகள் இரண்டும் ஒட்டினாற்றான்
"ப" + "ம" ஆகிய ஈரெழுத்துகளும் தமக்குரிய ஒலியுடன் இயையும்.
( உதடுகள் ஒட்டவில்லையாயின், "ப" + "ம" என்ற
ஒலி பிறக்காது.)
இவ்விரு எழுத்துகளும் இல்லாத ஒரு குறட்பாவினை
ஒலிக்கும்போது(சொல்லும்போது) உதடுகளொட்டா.
----------------------------------------------------------------------------------------------------
நம்மில் பலரும் அறிந்த இவ்வகையிலான ஒரு குறட்பா :
----------------------------------------------------------------------------------------------------
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்".
****************************************************************
இற்றைநாள்வரை இக்குறள்பற்றி அறியாதவர்கள் இக்குறளைச்சொல்லி / ஒலித்துப்பாருங்கள்.
உறுதியாக உதடுகள் ஒட்டாமல் எழுத்தோசை
வரும். ஒரு விரலால் கீழுதட்டையோ அல்லது மேலுதட்டையோ அழுத்திக்கொண்டு இக்குறளை
சொல்லிப்பாருங்கள். ஓர் உதட்டுடன் மற்றோர் உதடு
ஒட்டாமலே சொல்லொலிப்பு உருவாவதை அறியலாம்.
------------------------------------------------------------------------------------------------------
தமிழ்மொழிக்கே இத்தனிச்சிறப்பு அமைந்துள்ளது என்று
எண்ணுகிறேன். வேறெம்மொழியாவது இச்சிறப்பைப்பெற்று
இருக்கிறதா ? தெரிந்தவர் கூறிடின் நன்றியுடனேற்பேன்.
*****************************************************************
இதுபோன்ற திருக்குறட்பாக்கள், அஃதாவது,
உதடுகளொட்டாக்குறட்பாக்கள் மொத்தம்
24 (இருபத்துநான்கு) உள்ளன. இவை யானறிந்தவை.
நுண்நாடலால் வேறுளவாவெனக்காணவேண்டும்.
***********************************************************
இவ்வாறு, உதடுகள் ஒட்டாக்குறட்பாக்களை
"இதழகல் குறட்பாக்கள்" என்றும் சொல்வதுண்டு.
வாயிதழ்கள் ஒட்டாமல், அவை அகன்ற நிலையில்,
ஒட்டாமல் இருக்கும்போதே சொல்லொலிப்பைச் சரியாகப்பெறமுடிவதால் இவ்வாறு குறிப்பிடுகின்றோம்.
***********************************************************
'உதடுகளொட்டாக்குறட்பாக்களைப்பின்வருமாறு
வரிசைப்படுத்திப்பட்டியலிடுகிறேன்.
1. "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று". (208)
2. "வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்". (240)
3. "அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்". (286)
4. "இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை". (310)
5. "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்". (341)
6. "நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது". (419)
7. "அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்". (427)
8. "ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்லார்க்குச் செல்லாதது இல்". (472)
9. "எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்". (489)
10. "செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்". (516)
11. "அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
( கோடுஇன்றி நீர்நிறைந் தற்று". (523)
12. "வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று". (678)
13. "நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்". (679)
14. "கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்
ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்". (894)
15. "எற்றிற்கு உரியவர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து". (1080)
16. "நோக்கினால் நோக்கெதிர் நோக்குதல்
தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து". (1082)
17. "உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்". (1177)
18. "வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை
ஆரஞர் உற்றன கண்". (1179)
19. "காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து". (1211)
20. "நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டுஎன் உயிர்". (1213)
21. "நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்". (1219)
22. "தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து". (1236)
23. "காணுங்கால் காணேன் தவறாய; காணாக்கால்
காணேன் தவறல் லவை". (1286)
24. "தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு". (1296)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்நண்பரீர்,
இச்சிறப்பிடுகை உங்கள் கவனத்தை ஈர்த்திருக்கும்
என்று நம்புகிறேன்.
இத்தொகுப்பினைச்சேர்த்துவைத்துக்கொள்ளவும்.
எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகட்கு மிகவுதவும்.
ஓர் ஒளியச்சுப்படி(Zerox) எடுத்துவைத்துக்கொள்ளல்
நலம்.
பெரிய இடுகையாயினும் உங்களுக்குப்பயனளிக்கும்
என்றெண்ணுகிறேன்.
------------------------------------------------------------------------------------------
உங்கள் மேலான கருத்துகளைப்பதிவு செய்யுங்கள்.
பிழைகளைச்சுட்டிக்காட்டுங்கள். திருத்தியிட உதவுங்கள்.
மிகுநன்றி நண்பர்களே.
01-12-2019.

திருக்குறள் உரை-02


திருக்குறட்புலம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறார்.
######எளிய திருக்குறள் உரை- 2 ( 29-11-2019)######
வழங்குபவர்:
குறள்வாணன் கண்ணாடிக்கலைஞர். ----------------------------------------------------------------------------------------------------
குறள் எண் : 2. இறைவாழ்த்து.
மூலக்குறள்: (பழைமையில் எழுதப்பட்டவாறுள்ளது)
"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்".
----------------------------------------------------------------------------------------------------
கொண்டுகூட்டு: ( செய்யுளின் அமைப்புநலன்கருதி
மாற்றி அமைக்கப்பட்டுள்ள சொற்களை எளிமையாய்
மாற்றியமைத்துப்பொருள்கொள்ளும் முறை. )
வாலறிவன், நற்றாள், தொழாஅர், எனின்,
கற்றதனால், ஆய, என்பயன்கொல்?
-----------------------------------------------------------------------------------------------------
எளிய பிரிப்பு:
எளியபிரிப்பு என்பது, புதிதாய்க்-
-குறள்கற்பவர்க்கும், மாணாக்கர்க்கும் ஆனதால், இப்பிரிப்பிலுறும் சொற்கள் இலக்கணத்துடன்
ஒன்றிடாது நிற்கும் என்பதையறிக.
இது குறட்பாக்களை எளிமையாய்ப்புரிந்து
கொள்வதற்கான பிரிப்புமட்டுமே என்பதைக்-
-கருத்தில் இருத்துக.
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் ?"
-‎----------------------------------------------------------------------------------------------------
சொல்லுரை:
வால்அறிவன்=தூயஅறிவினை உடையவனது~
நற்றாள்=நல்தாள்=நல்லதிருவடிகளை~
தொழாஅர் எனின்=வணங்காவிடில்~
கற்றதனால்=(எல்லா நூல்களையும் கற்றவராயினும்)
அக்கல்வியறிவால்~
ஆய பயன் என்? =உண்டாகிய பயன் யாது? (ஒன்றுமில்லை !)
கொல்=அசைச்சொல்+இடைச்சொல்~
-----------------------------------------------------------------------------------------------------கருத்துரை:
ஒருவற்கு, தான்கற்ற கல்வியால் நற்பயன் ஏற்படவேண்டுமாயின், அவன், தூய அறிவாற்றலில்
சிறந்தோனின்(வாலறிவனின்) அறிவுரைப்படி
நடக்கவேண்டும். (அஃதே இறைவன் திருவடிகளை
வணங்குதலும் ஆம்.)
----------------------------------------------------------------------------------------------------
இலக்கணக்குறிப்புகள்:
கற்றதனால்=ஓதியதால்.
கற்றதனால்>அஃறிணை ஒன்றன்பாற்படர்க்கை
இறந்தகாலத்தொழிற்பெயர்-3ஆம் வேற்றுமை.
ஆய=ஆகிய.
ஆய>பெயரெச்சம்=செய்த எனும் இறந்தகாலப்
பெயரெச்சம்.
பயன்=நன்மை=விளைவு.
கொல்>அசைச்சொல்;இடைச்சொல்லும் ஆம்.
வாலறிவன்=வால்+அறிவன்.
"வால்"என்பது தூய்மையைக்குறிக்கும்.
அறிவன்=அறிவினையுடையவன்.
வாலறிவன்=தூய அறிவினை உடையவன்.
தொழாஅர்>இசைநிறைஅளபெடை.
###"தொழார்" என்ற சொல்லே, இசையளவு நீட்டற்காக,
"தொழாஅர்" என்றாயிற்று.
###யாப்பிலக்கணவழி, ஓசையை நீட்டற்குதவிய
'அ' என்ற எழுத்தை நீக்கிப்படித்தால், "தொழார்"
என்ற மிகவெளிய சொல்லாயமையும்.###
மாணவர்களைக்குழப்பத்திலாழ்த்தும் அளபெடைச்சொல்லாதலின் விரிவான இவ்விளக்கம்.
எனின்=என்றால்.
எனின்>செயின் எனும் வினையெச்சவிகுதி.
----------------------------------------------------------------------------------------------------
சிறப்புக்குறிப்பு :
குறட்பாக்களில் அமைந்துள்ள சொற்களின் பொருளையும், அவற்றிற்குரிய இலக்கணக்குறிப்புகளையும் ஐயமற அறிந்தாலன்றிக்குறட்பாக்களின் முழுக்கருத்தினையும் செம்மையாய் அறியவியலாதென்பதை அறிந்து குறள் கற்கவும்.
----------------------------------------------------------------------------------------------------
வேண்டல் :
எனவே நண்பர்களே, நாடோறும்
'உலகப்பொதுமறை'யாம் திருக்குறளைப்பயின்று,
நற்றமிழையும் இலக்கணத்தையும் நன்கறிவீர் !
சிறந்த தமிழறிஞராவீர் !
பரவுக பைந்தமிழ் ! ஓங்குக குறள்நெறி !
நன்றி.
(இவ்விடுகைபற்றிய உங்கள் கருத்துகளை ஆவலுடன் காணக்காத்திருக்கிறேன். பிழைகளைச் சுட்டி.காட்டுக.
பிழைகளை நீக்கிக்கொள்ளலாம். )
###########################################
29-11-2019.
திருக்குறட்புலம் பழைய நினைவாக உணர்கிறார்.
•••••••••••••••••••••••••நலந்தருசெந்தமிழ்••••••••25-11-2019°°
°°°°°°°°°°°குறள்வாணன் கண்ணாடிக்கலைஞர்°°°°°°°°°°°
( 29-06-2019 அன்று இட்ட பாடல்.)
வளம்நிறை மொழியெது? வளம்மிகும் தமிழறி.
வழங்கிடும் தமிழிலே வளத்துடன் இலக்கணம்.
வளத்துடன் இலக்கணம் வகுத்திடும் இலக்கியம்.
வகுத்திடு இலக்கியம் வளத்தினை உரைத்திடும்.
வளத்தினை உணர்த்திடும் வடிவுறு எழுத்துகள்.
வடிவுறு எழுத்துகள் வலுவுடன் அமைந்தவை.
வலுவுடன் அமைந்ததால் வழக்கினில் நிறைவலு.
வழக்கினில் நிறைவலு வடைமொழி தமிழ்மொழி.
அனைத்துமே சிறந்தது. அகத்தினில் நிறைவது.
அகத்தினில் நிறைந்தபின் அளவிலா மகிழ்ச்சியை
அளித்துமே நிறைப்பது உளத்தினை. நிறைத்தபின்
அளவிலா விருப்பினை அளிப்பது பயின்றிட.
பயின்றிடப் பயின்றிடப் பயன்மிக அளிப்பது.
பயன்மிக அளித்தபின் பெரும்புகழ் சேர்ப்பது.
பெரும்புகழ் சேர்த்தபின், பிறரினும் நமைநலப்
பெருக்கினால் பெருந்திறன் பெறச்செயும் தனித்தமிழ்.
தனித்தமிழ் தருவது தகையுறு தனிநிலை.
தகையுறு தனிநிலை தருவது மகிழ்ச்சியே.
தனியொரு மகிழ்வினைத் தருதலான், தமிழினைத்
தவறறப் படித்திடின் திறன்மிகத் தழைத்திடும்.
திறனது தழைத்திடின் தகவுடன் மிளிரலாம்.
தகவுடன் மிளிர்ந்திடின் திருவதும் மிகுந்திடும்.
திருவது மிகுந்திடின் திருமுகம் மலர்ந்திடும்.
திருமுகம் மலர்ந்திடின் திரண்டிடும் செழிப்பது.
தளர்விலாச் செழிப்பது தருதலோ பெரும்புகழ்.
தருநிறைப் பெரும்புகழ் திறனதைப் பெருக்கிடும்.
திறனதைப் பெருக்கிடின் தலைநிமிர் நிலையதாம்.
தலைநிமிர் நிலையது தருவது நிறைபுகழ்.
நிறைபுகழ் பெறுதலே நமக்குறு பெருங்கடன்.
பெருங்கடன் நிறைவுறின் நமக்குறும் நலநிறை.
நலநிறை பெருகிடின் நலமுறல் திகழ்தரும்.
நலமுறல் திகழ்ந்திடின் நிலைபெறல் மகிழ்ச்சியே.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
°°°°°°°°°°°°°வெல்க தமிழ். பரவுக குறள்நெறி.°°°°°°°°°°°°°°°
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திருக்குறட்புலம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறார்.
########எளிய திருக்குறள் உரை-1 (25-11-2019)#######
வழங்குபவர்:
குறள்வாணன் கண்ணாடிக்கலைஞர்.
---------------------------------------------------------------
குறள் எண் : 1. இறைவாழ்த்து.
மூலக்குறள்: (பழமையில் எழுதப்பட்டவாறுள்ளது)
"அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு".
‎-----------------------------------------
கொண்டுகூட்டு: (சொற்களைமாற்றிப்பொருள்காணல்)
எழுத்து எல்லாம், அகரம், முதல;
உலகு, ஆதிபகவன் முதற்றே.
-------------------------------------------------
எளிய பிரிப்பு:
எளியபிரிப்பு என்பது, புதிதாய்க்-
-குறள்கற்பவர்க்கும், மாணாக்கர்க்கும் ஆனதால், இப்பிரிப்பிலுறும் சொற்கள் இலக்கணத்துடன்
ஒன்றிடாது நிற்கும் என்பதையறிக.
இது குறட்பாக்களை எளிமையாய்ப்புரிந்து
கொள்வதற்கான பிரிப்புமட்டுமே என்பதைக்-
-கருத்தில் இருத்துக.
-‎--------------------------------------
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு". ‎----------------------------------------
‎சொல்லுரை:
‎எழுத்தெல்லாம்= (உலகிலுள்ள அனைத்து
‎மொழிகளிலுமுள்ள) எல்லா எழுத்துகளும்
‎அகர= 'அ' என்னும் எழுத்து
‎முதல> முதன்மையாகக்கொண்டுள்ளன
‎(அதுபோல)
‎உலகு= இவ்வுலகமானது
‎ஆதிபகவன்= ஆதியான முதல் இறைவனை
‎முதற்று= முதன்மையாக உடையது
-------------------------------------------------------------
கருத்துரை:
எழுத்துகள் எல்லாம் 'அ' என்னும் அகரத்தை
முதலாய்- முதலெழுத்தாய் உடையன. அதைப்போன்று, இவ்வுலகானது முதற்பகவனை- அஃதாவது, வாழ்வியலுக்கேற்ற நெறிமுறைகளைப்பகுத்து வழங்கியவனான முதல் அறிவனை, இறைவனை
முதன்மையாய்க்கொண்டு விளங்குகிறது.
-----------------------------------------------------------------------
இலக்கணக்குறிப்புகள்:
அகரம்> சாரியைபெற்ற எழுத்து = சாரியை-
-பெற்ற உயிர் முதலெழுத்து.
முதல> அஃறிணைப்பலவின்பால் படர்க்கைக்-
-குறிப்பு வினைமுற்று.
எழுத்து> செயப்பாட்டு வினைஆட்சி பொருட்பெயர்.
எல்லாம்> அனைத்தும், முழுவதும், எவையும்.
எல்லாம்> அஃறிணைப்பலவின்பாற்படர்க்கைப்-
-பொதுப்பெயர்.
****************************************************************
'ஆதி' என்ற சொல் தமிழ்ச்சொல்லே.
(இச்சொல் வடமொழியிலும் உள்ளதான் கருத்தில் குழப்பங்கொள்ளவேண்டா.)
'ஆதி: என்ற சொல்லை வள்ளுவப்பெருந்தகை அவர்கள், 'செங்கோன்மை' அதிகாரத்தில்' 543ஆம் குறட்பாவழி, தமிழ்ச்சொல்லே என்று நிலைப்படுத்துகிறார்கள்.
"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்" என்ற குறள்வழி
'ஆதி' என்ற சொல்,
முதன்மையாய்,
அடிப்படையாய்,
தொடக்கமாய் எனற பொருளிற்றான் அமைந்துள்ளது என்பதையறிந்து,
'ஆதி'யென்றசொல் தமிழ்ச்சொல்லேயென்று தெளிக.
இக்கருத்தை, 'மொழிஞாயிறு' தமிழறிஞர்
தேவநேயப்பாவாணர் அவர்களுமேற்று, தம் திருக்குறள் உரைநூலில் வலியுறுத்தியும் உள்ளார்கள்.
****************************************************************
பகவன்= இறைவன் = கடவுள்.
###வடசொல்: பகவான் (பக்வான்?)
பகவன்> உயர்திணை ஆண்பாற்படர்க்கைப்-
-பொருட்பெயர்.
முதற்று= முதலையுடையது.
முதற்று> அஃறிணை ஒன்றன்பாற்படர்க்கைக்-
-குறிப்பு வினைமுற்று.
உலகு= உலகம்.
உலகம்> இடப்பெயர் (பொது).
இக்குறட்பாவில் 'எடுத்துக்காட்டு உவமையணி'
அமைந்துள்ளது.
உவமை ஒரு சொற்றொடர் (வாக்கியம்) ஆகவும்,உவமேயம் மற்றொரு சொற்றொடராகவும், இடையே, 'அதுபோல' என்ற உவமவுருபு மறைந்துவருதலே 'எடுத்துக்காட்டு உவமையணி' ஆகும்
-----------------------------------------------------------------------------------------------------
குறட்பாக்களில் அமைந்துள்ள சொற்களின் பொருளையும், அதற்குரிய இலக்கணக்குறிப்புகளையும் அறிந்தாலன்றிக்- குறட்பாக்களின் முழுக்கருத்தினையும் செம்மையாய்
அறியவியலாதென்பதை அறிந்து குறள் கற்கவும்.
-----------------------------------------------------------------------------------------------------
எனவே நண்பர்களே, நாடோறும்
'உலகப்பொதுமறை'யாம் திருக்குறளைப்பயின்று,
நற்றமிழையும் இலக்கணத்தையும் நன்கறிவீர் !
பரவுக பைந்தமிழ் ! ஓங்குக குறள்நெறி !
நன்றி.
(இவ்விடுகைபற்றிய உங்கள் கருத்துகளை ஆவலுடன் காணக்காத்திருக்கிறேன். பிழைகளைச் சுட்டி.காட்டுக.)
----------------------------------------------------------------
(முன்பு இடுகையிட்டநாள் : 14-08-2017.)

20 நவம்பர் 2019

திருக்குறள்

                          திருக்குறள் மன்றம்-சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.

திருக்குறளின் பெருமையை இன்று முழுக்க கூறினாலும் போதாது, இருப்பினும் அதன் சிறப்பின் சிறிய பாகம் இதோ உங்கள் பார்வைக்கு.
தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள் அதை உலகப் பொதுமறை என்று அழைப்பதில் நாம் உவகை கொள்கிறோம். குறள் காலத்தால் அழியாதது என்றும் வியந்து பாராட்டுகிறோம். அதை வாழ்க்கை நெறி என்றும் கூறி மகிழ்கின்றோம்.
தமிழினத்தின் பழம்பெரும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பற்றி உலகம் வியக்கிறது என்றால் அதற்கு தமிழிலக்கியம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் தமிழகத்தின் மைலாப்பூர் வாழ் நெசவாளர் குலத்தோன்றலான திருவள்ளுவர் மானுடத்தின் தலைசிறந்த புலமைப் பெரியோர்களில் ஒருவராகக் கணிப்பிடப'படுகிறார். ஒட்டுமொத்த மனிதச் சிந்தனையின் சிறந்த பிழிவு என்று திருக்குறள் போற்றப்படுகிறது இருப்பினும் திருக்குறளின் அழியாப்புகழ் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் மாத்திரம் சொந்தம் என்றால் மிகையல்ல.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பாக ஆக்கம் பெற்ற திருக்குறள் தமிழினம் அப்போது அடைந்திருந்த அதிஉச்ச நாகரீக வளர்ச்சிக்கு உதாரணமாகத் திகழ்கிறது அப்படியானதொரு சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவரால்தான் திருக்குறள் போன்ற இலக்கியத்தை படைக்க முடியும். பொது மானுடத்திற்கும்பொருத்தமான முறையில் தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விதத்தில் குறட் பாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தனது காலத்திற்குரிய இலக்கிய மரபுகளை திருவள்ளுவர் மீறியுள்ளதை எம்மால் வியப்புடன் பார்க்க முடிகிறது எந்தவொரு இடத்திலாவது ஒரு இனத்தையோ சாதியையோ, மதத்தையோ மதப்பிரிவையோ, அரசையோ, ஆளும் வர்க்கத்தையோ அவர் குறிப்பிடாமல் அல்லது உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசாமல் விட்டுள்ளதை குறளின் மிகப்பெரிய சிறப்பம்சமாக கருதமுடியும். தமிழ் என்ற சொல்லைக்கூட குறள் நூலில் எங்காயினும் காணமுடியவில்லை. தலைமகன் இல்லாத நீதி நூல் என்றும் குறளை வகைப்படுத்தமுடியும்.
தமிழ்ப் பாரம்பரியத்தின்படி இலக்கியம் அதாவது ஒரு வாழ்க்கைத் தத்துவ நூல். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கி இருத்தல் வேண்டும். வள்ளுவர் வீடு பற்றிக்கூறாமல் விடுத்துள்ளார். அறம், பொருள், இன்பம் என்பன பற்றி கூறியவர், இந்த மூன்று கட்டங்களையும் தாண்டிச் செல்பவன் தானாகவே வீடு பேறு அடைவான்! என்று அவர் கூறாமல் விளங்கவைத்துள்ளார்.
தர்மத்தின் படி இல்லறம் நடத்தி, நீதி தவறாமல் பொருள் திரட்டி ,மனையாளோடு இன்பம் கண்டவன் முக்தி அடைவான் என்ற அர்த்தம் திருக்குறளில் தொக்கி நிற்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. திருக்குறளைத் துருவி ஆராயும் போது அதன் ஆசிரியர் மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர் என்ற உண்மை புலப்படும். மனித வாழ்வின் நான்கு படிநிலைகளான திருமணமாகாத காளைப்பருவம் இல்வாழ்வு ஒடுப்பம் துறவறம் என்பனவற்றில் திருவள்ளுவருக்கு ஏற்புடமை உண்டு என்பதை 41வது குறளில் இருந்து அறியலாம் கீதையின் அடிப்படைத்தத்துவமான கர்மயோகத்திற்கு நிகரான கருத்தை 371ஆம் குறளில் காணலாம்.
வெற்றி தோல்வி பாராமல் எடுத்த கருமத்தில் முழு ஈடுபாடும் முயற்சியும்காட்டும் பணிச் சிறப்பை இந்தக் குறள் வலியுறுத்துகிறது. 618ஆம் இலக்கக் குறளிலும் இதே கருத்து வலியுறுத்தப்படுகிறது. இல்லறம் நடத்துபவன் உலக விவகாரங்களில் முழுஈடுபாடு காட்ட வேண்டும் ஒதுக்கக் கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார்.
அதே சமயத்தில் ஒரு இல்லறத்தான் வீண் விரயம் செய்யாமல் ஆடம்பரமற்று வாழ வேண்டும் என்றும் அவர் எடுத்துரைக்கிறார். இல்வாழ்வு நல்லறமாக அமைய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தக் கருத்துக்களை 48, 225ஆம் குறள்களில் காணலாம். பொருள் மனிதனுக்கு அடிமையாவதில்லை. மனிதன்தான் பொருளுக்கு அடிமையாகிறான் என்ற கருத்தையும் திருக்குறளில் இருந்து திரட்டிக்கொள்ளலாம்.
ஓவ்வொரு அத்தியாயத்திலும் பத்துக்குறள் பாக்களைக் கொண்ட 133 அத்தியாயங்கள் குறள் நூலில் காணப்படுகின்றன மொத்தம் 2,660 வரிகளைக் கொண்ட 1330குறள் பாக்கள் இருப்பது கண்கூடு. பெரும்பாலான குறள் பாக்களின் முதல் வரிகளில் ஏழு சொற்கள் இருப்பதால் அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்திய குறள் என்று அவ்வையார் அதைப் புகழ்ந்துள்ளார்.
திருக்குறளின் முதலாம் பாகம் இல்லறம் தொட்டு துறவறம் பற்றிய சிறப்பைக் கூறுகிறது. முதலாம் பாகத்தில் 38 அத்தியாயங்கள் இருக்கின்றன. அரச நெறி இராசதந்திரம் போர்த்தந்திரம் உள்ளடங்கலான உலக விவகாரங்கள் பற்றிக் குறளின் இரண்டாம் பாகம் கூறுகிறது. இதில் 70 அத்தியாயங்கள் உள்ளன குறளின் மூன்றாம் பாகத்தில் ஆண் பெண் இல்லற உறவுகள் பற்றிக் கூறும் 25 அத்தியாயங்கள் காணப்படுகின்றன. மேற்கூறிய இரண்டாம் பாகக் குறள் பாக்கள் அரசர்களுக்கும் படைத்துறையினருக்கும் மாத்திரம் உரியதன்று. உலகியல் வாழ்வில் ஈடுபடும் பொதுமக்கள் உள்ளடங்கலான அனைவருக்கும் பொருத்தமான கருத்துக்கள் அவற்றில் செறிந்துள்ளன ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரும் வரலாற்று ஆசிரியர்களும் இரண்டாம் பாகக் குறட்பாக்களை இன்றும் துருவி ஆராய்ந்து வருகின்றனர்.
இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த குறள் நூலின் உண்மையான பெயரும் அதன் ஆசிரியர் திருவள்ளுவரின் உண்மையான பெயரும் இன்று வரை தெரியவரவில்லை. குறள் என்பது காரணப்பெயர் சிறியது, சுருக்கமானது, குறுகலானது என்பது குறள் என்ற சொல்லின் பொருள் .அதேபோல் வள்ளுவர் என்பதும் குலப்பெயர் என்று ஆய்வாளர்கள் கூறுவர். வள்ளுவரின் இயற்பெயர் என்னவென்பது அறியப்படாததாக இருக்கிறது குறளைவிட வேறு நூல் அல்லது நூல்களை வள்ளுவர் படைக்கவில்லை என்பது ஆய்வாளர் முடிவு.
தமிழிலக்கியப் பரப்பில் மிகக் கூடுதலான பிறமொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரே ஒரு நூல் என்ற சிறப்பு திருக்குறளுக்கு உண்டு. அதை ஆங்கில மொழிக்கு மாற்றிய ஜீ யூ போப் என்ற தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஆங்கிலேயர் தனது குறள் மொழிபெயர்ப்பு நூலுக்குச் செய்த முகவுரையில் பின்வருமாறு கூறுகிறார். குறள் ஒரு தனித்துவமான நூல் அதை வடமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றப்பட்ட நூல் என்று கூறுவது மிகப் பெருந்தவறு குறள் தூயதமிழில் ஆக்கப்பட்டுள்ளது. அதில் வடமொழிக் கலப்பு சிறிதளவும் இல்லை தமிழறிஞர் போய் தனது மொழிப் பெயர்ப்பை ஆங்கில கவிதை நடையில் பாய்த்துள்ளார் பின்பு வந்த பல அறிஞர்கள் ஆங்கில மொழிக்குத் திருக்குறளை மாற்றியுள்ளனர்.
எமது காலத்தில் வாழும் கஸ்தூரி ஶ்ரீனிவாசன் தவிர்த்த பிறிதொருவராவது குறளை ஆங்கில கவிதை நடையில் மொழியாக்கம் செய்யவில்லை ஜீ.யூ.போப் அவர்கள் திருக்குறளின் மூன்றாம் பாகமான காமத்துப்பாலை மொழியாக்கம் செய்யாமல் விடுத்துள்ளார் கஸ்தூரி ஶ்ரீனிவாசன் மூன்று பாகங்களையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலச்சாரியார் குறளின் முதலாம் இரண்டாம் பாகங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பல குறட்பாக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக்கியுள்ளார். இந்த ஆக்கம் வித்தியாசமானது தத்துவ விளக்கங்கள் பிற இலக்கிய ஒப்பீடுகள் போன்றவற்றையும் குறள் ஒவ்வொன்றின் மொழிப் பெயர்ப்போடு ராஜாஜி இணைத்துள்ளார்.
மிக நீளமானதொரு முகவரையைப் போப் ஜயர் என்று மரியாதைகாரணமாக அழைக்கப்படும் ஜீ. யூ. போப் தனது குறள் மொழிபெயர்ப்புக்கு எழுதியுள்ளார் தமிழை வளப்படுத்திய பிற நாட்டு அறிஞர்களுள் வீரமா முனிவர் என்று தமிழிலும் தைரியநாத சுவாமி என்று வடமொழியிலும் இஸ்மதிசந்யாசி என்று உருதுவிலும் அழைக்கப்படும் கிறிஸ்தவ அருட்தந்தை கான்ஸ்ட்ரன்டைன் ஜோசப் பெஸ்சி என்பார்தான் முதன்மையானவர் என்று போப் குறிப்பிட்டுள்ளார். பெஸ்சி அவர்கள் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும் தமிழ் அகராதிகளையும் எழுதியதோடு தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும் மேற்கொண்டார். திருக்குறளை இலத்தீன் மொழிக்கு மாற்றிய சிறப்பு பெஸ்கிக்கு உண்டு.
இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டாலும் அதில் மாற்றங்களோ இடைச்செருகல்களோ அகற்றுதல்களோ செய்யப்படாமல் அன்று போல் இன்றும் இருக்கும் சிறப்புக் குறளுடையதாகும். திருக்குறளுக்குப் பரிலேழகர் செய்த உரைநூலில் குறளில் வரும் அச்சம் என்ற சொல்லிற்கு மக்கள் என்று பொருள் கூறியுள்ளார். தமிழ் ஆர்வலரான எலிஸ் என்ற ஆங்கிலேயர் அச்சம் என்ற சொல்லை அகற்றிவிட்டுக் குறளில் மக்கள் என்று திருத்தம் செய்யலாமே என்று கூறியதோடு அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். மூல நூல்களில் திருத்தம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் எலிஸ் அவர்களின் முயற்சிக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் அதைக் கைவிட நேர்ந்தது.
தமிழ் எழுத்துக்கள் தொடர்பான ஆய்வாளர்கள் திருக்குறளில் இன்று உயிர் எழுத்தாக கருதப்படும் (ஒள) இல்லையென்பதையும் குறளாசிரியர் (அவ்) என்ற உயிர்மெய் எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரிச்சுவடியில் (ஒய) (ஐ) என்பன திருவள்ளுவருக்குப் பிந்திய காலத்தில் உயிர் எழுத்துக்களாக இணைக்கப்பட்டுள்ளன இரண்டையும் அகற்றவேண்டும் என்ற இயக்கம் வலுப்பெற்று வரும் நிலையில் திருக்குறளில் உள்ள ஆதாரம் அதற்கு உரமூட்டுவதாக அமைகிறது.
திருக்குறள் மொழிபெயர்ப்பை விட நாலடியார் 51 மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்களையும் ஜி. யூ. போப் ஆங்கிலத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். நாலடியார் நூல் நாலடி நானூறு என்றும் அழைக்கப்படுவதுண்டு. நாலடி வெண்பாக்கள் நானூறைக் கொண்ட நூல் என்பது பொருள். தமிழ் நீதி நூல்களைப் பொறுத்தளவில் குறளுக்கு அடுத்த இடத்தில் நாலடியார் இருக்கிறது.
இனிமையும் கருத்தாழமும் இருந்தாலும் குறளின் சொற்களால் சுரங்கக்கூறி நயமாய் உரைக்கும் சிறப்பை நாலடியாரில் காணமுடியவில்லை. குறளின் தனித்துவம் சொற் சிக்கனம் ஒவ்வொரு குறளிலும் வேறுபட்ட கருத்துக்களைத் தூயதமிழில் கூறும் திறமை என்பன வற்றில் பெருமளவில் தங்கியுள்ளது. திருக்குறளைத் தன்னகத்தே மொழியாக்க வடிவில் கொண்டிராத உலக மொழியொன்றும் இல்லை என்று துணிந்து கூறலாம்.மிகக் கூடுதலான மொழிபெயர்ப்புக்கள் ஆங்கில மொழியில் காணப்படுகின்றன தமிழர்களில் மிகச் சிறந்ததொரு ஆங்கில மொழி பெயர்ப்பைச் செய்த புகழ் வ.வே. சு ஜயர் எனப்படும்வரகனேரி வேங்கட சுப்பிரமணியம் என்பாருக்கு உண்டு தமிழ் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர் என்று வ.சு.வே ஐயர் சிறப்பிக்கப்படுகிறார்கள்.
தமிழ் மொழி ஆராய்ச்சி படைப்பிலக்கியம் கம்பராமாயண ஆய்வு மொழி பெயர்ப்புத்துறை பத்திரிக்கை துறை என்ற பல திசைகளில் அவர் ஆர்வம் காட்டினார் சங்க இலக்கியப் புலமையுடன் திருக்குறள் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கினார். தனது கட்டுரைகள் பலவற்றில் திருக்குறள் பாக்களை மேற்கோள்காட்டியும் விரிவாக விளக்கியும் உள்ளார்.
ஆங்கிலம் பிரெஞ்சு ஜேர்மன் இலத்தீன் தமிழ் மொழிகளில் 1820-1886காலப்பகுதிகளில் வெளிவந்த மொழிபெயர்ப்புக்களை ஆய்வு செய்த பின் தனது திருக்கறள் ஆங்கில மொழி பெயர்ப்பை 1914இல் வெளியிட்டார்.
இந்த நூலுக்கு மிக நீண்ட அரிய ஆய்வுரையை அவர் எழுதினார் திருக்குறள் ஆராய்ச்சிக்கு இந்த ஆய்வுரை அடித்தளமாக அமைகிறது. தமிழனத்தின் நாகரீக வளர்ச்சியின் உயர்வை கூறுவதோடு தமிழ் மொழியின் அன்றைய உன்னத நிலையையும் திருக்குறள் கூறி நிற்கிறது. வட மொழியின் தாக்கத்தால் உயர்ந்த தமிழ் மொழி என்ற பொய்யுரையை மறுக்கும் சான்றாதாரமாகத் திருக்குறள் விளங்குகிறது. சொல் வளமிக்க தனித்தியங்கும் திறன்மிக்க திராவிட மொழிக் குடும்பத்தின் தாயகத் தமிழ் விளங்குகிறது.
தமிழ் எல்லாவகையிலும் வட மொழிக்கு நிகரானது அல்லது உயர்வானது என்று போப் ஐயர் கூறியதை ஒவ்வொரு தமிழனும் தனது சிந்தையில் பதிவு செய்து வைத்திருக்கவேண்டும் இதற்குத் திருக்குறள் துணைநிற்கும்.
நன்றி - ஆய்வாளர் க. வீமன்

நூலக வாரவிழா-2019









சத்தியமங்கலம் கிளை நூலகத்தில் 52வது தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது.
தலைமை
திரு.யுவராஜ் அவர்கள்,முதல்நிலை நூலகர் கோபி 1நூலகம்.
வரவேற்புரை;
திருமதி.ஆ.சாந்தி அவர்கள்,நூலகர்,சத்தியமங்கலம் கிளை நூலகம்.
முன்னிலை;
திரு.வீ. சுந்தரராசு அவர்கள்,தமிழர் பண்பாட்டுக் கழகம்
 திரு.ந.யாழினி ஆறுமுகம் அவர்கள்,விதைகள் வாசகர் வட்டம்,
திரு.அரிமா.கு.லோகநாதன் அவர்கள்,
பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
  திரு.ரீடு கருப்புசாமி அவர்கள்,
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்.
திரு.சுடர் நடராஜன் அவர்கள்,
சுடர் தொண்டு நிறுவனம்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,நம்ம ஊர் நூலகம் தலைப்பிலான பேச்சுப்போட்டி,சதுரங்கப் போட்டிகளில் வென்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகளும்,பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவியர்களுக்கும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
எழுத்தாளர்,தமிழறிஞர்.முத்துரத்தினம் அவர்கள்,கவிஞர்,பழ.ஈஸ்வரமூர்த்தி அவர்கள்,கனவு ஆசிரியர்.து.செந்தில்குமார் அவர்கள்,மூத்த வாசகர்,திரு.ரங்கசாமி அவர்கள்,உட்பட கல்வி ஆர்வலர்களும்,வாசகர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
நன்றியுரை;திரு.ஜனார்த்தனன் அவர்கள்,நூலகர்,புஞ்சைப் புளியம்பட்டி கிளை நூலகம் அவர்கள்.
நிகழ்ச்சிஏற்பாடு மற்றும் தொகுப்பு;திரு.செ.பரமேஸ்வரன் அவர்கள்.

16 நவம்பர் 2019

நூலக வாரவிழா-சத்தியமங்கலம் கிளை நூலகம்.

                                                    நிகழ்ச்சி நிரல்


இடம்; கிளை நூலகம்,சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.
நாள்;17-11-2019ஞாயிறு
நேரம்;காலை 11மணி.

---------------------------------
தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை;திரு.யுவராஜ் அவர்கள்,முதல்நிலை நூலகர்,
கோபி 1 நூலகம்.
வரவேற்புரை;திருமதி.ஆ.சாந்தி அவர்கள்,நூலகர்,
கிளை நூலகம்,சத்தியமங்கலம்.
முன்னிலை;
திரு.வீ.சுந்தரராசு அவர்கள்,
தமிழர் பண்பாட்டுக் கழகம்,
திரு.ந.யாழினி ஆறுமுகம் அவர்கள்,தலைவர்,
விதைகள் வாசகர் வட்டம்,
திரு.அரிமா.கு.லோகநாதன் அவர்கள்,தலைவர்,
பெற்றோர் ஆசிரியர் கழகம்,நகராட்சிப் பள்ளி,
திரு.சுடர்.நடராஜ் அவர்கள்,
நிறுவனர்,
சுடர் தொண்டு நிறுவனம்,
திரு.ரீடு கருப்புசாமி அவர்கள்,
இயக்குநர்,
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்,
திரு.லேனாசங்கர் அவர்கள்,
நிலைய மேலாளர்,(90.4MHZ)
பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி நிலையம்,
சிறப்பு அழைப்பாளர்கள்
1.திரு.வெங்கட்ராஜ் மாஸ்டர் அவர்கள்,
தாளவாடி சமூக சேவை மையம்,மற்றும்
 உதவி தொடக்க கல்வி அலுவலர் (பணி நிறைவு)தாளவாடி.
2.மாணவி.B.லக்‌ஷணா,ஏழாம் வகுப்பு,
மாமகரிஷி ஈஸ்ராய குருகுலம் மெட்ரிக் மேனிலைப் பள்ளி,
தபோவனம்,
தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற
 மாணவ,மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்வு
வாழ்த்துரை;
(1)எழுத்தாளர்.தமிழறிஞர்.முத்துரத்தினம் அவர்கள்,
(2)கவிஞர்.பழ.ஈஸ்வரமூர்த்தி அவர்கள்,
(3)திரு.நாகராசன் அவர்கள்,ஆசிரியர்,அரசு மேனிலைப் பள்ளி,கடம்பூர்.
(4)திரு.து.செந்தில்குமார் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்,அரசுப் பள்ளி,நஞ்சப்பகவுண்டன் புதூர்.
(5)ஏ.ஜே.அப்துல் ஜப்பார் அவர்கள்,
சிந்தனையாளர்,
(6)நூலக வாசகர்கள்
மற்றும்
மாணவ,மாணவியரும்,இருபால் ஆசிரியர்களும்.
நன்றியுரை;திரு.K.ஜனார்த்தனன்,நூலகர்,
கிளைநூலகம்,புஞ்சைப் புளியம்பட்டி
 தேசிய கீதம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு; C.பரமேஸ்வரன்,
செயலாளர்,விதைகள் வாசகர் வட்டம்.
தொடர்புக்கு;9585600733

15 நவம்பர் 2019

நூலக வாரவிழா-2019 சத்தியமங்கலம் கிளை

                                      தொட்டனைத்தூறும் மணற்கேணி
                                         மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு.- 393
       அவைசார்ந்த மேன்மக்களே,மாணவ,மாணவியரே,வாசகப்பெருமக்களே,
  17-11-2019 ஞாயிறு இன்று சத்தியமங்கலம் கிளை நூலகத்தில் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
               நமது மொழிவளத்தைப் பெருக்கவும்,வாசிப்பை சரளமாக்கவும் ,வாசிப்பினால் உருவாகும் நற்சிந்தனைகளும்,பொது அறிவுப் பெருக்கமும் நம்மை சராசரியான நிலையிலிருந்து உயர்த்தி மேம்பட்டநிலைக்கு கொண்டு செல்லும்.
   அவ்வாறான வாசிப்பிற்கு ஏற்ற இடம் நம்ம சத்தியமங்கலம் நூலகம்தாங்க.அதாவது மனித சமூகத்தை பண்படுத்துவது நூலகம்தாங்க.
நம்ம சத்தியமங்கலம் கிளைநூலகத்தில்,கலை,இலக்கியம்,அறிவியல்,மருத்துவம்,கணிதம்,வரலாறு,வாழ்வியல்,பொருளியல்,அரசியல்,கணிதம்,பொறியியல்,தத்துவம்,தொழில்நுட்பம்,நிலநூல்,நீதிபோதனை,சுற்றுச்சூழல்,பொதுஅறிவு,கதை,கவிதை,நாடகம்,சட்டம்,வாணிபம்,வேளாண்மை,பயன்படுகலைகள் என ஏராளமான தலைப்புகளில் பல்துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் பழையதும்,புதியதுமாக வாசிப்புக்காக ,வகைவகையாக ,துறைவாரியாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.தவிர அன்றாடம் உலக நடப்புகளை அறிந்துகொள்ள செய்தித்தாட்கள்,நாளிதழ்,வார இதழ்,மாத இதழ்,பருவ இதழ்,வேலைவாய்ப்புச் செய்திகள் என வாங்கி வாசகர் பயன்பாட்டிற்காக வைக்கப்படுகின்றன.

                             மாணவர்களை அறிஞர்களாக்குவதில் பள்ளி,கல்லூரி போன்ற வகுப்பறைகளுக்கு இணையானது நூலகமாகும்.
பள்ளி என்பது பாடநூல்களைக்கொண்டு அறிவை விதைக்கும் இடம் என்றால் நூலகமானது அறிவை வளர்த்து செழுமையாக்குவதாகும்.ஒரு மாணவர் பாடப்புத்தகங்களோடு நூலகத்திலுள்ள பொது அறிவுநூல்களை வாசிக்குமளவு  பலதுறை சார்ந்த அறிவினைப் பெறுவர்.அவ்வாறான அறிவுசார்ந்த நூல்கள்  மாணவர்களின் வயதிற்கும்,மனநிலைக்கும் ஏற்றவாறு நம்ம நூலகத்தில் ஏராளமாக உள்ளன.
 இதையே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ,
        ''புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
               புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்''
  என வலியுறுத்தினார்.

    எனவே  இந்திய நூலகச் சங்கமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில்  நூலக வாரவிழாவினை  நடத்தி அறிஞர்களும்,சிந்தனையாளர்களும் வாழுமிடமான நூலகத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்கான போதிய விழிப்புணர்வினை தருகின்றது.நாமும் தேசிய நூலக வாரவிழாவினை முன்னிட்டு நமது சத்தியமங்கலம் நூலகத்தின் அவசியத்தை சத்தியமங்கலம் சுற்றுவட்டார மக்களிடையே பரப்புவோம்.பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே பரப்புவோம்.நூலக வாரவிழாவினால் நூலகர்-வாசகர் உறவு மேம்படுகிறது.புதிய,புதிய வாசகர்களை நூலகம் வரவழைக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது.புதிய உறுப்பினர்கள்  சேர்க்கை கூடுகின்ற வாய்ப்பு ஏற்படுகிறது.
    ஆக நாம் அனைவரும்  நூலக வாரவிழாவில் பங்கேற்று நமது அறிவைப்பெருக்கி,எண்ணங்கள் நேர்பட்டு,உயர்சிந்தனைகள் உருவாகி,திறமையும் ஆற்றலும் பெருக்கி,தன்னம்பிக்கை வளர்க்கும்,நூலகத்தின் மகத்துவத்தை மக்களிடையே பரப்புவதோடு
நாளெல்லாம் நூலகத்தைப் பயன்படுத்துவோம்,
பொழுதெல்லாம் புத்தகசாலையைப் போற்றுவோம்.
 என உரையாற்ற வாய்ப்பளித்த அவையோருக்கு நன்றிபாராட்டி நிறைவு செய்கிறேன்.
என
செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடிகிளை.
ஈரோடு மண்டலம்.

14 நவம்பர் 2019

அனைவரும் விளையாடலாம் சதுரங்கம்.(CHESS)

 செஸ் என்னும் சதுரங்கம் விளையாட ஆர்வமா?
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். மாணவர்களுக்காக இலவசமாகப் பயிற்சியளித்த அனுபவத்தினை சாமானியனும் வாசித்து விளையாடுவதற்காக  எளிய தமிழில் குறைந்த விலையில் ,'அனைவரும் விளையாடலாம் சதுரங்கம்'என்ற பெயரில் சிறிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன்.சதுரங்க விளையாடுவது கடினமே இல்லைங்க. புரிதல் மட்டுமே அவசியம்.வயது வித்தியாசமின்றி எண்பது வயது முதியவர் வரை எளிதில் கற்கலாம்.ஆதரவற்றோர் இல்லங்கள்,முதியோர் இல்லங்கள்,சமூக நல அமைப்புகள்,அரசுப்பள்ளிகள், என ஆர்வமுள்ள அனைவரும் இலவசமாகப் பயிற்சிபெற என்னைத் தொடர்புகொள்ளுங்க.9585600733









 அனைவரும் விளையாடலாம் சதுரங்கம் -
புத்தகம் தேவைப்படுவோர்
தொடர்புகொள்ள வேண்டிய எண் 9585600733





ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...