18 ஜூலை 2015

செட்டிநாடு சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம்.செட்டிநாடு என்பது தனிநாடு இல்லைங்க! இதோ தங்களின் சிந்தனைக்காக.............


செட்டிநாடு!  இது ஏதோ ஒரு தனி நாடு அல்ல. தமிழ்நாட்டுக்கு உள்ளே தனிப்புகழ் பெற்ற நாடு. தமிழகத்தின் பாரம்பரியக் கட்டடக் கலையைப் பாருக்குப் பறைசாற்றும் நாடு. சர்வதேச கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழுகிறது இந்த செட்டி நாடு.  நூறாண்டுகளை கடந்த செட்டிநாடு புராதன பங்களாக்கள் யுனெஸ்கோ மேப்பில் இடம்பிடித்துள்ளன. தமிழ் நாட்டின் தென் பகுதியில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரைக்குடியை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சில ஊர்கள் சேர்ந்த பகுதியைச் "செட்டிநாடு" என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாகக் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் சேர்ந்து "செட்டிநாடு" என்று குறிக்கப்படுகிறது. 



             இந்த ஊர்களில் காரைக்குடி, தேவகோட்டை பெரிய ஊர்கள். மேலும்,  கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி போன்ற ஊர்களும் உள்ளன.  நகரத்தார் சமூகத்தினர் வசிக்கும் இந்தப் பகுதியை, நாட்டுக்கோட்டை என்றும் அழைப்பது உண்டு.
                     ஆயிரம் ஜன்னல் வீடு செட்டிநாட்டில் மிகவும் பிரபலம்.  செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை கட்டப்பெற்றதாகும்.  எல்லா வீடுகளுமே 80அடி முதல் 120 அடிவரை அகலமும்,160 அடி முதல் 240 அடிவரை நீளமும் கொண்டவையாக இருக்கும்.  வீடுகள் எல்லாம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்குமரங்களால் இழைத்துக் கட்டப்பெற்றவையாகும்.


                          ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது.  இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம். இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்.

              பராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள் அனேகம். அவற்றில் இருந்த மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில் உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.

                       செட்டிநாடு வீடுகள் அனைத்துமே, தரை மட்டத்தில் இருந்து, ஐந்து அடிகளுக்கும் மேலான உயரத்திலேயே கட்டப்பட்டு இருக்கின்றன. செட்டி நாட்டு வீடுகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை வெள்ளை அடிக்கப்படுவதில்லை. 

                  அந்த அளவுக்கு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது.  சர்வதேச கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பினர். சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். இவை தான் பங்களா சுவற்றில் பளபளப்பையும், உறுதியையும் ஏற்படுத்தியுள்ளன. சிறிய பங்களா 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், அரண்மனை போன்ற பங்களா 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப் பட்டுள்ளது. மின்விசிறி இல்லாமலேயே இதமாக இருக்கும்.

                   பங்களா மேற்கூரையில் பொருத்தியுள்ள லண்டன் ஓடுகள் மூலம் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரையமாக்காமல் ஆள்உயர அண்டாவில் சேகரித்து மழை நீர் சேகரிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துள்ளனர் நகரத்தார்.

                     செட்டிநாட்டு வீடுகளின் பிரதான மரக் கதவுகள் மிகப் பெரிய நிலைகளைக் கொண்டவை. இரட்டைக் கதவுகள் அமைக்கப் பட்டிருக்கும். கதவுகளிலும், நிலைகளின் இரு பக்கங்களிலும் நேர்த்தியான சிற்பங்கள் செதுக்கப் பட்டிருக்கும் அவை பெரும்பாலும் முப்பரிமாணத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

      
                            இக்கதவுகளிலுள்ள சிற்பங்கள் பெரும்பாலும் கிளி முதலிய பறவைகள், மிருகங்கள்,     செடிகொடிகள், தாமரை, கடவுள்கள்,     கஜலட்சுமி, இலட்சுமி, ரதிமன்மதன் போன்றவைகளாகும். பதினாறு - பதினேழாம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்ப அமைப்புகளே செட்டி நாட்டு நகரத்தாருக்கும் கலைஞர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தன. இம்மரபைப் பின்பற்றியே செட்டியார்கள் தாம் கட்டிய மற்றும் புதுப்பித்த கோயில்களில் சிற்பங்கள் அமைத்துள்ளனர்.
 
                        செட்டி நாட்டுக் கதவுகளில் அவர்கள் வணங்கிய தெய்வங்களின் உருவங்களே அதிகம் காணப் படுகின்றன. அனைத்துக் கதவுகளிலும் இலட்சுமி பிரதான இடத்தைப் பெற்றுள்ளாள். இவ்வுரு பெரும்பாலும் கஜலட்சுமியாக, அதாவது நடுவில் தேவி அமர்ந்து கொண்டிருப்பது போலவும், அவளுக்கு இரண்டு பக்கமும் யானைகள் நின்று கொண்டு அத்தேவிக்கு நீர்கொண்டு அபிடேகம் செய்வது போலவும் அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அடுத்த முக்கியமான கதவுச் சிற்பம் சிவனும் பார்வதியும் நந்தியின் மீது அமர்ந்துள்ள இடப வாகன மூர்த்தியின் சிற்பமாகும்.
 


               இது அவர்களது திருமண     வாழ்வையும்,     குடும்பத்தின் மகிழ்ச்சியையும் குறி்ப்பதாகும். செட்டியார்களின் தாலிகளில் கூட இவ்வுருவம் பொறிக்கப் படுவது வழக்கமாகும். இராமர், சீதை பட்டாபிடேகக் காட்சியும் கதவுச் சிற்பமாகக் காணப்படுகிறது. கணபதி, கருடன் மீது அமர்ந்துள்ள விஷ்ணு, முருகன் ஆகியோரின் உருவங்களும் கதவுகளில் வைக்கப் பட்டுள்ளன.

 வழித்தடம் :

                           புதுக்கோட்டை, சிவகங்கை இரு மாவட்டங்களுக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பஸ் மற்றும் ரயில் வசதி உண்டு.  கானாடுகாத்தான் ஊரில் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன.  புதுக்கோட்டை பொன்னமராவதியிலும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும், கானாடுகாத்தானிலும் அதிகமான பங்களாக்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...