14 டிசம்பர் 2011

பொருளாதாரம்

                         பொருளாதாரம்

                     விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியில் இந்தியா, தனியார் தொழில் முயற்சிகளிலும், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற துறைகளிலும் இறுக்கமான அரசுக் கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு சோசலிசம் சார்ந்த அணுகு முறையையே கடைப்பிடித்து வந்தது. ஆயினும், 1991 ஆம் ஆண்டு முதல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் படிப்படியாக அதன் சந்தைகளைத் திறந்துவிட்டதோடு, வெளிநாட்டு வணிகம், முதலீடு என்பவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வந்தது. மத்திய, மாநில அரசிகளின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை குறைந்துள்ளதோடு, 1991 மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கம், 2008 ஜூலையில் 308 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தலும், சில துறைகளைத் தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்புக்காகத் திறந்து விடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்தியப் பொருளாதாரம் மரபுவழி வேளாண்மை, தற்கால வேளாண்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, பல தரப்பட்ட புதிய தொழில்கள் மற்றும் மென்பொருள் உட்பட்ட பல துணைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள் சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர்.


இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 டிரில்லியன் டாலர்கள் அளவை எட்டியுள்ளது. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் வேளாண்மை அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் சேவைத்தொழில்கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் தொழில்துறைகளிலும் பணிபுரிகின்றனர். இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் அரிசி, எண்ணெய்விதை, பருத்தி, சணல், தேயிலை, கரும்பு, உருளைக்கிழங்கு என்பனவாகும். வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஐ வழங்குகிறது. சேவைத்துறையும், தொழில்துறையும் முறையே 54%, 18% பங்களிப்பைச் செய்கின்றன. முக்கியமான தொழில்துறைகளில், தானுந்து, சிமெந்து, வேதிப்பொருட்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள், உணவு பதனிடல், இயந்திரங்கள், சுரங்கத்தொழில், பெட்ரோலியம், மருந்துவகை, உருக்கு, போக்குவரத்துச் சாதனங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. விரைவாக வளரும் பொருளாதாரத்துடன் கூடவே, ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகின்றது. ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் (Energy Information Administration) கணக்கீட்டின் படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...