16 டிசம்பர் 2019

செஸ் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் 64

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். 
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
சத்தியமங்கலத்தில் மாணவர்கள் சதுரங்க மன்றம் தொடங்கி இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறோம்.
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர்கள் இன்றுவரை 64எண்ணிக்கையாக உயர்ந்துள்ளனர்.இவர்களில் பெண்கள் இருவர் மட்டுமே! இரண்டு பெண்களும் ஆந்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 
ஒருவர்.7வது கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹும்பி., 
இன்னொருவர் 25வது கிராண்ட் மாஸ்டரான ஹரிகா., 
 தமிழ்நாட்டில் மட்டும் 23 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குவது நமக்கெல்லாம் பெருமை!


தமிழ்நாடு-01



தமிழ்நாடு-02


தமிழ்நாடு-03
தமிழ்நாடு-04
தமிழ்நாடு-05

தமிழ்நாடு-06

தமிழ்நாடு-07

தமிழ்நாடு-08


தமிழ்நாடு-09

தமிழ்நாடு-10



தமிழ்நாடு-11



தமிழ்நாடு-12


தமிழ்நாடு-13




தமிழ்நாடு-14

தமிழ்நாடு-15

தமிழ்நாடு-16






தமிழ்நாடு-17


தமிழ்நாடு-18





தமிழ்நாடு-19





தமிழ்நாடு-20


தமிழ்நாடு-21

தமிழ்நாடு-22

தமிழ்நாடு-23 
ஈரோடு மாவட்டம்.






























நன்றி our thanks to ; chessbase india.com


 என அன்புடன் பரமேஸ்வரன் டிரைவர்,9585600733

30 நவம்பர் 2019

துணி துவைக்க இயற்கை திரவம்-பூந்திக்கொட்டை














பூந்திகொட்டை "..
நகைபட்டறையில் தங்க நகைகளை சுத்தம் செய்ய இந்த பூந்திகொட்டையைத்தான் பயன்படுத்துகின்றனர்..
#செய்முறை..
இந்த பூந்திகொட்டை நாட்டு மருந்து கடைகளிலில் கிலோ 80 ரூபாய்க்கு முதல் கிடைக்கிறது.
அதை வெயிலில் நன்கு காய வைத்து,
உரலில் இடித்து,
பிறகு மிக்சியில் அரைத்து,
ஒரு லிட்டர் தண்ணீரில் ஐம்பது கிராம் பூந்திகொட்டை தூளை சில்வர் பாத்திரத்தில் கலக்கி ஒரு வாரம் வெயிலில் காய வையுங்கள்..
(இதற்கு மழை நீரை நான் பயன்படுத்துகிறேன்.
நீங்கள் எந்த நீரை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள்..)
அதன் பிறகு பாட்டிலில் ஊற்றி
நன்கு குலுக்கி துணிதுவைக்கும் இயந்திரத்தில் வடிகட்டி இருநூற்று ஐம்பது மில்லி வீதம் ஊற்றுங்கள்.. (இருபதுநாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்..)
இயந்திரம் தண்ணீர் எடுத்தபிறகு பத்து நிமிடம் நிறுத்தி வையுங்கள்.
இப்படி செய்யும் போது துணி நன்கு ஊறிவிடும்.
அதன் பின் இயந்திரத்தை ஓடவிடுங்கள்..
பிறகு வெண்மையை பாருங்கள் இயற்கை நறுமணத்துடன்..
இதே முறையை கையில் துவைப்பவர்களும் பயன்படுத்தலாம்..
நேரம் செலவாகுதுனு எல்லாம் பார்க்காதீங்க..
தொலைகாட்சி பெட்டியில் காசுக்காக ஆடற ஆட்டக்காரிகள் சொல்றதைக் கேட்டு நாமும்
நச்சுக்களை எல்லாம் பயன்டுத்தி இப்போ இயற்கையை அழித்து மருத்துவமனைக்கு படை எடுத்துட்டு லட்சம் லட்சமா கப்பம் கட்டீட்டு இருக்கோம்..
இதை நான் #விற்பனைக்குக்கு தயார் செய்யல..
உங்களுக்கு பயன்படுமேனுதான் பகிர்ந்திருக்கேன்..
நீங்களே தயாரிச்சு சுயசார்போட வாழத்தான் இந்த வழியை சொல்கிறேன்..
நதிகளை இணைக்கிறது,
அண்டை மாநிலத்தாத்துகாரர்களிடம் தண்ணீருக்காக கையேந்துவது,
இதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்..
இப்போ ஓடுகிற தண்ணி 70 சதவீதம் நச்சுஆலைகளால் மாசைடையுதுனா,
மீதி 30 சதவீதமும் நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் நச்சு கழிவுகளால்தான் ஆகிறது என்பதை நன்கு உணர வேண்டும்.
இப்போ மாற்றத்தை நம்ம வீட்டிலிருந்து ஆரம்பிப்போம்..
கெட்டுப்போன முப்பது சதவீதத்தை மீட்டாலே இந்த நூற்றாண்டில் நாம செய்த பெரும் சாதனையாகிடும்..
நல்ல ஆடைகளையும்,
ஆபரணங்களையும்,
அடுக்குமாடி வீடுகளையும்,
விலை உயர்ந்த மகிழ்வுந்துகளையும்,
பணத்தையும்,
கல்வியையும் மட்டும் நம் பிள்ளைகள் கொடுத்துட்டு போனா நம்ம பிள்ளைகள் நல்லா வாழாது.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டா இயற்கையை சூரையாடி, பல்லுயிர்களோட சாபத்துக்கு
நாம ஆளாகியிருக்கோம்..
அந்த சாபத்தை போக்கவேண்டும் என்றால்
இயற்கைக்கு திரும்புகிற
பரிகாரத்தை செய்து
இம்மண்ணில் பல்லுயிர்களும்
வாழ விட்டாத்தான்
நம்ம அடுத்த சந்தததியும் வாழ
முடியும்னு மனசில
ஒரு ஓரமா வச்சுக்கோங்க..


#சைக்கிள்_சவாரி.."
அப்போதெல்லாம்
வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது.
அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால்,
அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள்.
இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் அப்போது
சைக்கிள் ஓட்டத் தெரியாமல்,
அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள்.
’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.
சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது..?
அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன.
இப்போதும்
உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன.
ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம் 50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும்.
அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.
கேரியர் வைத்த சைக்கிள்,
கேரியர்இல்லாத சைக்கிள்,
டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.
‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ..’ என்று விசிறிக்கொண்டே,
தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள்.
உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும்
10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள்.
அந்த ஒரு பத்து நிமிஷம்,
இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது..!
வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள்.
’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா..’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.
இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.
சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு,
தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள்.
பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு.
பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.
‘செகண்ட் ஹேண்ட்’ சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது.
அந்த வண்டியைத் துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன,
உப்புத்தாள் கொண்டு,
வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன...
என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.
எண்பதுகளில் ராலே சைக்கிள்தான் கதாநாயகன்.
ராலே சைக்கிள் கமல் என்றால் ஹெர்குலிஸ் சைக்கிள் ரஜினி.
நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் மாதிரி அட்லஸ், ஹீரோ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன.
‘ராபின்ஹூட்’ என்றொரு சைக்கிள். அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும்.
பத்துமுறை பெடல் செய்தால், ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்று
அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள்.
ஆனால் அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம்...
என சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.
டைனமோ இல்லையெனில்
போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும்.
அதேபோல்,
சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது,
அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது, கையெல்லாம் மையாகியிருக்கும்.
‘இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது..’ என்று அலுப்பும்சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.
‘ஓவராயிலிங்..’ சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர்.
அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு,
அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி,
ஹேண்டில் பார் கைப்பிடி,
சீட்டுக்கு முன்னே இருக்கும்
பார் பகுதிக்கு ஒரு கவர்,
சீட்டுக்கு குஷன் கவர்,
இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது
ஒரு கலை.
இன்னும் சிலர்,
சின்னச்சின்ன மணிகளை,
வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்துவிடுவார்கள்.
டைனமோவுக்கு மஞ்சள் துண்டு அல்லது
மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.
இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம்.
கறிவேப்பிலை வாங்கவே,
டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம்.
அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு,
கெத்துக் காட்டுவோம்.
சைக்கிளின் ரெண்டுபக்கமும்
பெல் வைத்து,
வித்தியாச ஒலி எழுப்புவார்கள்.
மாற்றங்கள்...
வேகங்கள்..
சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன.
‘என்னடா மாப்ளே...
இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே.
இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா.
இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்’ என்றார்கள்.
அப்பா ஓட்டிய சைக்கிள்,
முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம்
மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.
இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன.
அப்பாவுக்கு பைக்,
மனைவிக்கு ஆக்டீவா,
மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன.
குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன.
வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை.
’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது..’ என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.
காலச் சுழற்சியில்...
தொப்பையைக் குறைக்கவும்
சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.
ஸ்டாண்ட் போட்டு,
சைக்கிளிங் பண்ணுவதற்கு,
காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.
சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது.
எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும்,
நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா..?
உங்கள் நினைவுகளை
கொஞ்சம் தட்டி விடுங்கள்....

உதடொட்டாக் குறட்பாக்கள்-24

திருக்குறட்புலம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறார்.
######திருக்குறள் சிறப்பு######01-12-2019######
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
##########உதடொட்டாக்குறட்பாக்கள்##########
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவள்ளுவப்பெருந்தகை அவர்கள் மாந்தர்வாழ்வு
சிறக்க, திருக்குறளை யாத்து நமக்களித்தார்கள்.
திருக்குறளின் சிறப்புகளை முற்றிலும் அறிந்தவர்கள்
எவருமே இலர் எனலாம்.
அத்துணைச்சிறப்புகள் திருக்குறளிலே நிறைந்துள்ளன.
எல்லாவற்றையும் இங்கே பட்டியலிட்டு விளக்கிட
இயலாதாகையால், எனக்குத்தெரிந்தவற்றை யான்
விளக்குகிறேன்.
யான் இடுகையாய் இட்டு, நிறைவுசெய்தபின்னர்,
நல்நண்பர்களாகிய உங்களுக்குத்தெரிந்தவற்றை
நீங்கள் வாய்ப்பின்வழியே, தெரிவித்தாலும்/
இடுகையாய் இட்டாலும் அனைவரும் திருக்குறளின் சிறப்புகளாய் அறிய அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இவ்வேண்டுகோளையேற்று உதவிட / இடுகைகளிட
நீங்களெல்லாம் மிக அணியமாக இருப்பீர்கள் என்று
திண்ணமாக எண்ணுகிறேன்.
***********************************************************
இன்று முதற்சிறப்பாக,
"உதடு ஒட்டாமல்ஒலிக்கும் குறட்பாக்கள்"பற்றி
அறிவோம்.
உங்களில் பலரும் இதைப்பற்றி அறிந்திருப்பீர்கள்.
ஆயினும், அவற்றைப்பற்றி விரிவாக அறிவோமா?
பொதுவாக, "ப" என்ற எழுத்தையும், "ம" என்ற எழுத்தையும் அல்லது இவ்வெழுத்துகள் அடங்கிய சொற்களையும் நாம் ஒலிக்கும்போது உதடுகள் ஒட்டும்.
அஃதாவது, உதடுகள் இரண்டும் ஒட்டினாற்றான்
"ப" + "ம" ஆகிய ஈரெழுத்துகளும் தமக்குரிய ஒலியுடன் இயையும்.
( உதடுகள் ஒட்டவில்லையாயின், "ப" + "ம" என்ற
ஒலி பிறக்காது.)
இவ்விரு எழுத்துகளும் இல்லாத ஒரு குறட்பாவினை
ஒலிக்கும்போது(சொல்லும்போது) உதடுகளொட்டா.
----------------------------------------------------------------------------------------------------
நம்மில் பலரும் அறிந்த இவ்வகையிலான ஒரு குறட்பா :
----------------------------------------------------------------------------------------------------
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்".
****************************************************************
இற்றைநாள்வரை இக்குறள்பற்றி அறியாதவர்கள் இக்குறளைச்சொல்லி / ஒலித்துப்பாருங்கள்.
உறுதியாக உதடுகள் ஒட்டாமல் எழுத்தோசை
வரும். ஒரு விரலால் கீழுதட்டையோ அல்லது மேலுதட்டையோ அழுத்திக்கொண்டு இக்குறளை
சொல்லிப்பாருங்கள். ஓர் உதட்டுடன் மற்றோர் உதடு
ஒட்டாமலே சொல்லொலிப்பு உருவாவதை அறியலாம்.
------------------------------------------------------------------------------------------------------
தமிழ்மொழிக்கே இத்தனிச்சிறப்பு அமைந்துள்ளது என்று
எண்ணுகிறேன். வேறெம்மொழியாவது இச்சிறப்பைப்பெற்று
இருக்கிறதா ? தெரிந்தவர் கூறிடின் நன்றியுடனேற்பேன்.
*****************************************************************
இதுபோன்ற திருக்குறட்பாக்கள், அஃதாவது,
உதடுகளொட்டாக்குறட்பாக்கள் மொத்தம்
24 (இருபத்துநான்கு) உள்ளன. இவை யானறிந்தவை.
நுண்நாடலால் வேறுளவாவெனக்காணவேண்டும்.
***********************************************************
இவ்வாறு, உதடுகள் ஒட்டாக்குறட்பாக்களை
"இதழகல் குறட்பாக்கள்" என்றும் சொல்வதுண்டு.
வாயிதழ்கள் ஒட்டாமல், அவை அகன்ற நிலையில்,
ஒட்டாமல் இருக்கும்போதே சொல்லொலிப்பைச் சரியாகப்பெறமுடிவதால் இவ்வாறு குறிப்பிடுகின்றோம்.
***********************************************************
'உதடுகளொட்டாக்குறட்பாக்களைப்பின்வருமாறு
வரிசைப்படுத்திப்பட்டியலிடுகிறேன்.
1. "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று". (208)
2. "வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்". (240)
3. "அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்". (286)
4. "இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை". (310)
5. "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்". (341)
6. "நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது". (419)
7. "அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்". (427)
8. "ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்லார்க்குச் செல்லாதது இல்". (472)
9. "எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்". (489)
10. "செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்". (516)
11. "அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
( கோடுஇன்றி நீர்நிறைந் தற்று". (523)
12. "வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று". (678)
13. "நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்". (679)
14. "கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்
ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்". (894)
15. "எற்றிற்கு உரியவர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து". (1080)
16. "நோக்கினால் நோக்கெதிர் நோக்குதல்
தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து". (1082)
17. "உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்". (1177)
18. "வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை
ஆரஞர் உற்றன கண்". (1179)
19. "காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து". (1211)
20. "நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டுஎன் உயிர்". (1213)
21. "நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்". (1219)
22. "தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து". (1236)
23. "காணுங்கால் காணேன் தவறாய; காணாக்கால்
காணேன் தவறல் லவை". (1286)
24. "தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு". (1296)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்நண்பரீர்,
இச்சிறப்பிடுகை உங்கள் கவனத்தை ஈர்த்திருக்கும்
என்று நம்புகிறேன்.
இத்தொகுப்பினைச்சேர்த்துவைத்துக்கொள்ளவும்.
எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகட்கு மிகவுதவும்.
ஓர் ஒளியச்சுப்படி(Zerox) எடுத்துவைத்துக்கொள்ளல்
நலம்.
பெரிய இடுகையாயினும் உங்களுக்குப்பயனளிக்கும்
என்றெண்ணுகிறேன்.
------------------------------------------------------------------------------------------
உங்கள் மேலான கருத்துகளைப்பதிவு செய்யுங்கள்.
பிழைகளைச்சுட்டிக்காட்டுங்கள். திருத்தியிட உதவுங்கள்.
மிகுநன்றி நண்பர்களே.
01-12-2019.

திருக்குறள் உரை-02


திருக்குறட்புலம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறார்.
######எளிய திருக்குறள் உரை- 2 ( 29-11-2019)######
வழங்குபவர்:
குறள்வாணன் கண்ணாடிக்கலைஞர். ----------------------------------------------------------------------------------------------------
குறள் எண் : 2. இறைவாழ்த்து.
மூலக்குறள்: (பழைமையில் எழுதப்பட்டவாறுள்ளது)
"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்".
----------------------------------------------------------------------------------------------------
கொண்டுகூட்டு: ( செய்யுளின் அமைப்புநலன்கருதி
மாற்றி அமைக்கப்பட்டுள்ள சொற்களை எளிமையாய்
மாற்றியமைத்துப்பொருள்கொள்ளும் முறை. )
வாலறிவன், நற்றாள், தொழாஅர், எனின்,
கற்றதனால், ஆய, என்பயன்கொல்?
-----------------------------------------------------------------------------------------------------
எளிய பிரிப்பு:
எளியபிரிப்பு என்பது, புதிதாய்க்-
-குறள்கற்பவர்க்கும், மாணாக்கர்க்கும் ஆனதால், இப்பிரிப்பிலுறும் சொற்கள் இலக்கணத்துடன்
ஒன்றிடாது நிற்கும் என்பதையறிக.
இது குறட்பாக்களை எளிமையாய்ப்புரிந்து
கொள்வதற்கான பிரிப்புமட்டுமே என்பதைக்-
-கருத்தில் இருத்துக.
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் ?"
-‎----------------------------------------------------------------------------------------------------
சொல்லுரை:
வால்அறிவன்=தூயஅறிவினை உடையவனது~
நற்றாள்=நல்தாள்=நல்லதிருவடிகளை~
தொழாஅர் எனின்=வணங்காவிடில்~
கற்றதனால்=(எல்லா நூல்களையும் கற்றவராயினும்)
அக்கல்வியறிவால்~
ஆய பயன் என்? =உண்டாகிய பயன் யாது? (ஒன்றுமில்லை !)
கொல்=அசைச்சொல்+இடைச்சொல்~
-----------------------------------------------------------------------------------------------------கருத்துரை:
ஒருவற்கு, தான்கற்ற கல்வியால் நற்பயன் ஏற்படவேண்டுமாயின், அவன், தூய அறிவாற்றலில்
சிறந்தோனின்(வாலறிவனின்) அறிவுரைப்படி
நடக்கவேண்டும். (அஃதே இறைவன் திருவடிகளை
வணங்குதலும் ஆம்.)
----------------------------------------------------------------------------------------------------
இலக்கணக்குறிப்புகள்:
கற்றதனால்=ஓதியதால்.
கற்றதனால்>அஃறிணை ஒன்றன்பாற்படர்க்கை
இறந்தகாலத்தொழிற்பெயர்-3ஆம் வேற்றுமை.
ஆய=ஆகிய.
ஆய>பெயரெச்சம்=செய்த எனும் இறந்தகாலப்
பெயரெச்சம்.
பயன்=நன்மை=விளைவு.
கொல்>அசைச்சொல்;இடைச்சொல்லும் ஆம்.
வாலறிவன்=வால்+அறிவன்.
"வால்"என்பது தூய்மையைக்குறிக்கும்.
அறிவன்=அறிவினையுடையவன்.
வாலறிவன்=தூய அறிவினை உடையவன்.
தொழாஅர்>இசைநிறைஅளபெடை.
###"தொழார்" என்ற சொல்லே, இசையளவு நீட்டற்காக,
"தொழாஅர்" என்றாயிற்று.
###யாப்பிலக்கணவழி, ஓசையை நீட்டற்குதவிய
'அ' என்ற எழுத்தை நீக்கிப்படித்தால், "தொழார்"
என்ற மிகவெளிய சொல்லாயமையும்.###
மாணவர்களைக்குழப்பத்திலாழ்த்தும் அளபெடைச்சொல்லாதலின் விரிவான இவ்விளக்கம்.
எனின்=என்றால்.
எனின்>செயின் எனும் வினையெச்சவிகுதி.
----------------------------------------------------------------------------------------------------
சிறப்புக்குறிப்பு :
குறட்பாக்களில் அமைந்துள்ள சொற்களின் பொருளையும், அவற்றிற்குரிய இலக்கணக்குறிப்புகளையும் ஐயமற அறிந்தாலன்றிக்குறட்பாக்களின் முழுக்கருத்தினையும் செம்மையாய் அறியவியலாதென்பதை அறிந்து குறள் கற்கவும்.
----------------------------------------------------------------------------------------------------
வேண்டல் :
எனவே நண்பர்களே, நாடோறும்
'உலகப்பொதுமறை'யாம் திருக்குறளைப்பயின்று,
நற்றமிழையும் இலக்கணத்தையும் நன்கறிவீர் !
சிறந்த தமிழறிஞராவீர் !
பரவுக பைந்தமிழ் ! ஓங்குக குறள்நெறி !
நன்றி.
(இவ்விடுகைபற்றிய உங்கள் கருத்துகளை ஆவலுடன் காணக்காத்திருக்கிறேன். பிழைகளைச் சுட்டி.காட்டுக.
பிழைகளை நீக்கிக்கொள்ளலாம். )
###########################################
29-11-2019.
திருக்குறட்புலம் பழைய நினைவாக உணர்கிறார்.
•••••••••••••••••••••••••நலந்தருசெந்தமிழ்••••••••25-11-2019°°
°°°°°°°°°°°குறள்வாணன் கண்ணாடிக்கலைஞர்°°°°°°°°°°°
( 29-06-2019 அன்று இட்ட பாடல்.)
வளம்நிறை மொழியெது? வளம்மிகும் தமிழறி.
வழங்கிடும் தமிழிலே வளத்துடன் இலக்கணம்.
வளத்துடன் இலக்கணம் வகுத்திடும் இலக்கியம்.
வகுத்திடு இலக்கியம் வளத்தினை உரைத்திடும்.
வளத்தினை உணர்த்திடும் வடிவுறு எழுத்துகள்.
வடிவுறு எழுத்துகள் வலுவுடன் அமைந்தவை.
வலுவுடன் அமைந்ததால் வழக்கினில் நிறைவலு.
வழக்கினில் நிறைவலு வடைமொழி தமிழ்மொழி.
அனைத்துமே சிறந்தது. அகத்தினில் நிறைவது.
அகத்தினில் நிறைந்தபின் அளவிலா மகிழ்ச்சியை
அளித்துமே நிறைப்பது உளத்தினை. நிறைத்தபின்
அளவிலா விருப்பினை அளிப்பது பயின்றிட.
பயின்றிடப் பயின்றிடப் பயன்மிக அளிப்பது.
பயன்மிக அளித்தபின் பெரும்புகழ் சேர்ப்பது.
பெரும்புகழ் சேர்த்தபின், பிறரினும் நமைநலப்
பெருக்கினால் பெருந்திறன் பெறச்செயும் தனித்தமிழ்.
தனித்தமிழ் தருவது தகையுறு தனிநிலை.
தகையுறு தனிநிலை தருவது மகிழ்ச்சியே.
தனியொரு மகிழ்வினைத் தருதலான், தமிழினைத்
தவறறப் படித்திடின் திறன்மிகத் தழைத்திடும்.
திறனது தழைத்திடின் தகவுடன் மிளிரலாம்.
தகவுடன் மிளிர்ந்திடின் திருவதும் மிகுந்திடும்.
திருவது மிகுந்திடின் திருமுகம் மலர்ந்திடும்.
திருமுகம் மலர்ந்திடின் திரண்டிடும் செழிப்பது.
தளர்விலாச் செழிப்பது தருதலோ பெரும்புகழ்.
தருநிறைப் பெரும்புகழ் திறனதைப் பெருக்கிடும்.
திறனதைப் பெருக்கிடின் தலைநிமிர் நிலையதாம்.
தலைநிமிர் நிலையது தருவது நிறைபுகழ்.
நிறைபுகழ் பெறுதலே நமக்குறு பெருங்கடன்.
பெருங்கடன் நிறைவுறின் நமக்குறும் நலநிறை.
நலநிறை பெருகிடின் நலமுறல் திகழ்தரும்.
நலமுறல் திகழ்ந்திடின் நிலைபெறல் மகிழ்ச்சியே.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
°°°°°°°°°°°°°வெல்க தமிழ். பரவுக குறள்நெறி.°°°°°°°°°°°°°°°
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திருக்குறட்புலம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறார்.
########எளிய திருக்குறள் உரை-1 (25-11-2019)#######
வழங்குபவர்:
குறள்வாணன் கண்ணாடிக்கலைஞர்.
---------------------------------------------------------------
குறள் எண் : 1. இறைவாழ்த்து.
மூலக்குறள்: (பழமையில் எழுதப்பட்டவாறுள்ளது)
"அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு".
‎-----------------------------------------
கொண்டுகூட்டு: (சொற்களைமாற்றிப்பொருள்காணல்)
எழுத்து எல்லாம், அகரம், முதல;
உலகு, ஆதிபகவன் முதற்றே.
-------------------------------------------------
எளிய பிரிப்பு:
எளியபிரிப்பு என்பது, புதிதாய்க்-
-குறள்கற்பவர்க்கும், மாணாக்கர்க்கும் ஆனதால், இப்பிரிப்பிலுறும் சொற்கள் இலக்கணத்துடன்
ஒன்றிடாது நிற்கும் என்பதையறிக.
இது குறட்பாக்களை எளிமையாய்ப்புரிந்து
கொள்வதற்கான பிரிப்புமட்டுமே என்பதைக்-
-கருத்தில் இருத்துக.
-‎--------------------------------------
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு". ‎----------------------------------------
‎சொல்லுரை:
‎எழுத்தெல்லாம்= (உலகிலுள்ள அனைத்து
‎மொழிகளிலுமுள்ள) எல்லா எழுத்துகளும்
‎அகர= 'அ' என்னும் எழுத்து
‎முதல> முதன்மையாகக்கொண்டுள்ளன
‎(அதுபோல)
‎உலகு= இவ்வுலகமானது
‎ஆதிபகவன்= ஆதியான முதல் இறைவனை
‎முதற்று= முதன்மையாக உடையது
-------------------------------------------------------------
கருத்துரை:
எழுத்துகள் எல்லாம் 'அ' என்னும் அகரத்தை
முதலாய்- முதலெழுத்தாய் உடையன. அதைப்போன்று, இவ்வுலகானது முதற்பகவனை- அஃதாவது, வாழ்வியலுக்கேற்ற நெறிமுறைகளைப்பகுத்து வழங்கியவனான முதல் அறிவனை, இறைவனை
முதன்மையாய்க்கொண்டு விளங்குகிறது.
-----------------------------------------------------------------------
இலக்கணக்குறிப்புகள்:
அகரம்> சாரியைபெற்ற எழுத்து = சாரியை-
-பெற்ற உயிர் முதலெழுத்து.
முதல> அஃறிணைப்பலவின்பால் படர்க்கைக்-
-குறிப்பு வினைமுற்று.
எழுத்து> செயப்பாட்டு வினைஆட்சி பொருட்பெயர்.
எல்லாம்> அனைத்தும், முழுவதும், எவையும்.
எல்லாம்> அஃறிணைப்பலவின்பாற்படர்க்கைப்-
-பொதுப்பெயர்.
****************************************************************
'ஆதி' என்ற சொல் தமிழ்ச்சொல்லே.
(இச்சொல் வடமொழியிலும் உள்ளதான் கருத்தில் குழப்பங்கொள்ளவேண்டா.)
'ஆதி: என்ற சொல்லை வள்ளுவப்பெருந்தகை அவர்கள், 'செங்கோன்மை' அதிகாரத்தில்' 543ஆம் குறட்பாவழி, தமிழ்ச்சொல்லே என்று நிலைப்படுத்துகிறார்கள்.
"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்" என்ற குறள்வழி
'ஆதி' என்ற சொல்,
முதன்மையாய்,
அடிப்படையாய்,
தொடக்கமாய் எனற பொருளிற்றான் அமைந்துள்ளது என்பதையறிந்து,
'ஆதி'யென்றசொல் தமிழ்ச்சொல்லேயென்று தெளிக.
இக்கருத்தை, 'மொழிஞாயிறு' தமிழறிஞர்
தேவநேயப்பாவாணர் அவர்களுமேற்று, தம் திருக்குறள் உரைநூலில் வலியுறுத்தியும் உள்ளார்கள்.
****************************************************************
பகவன்= இறைவன் = கடவுள்.
###வடசொல்: பகவான் (பக்வான்?)
பகவன்> உயர்திணை ஆண்பாற்படர்க்கைப்-
-பொருட்பெயர்.
முதற்று= முதலையுடையது.
முதற்று> அஃறிணை ஒன்றன்பாற்படர்க்கைக்-
-குறிப்பு வினைமுற்று.
உலகு= உலகம்.
உலகம்> இடப்பெயர் (பொது).
இக்குறட்பாவில் 'எடுத்துக்காட்டு உவமையணி'
அமைந்துள்ளது.
உவமை ஒரு சொற்றொடர் (வாக்கியம்) ஆகவும்,உவமேயம் மற்றொரு சொற்றொடராகவும், இடையே, 'அதுபோல' என்ற உவமவுருபு மறைந்துவருதலே 'எடுத்துக்காட்டு உவமையணி' ஆகும்
-----------------------------------------------------------------------------------------------------
குறட்பாக்களில் அமைந்துள்ள சொற்களின் பொருளையும், அதற்குரிய இலக்கணக்குறிப்புகளையும் அறிந்தாலன்றிக்- குறட்பாக்களின் முழுக்கருத்தினையும் செம்மையாய்
அறியவியலாதென்பதை அறிந்து குறள் கற்கவும்.
-----------------------------------------------------------------------------------------------------
எனவே நண்பர்களே, நாடோறும்
'உலகப்பொதுமறை'யாம் திருக்குறளைப்பயின்று,
நற்றமிழையும் இலக்கணத்தையும் நன்கறிவீர் !
பரவுக பைந்தமிழ் ! ஓங்குக குறள்நெறி !
நன்றி.
(இவ்விடுகைபற்றிய உங்கள் கருத்துகளை ஆவலுடன் காணக்காத்திருக்கிறேன். பிழைகளைச் சுட்டி.காட்டுக.)
----------------------------------------------------------------
(முன்பு இடுகையிட்டநாள் : 14-08-2017.)