03 நவம்பர் 2024

இதழியல் மற்றும் ஊடகங்கள்

                          இதழியல் கலை அறிவோம் வாங்க.....

     மதிப்பிற்குரிய இணைய வாசகப்பெருமக்களுக்கு,

              கனிவான வணக்கம்.

                கொங்குத்தென்றல் வலைப்பக்கத்தின் வாயிலாக ஊடகம் மற்றும் இதழியல் பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக  இதழியல் பற்றி நானறிந்த தகவல்களை தினந்தோறும்

 'நுகர்வோர் அறிக்கை ERODE DISTRICT' புலனம் எனவும், பகிரி எனவும், கட்செவி அஞ்சல் தளம் எனவும் கூறப்படுகின்ற வாட்ஸ்அப் குழுவின்  தளத்தில்  2-11-2024 முதல்   தொடராக பதிவிட்டு வருகிறேன்.

                          அவற்றை இந்த தளத்திலும் பதிவிடுகிறேன்...குறைகள் இருப்பின் தகவலளித்து செம்மைப்படுத்த உதவுங்க...

இதழியல் தொடர் ... 

ஓர் அறிமுகம்...

                                காலையில் எழுந்தவுடன்  செய்தித்தாள் என்பது இன்றளவும் பொதுமக்கள் பலரின் வாடிக்கையாகிவிட்டது.எதை நுகர்கிறார்களோ இல்லையோ செய்திகளை நுகர்வோர் மிகுதி.

                     பத்திரிக்கைகளின் செல்வாக்கு எழுத்தில் அடங்காது.இதழ்களின் தாக்கத்திற்குட்படாத துறைகள் எதுவும் இல்லை. ஆக்கல், அழித்தல் என்று எல்லாம்வல்லதாக இதழியல் செல்வாக்கும் பெற்றுள்ளது.ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செல்வாக்கும் பெற்றுள்ளது.

                  எனவே இதழியல் பற்றி   2-11-2024 முதல்  தொடராக சிறுசிறு குறிப்புகளை  அறிந்துகொள்வோம்.

       பத்திரிக்கையின் பேராற்றலை மக்கள் உணரும்வகையில் பைந்தமிழ்ப்பாவேந்தர் பாரதிதாசன் ,

காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான்! இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணிற்

பாய்ந்திடும் எழுச்சி நீதான்

ஊரினை நாட்டினை இந்த

உலகின் ஒன்று சேர்க்கப்

பேரறிவாளர் நெஞ்சில்

பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே!

என்று வாழ்த்துகிறார்.

 நாடாளுமன்றம்(Parliament), நிர்வாகத்துறை(Executive),  நீதித்துறை ( Judiciary),  பத்திரிக்கைத்துறை (press) ஆகியன ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் 🙏

( தொடரும்..)



                                             இதழியல் தொடர்...2    
     தேதி  3-11-2024 
இதழ் என்பது பத்திரிக்கை, செய்தித்தாள், தாளிகை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
அறிவித்தல்(To inform), அறிவுறுத்தல்( To instruct), மகிழ்வித்தல்( To entertain) , வாணிபம் செய்தல்( To merchandise) ஆகிய நான்கு பணிகள் இதழ்களின் பொதுப்பணிகளாகும்.
(1) அறிவித்தல்: இதழ்களின் தலையாய பணி மக்களிடம் செய்திகளை பரப்புவதாகும். நாட்டில் சமுதாயம்,அரசியல்,பொருளாதாரம்,கலை, பண்பாடு என  மக்களுக்கு எல்லா விவரங்களையும் உடனுக்குடன் உண்மையாக, விருப்பு வெறுப்பின்றி சிதைக்காமல் முழுமையாக நடுநிலையோடு வழங்க வேண்டும்.மக்கள் அறிய விரும்புகின்ற விலைவாசி விவரம், விளையாட்டு, நடைபெறப்போகும் நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்தையும் வழங்கும் நடப்புநிகழ்ச்சிக்களஞ்சியமாகத் திகழ வேண்டும்.
(2) அறிவுறுத்தல்: இதழ்கள் செய்திகளை வெளியிட்டால் மட்டும் போதாது.தேவையான விவரங்களையும் வழங்கி அறிவுறுத்தும்விதமாக  மக்களை சிந்திக்கச் செய்ய வேண்டும். 
(3) மகிழ்வித்தல்: இதழ்களை வாசிக்கும் வாசகர்கள் சோர்ந்துவிடாமல் இருக்க உற்சாகப்படுத்தும்வகையில் உணர்வுகளுக்கு நகைச்சுவைத் துணுக்கு, வண்ண ஓவியங்கள், சிறுகதைகள்,மூளைக்கு வேலை என அறிவுத்தீனி கொடுத்து மகிழ்விக்க வேண்டும்.
(4) வாணிபம் செய்தல்: அச்சிட்ட இதழ்களை விற்பனை செய்ய வேண்டும்.ஆதலால் இதழ்கள் வாணிப நோக்கத்துடனும் செயல்பட வேண்டும்.இதழ்களில் விளம்பரங்களை வெளியிடுவதும் வாணிபநோக்கம்தாங்க. இதனால்  இதழ்கள் வருவாயைப் பெருக்கி  குறைந்தவிலையில் விற்கலாம்.ஓரளவு வருவாயைத் தேடிக்கொள்ளும் இதழ்களால்தான் மக்களிடையே துணிச்சலான செய்திகளை கொண்டுசெல்ல முடியும்.
இதழ்கள் கலை,இலக்கியம்,சமுதாயப் பழக்கவழக்கங்களில் புதியமுறையை புகுத்துகின்றன.
(தொடரும்....)


                                                             4-11-2024
                                              இதழியல் தொடர்...3

                    "வாளை விட பேனா முனை வலுவுடையது"
நமது நாட்டின் விடுதலைக்காக இதழ்கள் செய்த அரும்பணியாக, உயர்ந்த நோக்கத்துடனும் தியாக உணர்வுடனும் நாட்டு மக்களிடையே விடுதலை வேட்கையை ஊட்டி எழுப்பின.
                    அண்ணல் காந்தியடிகள் தனது சுயசரிதையில்,
செய்திதாளின் நோக்கங்களில் ஒன்றாக , மக்களின் உணர்வினை அறிந்து அதனை வெளியிடுவதாக இருக்க வேண்டும்.மற்றொன்று உணர்வுப்பூர்வமான எண்ணங்களை மக்களிடம் உருவாக்க வேண்டும்.மூன்றாவதாக பொதுமக்களிடம் இருக்கும் குறைகளை துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்.என்று வலியுறுத்துகிறார். 
நல்ல இதழ்கள் மக்களிடம் தொடர்கல்வியை வளர்க்கும் சாதனங்களாக விளங்குகின்றன.அறிஞர்களின் கருத்துக்களை இதழ்களில்  படித்தே  வாழ்க்கையில் முன்னேறி வல்லுநர்களாக  வெற்றியடைந்தவர்கள் ஏராளம்.
  
        இதழ்கள் அநீதியை வெளிக்காட்டுவது, அரசின் தவறுகளை திருத்துவது, ஆலோசனை வழங்குவது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது .
   பொதுக்காரணங்களை எடுத்துக்கொண்டு தேவையானால் போராட்டங்கள் நடத்தவும் வேண்டும்.

       பத்திரிக்கைத்துறை மக்களுக்கு தெரிவிப்பதையோ கற்பிப்பதையோ மட்டும் செய்வதில்லை. பொதுப்பணிகளின் கண்காணிப்பாளராகவும், மக்களுடைய உரிமைகளின் பாதுகாவலராகவும் செயல்படுகின்றது.
( தொடரும்..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...