16 நவம்பர் 2024

இதழியல் அறிவோம் தொடர் 8 முதல் 13வரை

09 -11-2024

இதழியல் அறிவோம் தொடர்- 8

(கட்டுரையாளர் சிபிசாரதி)

நாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை மக்களுக்குத் தெரிவிப்பது இதழ்களின் பொறுப்பாகும்.உள்ளது உள்ளபடி நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு கவனமாக வெளியிடவேண்டும்.இல்லையேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை மீறல் குற்றமோ, அவமதிப்புக் குற்றமோ ஏற்பட்டுவிடும்.

உரிமை மீறியவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கும்,சட்டமன்றத்திற்கும் இருக்கின்றன.


நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்.

நீதிமன்றங்கள்,வழக்கு நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.இல்லையெனில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.


அலுவலக இரகசியங்கள் சட்டம்.

நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டின் தொடர்புகள், குற்றப்புலனாய்வுகள், அமைச்சரவை முடிவுகள்,சில தனிப்பட்ட மனிதர்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை தொடர்பான சிலவற்றை அரசு இரகசியங்களாக கட்டிக் காக்கும்.இவ்வாறான இரகசியங்களை இதழ்கள் அறிந்து வெளியிடுவது குற்றமாகும்.

        1923 ஆம் ஆண்டின்,'அலுவலக இரகசியங்கள் சட்டம்'  (1) ஒற்றறிதல், (2) இரகசிய விவரங்களை

 மற்றவர்களுக்குத் தருதல் ஆகிய குற்றங்களைத் தெளிவாகக் கூறுகிறது.

1962 ஆம் ஆண்டின் 'அணுசக்தி சட்டம்' இருக்கின்ற மற்றும் அமையப்போகின்ற அணு உற்பத்தி நிலையங்கள் பற்றி அதிகாரம் பெற்றவர்கள் தவிர மற்றவர்களுக்குச் செய்திகளைத் தருவது குற்றமாக்குகிறது.இதைப்போல வேறுசில சட்டங்களும் உள்ளன. ஒன்றை இரகசியமானதா? இல்லையா? எனத் தீர்மானிக்க இயலாது.ஆகையால் கவனம் தேவை.


 பத்திரிகை, புத்தகங்கள் பதிவுச் சட்டம்- 1867

நடைமுறையிலிருக்கின்ற மிகப் பழைய பத்திரிகைச் சட்டங்களில் 1867 இல் கொண்டுவரப்பட்ட ' பத்திரிகை,புத்தகங்கள் பதிவு சட்டம்' ஒன்று.இந்தியாவில் வெளியாகும் இதழ்களையும்,புத்தகங்களையும் பாதுகாக்க இந்தச் சட்டம் துணை புரிகின்றது.

இந்தச் சட்டம் ஓர் இதழை பதிவுசெய்வது எப்படி? நடத்துவது எப்படி? என விளக்குகின்றது.

இந்தச் சட்டத்தின்படி டெல்லியில் உள்ள இந்திய அரசு தலைமைப் பதிவாளர் அவர்களிடம் பத்திரிகை தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
 பத்திரிகை வெளியிடுகின்றவர், உரிமையாளர், ஆசிரியர் ஆகியோர் மாவட்ட நீதிபதியிடமோ, பெருநகர நீதிபதியிடமோ உறுதிமொழி அளித்து பெயர் பதிவு செய்தபிறகு பத்திரிகை வெளியிட வேண்டும்.
ஒவ்வொரு இதழிலும் அதனை அச்சிட்டவர் பெயர், வெளியிட்டவர் பெயர், ஆசிரியர் பெயர், உரிமையாளர் பெயர் மற்றும் அச்சிட்ட இடம், வெளியிட்ட தேதி ஆகிய விவரங்கள் தெளிவாக அச்சிட்டிருக்க வேண்டும்.
மற்றும் செய்திதாட்கள் பதிவாளர் கேட்கின்ற எல்லா விவரங்களையும் கொண்ட ஆண்டறிக்கைகளையும்  வெளியிட வேண்டும்.
இந்தச் சட்டத்தின்படி ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் வெளிவருகின்ற  ஒவ்வொரு இதழும் ஒரு பிரதியை புதுடெல்லியிலுள்ள பத்திரிகைப் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.தமிழ் உட்பட மற்ற  மொழி இதழ்கள் குறிப்பிடப்பட்ட வட்டார வெளியீட்டு, செய்தி நிறுவனங்களுக்கு ( PIB - Press Information Bureau)  ஒரு பிரதியை  அனுப்ப வேண்டும்.
அடுத்த தொடரில் ஆபாச வெளியீட்டு தடைச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம், இளைஞர்கள் நலன் பத்திரிகைச் சட்டம், அஞ்சல்,தந்தி சட்டங்கள், பணிசெய் இதழியலாளர்கள் சட்டம் , இதழ்களின் வேறு சில சட்டங்கள் அறிவோம்.


10-11-2024
இதழியல் அறிவோம்.
தொடர் - 9
ஆபாச வெளியீட்டுத் தடைச் சட்டம்.
                    பத்திரிகைகளுக்கு மக்களின் மனதைக் கெடுக்கவும்,சமுதாயத்தின் ஒழுக்கத்தைக் கெடுக்கவும் ஆபாசமான படங்களையோ,செய்திகளையோ,கட்டுரைகளையோ வெளியிடுவதைத் தடுக்க ," ஆபாச வெளியீட்டுத் தடைச் சட்டம்" செயல்படுகின்றது.
இந்திய குற்றவியல் சட்டத்தின் (IPC) 292, 293, 294 பிரிவுகள் ஆபாசமாகக் கருதக்கூடியவற்றை விளக்கமாகக் கூறுகின்றன.
பதிப்புரிமைச் சட்டம்.
                      ஒருவரின் அறிவுசார்ந்த படைப்புரிமையைக் கட்டிக்காக்க உருவாக்கப் பட்டது இந்தச் சட்டம்.
ஒருவரின் அறிவால்,உழைப்பால், திறமையால் படைத்த அனைத்தும் அவருடைய சொத்து ஆகும்.ஒருவரின் சொந்த இலக்கியம், படைப்பு, நாடகம், இசை, கலை எதுவாக இருந்தாலும் அதை உருவாக்கியவரின் சொத்து ஆகும்.1957 இல் நிறைவேறிய பதிப்புரிமைச் சட்டம் 45 ஆவது பிரிவு  பதிப்புரிமையைப் பதிவு செய்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. அதேவேளை கட்டாயப்படுத்துவதில்லை.
இதழ்கள் பதிப்புரிமைச்சட்டத்தின் வரம்புக்கு கட்டுப்பட்டு செய்படுவது அவசியம்.
இவ்வாறு மேலும் சில சட்டங்கள் இதழ்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.அவைகளையும் அறிந்துகொள்ளுதல் நல்லது.
அடுத்த தொடரில் "பத்திரிகை மன்றம்" பற்றி அறிவோம்.
11-11-2024
இதழியல் அறிவோம் - 10
(சிபிசாரதி)
 பத்திரிகை மன்றம்
 1916 ஆம் ஆண்டு சுவீடனில் முதல் தடவையாக பத்திரிகைமன்றம் ஒன்றை அமைத்தனர். நமது நாட்டில் அமைந்த முதல் பத்திரிகைக்குழு ,' பத்திரிகைகளின் சுதந்தரத்தைக் கட்டிக் காக்கவும்,இதழியல் தொழிலில் ஈடுபடும் அனைவரிடமும் பொறுப்புணர்வுடன் சேவை மனப்பான்மை வளர்ப்பதற்காக ஒரு பத்திரிகை மன்றம் அமைக்க வேண்டுமென பரிந்துரை செய்தது.
இதன்படி 1965 ஆம் ஆண்டு பத்திரிகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1966 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம்நாள் இந்திய பத்திரிகை மன்றம் அமைக்கப்பட்டது.இதன் தலைவராக உயர்மட்ட நீதிமன்ற நீதிபதி பொறுப்பேற்று செயல்படுகிறார்.
பத்திரிகை மன்றம் பத்திரிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக விளங்குகின்றது.
அடுத்த தொடரில் இதழ்கள் தொடங்குவதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்வோம்.
12-11-2024
இதழியல் அறிவோம் - 11
(சிபிசாரதி)
இதழ்கள் தொடங்குவதற்கான வழிமுறை.
புதிய நாளிதழ் மற்றும் பருவ இதழ் தொடங்குவதற்கு முதலில் அவற்றைப் பதிவுசெய்து முன் உரிமை பெற வேண்டும்.
எந்த  ஊரில் புதிய இதழ்  தொடங்குகிறோமோ அந்த ஊர் மாவட்ட நீதிபதியிடமோ , துணை வட்டார நீதிபதியிடமோ, பெருநகர நீதிபதியிடமோ குறிப்பிட்ட படிவத்தில் ஓர் உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தில் தொடங்க விரும்பும் இதழின் பெயர், மொழி, வெளியிடப்படும் கால அளவு அதாவது நாளிதழா, வார இதழா, மாத இதழா, ஆண்டு இதழா என்ற விவரம், வெளியிடுபவர் முகவரி,  அச்சிடுபவர் முகவரி, அச்சகம் பற்றிய விவரத்துடன் குறிப்பிட்டு மாவட்ட நீதிபதி முன்னிலையில் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
நாம்  தொடங்கவுள்ள இதழுக்கு வைக்கப்படும் பெயருடன் சில மாற்றுப் பெயர்களையும் எழுதித்தர வேண்டும்.குறைந்தது மூன்று பெயர்களாவது தர வேண்டும்.அவைகளில் ஏதாவது ஒரு பெயரை வைக்க அனுமதி கிடைக்கும்.
அதாவது நீதிபதி ஒரு இதழைத் தொடங்க அனுமதி வழங்குவதற்கு முன்னதாக  புதுடெல்லியில் உள்ள இந்தியாவின் செய்தித்தாள்கள் பதிவாளரோடு தொடர்புகொண்டு  புதியதாக வெளியிட விரும்பும் பெயரிலோ ,இதுபோன்றோ, அதேமொழியிலோ ,வேறுமொழிகளிலோ  வேறு இதழ் ஏதாவது பதிவுசெய்யப்பட்டு வெளிவருகின்றனவா? என்ற தகவலை கேட்பார். இந்தியாவின் செய்தித்தாள்கள் பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நாடு முழுவதும் வெளிவருகின்ற இதழ்களின் பெயர்கள் அடங்கிய பதிவேட்டில் சரிபார்த்து நாம் கேட்ட பெயரில் வேறு இதழ் வெளிவரவில்லை என்பதை உறுதிசெய்தபிறகுதான் அந்தப் பெயரை ஏற்கலாம் என நீதிபதி அவர்களுக்குத் தெரிவிப்பர்.அந்தப் பெயரில் ஏற்கனவே இதழ் வெளியிடப்பட்டிருந்தால்  மாற்றுப்பெயர் தருமாறு கேட்பர்.மாவட்ட நீதிபதி இதழுக்கான பெயர் பற்றிய ஒப்புதலை இந்திய செய்தித்தாள்களின் பதிவாளரிடமிருந்து பெற்றபின்னரே இதழினைத் தொடங்க அனுமதியளித்துவிட்டு இதனை பதிவாளருக்கும் தெரிவிப்பார்.
அடுத்த தொடரில் இதழ் வெளியீட்டு விதிமுறை பற்றி பார்ப்போம்.
13-11-2024
இதழியல் அறிவோம் - 12
(சிபி சாரதி)
இதழ் வெளியிடுதலுக்கான விதிகள்,
 ஓர் இதழைத் தொடங்க அனுமதிபெற்றவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் தொடங்க வேண்டும்.தாமதித்தால் அனுமதி ரத்தாகிவிடும். நாளிதழ்,வார இதழ்,வாரம் இருமுறை இதழ்,வாரம் மும்முறை இதழ் ஆகியவற்றை அனுமதி பெற்ற ஆறுவாரங்களுக்குள் தொடங்க வேண்டும்.
மற்ற பருவ இதழ்கள் அனுமதிபெற்ற மூன்று மாதங்களுக்குள் தொடங்க வேண்டும். 
அச்சகத்தாரோ, வெளியீட்டாளரோ, வெளியிடும் காலமோ, அச்சிடும் இடமோ, வெளியிடும் இடமோ,இதழின் பெயர் மாற்றம்,மொழிமாற்றமோ  எதில் மாற்றம் ஏற்பட்டாலும், நீதிபதியின் முன்னால் புதியதாக உறுதிமொழி வழங்க வேண்டும். 
இதழ்கள் வெளியிடவேண்டிய எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக வெளியிட்டால் கொடுத்த உறுதிமொழி செயலற்றதாகிவிடும். இதழினைத் தொடர்ந்து வெளியிடுவதானால் மறுபடியும் நீதிபதியின் முன்னால் புதியதாக விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
ஒரு இதழ் தொடர்ந்து 12 மாதங்கள் வெளிவரவில்லையென்றால் அந்த இதழ் நிறுத்தப்பட்டுவிட்டதாக அர்த்தம்.
அந்த இதழினை தொடர்ந்து வெளியிடவேண்டுமென்றால் மீண்டும் புதியதாக உறுதிமொழி வழங்கி பதிவு செய்தபிறகுதான் வெளியிட முடியும். தொடரும்....
14-11-2023
இதழியல் அறிவோம் தொடர் - 13
விவரக்குறிப்பு: ஒவ்வொரு இதழிலும் அந்த இதழ் பற்றிய விவரக் குறிப்பு  அச்சிட வேண்டும்.இதழின் வெளியீட்டாளர், அச்சிட்டவர், உரிமையாளர், ஆசிரியர், அச்சிட்ட இடம், வெளியிட்ட இடம்,ஆகிய விவரங்களைக் குறிப்பிடுவதுடன் ஆசிரியரின் பெயரை தனியாக அச்சிடுவது அவசியமாகும்.
இதழ்களை அனுப்புதல்: ஒவ்வொரு வெளியீட்டிலும் ஒரு பிரதியை வெளியிட்ட 48 மணி நேரத்திற்குள் செய்திதாட்கள் பதிவாளருக்கோ, அல்லது அங்கீகாரம் பெற்ற குறிப்பிட்ட அலுவலகங்களுக்கோ அனுப்ப வேண்டும்.
 இந்தி,உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம், இரண்டு அல்லது பல மொழிகளில் அச்சிடும் இதழ்களின் பிரதிகளை புதுடெல்லியில் உள்ள பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மற்ற மொழிகளின் இதழ்களை குறிப்பிடப்பட்ட பத்திரிகை செய்தி நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.உதாரணமாக, தமிழ் மொழி இதழ்களை சென்னையிலுள்ள அலுவலகத்திற்கும்,மலையாள இதழ்களைத் திருவனந்தபுரத்திலுள்ள அலுவலகத்திற்கும் அனுப்ப வேண்டும்.
பதிவு செய்தல் : முதல் இதழ் வெளியானவுடன் இதன்பிரதியை டெல்லியிலுள்ள செய்தித்தாள்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.முதல் இதழையும்,மாவட்ட நீதிபதி அங்கீகரித்த உறுதிமொழி விண்ணப்பத்தின் நகலையும் பெற்ற பிறகு பதிவாளர் அலுவலகத்தில் அந்த இதழ் பற்றி குறிப்புப்பதிவு செய்துகொண்டு அதற்கு ஒரு பதிவு எண்ணை வழங்குவார்கள்.வெளியீட்டாளருக்குப் பதிவுச் சான்றிதழும் தருவார்கள்.
அடுத்த தொடரில் ஆண்டறிக்கையும் சோதனையும் பற்றி அறிவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...