24 அக்டோபர் 2024

நம்ம கொளப்பலூர் ... நூல் எழுதும் பணிக்கு தரவுகளைத்தேடி..

  வரலாற்றுத்தேடலுக்கு உதவுங்க 

கொங்குத்தென்றல் வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம்.

           கடந்த 5-10-2024சனி மற்றும் 6-10-2024ஞாயிறு இரண்டு நாட்கள் புத்தக‍த்திருவிழா இரண்டாவது ஆண்டாக கொளப்பலூர் J.S.மஹாலில் நடத்தப்பட்டது.தொடர்ந்து இரண்டாண்டுகள் புத்தக‍க்காட்சி புத்தகத்திருவிழாவாக, புத்தக‍க்காட்சியில்  சமூகசேவகர்களுக்கு பாராட்டுவிழா,சாதனையாளர்களுக்கு பாராட்டுவிழா,மாணாக்கருக்கான தனித்திறன் போட்டிகளும் நடத்தி மாணவ,மாணவியருக்கும் பாராட்டுவிழா,பங்கேற்புச்சான்றளிப்புவிழா,மாணவியரின் நடனம்,மற்றும் வீச்சுரை, சிறப்புபேச்சாளர்களின் சிறப்புரைகளும்,சமூகசிந்தனையாளர்களின் கருத்துரைகளும்,இலக்கியவாதிகளின் எழுச்சியுரைகளும்,என புத்தக‍த்திருவிழா எனும் அறிவுத்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது.பல ஆண்டுகளாக என்னையும் புத்தகங்கள் எழுதுமாறு தூண்டப்பட்டதன் விளைவாக ,  நம்ம கொளப்பலூர்  என்னும்தலைப்பில் வரலாற்று நூலாக்கத்திற்காக தரவுகளைத் தேடும்போது,

                            மதிப்பிற்குரிய  நீதியரசர் கே.சந்துரு அவர்கள்(ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி) எழுதிய கோபி லட்சுமண அய்யர் அவர்களது தியாகம்பற்றிய கட்டுரையில் தியாகி லட்சுமண அய்யர் அவர்கள் கொளப்பலூர் தேவராஜ அய்யரின் மகன்வழிப் பேரன் என அறிந்துகொள்ள முடிந்த‍து.சான்றாக இந்து தமிழ் திசை நாளிதழ் கட்டுரை நகல் தங்களுடைய கவனத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 திப்புசுல்தான் அரசாட்சியின்போது தானியங்கள் வாங்குவதற்காக கொளப்பலூர் அடிக்கடி வருகைபுரிந்து வணிகம் செய்த‍தாகவும்,சிற்றரசர்கள் பலரும் அவ்வாறை தானியங்கள் வாங்குவதற்கு கொளப்பலூர் வந்துள்ளதாகவும் செவிவழியாக அறிய நேரிட்டது. ஆகவே இந்தப் பதிவினைக் கண்ட வாசகப்பெருமக்கள் யாருக்கேனும் கொளப்பலூர் பற்றிய தகவல்களை தெரிந்தவர்கள் எனது இதே வலைப்பக்கத்தில் கருத்துரையில் பதிவிட்டு உதவுமாறு அன்புடன்கோருகிறோம்.




கே.சந்துரு

Last Updated : 22 Feb, 2016 08:54 AM

   

லட்சுமண அய்யர் எனும் சாதி ஒழிப்புப் போராளி

வீதிவீதியாகப் பறையடித்துக் கூட்டத்துக்கு ஆள் சேர்த்தார் 14 வயது லட்சுமண அய்யர்

கோபி வக்கீல் மா.கந்தசாமியுடன் ஒருமுறை உரையாடிக்கொண்டிருந்தபோது, லட்சுமண அய்யரைத் தெரியுமா என்று அவர் கேட்டார். செவித்திறன் குறைந்த எனக்கு ‘லட்சிய அய்யர்’ என்றே காதில் விழுந்தது. பின்னர், அந்தத் தியாகி லட்சுமண அய்யர் என்று தெரிந்தது.

திருச்சி மாவட்டத்திலிருந்து 19-ம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்து, கொளப்பலூரில் குடிகொண்ட தேவராஜ அய்யரின் மகனான டி. சீனிவாச அய்யருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவருக்கு லட்சுமணன் என்று பெயர் சூட்டப்பட்டதில் விந்தையில்லை. வைணவ சம்பிரதாயத்தில் ராமனுக்கு அணுக்கமாகச் செயல்பட்டதனால் ராமானுஜன் என்ற பெயரும் உண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ராமானுஜர், கடைநிலை சாதியினருக்கும் பரம்பொருளின் அர்த்தத்தைக் கூறி திருக்குலத்தாராக்கிய பெருமை அவருக்குரியது.









HinduTamil22ndOctoberசாதியை ஒழிக்கும் வழி

ராமானுஜரின் சீர்திருத்தத்தைப் பற்றி அம்பேத்கரும் ‘சாதியை ஒழிக்கும் வழி’ என்ற தனது உரையில் குறிப்பிட்டு ஒரு கேள்வியையும் எழுப்பினார்:-

சாதியையும் தீண்டாமையையும் ஒழித்துக்கட்டும் பெரும்பணியில் எத்தனையோ பேர் இறங்கி இருக் கிறார்கள். ராமானுஜர், கபீர் போன்றவர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடடைய செயல்பாடுகளை எல்லாம் ஏற்கவும், அவற்றைப் பின்பற்றி நடக்குமாறு இந்துக்களைத் தூண்டவும் உங்களால் முடியுமா?

1934-ல் மகாத்மா காந்தியடிகள் தமிழகப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பே தீண்டாமைக்கு எதிராகத் தனது கருத்துக்களை ‘யங் இந்தியா’ இதழிலும், தனது பரப்புரைகளிலும் சொல்லிவந்தார். அகமதாபாதில் தாழ்த்தப்பட்டவர்கள் மாநாட்டில் அவர் கூறியது:-

“தீண்டாமை இந்து மதத்தின் ஒரு பகுதி என்று இந்துக்கள் கருதினால், தங்களுடைய சகோதரர்களில் ஒரு சாராரைத் தொடுவது தீட்டு என்று இந்துக்கள் கருதினால், நாம் உண்மையான சுதந்திரத்தை அடையவே முடியாது. நான் மீண்டும் பிறக்கவே விரும்பவில்லை. அப்படிப் பிறந்தால், தீண்டத்தகாத நபராகப் பிறக்கவே விரும்புகிறேன். அவர்களுடைய வேதனைகள், துயரங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற அவமதிப்புகளைத் தாங்கிக்கொள்வதற்கு விரும்புகிறேன். அந்தப் பரிதாபகரமான நிலையிலிருந்து அவர்களையும் என்னையும் விடுவிக்கப் பாடுபட விரும்புகிறேன். கடவுளே! பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய குலங்களில் எனக்கு மறுபிறவி வேண்டாம். தீண்டத்தகாதவனாக நான் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.”

மகத்தான ஆளுமை லட்சுமண அய்யர்

தீண்டாமையை ஒழிப்பதற்கும், தாழ்த்தப்பட்டவர்களுக் கான முன்னேற்றத்துக்காகவும் ‘அரிசன சேவா சமிதி’யை ஆரம்பித்ததன் ஒரு பகுதியாகத்தான் காந்தியின் தமிழகப் பயணம் அமைந்தது. நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளைஞர்களை தீண்டாமைக்கும் சாதிக்கும் எதிராகத் திருப்பிய இந்த இயக்கம், தமிழகத்தில் அடையாளம் காட்டிய மகத்தான ஆளுமைகளில் ஒருவர் லட்சுமண அய்யர். கோபியில் துவக்கப்பட்ட அரிஜன சேவா சங்கத்தின் சார்பில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக இரண்டு விடுதிகளும், தக்கர்பாபா வித்யாலயமும் லட்சுமண அய்யரின் தந்தையால் தொடங்கப்பட்டது. தற்போது அமைந்துள்ள இடம் அதன் செயலாளரான லட்சுமண அய்யரால் 1955-ம் வருடம் கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பகுதிகளில் மூன்று குழந்தைகள் காப்பகங்களும் திறக்கப்பட்டன.

தீண்டாமைக்கு எதிராகக் குரலெழுப்பிப் பலரது கவனத்தை காந்தியடிகள் ஈர்த்ததில் வசப்பட்ட இளைஞன் ஜி.எஸ்.லட்சுமண அய்யர். அவரது தந்தை சீனிவாச அய்யர் தீரர் சத்தியமூர்த்தியின் கூட்டம் ஒன்றை கோபியில் ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது, அவரிடம் ஒருவர் ஓடிவந்து, அவரது 14 வயது மகன் செய்த காரியத்தைப் பற்றிக் குறை கூறினார். அந்தப் பையன் என்ன செய்துவிட்டான்? வீதிவீதியாகப் பறையடித்து அக்கூட்டத்துக்கு ஆள் சேர்த்துக்கொண்டிருந்தான்.

இந்த தேசத்துக்கான சேவை

சமுதாயக் கடமையில் உரம் பாய்ச்சப்பட்ட அந்த இளைஞனின் வாழ்வில் ஒன்பது வருடங்களுக்குப் பின்னால் நடந்த ஒரு திருப்புமுனை சம்பவம் ஒன்றை நினைவுகூர வேண்டும். 25 வயது நிரம்பிய லட்சுமண அய்யர் மகாத்மா காந்தியின் முன் நின்றுகொண்டு, ‘‘நான் இந்த தேசத்துக்கு என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டார். அதற்குப் பதில் அளிக்கும் முன் காந்தி அவரிடம் அவரது சாதியைப் பற்றிக் கேட்ட பின், ‘‘நான் சொல்வதையெல்லாம் செய்வாயா?’’ என்று கேட்டார்.

‘‘அது என் கடமை’’ என்று பதிலளித்த லட்சுமண அய்யரிடம் “ஹரிஜன மக்களுக்குச் சேவை செய், அவர்கள் குழந்தைகளுக்கென்று ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்து, இதுதான் இந்த தேசத்துக்கு நீ செய்யப்போகும் சேவை” என்று காந்தி கூறினார்.

அந்த ரசாயன மாற்றத்துக்குப் பின் நடந்ததெல்லாம் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளே. அந்த லட்சிய மனிதர் தனது உயிர் மூச்சு நீங்கும் வரை (2011) அவரது பணியில் தொய்வேதும் ஏற்பட்டதில்லை. 2007-ல் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“அவர் சொன்னார் நான் செய்தேன். நம்மகிட்ட எதுக்குங்க பேட்டியெல்லாம்… காந்தியடிகளின் எளிமைக்கும் தியாகத்துக்கும் முன்னால் நான் செய்கிற காரியங்களெல்லாம் ஒன்றுமேயில்லை தம்பி!’’ கோபியைச் சுற்றி 650 ஏக்கர் நிலமும், கோபி நகரத்துக்குள் 40 ஏக்கர் நிலமும் இருந்ததே என வினவியபோது,

‘‘பாதியைத் தர்மமா கொடுத்துட்டேன், பாதி வியாபார நஷ்டத்துல போயிடுச்சு. இப்போது ஒரு சென்ட் நிலம்கூடச் சொந்தம் இல்லை. நாங்கள் தங்கியுள்ள இந்த வீடு ஏலத்தில் போயிடுச்சு. ஏலம் எடுத்தவுக வீட்டுக்காக எந்தப் பணமும் வாங்காமத் திருப்பிக் கொடுத்துட்டாங்க’’ எனச் சிரிக்கிறார் அய்யர்.

‘‘பிள்ளைகளுக்கென்று எதுவும் சேர்த்துவைக்காம, எல்லாத்தையும் காலி பண்ணிட்டோமேனு வருத்தமாக இல்லயா?’’ என்றால், ‘‘இல்லை, அவர்களுக்கு வேணும்னா, தானே முயற்சி பண்ணிச் சம்பாரிச்சிக்க வேண்டியதுதான்” என்னைப் பொறுத்தவரைக்கும் காந்தி கொடுத்த கடமையை நல்லபடியா செஞ்சுட்டோம்கிற திருப்தியும் சந்தோஷமும் இருக்கு” என்றார்.

லட்சுமண அய்யர் என்னதான் செய்தார்?

கோபியில் 26 பொதுக் கிணறுகள் இருந்தபோதும் அதில் நீர் எடுக்கும் உரிமை தலித் மக்களுக்கு மறுக்கப் பட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தை அணுகிய லட்சுமண அய்யர், அந்தத் தடையை நீக்கி அனைவருக்குமான உரிமையை வாங்கிக் கொடுத்தார். தற்போது நகரின் நடுவிலிருக்கும் புதுப்பாளையம் காலனியில் இருந்த அருந்ததியினரின் வாழ்விடத்தைப் பெற்றுக்கொடுத்தார். பவானி வாய்க்கால் வெட்ட மக்களிடமிருந்து நிலம் எடுக்கப்பட்டதனால் வீடு இழந்தவர்களுக்கு மாற்றிடம் கொடுப்பதற்கும், அவ்விடத்தில் வீடு கட்டுவதற்கும் அரசிடமிருந்து நிதி பெற்றுக்கொடுத்தார்.

சுதந்திரம் அடைந்த பிறகு கோபி நகராட்சியின் தலைவரான அவர், கோபி நகர குடிநீர்த் திட்டத்தைக் கொண்டுவந்ததோடு, தன்னுடைய சொந்த நிலத்தை இலவசமாக வழங்கினார். மனிதர்கள் மலத்தை மனிதர்களே அள்ளும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கோபி கூட்டுறவு சங்கக் கட்டிடம் மற்றும் கூட்டுறவு வீட்டு அடமான வங்கியையும் ஏற்படுத்தினார். கொங்கர்பாளையம் கிராமத்தில் 250 ஏக்கர் நிலத்தில் ஏழை மக்களை இணைத்து கூட்டுப் பண்ணை விவசாயத்துக்கு ஏற்பாடு செய்தார். அப்பகுதிக்கு இன்றும் வினோபா நகர் என்றுதான் பெயர். வண்டிப்பேட்டை பகுதியில் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்குத் தடுப்புச் சுவர் எழுப்பினார். நகராட்சி உயர் நிலைப் பள்ளி வருவதற்குக் காரணமானார். மீண்டும் 1986-ல் நகராட்சித் தலைவரான பின் 57 லட்ச ரூபாய் செலவில் உலர் கழிப்பிடங்கள் எல்லாம் நீரடி மலக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்டன. இதற்காக 1991-ல் குடியரசுத் தலைவரின் பதக்கமும் அவருக்கு அளிக்கப்பட்டது.

காமராசரின் மறைவுக்குப் பிறகு, ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட லட்சுமண அய்யர், 1972-ல் விவசாயிகளின் மின் கட்டணத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிறை சென்றார். எவ்வளவோ கொடுத்தவர் அவர். ஆனால், கோபி நகரத்துக்குத் தனது உடலையும், பொருளையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்த லட்சுமண அய்யரின் இறுதி யாத்திரையில் சொற்பமானவர்களே பங்கு பெற்றார்கள் என்பதை அறியும்போது நமக்கு வேதனையும் விரக்தியுமே ஏற்படுகிறது. லட்சுமண அய்யர்களைப் பொருட்படுத்தாதன் விளைவுகளையும் நாமே அனுபவிக்கிறோம்!

*

கட்டுரையாளர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி.

| இன்று கோபி லட்சுமண அய்யரின் 100-வது பிறந்த தினம்|

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...