23 நவம்பர் 2024

இதழியல் அறிவோம் தொடர் 17 முதல் 22 வரை

 😊


18-11-2024

இதழியல் அறிவோம்.

தொடர் - 17

(செய்தியாளர் C.பரமேஸ்வரன்)

இதுவரையிலான 16 தொடர்களையும் எமது https://konguthendral.blogspot.com வலைப்பக்கத்தில் பார்வையிடலாம்.🙏

இந்த தொடரில்...

 செய்தியாளர்களை அவர்களுடைய பணி இயல்பினைப் பொறுத்து பலவகைப்படுத்தலாம்.

(1) நகரச் செய்தியாளர்கள் : செய்தித்தாள் வெளியிடப்படுகின்ற  இடத்தில் செய்திகளை திரட்டுபவர் நகர அல்லது உள்ளூர் செய்தியாளர் என்கின்றனர்.

(2) நகர்ப்புறச் செய்தியாளர்: மாவட்டங்களின் தலைநகரில் இருந்துகொண்டு செய்திகளைத் திரட்டி அனுப்புவோர் நகர்ப்புற செய்தியாளர் எனப்படுகின்றனர்.

(3) தேசியச் செய்தியாளர்: நாட்டின் மாநிலங்களின் தலைநகரங்களில் இருந்துகொண்டு செய்திகளைத் திரட்டித் தருபவர் தேசியச் செய்தியாளராவார்.

(4) வெளிநாட்டுச் செய்தியாளர்: வெளிநாடுகளில்

தங்கி உலகச் செய்திகளைத் திரட்டித் தருகின்ற பணியைச் செய்பவர் வெளிநாட்டுச் செய்தியாளர் ஆவார்.

பொதுவாக ஒரு செய்தித்தாளில் நேரடிப் பணியாளராக இல்லாமல் அனுப்புகின்ற செய்திகளுக்கேற்ப பணம் வாங்குபவர்களை, " பகுதிநேர செய்தியாளர்" எனப்படுகின்றனர்.

ஒரு இதழின் முழுநேர செய்தியாளராக இருந்துகொண்டு செய்தி திரட்டுபவரை ," செய்தியாளர்" என்கின்றனர். நாடாளுமன்றசெய்திகளையும் சட்டமன்ற செய்திகளையும் வழங்குபவர்," மன்றச் செய்தியாளர்" எனப்படுகிறார்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியையோ, வெளிநாடு செல்லும் தலைவர்களைத் தொடர்ந்து சென்று செய்தி திரட்டுபவரோ, எல்லோரும் அறியும்வகையில் நாட்டு நடப்புகளைப் பற்றிய செய்திகளைத் திரட்டித் தருபவர், " சிறப்புச் செய்தியாளர்" எனப் பெயர் பெறுகின்றார்.

 செய்தியாளர்களைச் செய்யும் தொழில்திறமையின் அடிப்படையிலும் வகைப்படுத்துவதும் உண்டு.

(1) பார்ப்பதை அப்படியே எழுதுபவர் "செய்தியாளர்" எனவும், (2) பார்த்தவற்றுடன் தன்னுடைய ஊகத்தினையும் சேர்த்துத் தருபவர்," விளக்கச் செய்தியாளர்" எனவும், 

(3)பார்க்காதவற்றைக்கூட அதன் பொருள் இன்னதுதான்! என்று தீர்மானித்து அதனையும் உண்மைச்செய்தியாகவே திரட்டி நயம்படத்  தருபவர்," செய்தி வல்லுநர்" எனவும் வகைப்படுத்திக் கூறுவர்.

தொடரும்...


19-11-2024

இதழியல் அறிவோம்.

தொடர் - 18

செய்தியாளர் பணிகளும், பொறுப்புக்களும்...

 செய்தியாளர் தகவல்களைப் பரப்பும் சமுதாயத் தொண்டாற்றுவதால் சமுதாயக் கல்வியாளராவார்.

(1) கடினமான பணி:  ஒருசெய்தி எங்கிருந்து எப்போது எப்படி வெடித்துச் சிதறும்? என்று கணிக்கமுடியாது ஆகையால் 24 மணிநேரமும் விழிப்போடு செய்திகளை எதிர்பார்த்து தேடி அரிய வேண்டும்.

 கல்வி, தூங்காமை, துணிவுடைமை உள்ள செய்தியாளர்கள் கருமமே கண்ணாக உழைத்தால் சிறப்பான செய்திகளைத் திரட்டித் தந்து புகழ்பெற முடியும்.

(2) ஆபத்தான பணி : செய்தியாளர்கள் பணி உண்மைகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டும் பணியாதலால் அதனால் பாதிக்கப்பட்டவர்களால் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகும் நிலையும் வரலாம்.செய்தியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்று உள்ளன.ஆதலால் எதற்கும் துணிந்தவர்களாக இருக்க வேண்டும்.

தொடரும்...

20-11-2024
இதழியல் அறிவோம்.தொடர் : 19.
செய்தி திரட்டும் பணி.
காலத்தோடு போட்டியிட்டு விரைந்து செயல்பட்டு செய்திகளைத் திரட்டும் செய்தியாளரே புகழ்பெறுகிறார்.
எது செய்தியாகும் என்பதை முதலில் தெரிந்தெடுத்து பிறகு அந்த செய்தியின் உண்மைத்தன்மை அறிந்து செய்தி மூலத்தை அணுகி ,செய்தியைத் திரட்டித் தருவது செய்தியாளரின் பணி.
செய்தியைத் திரட்டுவதில் சில நிலைகள் உள்ளன.
(1) செய்தியாளர் தன்னை செய்திக்கு வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்.அதாவது செய்திமூலத்தோடு தன்னை நேரடியாகத் தொடர்புபடுத்திக்கொள்ளவேண்டும்.செய்திக்கான நிகழ்ச்சி நடந்த இடத்தை அடைந்து செய்தியை  நேரடியாகப் பெறவேண்டும்.அல்லது செய்திமூலமாக இருப்பவரைச் சந்தித்து செய்தியைப் பெற வேண்டும்.
(2) நடந்தவற்றைப் பார்க்க வேண்டும். விருப்பு வெறுப்பு இன்றி நேரடியாகக் காணக்கூடியவற்றைக் கவனித்து நோக்க வேண்டும்.அப்போதுதான் உண்மைத்தன்மையறிந்து நேர்மையாக எழுத முடியும்.
அறிக்கைகளாகவோ,புள்ளிவிவரங்களாகவோ செய்திகள் கிடைத்தால் அவற்றைப் புரிந்து படித்து அவற்றிலுள்ள செய்திகளை மட்டும் தெளிவானமுறையில் வழங்க வேண்டிய பணியும்  செய்தியாளர் பணியாகும்.
(3) பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் நினைவில் பதித்துக் கொள்ள வேண்டும்.அதாவது செய்தியாளருக்கு நினைவாற்றல் என்பது கை வந்த கலையாக மாறவேண்டும். முதலில் எழுதப்பட்ட குறிப்புகளை பிறகு விரிவாக எழுதுவதற்கு நினைவாற்றல் துணை செய்கிறது.
 நவீன தொழில்நுட்பங்களையும்,குரல் பதிவுசெய்யும் கருவிகளையும் பயன்படுத்திக்கொள்வது சிறப்பானதாகும்.
(4) கிடைக்கின்ற விவரங்களில் சரியானவற்றைத் தெரிந்தெடுக்க வேண்டும்.எந்தநிலையிலும் செய்தியில் பொய்களைக் கலந்துவிடக்கூடாது.செய்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் முக்கியமானது ஐயத்துக்குரியதை விட்டுவிட வேண்டும்.(When in Doubt, Leave it out) 
(5) நிறைய விவரங்களைச் சேகரித்து இருந்தால் எல்லாவற்றையும் செய்தியாக்க வேண்டியதில்லை.முக்கியமானவற்றையும்,குறிப்பிடத்தக்க மனிதர்களையும் சேர்த்து எதனைப் பெரிதுபடுத்தவேண்டுமோ அதனையறிந்து பெரிதுபடுத்தி பின்னிப் பிணைத்து சுவையான,பயனுள்ள செய்திகளை படைத்துத் தருதல் வேண்டும்.பாமரனும் வாசிப்பாளர் என்பதை மனதில் வைத்து அதற்கேற்ற எளிய நடையில் செய்திகளை தருவது சிறப்பானதாகும்.

தொடரும்...

21-11-2024
இதழியல் அறிவோம் தொடர்- 20
செய்தியாளர் பொறுப்புக்கள்: 
செய்திதாட்களில் வெளியாகும் செய்கள்  அனைத்தையும் அச்சிட்டது உண்மையாகவே இருக்கும்! என மக்கள் நம்புகின்றனர்.இவ்வாறான நம்பிக்கையைக் கட்டிக் காக்கும் சமுதாயப் பொறுப்புள்ள பணி செய்தியாளரின் பணி.
  சில செய்திகள் உண்மையில் நடந்திருக்கலாம்.அதற்கான ஆதாரங்களும் செய்தியாளரிடம் இருக்கலாம்.அந்த செய்திகள் தனி மனிதருக்கோ , சமுதாயத்திற்கோ பாதிப்பைத் தருவதாக இருந்தால் அவற்றை வெளியிடக்கூடாது.உதாரணமாக கற்பழிப்புச் செய்தியில் கற்பழிக்கப்பட்டவரின் பெயரையோ முகவரியையோ வெளியிடக்கூடாது.சித்தரிக்கப்பட்ட போலியான பெயரை குறிப்பிடலாம். அதுபோலவே சாதி,சமயப் பூசல்களைத் தூண்டி சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய விவரங்களை வெளியிடக்கூடாது.
முடிந்தவரை தங்களுடைய செய்திமூலங்களை இரகசியமாகக் காப்பாற்ற வேண்டியது செய்தியாளரின் கடமையாகும்.ஆதாரங்களை வெளியிடாமல் வைத்துக்கொள்ள சட்டப் பாதுகாப்பும் இருக்கின்றது.
சில செய்திகளைத் தருகின்றவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்வதை விரும்பமாட்டார்கள்.நேர்காணல் பேட்டி எடுக்கும்போது ,பேட்டி தருபவர் வெளியிட வேண்டாம் என்ற குறிப்பினை செய்தியில் சேர்க்கக்கூடாது.
செய்தியாளர் தான் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் நற்பெயரைக் கட்டிக் காக்கவேண்டும். தான் சேகரிக்கும் செய்திகளை தன் நிறுவனத்திற்கே தர வேண்டும்.திரட்டிய செய்திகளை வேறு எந்த வகையிலும் ஆதாயம் கருதி பயன்படுத்தக்கூடாது.
தொடரும்...

22-11-2024
இதழியல் அறிவோம்.
தொடர் : 21
ஒரு சிறந்த செய்தியாளருக்கான சில தகுதிகளையும் பண்புகளையும் அறிந்து கொள்வோம்.
 இதழியலாளர்களுக்குரிய அனைத்து தகுதிகளும் பண்புகளும்(Attributes) செய்தியாளர்களுக்கும் தேவை.
    அவற்றில் முக்கியமானவைகளாக
(1) செய்தி மோப்பத் திறன் ( Nose For NEWS),
 (2) நல்ல கல்வியறிவு,
(3) செய்திகளை சரியாகத் தருதல்,
(4) விரைந்து செயல்படல்,
(5) நடுநிலை நோக்கு,
(6) செய்தி திரட்டும் திறன்,
(7) பொறுமையும் முயற்சியும்,
(8) தனக்கென்ற தனிமுறை,
(9)மக்களின் நல்ல தொடர்புகள்,
(10) நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்,
(11) நேர்மை ,
(12) சுயதேவை கருதாமை அதாவது கையூட்டு பெறாத குணம்,
(13) செயல்திறன்,
(14) ஏற்கும் ஆற்றல்,
(15) தன்னம்பிக்கை,
(16) இனிய ஆளுமை,
(17) தெளிவாகக் கூறும் ஆற்றல்,
(18) மரபுகளைப் பற்றிய அறிவு,
(19) சட்ட தெளிவு
ஆகிய பண்புகள் தேவை.
இவைதவிர கூடுதலாக அறிவார்ந்த முறையில் பயன்படுத்துவதற்காக  சில கருவிகளும் தேவை.அதாவது மொழியறிவு, தட்டச்சுப் பயிற்சி, சுருக்கெழுத்துப் பயிற்சி, குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்கள், தகவல் கோப்பு, எதிர்கால நாட்குறிப்பு மற்றும் செய்தியாளருக்குரிய அடிப்படை விதிகள் என இவற்றை அடுத்த தொடர்களில் விளக்கமாக அறிவோம்.

23-11-2024
இதழியல் அறிவோம்,
தொடர் : 22
செய்தி மோப்பத் திறன்.
செய்தியாளர் செய்திகள் கிடைக்கும் இடத்தை மோப்பம் பிடிக்கும் ஆற்றல் பெற்றுஇருக்க வேண்டும்.செய்தியைக் கண்டவுடன் செய்தியாளர்களுக்கு மூக்கு வியர்க்க வேண்டும்.அவர்களது செய்தி உள்ளுணர்வு எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும்.நல்ல சிறந்த  செய்தியாளர் எப்பொழுதும் செய்திப்பசியோடு காத்திருக்க வேண்டும்.செய்தியை கண்டுகொள்ள விழித்திருப்பவராக இருக்க வேண்டும். செய்தி சேகரிக்கச் செல்லும் முறையில் தனித்திருப்பவராகவும் இருக்க வேண்டும்.
தொடரும்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கொளப்பலூர் இலவச கண் சிகிச்சை முகாம் ஒரு அலசல்...

  கொளப்பலூரில் முகாமிட்டு நடத்தப்பட்ட  இலவச கண் சிகிச்சையும்.... தேவைகளும்... 23-11-2024 சனிக்கிழமை இன்று கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து...