16 செப்டம்பர் 2015

வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப் போட்டி-2015

சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து,
         விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள்.



                                   தலைப்பு; 
 சுற்றுச்சூழல் பாதிப்பை உணர்ந்திடு!,சந்ததியினரைக் காத்திடு!!.

முன்னுரை;
              இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே உயிரினங்கள் உட்பட நாம் வாழத் தகுதி படைத்த உயிர்க்கோள் ஆகும்.நம்மைச்சுற்றியுள்ள நிலம்,நீர்,காற்று,வெப்பம்,ஆகாயம் ஆகிய ஐம்பெரும் சூழல்களே  நம் வாழ்வுக்கு ஆதாரம் ஆகும்.இவ்வாறான சுற்றுச்சூழலின் பாதுகாப்பை அறியாமல் நாகரீகம் என்ற போர்வையில் மயங்கி நம் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி மனம் போனபடி உபயோகப்படுத்துகிறோம்.கண்ட இடங்களில் வீசி குப்பைகளாக குவிக்கிறோம்.இதனால் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களும்,நச்சு வாயுக்களும்,அபாயமான கதிர்வீச்சுகளும் உருவாகி  மண்ணும், விண்ணும், நீரும், கடலும், காற்றும், மாசுபட்டு  பருவநிலை மாறி புவி அதிக வெப்பமடைந்து நமக்கு பல்வேறு பாதிப்புகளை கொடுத்து வருகின்றன.ஓசோன் படலம் பாதிப்படைந்து வருகிறது.இந்நிலை நீடித்தால் உயிரினங்களே வாழத் தகுதியற்று இவ்வுலகம் அழிந்து விடும்.

1.(அ). வன வளமே நம் வளம்.
              வன வளங்களில் முதன்மையான தாவரங்களுக்கும் நமக்கும் நேரடித்தொடர்பு உண்டு.நாம் வெளிவிடும்  கரியமில வாயுவான நச்சுக்காற்றை தாவரங்கள் உறிஞ்சிக்கொண்டு நாம் உயிர்வாழத் தேவையான பிராணவாயு என்னும் உயிர்க்காற்றை தருகின்றன.உணவைக்கொடுத்து,மழையைக் கொடுத்து நிலத்தடி நீரை சேமித்து நிலத்தைக்காத்து,சீரான தட்பவெப்ப நிலையைக் கொடுக்கின்றன.இவ்வாறு நமக்கு வாழ்க்கையை கொடுக்கும் தாவரங்களை குறிப்பாக மரங்களை வெட்டி அழித்து வருகிறோம்.இதனால் கரியமிலவாயு போன்ற நச்சுக்காற்றினை சுத்தம் செய்ய இயலாமல் புவி வெப்பமடைகிறது.பருவநிலை மாறுகிறது.மழை குறைகிறது.குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது.வேளாண்மை பாதிக்கிறது.பல துன்பங்களை அனுபவிக்கிறோம்.

1. (ஆ) ஆக்கப்பூர்வ ஆலோசனை;
             வனங்களே நமக்கு வாழ்வாதாரம் என்பதை உணர்வோம்.கரிம மற்றும் நீர் சுழற்சியில் முக்கிய பங்காற்றும் வனத்தைக் காப்போம்.மரம் ஒன்று வெட்டினால் இரண்டினை  நட்டு வளர்ப்போம். அதற்கென சேவைப்பணியாற்றி வரும் தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து மரம் நடும் வேகத்தை அதிகப்படுத்துவோம்.ஆற்றங்கரை,ஓடை,ஏரி,குளக்கரைகளிலும்,சாலையின் இருபுறமும், தரிசு நிலங்களிலும்,வீட்டுச்சுற்றுப்புறங்களிலும் மரங்களை நட்டு வளர்ப்போம்.

2.(அ)நெகிழிப்பொருட்களை பயன்படுத்தும் வேகமும்,தீங்கும்.
             எழுதுபொருட்கள் துவங்கி தனி மனித பயன்பாட்டுக்கான பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள்,தகவல் தொடர்பு சாதனங்கள்,வேளாண்மைக் கருவிகள்,மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள்,தொழிற்சாலைக் கருவிகள், மோட்டார் வாகனங்களின் பாகங்கள்,உடல் உறுப்பு மாற்று பாகங்கள்,மின் சாதனங்கள்,மின்னணுபொருட்கள்,என விண்வெளி ஓடம் வரை நெகிழி பொருட்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து பயன்படுத்துகிறோம்.இதன் மூலப் பொருட்கள் நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்களால் ஆனவை.மற்றும் வெப்பநிலை மாறுபாட்டால் வேதிவினை புரிந்து நச்சு வாயுக்களை வெளியிட்டு காற்றை  மாசுபடுத்துகின்றன.உணவுப்பொருட்களை நஞ்சாக்குகின்றன.வீசி எறிந்தால் எளிதில் மக்குவது இல்லை.மழைநீரை நிலத்தடியில் செல்ல விடுவதில்லை. மாறாக மண்ணையும்,நீரையும் நஞ்சாக்குகின்றன.கால்நடைகளும்,பறவைகளும்,நீர்வாழ் உயிரினங்களும் உணவு எனக்கருதி உட்கொண்டு இறக்கின்றன.நமக்கு பலவித நோய்கள் உண்டாக்குகின்றன.
 2.(ஆ) ஆக்கப்பூர்வ ஆலோசனை;
     நெகிழிப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அபாயமான கேடு விளைவிக்கின்றன என்பதை உணர்ந்து விழிப்படைய வேண்டும்.நாகரிகம் மற்றும் விலை மலிவு மற்றும் எளிதான பயன்பாடு காரணமாக எடுத்துச் செல்லும் தூக்குப்பைகளாக பயன்படுத்தும் பாலித்தீன் பைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.பதிலாக துணிப் பைகளையோ,மூங்கில் கூடைகளையோ,பாத்திரங்களையோ பயன்படுத்த வேண்டும்.நெகிழிப் பயன்பாட்டினை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும்.அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.பிறகு மறு சுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.

3.(அ)மின் சாதனங்களும் மின்னணுப்பொருட்களும் தீங்குகளும்.
          மின்சாரமே மனிதவாழ்வு என்ற நிலையில் ஒளிரும் விளக்கு,விசிறி,குளிரூட்டிகள், இயங்கும் மோட்டார் போன்ற மின்சாதனங்களையும் அலைபேசி,தொலைபேசி,தொலைக்காட்சி,கண்காணிப்பு கருவி,கணினி,கணிப்பான்,தொலை அச்சு,இசைக்கும் கருவி,குறுந்தட்டு,வன்தட்டு,விரலி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களையும் ஓடும் மின்சாரத்தின் உதவியுடனோ,சேமிக்கும் மின்சாரத்தின் உதவியுடனோ பயன்படுத்தி வருகிறோம்.இதே மின்சாரம் விளக்கு மூலமாக வெளிச்சத்துடன் வெப்பத்தையும் கொடுக்கிறது.கார்பன் நச்சுவையும் கொடுக்கிறது.குளிரூட்டிகளும் கார்பன் நச்சுவினை பெருமளவு வெளிப்படுத்துகின்றன. இவை சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களைத் தடுத்து நம்மை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை பெருமளவு சிதைக்கிறது.இதனால் புதுவிதமான பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்குகின்றன.புவி வெப்பத்தை அதிகரிக்கின்றன.பருவநிலையை மாற்றி அதிக மழையோ,அதிக வறட்சியோ,சுனாமி,நில நடுக்கம்,போன்ற இயற்கை சீற்றங்களையோ ஏற்படுத்தி அழிவை ஏற்படுத்துகின்றன.பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்கிறது.மின்கலங்களின் ஆயுட்காலம் முடிந்தபிறகு குப்பையில் போடும்போது அதிலுள்ள வேதிப்பொருட்கள் நிலத்தை பாழ்படுத்துகிறது. நச்சுவாயுவை வெளிப்படுத்தி காற்றை மாசுபடுத்துகிறது.எக்ஸ் -ரே போன்ற மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகளும், அலைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்களும் அதிகப்படியான கதிர்வீச்சை வெளிப்படுத்தி புற்றுநோய் உட்பட பலவிதமான நோய்களை கொடுத்து உயிருக்கு ஆபத்தை கொடுக்கின்றன.

3.(ஆ) ஆக்கப்பூர்வ ஆலோசனை;
          மின் சக்தி குறைவாக பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கையாளும் நட்சத்திரக் குறியீடு தரமுத்திரை பெற்ற நிறுவனங்களின் தயாரிப்பு சாதனங்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும்.மின் சக்தியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.தேவையில்லாதபோது நிறுத்தி வைக்க வேண்டும்.
அலைபேசி போன்ற  சாதனங்களை வாங்கும்போது SAR என்னும் கதிர்வீச்சு ஆற்றலைக்  கட்டுப்படுத்தும் தர முத்திரை பெற்ற சாதனங்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும்.சுருக்கமாகவும்,விரைவாகவும் பேசி முடிக்க வேண்டும்.அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம்.தரைவழி இணைப்பு தொலைபேசியை பயன்படுத்தலாம்.
           
      4.(அ) தொழிற்சாலைகளின் உற்பத்தியால் ஏற்படும் கழிவுகளின் தீங்குகள்
            அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கேற்ப அதிகப் பயன்பாடுகள் நுகரப்படுகின்றன.தேவைக்கேற்ப உற்பத்திசெய்யப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் வெளியிடும் வேதிப்பொருட்கள்,மற்றும் நச்சுவாயுக்கள்,இரசாயனம் கலந்த கழிவுநீர்கள் வெளியேற்றப்பட்டு நிலமும்,நீரும்,காற்றும் அதிகளவில் மாசுபடுகின்றன.இதனால் சுற்றுப்புறச்சூழல் மாசடைகிறது.
(ஆ) ஆக்கப்பூர்வ ஆலோசனை;
        மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரைப்படி மாசு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.வெளிவிடும் புகையினை வடிகட்ட வேண்டும்.திடக்கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அழிக்க வேண்டும்.

5.(அ)  வாகனங்கள் போக்குவரத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பும்,
               நாட்டின் முதுகெலும்பே மோட்டார் வாகனங்களின் போக்குவரத்து என்ற கட்டாயத்தில் உள்ளோம்.நமது பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்லவும்,நாம் பயணிக்கவும்  போக்குவரத்து தேவைப்படுகின்றன.பொருள் போக்குவரத்து  ஓட்டுநர்கள் போதிய பயிற்சி இன்மையாலும்,அலட்சியத்தாலும் தேவையில்லாமல் வாகனங்களை இயக்குகின்றனர். பராமரிப்புக் குறைபாட்டால் எரிபொருள் சரிவர எரியாமல்  அதிகளவில் வெளிவிடுகின்றன.கலப்பட எரிபொருட்களை பயன்படுத்தி புகைமாசு ஏற்படுத்துகின்றனர்.ஆயில்,மசகு எண்ணெய் கசிவுகளால் சாலையில் ஒழுகி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.தனி நபர்கள் தன் விருப்பத்திற்காகவும், தற்பெருமைக்காகவும் இரு சக்கர வாகனங்களையும்,நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கி நடைதூரத்திற்குக் கூட வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். தேவையில்லாத பயணத்தை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர்.சாலை பாதுகாப்பு விதிகளை அறியாமல் இயக்குவதாலும்,மோட்டார் வாகன அறிவு குறைபாட்டால் இயக்குவதாலும் ,பராமரிப்பு இல்லாததாலும் அதிக எரிபொருள் செலவாகி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.சாலைகளை விரிவுபடுத்துவதற்காக மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.சாலைகளை தார் மற்றும் கான்கிரீட்களால் தளம் அமைப்பதால் நிலத்தடி சேமிப்பது தடைபடுகிறது.

5.(ஆ)ஆக்கப்பூர்வ ஆலோசனை;
            அலுவலகம் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவதற்காக  குறைவான தூரம் செல்பவர்கள் நடந்தோ,மிதிவண்டிகளிலோ பயணிப்பது  சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சிறந்த பயிற்சியாக அமைந்து உடல் ஆரோக்கியம் பெறும். தனி நபர் வாகனங்களை தவிர்த்து பொது வாகனங்களில் பயணிக்க வேண்டும்.வணிக  லாப நோக்கில் பொருட்களை எதிரும் புதிருமாக இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.இயன்றவரை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட அளவு பாரம் ஏற்றக்கூடிய கனரக வாகனங்களையே பயன்படுத்த  வேண்டும்.எரிபொருள் வீணாவதை தவிர்க்கவும்,எரிபொருள் சரிவர எரியாமல் கார்பன் மோனாக்சைடு வெளியேறி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் முறையான பராமரிப்பு செய்ய வேண்டும்.சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து வாகனத்தை தற்காப்புடனும் சீரான வேகத்துடனும் இயக்க வேண்டும்.நிற்கும் வாகனங்களின் இஞ்சின் இயக்கத்தை நிறுத்தி எரிபொருளை மிச்சப்படுத்த வேண்டும்.சாலையோரங்களில் அதிக மரங்களை வளர்க்க வேண்டும்.அதேபோல மழைநீரை சேமிக்கும் தொட்டிகள் ஆங்காங்கே அமைத்து நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும்.

6.(அ)நவீன வேளாண்மையும் சுற்றுச்சூழல் பாதிப்பும்.
               இன்றைய உணவுத் தேவையை பூர்த்தி செய்ய குறுகிய காலத்தில் அதிக  உற்பத்தியைப் பெருக்க மரபணு விதைகளையும்,வீரிய ஒட்டு ரகங்களையும் பயன்படுத்துகிறோம்.விளைச்சலை அதிகப்படுத்த இரசாயன உரங்களையும்,
ஊக்க மருந்துகளையும்,களைகளை கட்டுப்படுத்தவும்,நோய்த்தாக்குதலை குறைக்கவும்,பூச்சிகளை கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறோம்.இதனால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இறந்துவிடுகின்றன.நிலம் மலடாகிவிடுகிறது.பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்களின் நஞ்சு மண்ணிலேயே தங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.மருந்து தெளிக்கும்போது துகள்களாக காற்றில் கலந்து காற்றையும் மாசுபடுத்துகிறது.நீரில் கலந்து  தண்ணீர் மாசு அடைகிறது .இதனால் நச்சுத்தன்மையுள்ள காய்கறிகளை,கீரைகளைத்தான் உணவாக எடுத்துக்கொள்கிறோம்.
6.(ஆ) ஆக்கப்பூர்வமான ஆலோசனை,
         சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கைமுறை விவசாயமுறையை பயன்படுத்த வேண்டும்.நன்மை தரும் பூச்சிகளை வளர்த்தும்,பஞ்சகாவ்ய முறையை பயன்படுத்தியும்  நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை தடுக்க வேண்டும்.இயற்கை உரங்களையே பயன்படுத்த வேண்டும். நாட்டுரக பயிர்களையே விளைவிக்க வேண்டும்.நவீன சாகுபடிக்கான மூடாக்கு செய்யும் நெகிழி மற்றும் பாலித்தீன் பேப்பர்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.அதிக கால்நடைகளை வளர்த்து இயற்கை உரம் சேமிக்க வேண்டும்.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் உத்திகளை கையாள வேண்டும்.

7.(அ)மக்கள் தொகைப் பெருக்கமும்,பயன்பாட்டு மோகமும்.
      மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப குடியிருப்புகளும் அதிகப்படுத்தப்படுகின்றன.விளைநிலங்கள் காலி மனையிடங்களாக விற்பனையாக்கப்படுகின்றன.அடுக்குமாடி குடியிருப்புகளையும்,தொழிற்சாலைகளையும் கட்டும்போது நிலத்தடி நீரை தேங்கவிடாமல் கான்கிரீட் போட்டு தளத்தை நிரப்பிவிடுகின்றோம். நாகரிகம் வளர்வதற்கேற்ப அறிவியல் கண்டுபிடிப்புகளால் புதுவகையான பொருட்களும் சந்தைப்படுத்தப்படுகின்றன.வணிக நோக்கில் கவர்ச்சிகரமாக விளம்பரமும் செய்யப்படுகின்றன.தற்பெருமைக்காகவும்,பேராசையாலும்,மனம் போன போக்கில் தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி குவிக்கின்றோம்.பயன்படுத்தும் பொருட்களின் ஆயுட்காலம் நிறைவடையும் முன்னரே குப்பையில் போட்டுவிட்டு புதுவடிவில் வெளியிடும் பொருட்களை வாங்குகிறோம்.பழுதடைந்த மின் விளக்கு,மின்கலம் போன்ற  சாதனங்களையும்,குறுந்தகடு,சிலிக்கான் பலகை,போன்ற மின்னணுப்பொருட்களையும்,மின்னணுப்பொருட்களில் பயன்படுத்திய காலாவதியான மின் கலங்களையும்நெகிழிப்பொருட்கள்,போன்ற எதுவாக இருந்தாலும் பழுது ஆனாலோ அதன்மீது சலிப்பு ஏற்பட்டாலோ வீட்டிற்கு வெளிப்புறங்களில் வீசி எறிந்துவிடுகிறோம்.இதனால் சுற்றுச்சூழல் கெட்டு சுகாதாரக்குறைவால் பலவித நோய்களுக்கு ஆளாகின்றோம்.உடனடி நிவாரணத்திற்காக வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படும் அல்லோபதி மருந்துகளை அதன்பக்கவிளைவுகளை அறியாமல்உணவுக்குப் பதிலாக உட்கொள்கிறோம்.சிறுசிறு நோய்களுக்குக்கூட இரசாயனக்கலவை மருந்துகளை உட்கொண்டு அதன் கழிவுகளை வெளிப்புறங்களில் வீசி எறிந்து மருந்துப்பொருட்களின் குப்பையை உருவாக்குகிறோம்..

(ஆ) ஆக்கப்பூர்வ ஆலோசனை<
      நாகரீகம் கருதி சமூகத்தைப் பார்த்து தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.இயற்கைக்கு தீங்கு தராத பொருட்களை வாங்க வேண்டும்.சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டும்.
 கைகளால் அரைக்கும் ஆட்டுரல்,அம்மிக்கல் போன்றவைகளை பயன்படுத்தி ,துணிகளை துவைத்து உடலுக்கும் உழைப்பைத் தர வேண்டும்.மின்சாரமும் சேமிப்பாகும். மின் சாதனங்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.தேவையில்லாதபோது மின்சாதனங்களின் இயக்கத்தை நிறுத்திவிட வேண்டும்.இயன்றவரை நடந்தோ,மிதிவண்டியில் சென்றோ வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிவர வேண்டும்.சிறு வியாதிகளை குணப்படுத்த மருத்துவத்தாவரங்களை பயன்படுத்த வேண்டும்.இதற்காக வீட்டில் மூலிகைத்தாவரங்களை வளர்க்க வேண்டும்.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

முடிவுரை;
         நாம் வசிக்கும் வீடு,வீதி உட்பட கடைவீதி,அடுக்குமாடி வீடுகள்,சந்தைகள்,பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்கள்,சுற்றுலாத்தளங்கள்,தொழிற்சாலைகள்,பண்டிகைக்காலங்கள்,
திருவிழாக் காலங்கள்,
திருமண மண்டபங்கள்,விளையாட்டரங்கம்,கடற்கரைப் பகுதிகள், திரையரங்கம் என மக்கள் கூடும் இடங்களில் குவிக்கப்படும் குப்பைகளையும்,வெளியேறும் கழிவுநீரையும் கவனிக்க வேண்டும். இவை உருவாகுவதற்கான காரணங்களையும்  அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ,சுகாதாரக் கேடுகளையும் உணர வேண்டும்.எனவே இனியாவது விழிப்புணர்வு கொண்டு ஆண்டுதோறும் உலக மக்கள்  கடைப்பிடித்து வரும் (அ) ஜூன் 5 ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்திலும்,(ஆ)செப்டெம்பர் 16 ந்தேதி உலக ஓசோன் தினத்திலும், (இ) மார்ச் 21 ந் தேதி உலக வன தினத்திலும், (ஈ) மார்ச் 22 ந் தேதி உலக தண்ணீர் தினத்திலும், (உ) அக்டோபர் 5 ந் தேதி உலக இயற்கைச்சூழல் தினத்திலும், (ஊ) ஏப்ரல்5 ந் தேதி உலக கடல் தினத்திலும், (எ) ஏப்ரல் 22 ந் தேதி உலக பூமி தினத்திலும், (ஏ) ஏப்ரல் 7ந் தேதி உலக சுகாதார தினத்திலும், கலந்துகொண்டு விழிப்புணர்வு பெறுவோம். (ஐ) டிசம்பர்14 ந்தேதி முதல் 20 ந் தேதிவரை தேசிய எரிசக்தி வாரத்தையும் கடைப்பிடித்து சுற்றுச்சூழலை பாதுகாத்து நாம் அனுபவித்துவரும் இந்த பூமியை வளம் குன்றாமல் நம் சந்ததியினருக்கு விட்டுச்செல்வோம் என உறுதி எடுப்போம்.

(1) இந்தப் படைப்பு எனது சொந்தப்படைப்பே என்று உறுதியளிக்கிறேன்.

(2)இந்தப் படைப்பு,''வலைப்பதிவர் திருவிழா-2015''மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் 'மின் இதழ் இலக்கியப்போட்டிகள்-2015'' க்காகவே எழுதப்பட்டது' என உறுதியளிக்கிறேன்.

(3) 'இதற்கு முன் வெளியான படைப்பல்ல,முடிவு வெளிவரும்வரை வேறு இதழ்கள் எதிலும் வெளிவராது'என உறுதியளிக்கிறேன்.

வலைப்பதிவரின் பெயர்; C.பரமேஸ்வரன்,

 வயது 53 (பிறந்த தேதி 15 ஏப்ரல் 1963),

மின்னஞ்சல் முகவரி ; paramesdriver@gmail.com

 செல்பேசி எண் +91 9585600733

       வருகிற 2015 அக்டோபர் 11 ந் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் 4-வது வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படும் கையேட்டிற்கு எனது விவரங்களை கொடுத்துவிட்டேன்.

வலைப்பதிவு முகவரி; http://konguthendral.blogspot.com
ஈரோடு மாவட்டம்-
சத்தியமங்கலம் - 638402
    


12 கருத்துகள்:

  1. கட்டுரையில் உங்கள் ஈடுபாடு தெரிகிறது சார்!! போட்டியில் கலந்துகொண்டமைக்கு விழாக்குழுவின் சார்பாக நன்றிகள்! புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரியவரே, வணக்கம். திண்டுக்கல் தனபாலன் ஐயா உட்பட தங்களைப்போன்ற சான்றோர்கள் தமிழை இணையத்தில் வளர்க்க முழுமையாக ஈடுபட்டு தமிழுச்சமூகத்திற்காக சேவைப்பணி புரியும்போது என்னறிவுக்கு எட்டிய அனுபவத்தினை பகிருகிறேன்.நன்றிங்க. வாய்ப்பிருந்தால் http://consumerandroad.blogspot.comவலைப்பதிவினையும் பார்வையிடுங்க.
      என அன்புடன்,
      C.பரமேஸ்வரன்,
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம்.638402

      நீக்கு
    2. சார்! இன்றே சென்று அந்த வலையை பின்தொடர்கிறேன். ஆனால் விழா முடிந்த பின் முழுமையாக அங்கு படித்து கருத்திடுகிறேன். மன்னியுங்கள்:) இத்தனை மரியாதை வேண்டாம் அய்யா! நான் சிறியவள்!

      நீக்கு
    3. மரியாதைக்குரிய அம்மையீர்,வணக்கம். மிகைப்படுத்தி மரியாதை கொடுப்பதாக எண்ணுவதை ஏற்க மறுக்கிறேன்.இதுதாங்க நமது பண்பாடுங்க.வயது என்பது வருடத்தின் கணக்கு.ரத்த உறவுகளை நீ,போ,வா, என ஒருமையில் உரைநிகழ்த்துகிறோம்.அதுவே எல்லாம் வல்ல இறைவனை அவன்,இவன்,எனவும் அழைக்கிறோம். மற்ற அனைத்து பொது இடங்களிலும் மரியாதை நிமித்தமாக மரியாதைக்குரிய ஐயா,என்றோ மரியாதைக்குரிய அம்மையீர் என்றோ அழைப்பதுதாங்க எனது வழக்கம்.எனவே எதையும் தவறாக எடுக்காதீர்.அதேபோல எனது மற்ற வலைப்பதிவுகளை (26பதிவுகள் இருக்கலாம்) தங்களுக்கு நேரமும்,வாய்ப்பும் கிடைக்கும்போது பார்வையிடுங்க.நன்றிங்க.
      .என அன்புடன்
      C.பரமேஸ்வரன்,
      சத்தியமங்கலம்-638402
      ஈரோடு மாவட்டம்.

      நீக்கு
  2. அன்பின் இனிய
    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
    நலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க..
      மரியாதைக்குரிய யாதவன் நம்பி ஐயா அவர்களே, வணக்கம்.தங்களது வாழ்த்துக்களை சமூகம் நலனுக்காக ஏற்றுக்கொள்கிறேன்.
      நன்றியுடன் அன்பன்,
      C.பரமேஸ்வரன்,
      செயலாளர்,
      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
      சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு
      (அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பு)
      http://consumerandroad.blogspot.com
      Mobile Number: +91 9585600733

      நீக்கு
  3. பதில்கள்
    1. மரியாதைக்குரிய வலைப்பதிவர் சந்திப்பு-2015புதுக்கோட்டை அவர்களே,தங்களது நன்றி கலந்த வாழ்த்துக்கு எனது நன்றிங்க.

      நீக்கு
  4. ஒவ்வொரு விசயமாக எடுத்து விளக்கி ஆக்கப்பூர்வ யோசனைகளையும் பகிர்ந்த உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய தேன் மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களே,தங்களது வாழ்த்துரைக்கு நன்றிங்க.

      நீக்கு
  5. வணக்கம்! ஒவ்வொரு பிரிவாக தனித்தனியே பிரித்து சொல்லிச்சென்ற விதமும்அதற்கு தகுந்த ஆலோசனையும் முடிவில் தந்தது வெகு சிறப்புங்க ஐயா.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    தென்றலில் தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு நன்றி கூறவும் கொங்குத் தென்றலுக்கு வந்தேன். தொடர்கிறேன். நன்றிங்க ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய அம்மையீர்,
      வணக்கம். தங்களது கருத்துரைக்கு சமூகம் சார்பாக நன்றிங்க.சென்னை வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியில் கவிதை மலர் வெளியிட்ட தாங்கள் புதுக்கோட்டையிலும் வெளியிடுவீர்.(எனக்கும் ஒரு புத்தகம் கிடைக்குமல்லவா?) என எதிர்பார்த்தேன்.!. இருப்பினும் தங்களது வருகைக்கு நன்றிங்க.
      என அன்பன்,
      C.பரமேஸ்வரன்,
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம் - 638402
      C.பரமேஸ்வரன்,
      http://konguthendral.blogspot.com
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம் 638402

      நீக்கு

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...