30 செப்டம்பர் 2015

வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

      தலைப்பு;
          சுற்றுச்சூழலைக் காத்திட வாழ்க்கையை முறைப்படுத்துவோம்.

  முன்னுரை;

         சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்திய அரசியல் சாசன எண் 51A உட்பிரிவு (எ) - ன்படி நம் ஒவ்வொருவரின்  அடிப்படைக் கடமை ஆகும்.நம்மைச்சுற்றியுள்ள காடுகள்,ஏரிகள்,ஆறுகள்,காட்டு விலங்குகள்,மற்றும் பிற உயிரினங்கள் வசிக்கின்ற இயற்கை சுற்றுச்சார்புகளை மேம்படுத்துவதும்,பாதுகாப்பதும் நாம் ஒவ்வொருவரும் கடமையாகக்கொள்ள வேண்டும்.    

      பொருள்;

        (1)  நாகரீகம் வளர,வளர அறிவியல் கண்டுபிடிப்புகளும்,அதற்கேற்ப நம் தேவைகளும்  அத்தியாவசியமானதாக மட்டுமின்றி ஆடம்பரமாகவும் பெருகிக்கொண்டே செல்கிறது.பெருகி வரும் மக்கள்தொகையால் வசிப்பிடங்கள் அதிகப்படுத்துவதாலும்,நாகரீகம் கருதி தனி மனித பயன்பாட்டிற்கு கூட பெரிய பங்களா போன்ற வீடுகளை கட்டி நிலத்தின் பரப்பை கான்கிரீட் போன்ற கலவையால் பூசி நிலத்தடி நீரை பூமியில் சேரவிடாமல் ஓடவிடுகிறோம்.அறிவியல் கண்டுபிடிப்புகளால் நம் பயன்பாட்டிற்கேற்றவாறு வாங்கும் அனைத்துபொருட்களுக்கும் கவரிங் எனப்படும் பொட்டலமாக்குவதற்கு பாலித்தீன் பயன்பாடு,விளம்பரத்திற்கு கண்ணைக் கவரும் இரசாயன வண்ணப்பூச்சுகள்,எடுத்துச்செல்லும் நிமிட நேரத்தேவைக்குக்கூட பாலித்தீன் மற்றும் நெகிழிப்பொருட்கள் பயன்பாடு.என மிகவும் குறைந்த நேரத்திலேயே குப்பையாக நிலத்தில் வீசியெறிந்து பூமியை நஞ்சாக்குகிறோம்.எரித்தாலும் நச்சு வாயுக்களை வெளியேற்றி காற்றை மாசுபடுத்துகிறது. 

 இதை தவிர்க்க;
            குறைந்த எண்ணிக்கையிலுள்ள குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான அளவு வீட்டை மட்டும் கட்டி பயன்படுத்த வேண்டும்.நிலத்தடி நீரை அதிகப்படுத்த மழைநீர்த்தொட்டி அனைத்து வீடுகளிலும் அமைக்க வேண்டும்.நெகிழிப்பொருட்களை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.அல்லது குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்.அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.இறுதியாக மறு சுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
  
       (2) இயற்கை சுழற்சி முறையை மீறி கட்டுப்பாடற்ற நமது பயன்பாடு அதிகரிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. ஏறக்குறைய தாவர வகைகள்,வன விலங்குகள் மற்றும் நீர்வாழ்வன வகைகள் என அனைத்தையும் பேராசை மிகுதியாலும்,உணவுக்காகவும்,அழகு சாதனப்பொருட்களுக்காகவும்,ஆடம்பரத்திற்காகவும் இயற்கைவிதிகளுக்கு மீறிய அளவு அறுவடை செய்து இயற்கைவளங்களை அழித்து வருகிறோம்.இதனால் பருவநிலை மாறுகிறது,புவி அதிக வெப்பமடைகிறது. மழை குறைந்து நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.

 இதை தவிர்க்க;
          நவீன வேளாண்மை முறையில் இரசாயன உரங்களையும்,பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை முறை விவசாயத்தை செய்ய வேண்டும்.வனவிலங்குகளாலும்,நீர் வாழ்வனவற்றாலும்  இந்த பூமிக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்து அவைகளை பாதுகாக்க வேண்டும்.

        (3) சமூக அக்கறை இன்மையாலும்,நம்மால் உருவாக்கப்படும் குப்பைகளாலும் சுற்றுச்சூழல் மாசு உண்டாகிறது.நெகிழிக் குப்பைகள்,வீட்டு உபயோகப்பொருட்களின் ஆயுட்காலம் முடிந்த குப்பைகள்,மருத்துவ உபகரணங்கள் மற்றும் வேதிப்பொருட்களின் கழிவுகள்,வேளாண் இடுபொருட்களாகப் பயன்படுத்தும் வேதிப்பொருட்களின் கழிவுகள்,பெருகி வரும் கட்டடப்பொருட்களின் கழிவுகள்,தொழிற்சாலை மற்றும் மோட்டார் வாகனங்களின் திட,திரவக் கழிவுகள் மற்றும் வெளியேற்றும் புகையின் நச்சு,சாக்கடைகளை தேக்கமடையச்செய்தல் போன்ற சமூக அக்கறையின்மை காரணமாக சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.


இதை தவிர்க்க;
          நம்மால் உருவாகும் குப்பைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து குறைக்கவும்,சரியானமுறையில் மேலாண்மை செய்யவும் விழிப்புணர்வு பெற்று செயல்படுத்த வேண்டும்.சாக்கடை நீர் தேங்காதவாறு கண்காணிக்க வேண்டும்.மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டதிட்டங்களை கடைபிடிக்க வேண்டும்.

          (4) உணவாக உட்கொள்வதிலிருந்து அதன் கழிவுகள் உட்பட கழிவுகளாக வெளியேற்றப்படுபவை வரை சரியான கட்டுப்பாடு இன்மையால் சுற்றுச்சூழல் கேடு உண்டாகிறது.உணவுப்பொருட்கள் பற்றி கவனத்தில்கொள்ளும்போது இயந்திரமயமான அவசர உலகில் நம் தேவை கருதி விரைவு உணவுப்பழக்கங்களை ஏற்படுத்தி வருகிறோம்.விரைவு உணவகங்களும் வியாபார நோக்கில் சுவை கூட்டவும்,அழகான தோற்றத்திற்கான நிறங்களுக்காகவும், நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கவும்,பழைய உணவுப்பொருட்களை,உணவு தயாரிக்கும் எண்ணெய் வகைகளை தரக்குறைவானதாகவும்,மீண்டும் மீண்டும் பயன்படுத்தியும் நச்சுத்தன்மை வாய்ந்த உணவுகளையும்,சுகாதாரமின்றி,சுத்தமின்றி சாலையோரங்களில் உள்ள உணவகங்களிலும் உட்கொண்டு சுகாதாரச்சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாகின்றோம். 

  இதை தவிர்க்க;                 
          நுகர்வோராகிய நாம் கவர்ச்சியான விளம்பரத்திற்கும், இலவசங்களுக்கும், சலுகைகளுக்கும், தள்ளுபடிகளுக்கும், நயவஞ்சகப் பேச்சுக்கும் ஏமாறாமல் அரசு தர முத்திரை பதித்துள்ள பொருட்களையே வாங்க வேண்டும்.சுத்தமான மற்றும் சுகாதாரமானமுறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே பயன்படுத்த வேண்டும்.                         
                       
       (5) போக்குவரத்து ஆகிய பயணம் தொடங்கி அலுவலகங்களில் பணியினை முடிக்கும்வரை  போதிய விழிப்புணர்வு இல்லாமையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகிறது.தனி நபர் வாகனத்தின் தேவையில்லாத பயணத்தாலும் ,மோட்டார் வாகனங்களின் பராமரிப்புக் குறைபாடுகளாலும்,தேவையில்லாத நேரங்களில் இஞ்சினை ஓடவிடுதலாலும்,கரியமிலவாயு அதிகளவில் வெளியேறி சுற்றுச்சூழலை பாதிக்கிறது.பணியின்போது தேவையில்லாத நேரங்களில் இயங்கும்  மின் சாதனங்களை நிறுத்த தவறுவதாலும்,நெகிழிப்பொருட்கள் உட்பட அலுவலகங்களில் பயன்படுத்தும் பொருட்களை குப்பையாக வெளியேற்றுவதாலும் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. 

இதை தவிர்க்க;
            அருகிலுள்ள அலுவலகங்களுக்கோ,வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கோ நடந்தோ சென்று அல்லது மிதிவண்டியில் சென்று வரலாம்.இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் நமது உடலுக்கும் பயிற்சியாக அமைகிறது.அலுவலகங்களிலோ,வீட்டிலோ பொது இடங்களிலோ தேவையில்லாமல் தண்ணீர் வீணாவதை கண்டாலோ,மின் சாதனங்கள் இயக்கத்தில் இருந்தாலோ உடனே நிறுத்த வேண்டும்.வீட்டில் துணி துவைப்பதிலிருந்து,மாவு ஆட்டுதல்,அரைத்தல் போன்ற வீட்டு வேலைகளை பழைய முறைப்பழக்கத்திற்கு மாற வேண்டும்.இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன் நமது உடலுக்கும் ஆரோக்கியமான பயிற்சியைப் பெறலாம்.

      (6) நம் தேவைகளை பெருக்கிக்கொள்வதற்கேற்ப சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.

மனம் விரும்புதலுக்கேற்றவாறு தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கிக்குவிப்பதாலும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுகிறது.மற்றவர்களைப்பார்த்து அவர்களைப்போலவே நாமும் பொருட்களை வாங்கி வீட்டில் குவித்தால்தான் பெருமை என்ற தவறான எண்ணங்களாலும் தேவையில்லாத பொருட்களை வாங்கி வீட்டில்  குவிப்பதாலும் குப்பையாக பயன்பாடு இன்றி சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது.

இதை தவிர்க்க;
        மனம் போன போக்கில் எல்லாப்பொருட்கள் மீதும் ஆசைப்படாமல் தேவைக்கேற்றவாறு அத்தியாவசியப்பொருட்களை மட்டும் வாங்க வேண்டும்.மீண்டும்,மீண்டும் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.சிக்கனமே சீரான வாழ்வு என்பதை உணர வேண்டும்.

       (7) பயன்படுத்தும் மின் சாதனங்களாலும்,மின்னணுப்பொருட்களாலும் கதிர்வீச்சு ஏற்பட்டும்,நச்சு வாயுக்கள் வெளியேறியும்  சுற்றுச்சூழல் கேடு உண்டாகிறது.குளிர்சாதனப்பெட்டிகள்,குளிரூட்டும் கருவிகள்,சூடுபடுத்தும் மின்சாதனங்கள்,மின் அடுப்புகள்,துணி தேய்க்கும் கருவி,துணி துவைப்பான்,இயந்திர ஆட்டுக்கல்,இயந்திர அரைப்பான், எக்ஸ் ரே மற்றும்  ஸ்கேன் போன்ற மருத்துவ உபகரணங்கள்,மொபைல் போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தும்போது அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தி  சுற்றுச்சூழலை பாதிக்கிறது.மேசைக் கணினி,மடிக்கணினி,அலைபேசி,கணக்கிடும் கருவி,மின்கலத்தால் ஒளிரும்  விளக்குகள்,மின்கலத்தால் இயங்கும் கடிகாரம்,என  மின்சாரத்தை தேக்கிவைக்கும் மின்கலங்கள் ஆகியன ஆயுட்காலம் முடிந்தபிறகு குப்பையாக தூக்கி எறியும்போது அதில் பயன்படுத்தப்பட்ட இரசாயனப்பொருட்களால் நச்சுத்தன்மை பரவி சுற்றுச்சூழலை நாசமாக்குகிறது.

இதை தவிர்க்க;
         பயன்படுத்தும் மின் சாதனங்களையும்,மின்னணு சாதனங்களையும் தரமானதாக அரசு தர முத்திரை பெற்றுள்ளவையாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.இதனால் அவைகளின் ஆயுட்காலம் நீடிப்பதுடன் சுற்றுச்சூழலைப்பாதிக்கும் காரணிகள் கட்டுப்படுத்தப்படும்.

  (8) நுகர்வோரைக் கவர்ந்து விற்பனையை அதிகரிப்பதற்காக நடக்கும் வணிக மோசடிகளாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவுப்பொருட்களிலிருந்து உயிர் காக்கும் மருந்துகள் வரை தேவையான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம்.அவையனைத்துமே இரசாயன வண்ணம் பூசியும்,நறுமணத்திற்காக  சில வேதிப்பொருட்களை சேர்த்தும்,சுவைக்காகவும்,அழகுக்காகவும்,இனிப்புக்காகவும்,இரசாயனப்பொருட்கள் கலந்தும்,பொட்டலம் கட்டும் கவர்கள் நெகிழியாலும்,பாலித்தீன் தாளினாலும் கட்டப்பட்டு அதன் மேற்புறம் மினுமினுப்பாக தோற்றமளிக்க இரசாயனக்கலவை பூசியும்,கலப்படப்பொருட்களை கலந்தும் இலாப நோக்கத்தற்காக சமூக நலனைப்பற்றிக்கவலைப்படாமல்  சம்பாதனையே குறிக்கோள் என்ற வணிக மோசடியாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது.

இரசாயனச் சேர்க்கை நடைபெறும் அனைத்து  பொருட்களாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

இதை தவிர்க்க;
  நமது தேவைகளுக்காகவே அனைத்து விற்பனைப்பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே நாம் நுகர்வோர் விழிப்புணர்வு பெற்று தரமான அரசு தர முத்திரை பதித்த பொருட்களையே வாங்க வேண்டும். நேர்மையான வணிகர்களை ஊக்குவிக்க வேண்டும். போலியான வணிகர்களை சட்டப்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிவுரை;
     மற்றவர்களைப்பற்றிக் கவலைப்படாமல் நமது சுயநலமே முக்கியமானதாக கருதி வாழ்ந்து வரும் நாம் இனியாவது  இயற்கைக்கு மாறான செயல்களாலும்,இயற்கை வளங்களை நாசமாக்கும் வேதிப்பொருட்களின் தீங்குகளாலும் ஏற்படும் விபரீதங்களை உணர்ந்து அவற்றைத்தவிர்ப்போம்.சுற்றுச்சூழலை பாதுகாத்து இந்த வளமான பூமியை நமது வருங்கால தலைமுறையினருக்கு விட்டுச்செல்வோம்.
 
உறுதிமொழி;
வகை (2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது இந்த படைப்பு.
''சுற்றுச்சூழலை காத்திட வாழ்க்கையை முறைப்படுத்துவோம்'' என்ற தலைப்பிலான இந்தப் படைப்பு எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன்.இந்தப்படைப்பு,''வலைப்பதிவர் திருவிழா-2015'மற்றும் தமிழ் இணையக்கல்விக்கழகம் நடத்தும் ''மின் தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015''க்காகவே எழுதப்பட்டது என்றும் இந்தப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல,முடிவு வெளி வரும்வரை  வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதி அளிக்கிறேன்.
வலைப்பதிவர் பெயர்;C. பரமேஸ்வரன்,
 வலைப்பதிவு முகவரி;http://konguthendral.blogspot.com
 அலைபேசி எண் 9585600733
 மின்னஞ்சல் முகவரி; paramesdriver@gmail.com

6 கருத்துகள்:

  1. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க ஐயா,
      மரியாதைக்குரிய புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழா2015 குழுவினர்களே,வணக்கம்.தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன். ஆதரவுடன் அன்பும் கொண்ட நண்பன்,
      C.பரமேஸ்வரன், 9585600733
      http://konguthendral.blogspot.com
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம்638402

      நீக்கு
  2. வணக்கம் அய்யா! தங்கள் தளத்திற்கு புதியவன்! ஆழ்ந்த. விரிவான அலசல்களுடன் அருமையான கட்டூரை! வாழ்த்துங்கய்யா!

    நேரமிருப்பின் எம் கட்டூரைக்கும் கருத்து தாருங்கள்! நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஆழமான கட்டுரை.....
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய மகேஸ்வரி பாலசந்திரன் அம்மையீர்,
      வணக்கம்.
      தங்களது கருத்துப்பதிவிற்கு கொங்குத்தென்றல் சார்பாக நன்றிங்க.
      என அன்புடன்,
      C.பரமேஸ்வரன்,
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம் 638402

      நீக்கு

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...