11 அக்டோபர் 2013

இன்சூரன்ஸ் தொடர்ச்சி-06

இன்சூரன்ஸ்-06

     கல்வி, செல்வம், வீரம்… இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு வாகனத்துக்கு டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி. புத்தகம், இன்ஷூரன்ஸ் ஆகிய மூன்றும்! ஆனால் நடைமுறையில் டிரைவிங் லைசன்ஸ் ஆர்.சி. புத்தகம் ஆகியவற்றை வைத்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வைத்துக்கொள்வதில்லை, அல்லது புதிப்பித்துக் கொள்வதில்லை. இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் சிலரும் அது இல்லாவிட்டால் போலீஸார் பிடித்துக்கொள்வார்களே என்பதால்தான் எடுத்திருப்பார்கள். ஆனால் அதன் அவசியம் என்ன, வாகனம் ஓட்டுபவர்களுக்கு அந்த ஒரு இன்ஷூரன்ஸ் மட்டுமே போதுமானதா என்பதைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை… அதுகுறித்து விளக்கமாகப் பார்ப்போம்…
மூன்றாம் நபர் பாலிசி
வாகனம் வைத்திருப்பவர்கள் முதலில் எடுக்க வேண்டியது, மூன்றாம் நபர் பாலிசி (Third Party Insurance Policy). இதனுடைய அவசியம் என்ன என்று பார்க்கலாம்… நம் வாகனம் யார் மீதாவது மோதிவிடுகிறது… அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுவிடுகிறது அல்லது உயிரிழந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்… அல்லது நம் வாகனம் மோதி யாருடைய சொத்துக்காவது சேதம் ஏற்பட்டுவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்… இந்நிலையில் பாதிக்கப்பட்டவருக்கோ அவரது குடும்பத்துக்கோ நாம் இழப்பீடு கொடுத்தாக வேண்டும். அதனால் நமக்கு பெருத்த பண நஷ்டம் ஏற்படும். சிலருக்கு அந்த அளவுக்கு கொடுக்க பணமே இல்லாமல் போகலாம். இதுபோன்ற சமயங்களில் கை கொடுப்பதுதான் மூன்றாம் நபர் பாலிசி.
இந்த பாலிசி எடுத்திருந்தால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன்ஷூரன்ஸ் கம்பெனியே இழப்பீட்டைக் கொடுத்து விடும். சில நூறு ரூபாயை பிரீமியமாகக் கட்டுவதன் மூலம் பல லட்சங்களை இழக்காமல் இருக்கமுடியும். இருப்பினும் இந்த பாலிசியை சட்டப்படி எடுக்க வேண்டும் என்பதால்தான் எடுக்கிறார்களே தவிர அதன் அருமை தெரிந்து எடுப்பதில்லை.
இதில் சட்டப்படியான பாலிசி மட்டும் என்றால் (Act Only Policy) மூன்றாம் நபரின் சொத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு அதிகபட்சம் 6,000 மட்டும்தான் இழப்பீடு தரமுடியும். ஆனால் கூடுதல் பிரீமியம் கட்டுவதன் மூலம் டூ வீலருக்கு 1 லட்சம் , காருக்கு 7.5 லட்சம் என இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ள முடியும். மூன்றாம் நபர் பாலிசியில் ஒரு லட்ச ரூபாய்க்கான தோராய ஆண்டு பிரீமியம் 300 என்ற அளவில்தான் இருக்கும்.
ஓன் (own) டேமேஜ் பாலிசி
முன்னர் சொன்னது போல நம் வாகனம் மோதி மூன்றாம் நபர் பாதிக்கப்பட்டால் மூன்றாம் நபர் பாலிசி எடுப்பதன் மூலம் அவருக்கு இழப்பீடைக் கொடுத்து விடலாம். ஆனால் அந்த விபத்தில் நமது வாகனமும் பாதிக்கப்பட்டி ருக்குமே! அதற்கு இந்த தேர்ட் பார்ட்டி பாலிசிகள் மூலம் இழப்பீடு கிடைக்காது. அதற்கு ‘ஓன் டேமேஜ் பாலிசி’ (Own Damage Polic) என்ற பாலிசியை தனியாக எடுக்க வேண்டும்.
இந்த பாலிசி எடுத்தால், விபத்து, மழை, வெள்ளம், தீ, திருட்டு உள்ளிட்ட காரணங்களால் பாலிசிதாரரின் வாகனம் பாதிக்கப்பட்டால் இழப்பீடு கிடைக்கும். இந்த பாலிசியில், பாலிசி எடுத்தவரின் வாகனத்துக்கு ஏற்படும் சேதம், அதைச் சரிசெய்ய அல்லது பாகங்களை மாற்ற ஆகும் செலவு ஆகியவை வழங்கப்படும். இந்தப் பாலிசியை சட்டப்படி கட்டாயமாக எடுத்தாகவேண்டும் என்பதில்லை. அதனால் இதனை எடுப்பவர்கள் மிகக் குறைவு. இருப்பினும் இந்தப் பாலிசியையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் நமது வாகனத்தின் மூலம் பிறருக்கு ஏற்படும் இழப்பையும், நமது வாகனத்துக்கு ஏற்படும் நஷ்டத்தையும் ஈடு செய்துகொள்ளலாம்.
தொகுப்பு பாலிசி
மேற்கண்ட இரு பாலிசிகளையும் தனித் தனியே எடுப்பதற்கு பதில் இவற்றின் பலன்களை ஒரு சேரக் கொண்ட தொகுப்பு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.
தனிநபர் விபத்து பாலிசி
சரி, மோதியதால் மூன்றாம் நபருக்கு இழப்பீடு கிடைத்துவிடும். வாகனத்தில் ஏற்பட்ட சேதத்துக்கும் இழப்பீடு கிடைத்துவிடும். ஆனால் வாகனத்தை ஓட்டிய நமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? வாகனத்தின் உரிமையாளருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டாலோ அல்லது உறுப்புகளை இழக்க நேர்ந்தாலோ இழப்பீடு தேவை எனில் அதற்கு தனிநபர் விபத்து பாலிசி (Personal Accident Policy) எடுப்பது அவசியம். இந்தப் பாலிசியை பொதுக் காப்பீடு நிறுவனங்கள் ஜனதா தனிநபர் விபத்து பாலிசி என்ற பெயரில் வழங்கி வருகின்றன.
இந்த தனிநபர் விபத்து பாலிசியில் மூன்று வகை இருக்கிறது. விபத்தில் உயிரிழந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவது ஒரு வகை. விபத்தில் மரணம் மற்றும் அடிபட்டால் இழப்பீடு வழங்குவது இரண்டாம் வகை. விபத்தினால் நிரந்தர அல்லது தற்காலிக ஊனம் ஏற்பட்டு, அதனால் பணிக்குச் செல்ல முடியவில்லை என்றால், அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகத் தருவது மூன்றாம் வகை.
இந்த தனி நபர் விபத்து பாலிசியில் மருத்துவச் செலவு மற்றும் நஷ்டத்துக்கு ஏற்ப இழப்பீடு கொடுக்க மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் பாலிசியில் குறிப்பிட்டபடி, இழப்பீட்டுத் தொகையைத் தந்துவிடுவார்கள். தனிநபர் விபத்து இன்ஷூரன்ஸில், பாலிசித் தொகை அவரின் வருமானத்தைப் பொறுத்து காப்பீடு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்படும்.
ஜனதா பாலிசியில் அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குதான் பாலிசி எடுக்கும் நிலை இருக்கிறது. ஆண்டு பிரீமியம் சுமார் 60-75 ரூபாய்தான். பொதுவான தனிநபர் விபத்து பாலிசியில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஆண்டு பிரீமியம் சுமார் 130-150 ரூபாய்தான். இதில் கூடுதல் தொகைக்கு பாலிசி எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. பாலிசிதாரரின் வயது, பணியின் போது அவருக்குள்ள ரிஸ்க் போன்றவற்றைப் பொறுத்து பிரீமியம் மாறுபடும். அலுவலகத்துக்குள் வேலை பார்ப்பவரை விட, அடிக்கடி வெளியில் சென்று வருபவருக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும்.
வொர்க்மேன்ஸ் காம்பன்சேஷன் பாலிசி
பல இடங்களில் வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை ஓட்ட மாட்டார். டிரைவர் வைத்திருப்பார்கள். அப்போது, டிரைவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் சட்டப்படி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டுக்கு தனியே ‘வொர்க்மேன்ஸ் காம்பன்சேஷன்’ பாலிசி எடுப்பது அவசியம். கூடுதலாக 25 பிரீமியம் செலுத்தி இந்த பாலிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி உரிமையாளரை தவிர மற்றவர்களையும் பாலிசியில் சேர்த்துக் கொள்ள முடியும்.
வாகனத்தில் எப்போதும் அதன் உரிமையாளர் மட்டும் பயணம் செய்வதில்லை. பல நேரங்களில் உடன் குடும்பத்தினரும் செல்வார்கள். உரிமையாளருடன் குடும்பத்தினர் அடிக்கடி பயணம் செய்பவர்களாக இருந்தால், அவர்கள் பெயரையும் பாலிசியில் சேர்த்து தனிநபர் விபத்து பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் டிரைவருக்கு அதிகபட்சம் 1 லட்சத்துக்கும், மற்றவர்களுக்கு 2 லட்சத்துக்கும் கவரேஜ் இருக்கும்.
மேலும், காரில் உறவினர்- நண்பர்கள்- அலுவலகத் தில் பணி புரிபவர்கள் என பலர் பயணம் செய்யக் கூடும் என்றால்., இவர்களுக்கு பயணிகளுக்கான தனி நபர் விபத்து பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மெடிக்ளைம் பாலிசி
அதெல்லாம் சரி, வாகன விபத்தில் சிக்கி உரிமையாளர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் மேலே கூறப்பட்ட பாலிசிகளில் இழப்பீடு கிடைக்காது. அதற்கு தனியே மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம்.
இனி தேர்ட் பார்ட்டி, ஓன் டேமேஜ், தனி நபர் விபத்து, மெடிக்ளைம் பாலிசிகள் இல்லாமல் வண்டியை எடுக்க மாட்டீர்கள்தானே?
மோட்டார் பாலிசியில்
எதற்கெல்லாம் இழப்பீடு இல்லை? எதற்கெல்லாம் கிளைம் இல்லை என்பதைத் தெரிந்து, அதற்கு ஏற்பச் செயல்படுவது நல்லது.
வாகனம் பிரேக் டவுன் ஆனால் இழப்பீடு இல்லை.
தற்கொலை எண்ணத்துடன் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு இல்லை.
தனிநபர் வாகன பாலிசியில், வாகனத்தை வாடகை டாக்ஸி அல்லது சரக்கு போக்குவரத்து வண்டியாகப் பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு, இழப்பீடு கோரினால் இழப்பீடு இல்லை.
வாகனம் ஓட்டும் உரிமையாளர் அல்லது டிரைவரிடம் முறையான மற்றும் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இழப்பீடு கிடைக்காது.
வாகனத்தை ஓட்டுபவர்கள் மது அல்லது போதைப் பொருள் மயக்கத்தில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு இல்லை.
அனுபவம் ஆயிரம்
”இன்ஷூரன்ஸ் ஏஜென்டா இருக்குறவங்க பாலிசிதாரருக்கு நம்பிக்கையாவும், நாணயமாவும் நடந்துக்கணும். அந்த வகையில என்னிக்குமே அதிக லாபம் கிடைக்கணும்னு சம்பந்தம் இல்லாத பாலிசிகளை அவங்க தலையில் திணிக்கக் கூடாது.
எதுக்காகவும் வாடிக்கையாளர்களை காத்திருக்க வைக்கக்கூடாது. சொன்ன நேரத்தில் சரியா போய் நிற்க வேண்டும். நாலு கஸ்டமர்களை அலைஞ்சு திரிஞ்சு பிடிச்சுடலாம். அவங்களை நிரந்தரமா தக்க வச்சுக்கிறதுதான் அதை விடக் கஷ்டம். கஸ்டமருக்குத் தேவையான திட்டத்தை விளக்கிச் சொன்னா நம்மை விட்டுப் போகவே மாட்டாங்க. 

 நன்றிங்க vidhai2virutcham அவர்களுக்கு.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...