11 அக்டோபர் 2013

இன்சூரன்ஸ் தொடர்ச்சி....03

இன்சூரன்ஸ ---03

உடல் ஊனமுற்றவர்களுக்கு, அவர்கள் ஓட்டுவதற்கு வசதியாக வாகனம் மாற்றி வடிவமைக்கப்பட்டு இருந்தால், பிரீமியத்தில் (ஓன் டேமேஜ்) 50 சதவிகிதம் தள்ளுபடி இருக்கிறது. ஊனமுற் றோருக்கு பிரத்யேக சேவை செய்யும் நிறுவனங்களுக்கும் இதே போல் சலுகை இருக்கிறது. பழைய கார் வாங்கும்போது… பழைய வாகனத்தை வாங்கும்போது, அந்த வாகனத்தின் இன் ஷூரன்ஸ் பாலிஸியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தேதி முடிந்திருந்தால், புதிய பாலிஸி எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய வாகனமாக இருந்தாலும் சரி, பழைய வாகனமாக இருந் தாலும் சரி, தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்து கொடுக்க மாட்டார்கள்.  
            விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுக்கும்போது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (Terms and Conditions) நன்கு படித்துப் புரிந்து கொண்டு கையெழுத்துப் போடுவது அவசியம். இது சிறிய எழுத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும். அர்த்தம் புரியவில்லை என்றால், இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேளுங்கள். இதனைச் செய்தால், பிறகு கிளைம் செய்யும்போது பிரச்னைகள் வர வாய்ப்பு இல்லை. எதற்கெல்லாம் இழப்பீடு இல்லை? எதை எல்லாம் செய்தால் கிளைம் கிடைக்கும், கிடைக்காது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கு ஏற்ப செயல் படுவது ஒன்றே மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதன் லாபத்தை முழுமையாகப் பெற உதவும்.
               இதர உபயோகம்: தனி நபர் வாகன பாலிஸியில், வாகன த்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். அந்த வாகனத்தை வாடகை டாக்ஸியாக அல்லது சரக்கு போக்குவரத்து வாக னமாகப் பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு இழப்பீடு கோரினால் எதுவும் கிடைக்காது. ஓட்டுநர் உரிமம்: வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) முறையான மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்து நடந்தால், இழப்பீடு கிடைக்காது. மது/போதை மருந்து பயன்பாடு: வாகனத்தை ஓட்டுகிறவர்கள் (உரி மையாளர் அல்லது ஓட்டுநர்) மது அருந்திவிட்டு அல்லது போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு இல்லை. பிரேக் டவுண்: வாகனம் பிரேக் டவுண் ஆனால் இழப்பீடு இல்லை. டயர் சேதம் அடைந்தால்: டயருக்கு மட்டும் தனியே சேதம் ஏற்ப ட்டால் இழப்பீடு இல்லை. அதே நேரத்தில், வாகனம் சேதம் அடையும்போது டயரும் பாதிக்கப்பட்டால் இழப்பீடு உண்டு. 
            தேய்மானம்: நாளடைவில் ஏற்படும் வாகனத்தின் தேய்மானத்துக்கு இழப்பீடு இல்லை. விபத்து எல்லை: விபத்தானது இந்திய நாட்டின் எல்லைக்கு வெளியே நடந்தால் இழப்பீடு கிடைக்காது. போர் காலத்தில்: போர் நடக்கும் பகுதிகளில் இந்த பாலிஸியால் பலன் இல்லை.  
                தற்கொலைத் திட்டம்: உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலை எண்ணத்துடன் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டால், இழப்பீடு இல்லை. வழக்கமான
               பராமரிப்பு: வழக்கமாக குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும் பராமரிப்புச் செலவுகளுக்கு கிளைம் கிடையாது. வயது முக்கியம்: வாகனத்தை 16 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டியிருந்தால் இழப்பீடு இல்லை. பழகுநர் உரிமம் பெற்றவர் ஓட்டி வாகனம் விபத்துக்குள்ளானால், உடன் உரிமம் பெற்ற ஒருவர் இருந்திருந் தால்தான் இழப்பீடு கிடைக்கும். கிளைம் செய்வது எப்படி? வாகனத்தின் உரிமையாளர்தான் இழப்பீடு கோர முடியும். இந்தியாவுக்குள் எந்தப் பகுதியில் வாகன விபத்து நடந்தாலும் இழப்பீடு உண்டு. மேலும், இழப்பீட்டை உடனே கிளைம் செய்ய வேண்டும். சிறிய ரிப்பேர்களுக்கான தனித் தனி கிளைமை மொத்தமாகச் சேர்த்து வைத்து, கிளைம் செய்தால் தரமாட்டார்கள். ஒருங்கிணைந்த பாலிஸி எடுத்திருந்தால், வாகனம் விபத்துக்குள்ளான சமயத்தில், அதனை சம்பவ இடத்திலிருந்து பணிம னைக்கு சீர் செய்ய எடுத்துச் செல்வதற்கான கட்டணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் அளிக்கும். இந்தக் கட்டணம், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.300. காராக இருந்தால் ரூ.1,500. இதற்கு மேல் கூடுதல் தொகை தேவை என்றால், கூடுதல் பிரீமியம் கட்டி பாலிஸியை முதலிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட தொகை அல்லது உண்மையில் செலவான தொகை, இதில் எது குறைவோ அதனை இன்ஷூ ரன்ஸ் நிறுவனம் வழங்கும். விபத்து நடந்தது என்றால், யாராவது காயம் அடையும்பட்சத்தில் மோட்டார் வாகனச் சட்டப்படி, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்க வேண்டும். விபத்தில் சிக்கிய இதர வாகனங்களின் பதிவு எண், சாட்சிகளின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை முதலில் சேகரித்துக் கொள்ள வேண்டும்.  
          விபத்து ஏற்பட்ட உடனே இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும். அவர்களின் அலுவலகத்துக்குச் சென்று அல்லது ஆன் லைன் மூலம் கிளைம் படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதனுடன் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்திருப்பதற்கான ஆதாரம், ஆர்.சி. புத்தகத்தின் நகல் மற்றும் அசல், ஓட்டுநர் உரிமத்தின் நகல் மற்றும் அசல், காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கை (விபத்தில் மூன்றாம் நபர் அல்லது வாகனத்துக்கு சேதம் என்றால்) போன்ற ஆவணங்களையும் தர வேண்டும். மேலும், வாகனத்தின் பாகங் களை மாற்றுவது, பாகங்களை சீர் செய்வது குறித்த மதிப்பீட்டைக் கொடுக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவனம் சர்வேயர் ஒருவரை நியமிக்கும். அவர் பரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்வார். அதன் பிறகு வாகனத்தின் சேதத்தைச் சரி செய் யலாம். தேவையான ரசீதுகளைச் சமர்ப்பித்தால் சேதம் அடைந்த பாகங்களுக்கு உரிய விலை மற்றும் அதனை சரி செய்ய ஆகும் கூலியை இழப்பீடாகக் கொடுப்பார்கள். இந்தத் தொகையை ரிப்பேர் செய்த நிறுவனம் அல்லது பாலிஸிதாரரிடம் கொடுப்பார்கள். வாகனம் முழுவதும் சேதம் அடைந்தாலோ அல்லது ஒருசில பாகங்கள் சேதம் அடைந்தாலோ அதற்கான இழப்பீட்டை இன்ஷூ ரன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். நஷ்டம், ஐ.டி.வி. மதிப்பில் 75 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், அது மொத்த இழப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு முழுத் தொகையும் இழப்பீடாக வழங்கப்படும். இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்ட நகரத்தைத் தாண்டி வேறு இடத்தில் விபத்து நடந்தால், அருகிலுள்ள அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகத்துக்குத் தகவல் சொல்வதோடு, பாலிஸி எடுத் துள்ள அலுவலகத்துக்கும் தெரிவிக்க வேண்டும். மூன்றாம் நபருக்கு இறப்பு அல்லது காயம் ஏற்பட்டால்… ஒருவரின் வாகனம் மூன்றாம் நபர் மீது மோதிவிட்டால், உடனே போலீஸ் மற்றும் இன்ஷூரஸ் நிறுவனத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும். மூன்றாம் நபர் பாலிஸியில், ஒரு வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் மாட்டிக் கொண்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள், வாகனத்தின் உரிமையாளர் பாலிஸி எடுத்திருக்கும்பட்சத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீடு கோர முடியும். 
            உதார ணத்துக்கு, சுரேஷ் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண் டிருக்கிறார். அவர் மீது அருண் என்பவரின் கார் மோதிவிட்டது. இதில் விபத்தில் சிக்கிய சுரேஷ் அல்லது அவரின் வாரிசுகள், அருண் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீடு கோரிப் பெற முடியும். சாலையில் போகும் ஏதோ ஒரு வாகனம் மோதி, மூன்றாம் நபருக்குக் காயம் ஏற்பட்டாலோ அல்லது அவரது வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டாலோ இதற்கு அவர் இழப்பீடு கோர முடியும். அதேபோல, வாகனம் மோதி மூன்றாவது நபர் உயிர் இழக்க நேரிட்டால், அவரின் வாரிசுகள் இழப்பீடு கோர முடியும். சிறிய காயம், மூன்றாம் நபர் சொத்து சேதம் போன்றவற்றுக்கு வழக்கமாக இன்ஷூரன்ஸ் நிறுவனமே இழப்பீடு அளித்து விடுகிறது. விபத்தில் மரணம் அல்லது படுகாயம் ஏற்பட்டு இழப்பீடு கோர, எம்.ஏ.சி.டி. என்ற வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தை (MACT -Motor Accidents Claims Tribunal) பாதிக்கப்பட்டவர் அல்லது வாரிசுதாரர் அணுகி வழக்குத் தொடரலாம். உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செயல்படும் இந்தச் சிறப்பு நீதிமன்றம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை மட்டுமே விசாரித்து தீர்ப்பு வழங்கும்.  
            வழக்கு தொடரும்போது, போலீஸ் எஃப்.ஐ.ஆர், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், இறப்புச் சான்றிதழ், பாதிக்கப்பட்டவர் மற்றும் இழப்பீடு கோருபவரின் முகவரிக்கான ஆதாரம், மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தால் அதற்கான ஆவணங்கள், விபத்தால் ஊனம் ஏற்பட்டு இருந்தால் அதற்கான மருத்துவச் சான்றிதழ் போன்றவற்றை இங்கே இணைக்க வேண்டியிருக்கும். ஒருவேளை விபத்தில் மூன்றாம் நபர் உயிர் இழந்திருந்தால், மரணமடைந்தவரின் வயது, கல்வித் தகுதி, பணி, வருமானம் போன்றவற்றுக்கான ஆதாரங்களை வழக்கு தொடரும் அவரது வாரிசுகள் கொடுக்க வேண்டி வரும். பாலிஸிதாரரின் சார்பில் இன்ஷூரன்ஸ் நிறுவனம், வக்கீல் ஒருவரை நியமனம் செய்யும். அவருடன் பாலிஸிதாரர் ஒத்துழைக்க வேண்டும். இழப்பீடு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் சொல்லும், அதைப் பாதிப்படைந்த மூன்றாம் நபருக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் கொடுக்கும்.  
             மூன்றாம் நபர் சொத்து சேத வழக்கில், இழப்பீடு எவ்வளவு என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு அட்டவணையாக வைக்கப்பட்டு இருக்கிறது. சேதம் அடைந்த சொத்தின் மதிப்பு அல்லது ஏற்பட்டிருக்கும் காயம் – பாதிப்பு அல்லது ஊனத்தைப் பொறுத்து இழப்பீடு கிடைக்கும். இறப்பு வழக்குகளிலும் இது போன்ற ஓர் அட்டவணை வைத்தி ருப்பார்கள். மரணம் அடைந்தவரின் வயது, வருமான த்தைப் பொறுத்து அவரின் குடும்பத்துக்கு பாதிப்பு அமையும் என்பதால், இந்த விவரங்கள் கேட்கப்பட்டு அதற்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த வழக்குகளில் இழப்பீடு கிடைக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், தாமதமாகும் காலத்துக்கு வட்டி போட்டு, மொத்தத் தொகை தரப்படும். இந்த வகை வழக்குகளில், டிரைவரின் மீது தவறு இல்லை என்றா லும், மரணமடைந்த மூன்றாவது நபர்களின் வாரிசுகளுக்கு சுமார் ரூ.50,000 இழப்பீடு கிடைக்கும். டிரைவரின் மீது தவறு இருந்தால் இறந்தவரின் வயது, வருமானத்தைக் கணக்கிட்டு இதைவிட கூடுதலான தொகை இழப்பீடாகக் கிடைக்கும்.  
              வாகனம் காணாமல் போனால் வாகனம் காணாமல் போய்விட்டாலோ அல்லது விபத்தில் முழு வதும் சேதம் அடைந்தாலோ அந்த வாகனத்துக்குரிய முழு மதிப்பையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாகக் கொடுத் துவிடும். அதாவது, வாகனத்தின் அப்போதைய சந்தை மதிப்பு அல்லது இன்ஷூரன்ஸ் தொகை, இதில் எது குறைவோ அது இழப்பீடாகத் தரப்படும். இன்ஷூரன்ஸ் செய்யப்படாத வாகனம் மீது மோதினால்… நீங்கள் ஒருங்கிணைந்த பாலிஸி எடுத்திருக்கும்பட்சதில், உங்கள் வாகனம் இன்ஷூரன்ஸ் செய்யப்படாத வாகனத்தின் மீது மோதி உங்களுக்கும், உங்கள் வாகனத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டால், அதைப் பற்றி கவலைக் கொள்ள தேவையில்லை. எந்த பாதிப்புக்கும் இழப்பீடு உண்டு. இன்ஷூரன்ஸ் சான்றிதழ்  சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, காவல்துறை அதிகாரியின் பரிசோதனையின்போது, செல்லத்தக்க இன்ஷூரன்ஸ் சான்றிதழைக் காட்டுவது அவசியம். இல்லை என்றால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். ஒவ்வொரு முறை பாலிஸியைப் புதுப்பிக்கும்போதும் புதிய இன்ஷூரன்ஸ் சான்றிதழை வாங்கிக் கொள்வது அவசியம். 
               பாலிஸி சான்றிதழ் தொலைந்து விட்டாலோ, திருடு போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ அஃபிடவிட் வாங்கிக் கொடுத்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தினால் நகல் சான்றிதழ் தருவார்கள். பாலிஸியைப் புதுப்பிக்க… பொதுவாக, மோட்டார் வாகன பாலிஸிகள் ஓராண்டுக்கானவை. பாலிஸி தேதி முடியும் நாளில் நள்ளிரவு 12 மணி வரை இது பயன் தரும். அதற்கு ஏற்ப முன்கூட்டியே புதுப்பிப்பது அவசியம். ஏற்கெனவே பாலிஸி எடுத்த அலுவலகத்துக்குச் சென்றால், புதுப்பித்துக் கொடுத்து விடுவார்கள். வேறு இடத்துக்குச் சென்றால் புதிதாக ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுப்பதோடு, வாகனத்தையும் கொண்டு செல்ல வேண்டியது வரும். 
              பாலிஸியைப் புதுப்பிக்கத் தவறிவிட்டால் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் பாதிப்பு எதற்கும் ‘கிளைம்’ அதாவது இழப்பீடு கிடையாது. உரிய காலத்தில் புதுப்பிக்கத் தவறிவிட்டால், வாகனத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நேரில் கொண்டு சென்றுதான் புதிய பாலிஸி எடுக்க முடியும். ஆன் லைன் மூலமும் இருந்த இடத்தில் இருந்தே பாலிஸியைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். பாலிஸி காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புகூட இதைச் செய்யலாம். இன்ஷூரன்ஸ் பாலிஸியில் பெயர் மாற்றம் பழைய கார் வாங்கும்பட்சத்தில், ஏற்கெனவே உள்ள இன்ஷூரன்ஸ் பாலிஸியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும். 
                இதற்கு காரை வாங்கிய 14 தினங்களுக்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், விற்பவர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை உங்கள் பெயருக்கு மாற்ற சம்மதம் தெரிவித்துக் கொடுக்க வேண்டும். இதற்கு சிறிய கட்டணம் உண்டு. கவரேஜ் கவனம்… இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் சொல்வது வேத வாக்கு அல்ல. அவர்கள் பாலிஸி பிடிப்பதற்காக சில விஷயங்களை மிகைப்படுத்திச் சொல்லக் கூடும். அல்லது போதிய விவரம் தெரியாமல் சில விஷயங்களுக்கு கவரேஜ் இருப்பதாகவும் சொல்லிவிட வாய்ப்பு உண்டு. 
             எதற்கும் ஏஜென்ட் சொல்லும் விஷயம் எல்லாம் சரிதானா என்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இல்லை என்றால் கிளைம் செய்யும்போது சிக்கல் ஏற்படும். ஃபர்ஸ்ட் பார்ட்டி மோட்டார் இன்ஷூரன்ஸ்  இந்தியாவுக்கும் வருகிறது..! மாதச் சம்பளம் வாங்கும் ஒருவரின் கார் மீது திடீரென மற்றொரு வாகனம் மோதி விடுகிறது. காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதால், இழப்பீட்டை கோரிப் பெற முடியும். சேதம் அடைந்த அந்த காரை அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு சென்று சர்வீஸ் செய்ய குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகிவிடும். அதுவரை கார் உரிமையாளர் தன் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கும். பேரம் பேசி ஆட்டோ பிடிக்க வேண்டும் அல்லது மூச்சுக்கூட விட முடியாத நெரிசலான பஸ் பயணங்களை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பவர்களுக்கு இது போன்ற சிக்கல்களை ஏற்படுவதைத் தவிர்க்க ‘ஃபர்ஸ்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ்’ என்ற பெயரில் ஒரு திட்டம் தேவைப்படுகிறது. இதற்கான முயற்சிகளை இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) மேற்கொண்டு வருகிறது. இதன்படி, கார் விபத்துக்குள்ளான தினத்துக்கும், அது சர்வீஸ் செய்யப்பட்டு கையில் கிடைக்கும் தினத்துக்கும் இடைப்பட்ட காலத்துக்கு குறிப்பிட்ட தொகை தினசரி அலவன்ஸ் போல வழங்கப்படும். 
            இது போன்ற ஃபர்ஸ்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் ஏற்கெனவே வளர்ச்சியடைந்த பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்தப் புதிய பாலிஸியை வடிவமைப்பதில் மும்முரமாக களமிறங்கி இருக்கின்றன. வாகனத்தின் தேய்மானத்துக்கு ஏற்ப பிரீமியத்தைக் குறைக்கவும் IRDA அனுமதித்துள்ளது. தற்போது வாகனத்தின் கண்ணாடி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பகுதிகள் சேதம் அடைந்தால், முழு இழப்பீடும் வழங்கப்படுவது இல்லை. 50 சதவிகித தொகைதான் தரப்படுகிறது. மீதியை வாகனத்தின் உரிமையாளர் கையில் இருந்து செலவு செய்ய வேண்டியது வரும். இதிலும், மாற்றம் கொண்டு வரப்பட இருக்கிறது. முழுவதுமாக அல்லது குறைந்தபட்சம் உறுதி அளிக்கப்பட்ட நியாயமான தொகை அளிக்கப்பட இருக்கிறது. இந்த மாற்றங்கள் குறித்து நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் பி.ராமநாராயணன், ”வருமானம் சம்பாதித்துத் தரும் டாக்ஸி, வேன், லாரி, பஸ் போன்ற வர்த்தக வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி, வருமானம் பாதிக்கும்போது அதற்கும் கிளைம் கொடுக்கும் விதமாக, கூடுதல் கவரேஜ் உடன் மோட்டார் பாலிஸிகள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இது படிப்படியாக தனி நபர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கும் இழப்பீடு வழங்கும் விதமாக வர வாய்ப்பு இருக்கிறது” என்றவர், இன்னும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் மோட்டார் பாலிஸிகளில் செய்யப்பட இருக்கின்றன என்பதையும் கூறினார். ”மோட்டார் பாலிஸிகளும் மெடிக்ளைம் பாலிஸி போல் ‘கேஸ் லெஸ்’ வசதியுடன் வர இருக்கின்றன. இந்த பாலிஸி அமலுக்கு வரும்போது, வாகனம் விபத்துக்குள்ளானால், அதன் உரிமையாளர் இன்ஷூரன்ஸ் கால் சென்டருக்கு போன் செய்துவிட்டால், அவர்கள் மீட்பு வாகனத்தை அனுப்பி விபத்துக்குள்ளான வாகனத்தை அவர்கள் இடத்துக்கு எடுத்துச் சென்று சீர் செய்து பாலிஸிதாரருக்குத் தந்து விடுவார்கள். இதற்கான செலவை இன்ஷூரன்ஸ் கால் சென்டர், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கோரிப் பெறும் விதமாக பாலிஸிகள் மாற்றப்பட இருக்கின்றன. இப்போது வாகனம் 3 ஆண்டு பழமையானதாக இருந்தால், 25 சதவிகிதம் தேய்மானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதிக்குத்தான் இன்ஷூரன்ஸ் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. தேய்மானம் கழிக்காமல் முழுத் தொகைக்கும் பாலிஸி எடுக்கும் வசதி வர இருக்கிறது. இதன் மூலம் வாகனம் அல்லது வாகனத்தின் பாகங்களுக்கு சேதம் ஏற்படும்போது, முழு இழப்பீடு பெற்று புதிய பாகங்களை வாங்கிக் கொள்ள முடியும். இதே போல், கார் விபத்தில் சிக்கி சேதம் அடைந்தால், புது கார் வாங்கும் அளவுக்கு முழுத் தொகையும் இழப்பீடாக வழங்கும் பாலிஸிகளும் விரைவில் வர இருக்கின்றன. இந்த கூடுதல் வசதிகளுக்காக சிறிது பிரீமியம் அதிகமாக கட்ட வேண்டியது வரும்” என்றார் ராமநாராயணன். கல்வி, செல்வம், வீரம்… இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு வாகனத்துக்கு டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி. புத்தகம், இன்ஷூரன்ஸ் ஆகிய மூன்றும்! ஆனால் நடைமுறையில் டிரைவிங் லைசன்ஸ் ஆர்.சி. புத்தகம் ஆகியவற்றை வைத்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வைத்துக்கொள்வதில்லை, அல்லது புதிப்பித்துக் கொள்வதில்லை. இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் சிலரும் அது இல்லாவிட்டால் போலீஸார் பிடித்துக்கொள்வார்களே என்பதால்தான் எடுத்திருப்பார்கள். ஆனால் அதன் அவசியம் என்ன, வாகனம் ஓட்டுபவர்களுக்கு அந்த ஒரு இன்ஷூரன்ஸ் மட்டுமே போதுமானதா என்பதைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை… அதுகுறித்து விளக்கமாகப் பார்ப்போம்… மூன்றாம் நபர் பாலிசி வாகனம் வைத்திருப்பவர்கள் முதலில் எடுக்க வேண்டியது, மூன்றாம் நபர் பாலிசி (Third Party Insurance Policy). இதனுடைய அவசியம் என்ன என்று பார்க்கலாம்… நம் வாகனம் யார் மீதாவது மோதிவிடுகிறது… அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுவிடுகிறது அல்லது உயிரிழந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்… அல்லது நம் வாகனம் மோதி யாருடைய சொத்துக்காவது சேதம் ஏற்பட்டுவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்… இந்நிலையில் பாதிக்கப்பட்டவருக்கோ அவரது குடும்பத்துக்கோ நாம் இழப்பீடு கொடுத்தாக வேண்டும். அதனால் நமக்கு பெருத்த பண நஷ்டம் ஏற்படும். சிலருக்கு அந்த அளவுக்கு கொடுக்க பணமே இல்லாமல் போகலாம். இதுபோன்ற சமயங்களில் கை கொடுப்பதுதான் மூன்றாம் நபர் பாலிசி. இந்த பாலிசி எடுத்திருந்தால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன்ஷூரன்ஸ் கம்பெனியே இழப்பீட்டைக் கொடுத்து விடும். சில நூறு ரூபாயை பிரீமியமாகக் கட்டுவதன் மூலம் பல லட்சங்களை இழக்காமல் இருக்கமுடியும். இருப்பினும் இந்த பாலிசியை சட்டப்படி எடுக்க வேண்டும் என்பதால்தான் எடுக்கிறார்களே தவிர அதன் அருமை தெரிந்து எடுப்பதில்லை. இதில் சட்டப்படியான பாலிசி மட்டும் என்றால் (Act Only Policy) மூன்றாம் நபரின் சொத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு அதிகபட்சம் 6,000 மட்டும்தான் இழப்பீடு தரமுடியும். ஆனால் கூடுதல் பிரீமியம் கட்டுவதன் மூலம் டூ வீலருக்கு 1 லட்சம் , காருக்கு 7.5 லட்சம் என இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ள முடியும். மூன்றாம் நபர் பாலிசியில் ஒரு லட்ச ரூபாய்க்கான தோராய ஆண்டு பிரீமியம் 300 என்ற அளவில்தான் இருக்கும். ஓன் (own) டேமேஜ் பாலிசி முன்னர் சொன்னது போல நம் வாகனம் மோதி மூன்றாம் நபர் பாதிக்கப்பட்டால் மூன்றாம் நபர் பாலிசி எடுப்பதன் மூலம் அவருக்கு இழப்பீடைக் கொடுத்து விடலாம். ஆனால் அந்த விபத்தில் நமது வாகனமும் பாதிக்கப்பட்டி ருக்குமே! அதற்கு இந்த தேர்ட் பார்ட்டி பாலிசிகள் மூலம் இழப்பீடு கிடைக்காது. அதற்கு ‘ஓன் டேமேஜ் பாலிசி’ (Own Damage Polic) என்ற பாலிசியை தனியாக எடுக்க வேண்டும். இந்த பாலிசி எடுத்தால், விபத்து, மழை, வெள்ளம், தீ, திருட்டு உள்ளிட்ட காரணங்களால் பாலிசிதாரரின் வாகனம் பாதிக்கப்பட்டால் இழப்பீடு கிடைக்கும். இந்த பாலிசியில், பாலிசி எடுத்தவரின் வாகனத்துக்கு ஏற்படும் சேதம், அதைச் சரிசெய்ய அல்லது பாகங்களை மாற்ற ஆகும் செலவு ஆகியவை வழங்கப்படும். இந்தப் பாலிசியை சட்டப்படி கட்டாயமாக எடுத்தாகவேண்டும் என்பதில்லை. அதனால் இதனை எடுப்பவர்கள் மிகக் குறைவு. இருப்பினும் இந்தப் பாலிசியையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் நமது வாகனத்தின் மூலம் பிறருக்கு ஏற்படும் இழப்பையும், நமது வாகனத்துக்கு ஏற்படும் நஷ்டத்தையும் ஈடு செய்துகொள்ளலாம். தொகுப்பு பாலிசி மேற்கண்ட இரு பாலிசிகளையும் தனித் தனியே எடுப்பதற்கு பதில் இவற்றின் பலன்களை ஒரு சேரக் கொண்ட தொகுப்பு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். தனிநபர் விபத்து பாலிசி சரி, மோதியதால் மூன்றாம் நபருக்கு இழப்பீடு கிடைத்துவிடும். வாகனத்தில் ஏற்பட்ட சேதத்துக்கும் இழப்பீடு கிடைத்துவிடும். ஆனால் வாகனத்தை ஓட்டிய நமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? வாகனத்தின் உரிமையாளருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டாலோ அல்லது உறுப்புகளை இழக்க நேர்ந்தாலோ இழப்பீடு தேவை எனில் அதற்கு தனிநபர் விபத்து பாலிசி (Personal Accident Policy) எடுப்பது அவசியம். இந்தப் பாலிசியை பொதுக் காப்பீடு நிறுவனங்கள் ஜனதா தனிநபர் விபத்து பாலிசி என்ற பெயரில் வழங்கி வருகின்றன. இந்த தனிநபர் விபத்து பாலிசியில் மூன்று வகை இருக்கிறது. விபத்தில் உயிரிழந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவது ஒரு வகை. விபத்தில் மரணம் மற்றும் அடிபட்டால் இழப்பீடு வழங்குவது இரண்டாம் வகை. விபத்தினால் நிரந்தர அல்லது தற்காலிக ஊனம் ஏற்பட்டு, அதனால் பணிக்குச் செல்ல முடியவில்லை என்றால், அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகத் தருவது மூன்றாம் வகை. இந்த தனி நபர் விபத்து பாலிசியில் மருத்துவச் செலவு மற்றும் நஷ்டத்துக்கு ஏற்ப இழப்பீடு கொடுக்க மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் பாலிசியில் குறிப்பிட்டபடி, இழப்பீட்டுத் தொகையைத் தந்துவிடுவார்கள். தனிநபர் விபத்து இன்ஷூரன்ஸில், பாலிசித் தொகை அவரின் வருமானத்தைப் பொறுத்து காப்பீடு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்படும். ஜனதா பாலிசியில் அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குதான் பாலிசி எடுக்கும் நிலை இருக்கிறது. ஆண்டு பிரீமியம் சுமார் 60-75 ரூபாய்தான். பொதுவான தனிநபர் விபத்து பாலிசியில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஆண்டு பிரீமியம் சுமார் 130-150 ரூபாய்தான். இதில் கூடுதல் தொகைக்கு பாலிசி எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. பாலிசிதாரரின் வயது, பணியின் போது அவருக்குள்ள ரிஸ்க் போன்றவற்றைப் பொறுத்து பிரீமியம் மாறுபடும். அலுவலகத்துக்குள் வேலை பார்ப்பவரை விட, அடிக்கடி வெளியில் சென்று வருபவருக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். வொர்க்மேன்ஸ் காம்பன்சேஷன் பாலிசி பல இடங்களில் வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை ஓட்ட மாட்டார். டிரைவர் வைத்திருப்பார்கள். அப்போது, டிரைவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் சட்டப்படி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டுக்கு தனியே ‘வொர்க்மேன்ஸ் காம்பன்சேஷன்’ பாலிசி எடுப்பது அவசியம். கூடுதலாக 25 பிரீமியம் செலுத்தி இந்த பாலிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி உரிமையாளரை தவிர மற்றவர்களையும் பாலிசியில் சேர்த்துக் கொள்ள முடியும். வாகனத்தில் எப்போதும் அதன் உரிமையாளர் மட்டும் பயணம் செய்வதில்லை. பல நேரங்களில் உடன் குடும்பத்தினரும் செல்வார்கள். உரிமையாளருடன் குடும்பத்தினர் அடிக்கடி பயணம் செய்பவர்களாக இருந்தால், அவர்கள் பெயரையும் பாலிசியில் சேர்த்து தனிநபர் விபத்து பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் டிரைவருக்கு அதிகபட்சம் 1 லட்சத்துக்கும், மற்றவர்களுக்கு 2 லட்சத்துக்கும் கவரேஜ் இருக்கும். மேலும், காரில் உறவினர்- நண்பர்கள்- அலுவலகத் தில் பணி புரிபவர்கள் என பலர் பயணம் செய்யக் கூடும் என்றால்., இவர்களுக்கு பயணிகளுக்கான தனி நபர் விபத்து பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். மெடிக்ளைம் பாலிசி அதெல்லாம் சரி, வாகன விபத்தில் சிக்கி உரிமையாளர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் மேலே கூறப்பட்ட பாலிசிகளில் இழப்பீடு கிடைக்காது. அதற்கு தனியே மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம். இனி தேர்ட் பார்ட்டி, ஓன் டேமேஜ், தனி நபர் விபத்து, மெடிக்ளைம் பாலிசிகள் இல்லாமல் வண்டியை எடுக்க மாட்டீர்கள்தானே? மோட்டார் பாலிசியில் எதற்கெல்லாம் இழப்பீடு இல்லை? எதற்கெல்லாம் கிளைம் இல்லை என்பதைத் தெரிந்து, அதற்கு ஏற்பச் செயல்படுவது நல்லது. வாகனம் பிரேக் டவுன் ஆனால் இழப்பீடு இல்லை. தற்கொலை எண்ணத்துடன் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு இல்லை. தனிநபர் வாகன பாலிசியில், வாகனத்தை வாடகை டாக்ஸி அல்லது சரக்கு போக்குவரத்து வண்டி யாகப் பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு, இழப்பீடு கோரினால் இழப்பீடு இல்லை. வாகனம் ஓட்டும் உரிமையாளர் அல்லது டிரைவரிடம் முறையான மற்றும் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இழப்பீடு கிடைக்காது. வாகனத்தை ஓட்டுபவர்கள் மது அல்லது போதைப் பொருள் மயக்கத்தில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு இல்லை. அனுபவம் ஆயிரம் ”இன்ஷூரன்ஸ் ஏஜென்டா இருக் குறவங்க பாலிசிதாரருக்கு நம்பிக்கையாவும், நாணயமாவும் நடந்துக்கணும். அந்த வகையில நான் என்னிக்குமே எனக்கு அதிக லாபம் கிடைக்கணும்னு சம்பந்தம் இல்லாத பாலிசிகளை அவங்க தலையில் திணிக்க மாட்டேன். எதுக்காகவும் வாடிக்கை யாளர்களை காத்திருக்க வைக்க மாட்டேன். சொன்ன நேரத்தில் சரியா போய் நின்னுடுவேன். நாலு கஸ்டமர்களை அலைஞ்சு திரிஞ்சு பிடிச்சுடலாம். அவங்களை நிரந்தரமா தக்க வச்சுக்கிறதுதான் அதை விடக் கஷ்டம். கஸ்டமருக்குத் தேவையான திட்டத்தை விளக்கிச் சொன்னா நம்மை விட்டுப் போகவே மாட்டங்க. இத்தனை வருசமா நான் இந்தத் தொழிலில் தாக்குப் பிடிச்சு நிக்குறதுக்கு காரணமும் இதுதான்!”
சாலையில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால், மோட்டார் இன்ஷூரன்ஸ் 101% அவசியம்.
உங்கள் வாகனம் விபத்தில் சிக்கி சேதமானால், திருடு போனால், பயணிகள் உயிரிழந்தால், பாதசாரிகள் பாதிக்கப்பட்டால் உங்களை பொருட் சேதத்திலிருந்து பாதுகாப்பதாக இந்த மோட்டார் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. மேலும், உங்கள் வாகனம் மோதி இதர வாகனம், சொத்துகள் பாதிப்புக்கு உள்ளாகும்போதும் இன்ஷூரன்ஸ் கை கொடுக்கிறது. மேலும், இன்ஷூரன்ஸ் நமக்கு என்னென்ன நன்மைகள் அளிக்கின்றன? எப்படியெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போம்.
இன்ஷூரன்ஸ் கட்டாயம்!
சாலைகளில் ஓடும் வாகனங்கள் அனைத்துக்கும் மோட்டார் இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்திருக்க வேண்டும் என்பது சட்டம். வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும். கூடவே, இன்ஷூரன்ஸ் பாலிஸி சான்றிதழின் நகலையும் வைத்திருக்க வேண்டும்.
எங்கே பாலிஸி எடுப்பது?
புதிய வாகனமாக இருந்தால், ஷோரூமிலேயே பாலிஸி எடுப்பது குறித்த விவரம் சொல்வார்கள். உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் அருகிலுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்று பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். கூடவே வாகனத்தையும் எடுத்துச் சென்றால் வேலை சுலபமாக முடிந்துவிடும்.
பாலிஸியில் உங்கள் பெயர், முகவரி, வாகனத்தின் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸி எண்கள் போன்றவை பாலிஸி சான்றிதழில் சரியாக இருக்கிறதா என்று பாலிஸி எடுக்கும்போதே சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு இருந்தால், உடனே அதைத் திருத்தச் சொல்ல வேண்டும். திருத்தப்பட்ட இடத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலக முத்திரை இருக்க வேண்டியது அவசியம். அதேபோல, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஆவணங்களிலும் அந்த மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் கிளைம் செய்யும்போது சிக்கல் வரும்.
பாலிஸி வகைகள்
மோட்டார் வாகன பாலிஸிகள் இரு வகைகள் உள்ளன. ஒன்று நம் வாகன பாதிப்புக்கு, (அதாவது ஓன் டேமேஜ்)… அடுத்து நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு (அதாவது தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ்).
மூன்றாம் நபர் பாலிஸி
நம்முடைய வாகனம் மோதி, யார் என்றே தெரியாத மூன்றாம் நபர் காயமடைந்தாலோ, உயிரிழந்தாலோ அல்லது அவர்கள் ஓட்டி வந்த வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டாலோ இழப்பீடு கொடுப்பது நமது கடமை. இந்த இழப்பீட்டை வழங்க பலருக்கு வசதி வாய்ப்பு இருக்காது. சிலருக்கு வசதி இருந்தாலும் கொடுக்க மனது இருக்காது. இதுபோன்ற நிலையில் கை கொடுப்பதுதான் மூன்றாம் நபர் பாலிஸி (Third Party Insurance அல்லது Act Only Policy ). இதன்படி, பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனமே இழப்பீட்டை வழங்கிவிடும். வாகன ஓட்டிகள் இந்த பாலிஸி எடுப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
தனி நபர் பாலிஸி
‘மூன்றாம் நபருக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பா? வாகனத்தை ஓட்டும் எனக்கு இல்லையா’ என்று கேட்டால், அதற்கு தனி நபர் விபத்து பாலிஸி என ஒன்று இருக்கிறது. அதாவது, வாகனத்தின் உரிமையாளர் விபத்தில் உயிர் இழந்தாலோ அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தாலோ இழப்பீடு வழங்குவதுதான் இந்த தனி நபர் விபத்து பாலிஸி. இது, மூன்றாம் நபர் பாலிஸியோடு துணை பாலிஸியாகச் சேர்த்து எடுக்கலாம். ஆனால், இதற்குச் சற்று கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டும்..
மூன்றாம் நபர் பாலிஸி எடுத்திருக்கும்போது, உங்கள் வாகனம் மோதி யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் சொந்தப் பணத்தை இழப்பீடு கொடுக்காதீர்கள். ‘இவ்வளவு நஷ்டஈடு தருகிறேன்’ என்று யாருக்கும் வாக்குறுதி தராதீர்கள். மேலும், மூன்றாம் நபருக்கு எந்த இழப்பீடு தருவதாக இருந்தாலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைக் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள். மூன்றாம் நபரின் சொத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு அதிகபட்சம் 6,000 ரூபாய் மட்டும்தான் இழப்பீடு உண்டு. கூடுதல் பிரீமியம் கட்டுவதன் மூலம் இதனை ஒரு லட்ச ரூபாயாக (இரு சக்கர வாகனம்), அல்லது 7.5 லட்ச ரூபாயாக (கார்) அதிகரித்துக் கொள்ள முடியும்.
கவரேஜ்
தேர்ட் பார்ட்டி பாலிஸியில் எவையெல்லாம் கவர் செய்யப்பட்டு இருக்கிறது? தேர்ட் பார்ட்டி பாலிஸி எடுத்திருப்பவரின் வாகனம் மோதி மூன்றாம் நபர்களுக்கு ஏற்படும் கீழ்க்கண்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு உண்டு.
இறப்பு உடல் காயம் சொத்துகளுக்குச் சேதம் வழக்கு செலவு மற்றும் கிளைம் கோருவதற்கான செலவு.
ஓன் டேமேஜ் பாலிஸி – சுய பாதிப்பு
விபத்து என்று மட்டுமில்லாமல் மழை – வெள்ளம், தீ, திருட்டு என்று எந்த வடிவத்தில் வாகனத்துக்குச் சேதம் நிகழ்ந்தாலும், அந்தப் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்க வழி செய்வதுதான் ஓன் டேமேஜ் பாலிஸி (Own Damage Policy). இது கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், இதனை எடுப்பவர்கள் மிகக் குறைவு.
இந்த பாலிஸியில் தீ விபத்து, குண்டு வெடித்தல், வாகனம் தானே தீப்பற்றிக் கொள்ளுதல், மின்னல் தாக்குதல், கொள்ளை, கலவரம் மற்றும் போராட்டம், பூகம்பம் (தீ மற்றும் நில அதிர்வால் சேதம்), வெள்ளம், புயல், தீவிரவாத செயல்களாலும் சாலை, ரயில், கப்பல், விமானம், லிஃப்ட், எலிவேட்டர் போன்றவற்றில் எடுத்துச் செல்லும்போது சேதம் அடைந்தாலும், நிலம் மற்றும் பாறை சரிவு போன்ற காரணங்களாலும் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்பு/சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் – வாகனத்தின் மூலம் பிறருக்கு ஏற்படும் இழப்பையும், ஓன் டேமேஜ் பாலிஸி – வாகன உரிமையாளருக்கு ஏற்படும் நஷ்டத்தையும் ஈடு செய்யும் விதமாக அமையும்.
ஒருங்கிணைந்த பாலிஸி
மேற்கண்ட இரு வகையான பாலிஸிகளின் பலன்களை ஒருசேரத் தருவது ஒருங்கிணைந்த பாலிஸி. அதாவது (Comprehensive policy), விவரம் தெரிந்த வாகன ஓட்டிகள் அனைவரும் எடுக்கும் பாலிஸியாக இது இருக்கிறது.
பிரீமியம் எப்படி நிர்ணயிக்கிறார்கள்?
மோட்டார் இன்ஷூரன்ஸில் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, வாகனத்தின் திறன் (Cubic Capacity), மாடல் (உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு), காரின் பயன்பாடு, ஓட்டப்படும் பகுதி, பாலிஸிதாரர் இதற்கு முன் கிளைம் செய்த விவரம், இன்ஷூரன்ஸ் தொகை, பிராண்ட் மதிப்பு (குறிப்பாக, வாகனத்தின் மறுவிற்பனை விலை) போன்றவற்றைப் பொறுத்து பிரீமியம் அமையும்.
தேர்ட் பார்ட்டி பாலிஸி
மூன்றாம் நபர் பாலிஸிக்கான பிரீமியம், வாகனத்தின் செயல்திறனைப் பொறுத்து அமையும். இரு சக்கர வாகனங்களுக்கு 250 சிசி-க்குக் கீழ் மற்றும் 250 சிசி-க்கு மேல், கார்களுக்கு 1200 சிசி-க்குக் கீழ் மற்றும் 1200 சிசி-க்கு மேல் என்பதைப் பொறுத்து இது அதிகரிக்கிறது. அதாவது சிசி அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் அதிகமாகும்.
ஓன் டேமேஜ் பாலிஸி
ஓன் டேமேஜ் பாலிஸிக்கான பிரீமியம் வாகனத்தின் சந்தை மதிப்பு மற்றும் வாகனத்தின் செயல் திறனைச் சார்ந்திருக்கும். இதிலும், சிசி அடிப்படையில் பிரீமியம் மாறுபடும். இந்த பாலிஸியில் வாகனத்துக்கு ஏற்படும் சேதம் தவிர, வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர்களையும்கூட கூடுதலாக பிரீமியம் செலுத்தி ‘கவர்’ செய்ய முடியும்.
போதுமான இன்ஷூரன்ஸ் என்பது எது?
போதுமான அளவுக்கு இன்ஷூரன்ஸ் இருந்தால்தான் கிடைக்கின்ற இழப்பீட்டுத் தொகை, பாதிப்பை ஈடு செய்வதாக இருக்கும். அதே சமயம், அதிக தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தால், தேவையில்லாமல் அதிகமாக பிரீமியம் கட்ட வேண்டியது வரும். அதே நேரத்தில், பிரீமியத் தொகைக்குப் பயந்து குறைவான தொகைக்கு பாலிஸி எடுத்தால், பாதிப்பு ஏற்படும்போது, குறைவான தொகைதான் இழப்பீடாகக் கிடைக்கும். அப்போது கையிலிருந்து பணம் போட்டுச் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, சரியான அளவு இன்ஷூரன்ஸ் செய்வது 100 சதவிகிதம் அவசியம். கிட்டத்தட்ட வாகனத்தின் மார்க்கெட் மதிப்புக்கு பாலிஸி எடுப்பதுதான் சரியாக இருக்கும்.
புதிய வாகனத்தின் பிரீமியம் அதன் ஷோ ரூம் விலையைச் சார்ந்து இருக்கும். பழைய கார் என்கிறபோது, ‘ஐ.டி.வி’ (IDV – Insured’s Declared Value) என்ற மதிப்புக்கு எடுத்துக் கொள்ளலாம். வாகனத்தின் சந்தை மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வரும். இந்தச் சந்தை மதிப்புதான், அதிகபட்ச இழப்பீடு தொகையாக இருக்கும். எனவே, ‘ஒருவர் தேர்ந்தெடுக்கும் இன்ஷூரன்ஸ் தொகை – ஐ.டி.வி – வாகனத்தின் சந்தை மதிப்பு’ ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பதுதான் சரி.
ஐ.டி.வி தேய்மானம் எவ்வளவு?
கார் வாங்கும் அனைவரும் அதனைச் சரியாகப் பராமரித்து வருவார்கள் என்று சொல்ல முடியாது. இதனால், வாகனத்தின் தேய்மானம் ஒவ்வொரு வாகனத்துக்கும் வேறுபடும். என்றாலும் தோராயமாகக் கணக்கிட வேண்டும் என்றால், வாகனத்தின் ஐ.டி.வி தேய்மானத்தைக் கீழ்க்கண்டவாறு வைத்திருக்கிறார்கள்.
ரப்பர், நைலான், பிளாஸ்டிக் பாகங்கள், டியூப் மற்றும் பேட்டரிகளுக்கு 50 சதவிகிதம், ஃபைபர் கிளாஸ் பாகங்கள் 30 சதவிகிதம், கண்ணாடிப் பொருட்களுக்குத் தள்ளுபடி இல்லை. மேற்கண்ட விகிதத்தில் தேய்மானம் கழிக்கப்பட்டு மீதியுள்ள தொகைக்குத்தான் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும்.
அதிக பாதுகாப்புடன் ஓட்டுபவருக்குக் குறைவான பிரீமியமும், கவனக்குறைவாக ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவருக்கு அதிக பிரீமியமும் வசூலிக்கப்படும்.
ரேஸ¨க்குத் தனி இன்ஷூரன்ஸ்!
சாதாரண பாலிஸியை எடுத்துவிட்டு, மோட்டார் சைக்கிள் அல்லது கார் பந்தயங்களில் பங்கேற்று சேதம் ஏற்பட்டால், இழப்பீடு கிடைக்காது. பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிஸியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.
அனாமத்து வாகனம் மோதினாலும் இழப்பீடு!
சாலையில் செல்பவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ‘சோலடிம் ஃபண்ட்’ (Solatium Fund) என்ற நிதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான பிரீமியத்தில் 70 சதவிகிதம் இந்திய பொது காப்பீடு கழகம் கொடுக்கிறது. மீதியை மத்திய மாநில அரசுகள் செலுத்துகின்றன. இதன்படி மரணம் என்றால் 25 ஆயிரம் ரூபாயும், உடல் உறுப்புகளை இழந்தால் அல்லது படுகாயம் அடைந்தால் 12,500 ரூபாய் இழப்பீடும் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் பிரீமியம் குறைவு!
தற்போது இந்தியாவில் ஒரு வாகனத்துக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க, அதன் மொத்த விலையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் செலவாகிறது. சர்வதேச அளவில் அது 5 சதவிகிதமாக இருக்கிறது.
2009-ல் இந்திய மோட்டார் இன்ஷூரன்ஸ் சந்தையில் எஸ்.பி.ஐ, ஐ.ஏ.ஜி நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறது. இது தவிர, ரஹேஜா க்யூ.பி.இ, யுனிவர்சல் சாம்போ போன்ற நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் களம் இறங்குகின்றன. இதனால், மோட்டார் பாலிஸிகளுக்கான பிரீமியம் இன்னும் குறையலாம்.
தற்போது மோட்டார் பாலிஸிகள் ஆன் லைன் மூலம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுவதால், பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரீமியத் தள்ளுபடி அளிக்கின்றன. இதனாலும் பிரீமியம் குறைக்கப்படலாம். வாகன விற்பனை தேக்கம் ஏற்பட்டிருப்பதால், வாகன உற்பத்தியாளர்கள், ‘இன்ஷூரன்ஸ் இலவசம்’ என்று வாடிக்கையாளர்களைக் கவரும் நிலை 2009-ம் ஆண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
கூடுதல் கவரேஜ்!
வாகனத்தை தவிர, அதிலுள்ள ஸ்டீரியோ செட், ஏ.ஸி போன்றவற்றையும் கூடுதல் பிரீமியம் செலுத்தி இன்ஷூரன்ஸ் செய்து கொள்ளலாம்!
தவணையில் பிரீமியம்?
ஆயுள் இன்ஷூரன்ஸ் போல மாதம், காலாண்டு, அரையாண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டும் வசதி மோட்டார் இன்ஷூரன்ஸில் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் பிரீமியம் செலுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு நிறுவனத்துக்கு தவணையில் கடனை அடைத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...