இன்சூரன்ஸ்-05
வாகனம் காணாமல் போனால்
வாகனம் காணாமல் போய்விட்டாலோ
அல்லது விபத்தில் முழுவதும் சேதம் அடைந்தாலோ அந்த வாகனத்துக்குரிய முழு
மதிப்பையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாகக் கொடுத்துவிடும். அதாவது,
வாகனத்தின் அப்போதைய சந்தை மதிப்பு அல்லது இன்ஷூரன்ஸ் தொகை, இதில் எது
குறைவோ அது இழப்பீடாகத் தரப்படும்.
இன்ஷூரன்ஸ் செய்யப்படாத வாகனம் மீது மோதினால்…
நீங்கள் ஒருங்கிணைந்த பாலிஸி
எடுத்திருக்கும்பட்சதில், உங்கள் வாகனம் இன்ஷூரன்ஸ் செய்யப்படாத வாகனத்தின்
மீது மோதி உங்களுக்கும், உங்கள் வாகனத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டால்,
அதைப் பற்றி கவலைக் கொள்ள தேவையில்லை. எந்த பாதிப்புக்கும் இழப்பீடு உண்டு.
இன்ஷூரன்ஸ் சான்றிதழ்
சாலையில் வாகனத்தில் சென்று
கொண்டிருக்கும்போது, காவல்துறை அதிகாரியின் பரிசோதனையின்போது, செல்லத்தக்க
இன்ஷூரன்ஸ் சான்றிதழைக் காட்டுவது அவசியம். இல்லை என்றால் ஆயிரம் ரூபாய்
வரை அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
ஒவ்வொரு முறை பாலிஸியைப்
புதுப்பிக்கும்போதும் புதிய இன்ஷூரன்ஸ் சான்றிதழை வாங்கிக் கொள்வது
அவசியம். பாலிஸி சான்றிதழ் தொலைந்து விட்டாலோ, திருடு போனாலோ அல்லது சேதம்
அடைந்தாலோ அஃபிடவிட் வாங்கிக் கொடுத்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தினால்
நகல் சான்றிதழ் தருவார்கள்.
பாலிஸியைப் புதுப்பிக்க…
பொதுவாக, மோட்டார் வாகன பாலிஸிகள் ஓராண்டுக்கானவை.
பாலிஸி தேதி முடியும் நாளில்
நள்ளிரவு 12 மணி வரை இது பயன் தரும். அதற்கு ஏற்ப முன்கூட்டியே
புதுப்பிப்பது அவசியம். ஏற்கெனவே பாலிஸி எடுத்த அலுவலகத்துக்குச் சென்றால்,
புதுப்பித்துக் கொடுத்து விடுவார்கள். வேறு இடத்துக்குச் சென்றால் புதிதாக
ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுப்பதோடு, வாகனத்தையும் கொண்டு செல்ல
வேண்டியது வரும்.
பாலிஸியைப் புதுப்பிக்கத்
தவறிவிட்டால் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் பாதிப்பு எதற்கும் ‘கிளைம்’
அதாவது இழப்பீடு கிடையாது. உரிய காலத்தில் புதுப்பிக்கத் தவறிவிட்டால்,
வாகனத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நேரில் கொண்டு சென்றுதான் புதிய பாலிஸி
எடுக்க முடியும்.
ஆன் லைன் மூலமும் இருந்த இடத்தில்
இருந்தே பாலிஸியைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். பாலிஸி காலம்
முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புகூட இதைச் செய்யலாம்.
இன்ஷூரன்ஸ் பாலிஸியில் பெயர் மாற்றம்
பழைய கார் வாங்கும்பட்சத்தில்,
ஏற்கெனவே உள்ள இன்ஷூரன்ஸ் பாலிஸியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள
முடியும். இதற்கு காரை வாங்கிய 14 தினங்களுக்குள் இன்ஷூரன்ஸ்
நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், விற்பவர் இன்ஷூரன்ஸ்
நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை உங்கள் பெயருக்கு மாற்ற சம்மதம் தெரிவித்துக்
கொடுக்க வேண்டும். இதற்கு சிறிய கட்டணம் உண்டு.
கவரேஜ் கவனம்…
இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் சொல்வது வேத
வாக்கு அல்ல. அவர்கள் பாலிஸி பிடிப்பதற்காக சில விஷயங்களை மிகைப்படுத்திச்
சொல்லக் கூடும். அல்லது போதிய விவரம் தெரியாமல் சில விஷயங்களுக்கு கவரேஜ்
இருப்பதாகவும் சொல்லிவிட வாய்ப்பு உண்டு.
எதற்கும் ஏஜென்ட் சொல்லும் விஷயம்
எல்லாம் சரிதானா என்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது
நல்லது. இல்லை என்றால் கிளைம் செய்யும்போது சிக்கல் ஏற்படும்.
ஃபர்ஸ்ட் பார்ட்டி மோட்டார் இன்ஷூரன்ஸ்
இந்தியாவுக்கும் வருகிறது..!
மாதச் சம்பளம் வாங்கும் ஒருவரின்
கார் மீது திடீரென மற்றொரு வாகனம் மோதி விடுகிறது. காருக்கு இன்ஷூரன்ஸ்
எடுக்கப்பட்டிருக்கிறது என்பதால், இழப்பீட்டை கோரிப் பெற முடியும். சேதம்
அடைந்த அந்த காரை அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு சென்று
சர்வீஸ் செய்ய குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகிவிடும். அதுவரை கார்
உரிமையாளர் தன் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டியது
இருக்கும். பேரம் பேசி ஆட்டோ பிடிக்க வேண்டும் அல்லது மூச்சுக்கூட விட
முடியாத நெரிசலான பஸ் பயணங்களை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். மோட்டார்
இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பவர்களுக்கு இது போன்ற சிக்கல்களை ஏற்படுவதைத்
தவிர்க்க ‘ஃபர்ஸ்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ்’ என்ற பெயரில் ஒரு திட்டம்
தேவைப்படுகிறது. இதற்கான முயற்சிகளை இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும்
மேம்பாட்டு ஆணையம் (IRDA) மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, கார் விபத்துக்குள்ளான
தினத்துக்கும், அது சர்வீஸ் செய்யப்பட்டு கையில் கிடைக்கும் தினத்துக்கும்
இடைப்பட்ட காலத்துக்கு குறிப்பிட்ட தொகை தினசரி அலவன்ஸ் போல வழங்கப்படும்.
இது போன்ற ஃபர்ஸ்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் ஏற்கெனவே வளர்ச்சியடைந்த பல
நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.
நாட்டில் உள்ள பெரும்பாலான பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்தப் புதிய பாலிஸியை வடிவமைப்பதில் மும்முரமாக களமிறங்கி இருக்கின்றன.
வாகனத்தின் தேய்மானத்துக்கு ஏற்ப
பிரீமியத்தைக் குறைக்கவும் IRDA அனுமதித்துள்ளது. தற்போது வாகனத்தின்
கண்ணாடி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பகுதிகள் சேதம் அடைந்தால், முழு
இழப்பீடும் வழங்கப்படுவது இல்லை. 50 சதவிகித தொகைதான் தரப்படுகிறது. மீதியை
வாகனத்தின் உரிமையாளர் கையில் இருந்து செலவு செய்ய வேண்டியது வரும்.
இதிலும், மாற்றம் கொண்டு வரப்பட இருக்கிறது. முழுவதுமாக அல்லது
குறைந்தபட்சம் உறுதி அளிக்கப்பட்ட நியாயமான தொகை அளிக்கப்பட இருக்கிறது.
இந்த மாற்றங்கள் குறித்து நேஷனல்
இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் பி.ராமநாராயணன், ”வருமானம்
சம்பாதித்துத் தரும் டாக்ஸி, வேன், லாரி, பஸ் போன்ற வர்த்தக வாகனங்கள்
விபத்துக்கு உள்ளாகி, வருமானம் பாதிக்கும்போது அதற்கும் கிளைம் கொடுக்கும்
விதமாக, கூடுதல் கவரேஜ் உடன் மோட்டார் பாலிஸிகள் இந்தியாவில் விரைவில்
அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இது படிப்படியாக தனி நபர்களுக்கு ஏற்படும்
பாதிப்புக்கும் இழப்பீடு வழங்கும் விதமாக வர வாய்ப்பு இருக்கிறது”
என்றவர், இன்னும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் மோட்டார் பாலிஸிகளில்
செய்யப்பட இருக்கின்றன என்பதையும் கூறினார். ”மோட்டார் பாலிஸிகளும்
மெடிக்ளைம் பாலிஸி போல் ‘கேஸ் லெஸ்’ வசதியுடன் வர இருக்கின்றன. இந்த பாலிஸி
அமலுக்கு வரும்போது, வாகனம் விபத்துக்குள்ளானால், அதன் உரிமையாளர்
இன்ஷூரன்ஸ் கால் சென்டருக்கு போன் செய்துவிட்டால், அவர்கள் மீட்பு வாகனத்தை
அனுப்பி விபத்துக்குள்ளான வாகனத்தை அவர்கள் இடத்துக்கு எடுத்துச் சென்று
சீர் செய்து பாலிஸிதாரருக்குத் தந்து விடுவார்கள். இதற்கான செலவை
இன்ஷூரன்ஸ் கால் சென்டர், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கோரிப் பெறும்
விதமாக பாலிஸிகள் மாற்றப்பட இருக்கின்றன.
இப்போது வாகனம் 3 ஆண்டு பழமையானதாக
இருந்தால், 25 சதவிகிதம் தேய்மானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு,
மீதிக்குத்தான் இன்ஷூரன்ஸ் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. தேய்மானம்
கழிக்காமல் முழுத் தொகைக்கும் பாலிஸி எடுக்கும் வசதி வர இருக்கிறது.
இதன் மூலம் வாகனம் அல்லது
வாகனத்தின் பாகங்களுக்கு சேதம் ஏற்படும்போது, முழு இழப்பீடு பெற்று புதிய
பாகங்களை வாங்கிக் கொள்ள முடியும். இதே போல், கார் விபத்தில் சிக்கி சேதம்
அடைந்தால், புது கார் வாங்கும் அளவுக்கு முழுத் தொகையும் இழப்பீடாக
வழங்கும் பாலிஸிகளும் விரைவில் வர இருக்கின்றன. இந்த கூடுதல் வசதிகளுக்காக
சிறிது பிரீமியம் அதிகமாக கட்ட வேண்டியது வரும்” என்றார் ராமநாராயணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக