11 அக்டோபர் 2013

இன்சூரன்ஸ்-04



இன்சூரன்ஸ்-04

வாகனம் திருடு போனால்..!
வாகனம் திருடு போய்விட்டால் முதலில் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் பாலிஸி எடுத்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டும். காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை, விசாரணை அறிக்கை போன்றவற்றை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கேட்டு வாங்கிக் கொள்ளும்.
திருடு போன வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டு இருந்தால், அதற்கு கிளைம் உண்டு. வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வாகனத்தின் சந்தை விலை, ஐ.டி.வி-யைப் பொறுத்து இழப்பீடு தருவார்கள். அதாவது, காணாமல் போன வாகனத்தின் மறுவிற்பனை விலைதான் இழப்பீடாகக் கிடைக்கும். இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டதும், வாகனத்தின் பதிவு எண் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் மாற்றப்படும். மேலும், வாகனம் தொடர்பாக உங்களிடம் உள்ள மாற்றுச் சாவி, இதர ஆவணங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டிய தாளில் கடிதம் ஒன்றும் எழுதிக் கொடுக்க வேண்டும்.
பழைய வாகனத்தை வாங்கி, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உங்கள் பெயருக்கு மாற்றி இருப்பீர்கள். அதே நேரத்தில், இன்ஷூரன்ஸை மாற்ற பலர் தவறி விடுகிறார்கள். இது தவறு. வாகனப் பதிவு மற்றும் இன்ஷூரன்ஸ் இரண்டும் ஒரே பெயர், முகவரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் இழப்பீடு கிடைக்காது. ஆர்.சி புத்தகம் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிஸியில் பெயர் மாற்றிக் கொள்வது மிக மிக அவசியம்!
தவறு என்றாலும்..!
சாலையில் தவறான பாதையில் சென்று விபத்தில் சிக்கினால் அல்லது சாலை விதியை மீறி (வேண்டும் என்றே இல்லாமல்) விபத்துக்குள்ளானாலும் கிளைம் செய்ய முடியும். அதற்காக, இதையே வழக்கமாகக் கொண்டிருந்தால் உங்களுக்கு அடுத்தமுறை பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட்டு விடும்!
பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்
நேஷனல் இன்ஷூரன்ஸ்
ஓரியண்டல் இன்ஷூரன்ஸ்
யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்
ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்,
ஹெச்.டி.எஃப்.சி. இ.ஆர்.இ.கோ. ஜெனரல் இன்ஷூரன்ஸ்
டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்ஷூரன்ஸ்
பஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்
ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ்
இஃப்போ டோக்கியோ ஜெனரல் இன்ஷூரன்ஸ்
மெடிக்ளைம், தனி நபர் விபத்து பாலிஸியும் அவசியம்!
மோட்டார் இன்ஷூரன்ஸில் ஒருங்கிணைந்த பாலிஸியை எடுத்திருக்கும் அதே நேரத்தில், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் சூழ்நிலை வந்தால், அதற்குக் கை கொடுக்கும் மெடிக்ளைம் பாலிஸியை எடுத்துக் கொள்வது அவசியம். இதில், விபத்தின்போது பாதிப்பு ஏற்பட்டால், கிளைம் கொடுக்கும் தனி நபர் விபத்து பாலிஸியும் ஒரு பகுதியாக இருக்கும். அதே நேரத்தில், விபத்தினால் மரணம் அல்லது கை கால் போன்ற உறுப்புகளை இழந்து ஊனமானால் இழப்பீடு கிடைக்கும். தனி நபர் விபத்து பாலிஸியை (Personal Accident Policy) தனியாக எடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது. இந்தப் பாலிஸியை பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில் அளித்து வருகின்றன. இவை, ‘ஜனதா தனிநபர் விபத்து பாலிஸி’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. இந்த பாலிஸியை எடுத்திருந்தால் உலகில் எங்கு விபத்து நடந்தாலும் இழப்பீடு உண்டு.
இந்த தனி நபர் பாலிஸியில் மூன்று வகைகள் இருக்கின்றன. விபத்தில் இறந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவது ஒரு வகை. மற்றொன்று, விபத்தில் மரணம் மற்றும் அடிபட்டால் இழப்பீடு கிடைக்கும். கடைசியாகச் சொல்லப்பட்ட பாலிஸியில் பிரீமியம் சிறிது அதிகம் என்றாலும், அதுதான் அதிக ஆதாயம் தருவதாக இருக்கும். மூன்றாம் வகை, விபத்தினால் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக ஊனம் ஏற்பட்டு, அதனால் பணிக்குச் செல்ல முடியவில்லை என்றால், அந்தக் காலகட்டத்தில் வாரம் தோறும் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகத் தரும் பாலிஸி. சுமார் 100 வார காலத்துக்கு இந்த இழப்பீடு கிடைக்கும்.
இந்த தனி நபர் விபத்து பாலிஸியில் மருத்துவச் செலவு மற்றும் நஷ்டத்துக்கு ஏற்ப இழப்பீடு கொடுக்க மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் பாலிஸியில் குறிப்பிட்டபடி, இழப்பீட்டுத் தொகையைத் தந்துவிடுவார்கள். தனி நபர் விபத்து இன்ஷூரன்ஸில், பாலிஸி தொகை அவரின் வருமானத்தைப் பொறுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்படும் என்பதால், பாலிஸிதாரர் தன்னால் பிரீமியம் கட்ட முடியும் என்றாலும், அதிகத் தொகைக்கு பாலிஸி எடுக்க முடியாது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தை போல் 5-7 மடங்குக்கு இந்தப் பாலிஸியை எடுத்துக் கொள்ள முடியும். இதை பொதுவாக 14-70 வயதினர் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, 45-50 வயதுக்கு மேல் என்றால், மருத்துவப் பரிசோதனை அறிக்கை தேவைப்படும்.
ஜனதா பாலிஸியில் அதிகப்பட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குத்தான் பாலிஸி எடுக்கும் நிலை இருக்கிறது. ஆண்டு பிரீமியம் சுமார் 60-75 ரூபாய்தான். பொதுவான தனி நபர் விபத்து பாலிஸியில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஆண்டு பிரீமியம் சுமார் 130-150 ரூபாய்தான். இதில் கூடுதல் தொகைக்கு பாலிஸி எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. பாலிஸிதாரரின் வயது, பணியின் போது அவருக்குள்ள இடர்பாடு போன்றவற்றைப் பொறுத்து பிரீமியம் மாறுபடும். அலுவலத்துக்குள் வேலை பார்ப்பவரைவிட, அடிக்கடி வெளியில் சென்று வருபவருக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும்.
யாரிடம், எப்படி புகார் செய்வது?
பொதுவாக, மோட்டார் இன்ஷூரன்ஸில் இழப்பீட்டுத் தொகை குறைவாக வழங்கப்படுவது தொடர்பாகத்தான் அதிக புகார்கள் எழுகின்றன,
இன்ஷூரன்ஸ் சம்பந்தமான புகாரை, முதலில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலுள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் எழுத்து மூலம் கொடுக்க வேண்டும். 10-15 நாட்களில் பதில் கிடைக்கவில்லை அல்லது பதில் திருப்திகரமாக இல்லை என்றால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கோட்ட அல்லது மண்டல அலுவலகத்திலுள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் புகார் கொடுக்க வேண்டும். அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால், இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மன் என்ற அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை முகவரி: Office of the Insurance Ombudsman, Fatima Akhtar Court, 4th Floor, 453 (old 312), Anna Salai, Teynampet, CHENNAI – 600 018. Tel.:- 044-24333678/664/668 Fax:- 044-24333664 Email:-insombud@md4.vsnl.net.in
இந்த ஆம்புட்ஸ்மன் அமைப்பு ரூ.20 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட தனி நபர் பாலிஸிகளுக்கான கிளைம் கொடுக்கக் கூடிய வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. தீர்ப்பு பெரும்பாலும் மனிதாபிமான அடிப்படையில் இருக்கும்.
இந்த அமைப்பு அளிக்கும் தீர்ப்பை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்று நிறைவேற்ற வேண்டும். உங்களுக்கு இங்கும் திருப்தி இல்லை என்றால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதில், நீதிமன்றம் மற்றும் வக்கீல் கட்டணம் இருக்கிறது. வழக்கு நீண்ட காலத்துக்கு இழுக்கும்.
எதிலும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படவில்லை என்றால், இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ) பொதுமக்கள் குறை தீர்ப்புப் பிரிவுக்கு எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டும்.
Insurance Regulatory and Development Authority, 3rd Floor, Parisrama Bhavan, Basheer Bagh, HYDERABAD 500 004. Andhra Pradesh (INDIA ) Ph: (040) 23381100 Fax: (040) 6682 3334. Email:irda@irda.gov.in
வாகனத்தின் உரிமையாளர் கடந்த ஆண்டுகளில் இழப்பீடு கோரிய விவரம், உரிமையாளர் மற்றும் ஓட்டுநரின் கண் பார்வைத் திறன் மற்றும் உடல் ஆரோக்கியம், இரவில் வீட்டு காம்பவுண்டுக்குள் அதற்குரிய ஷெட்டில் நிறுத்துகிறாரா அல்லது வீட்டு முன்பாக சாலையில் நிறுத்துகிறாரா என்பதை எல்லாம் கவனித்து பிரீமியத் தொகையை நிர்ணயிப்பார்கள்.
உரிமையாளர் வாகனத்தை ஓட்டாமல் டிரைவர் ஓட்டுவதாக இருந்தால், ‘வொர்க்மேன்ஸ் காம்பென்சேஷன்’ சட்டப்படி கொடுக்க வேண்டிய நஷ்டஈட்டுக்குத் தனியே பாலிஸி எடுப்பது அவசியம். கூடுதல் பிரீமியம் செலுத்தி இந்த பாலிஸியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல், வாகனத்தின் உரிமையாளருடன் குடும்பத்தினர் அடிக்கடி பயணம் செய்பவர்களாக இருந்தால், அவர்கள் பெயரையும் பாலிஸியில் பதிவு செய்து, தனி நபர் விபத்து பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிஸியில் டிரைவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூயாய்க்கும், மற்றவர்களுக்கு 2 லட்ச ரூபாய்க்கு கவரேஜ் இருக்கும்.
மேலும், காரில் உறவினர்கள் – நண்பர்கள்- அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் என பலர் பயணம் செய்யக் கூடும் என்றால், இவர்களுக்கும் பயணிகளுக்கான தனி நபர் விபத்து பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பயணிகள் பாலிஸி, வாகன உரிமையாளருக்கும் டிரைவருக்கும் பொருந்தாது.
வாகனத்தில் சி.என்.ஜி, எல்.பி.ஜி சிலிண்டர்களைப் பொருத்தினால், அவற்றை ஆர்.டி.ஓ-வின் அனுமதியோடு மேற்கொள்ள வேண்டும். இந்த விவரத்தை வாகனத்தின் பதிவுப் புத்தகத்தில் சேர்த்து, நகல் எடுத்துக் கொண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் கொடுக்க வேண்டும். இதற்கான பிரீமியம், இந்த கிட்டின் மதிப்பில் சுமார் 4 சதவிகிதம் அதிகமாக இருக்கும்.
வெளிநாட்டு கார் என்றால், வாகனப் பொறியாளர் ஒருவரின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, அதன் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப பிரீமியம் இருக்கும்.
பொதுத்துறை இன்ஷூரன்ஸில் பிரீமியக் கட்டுப்பாடு 2009, ஜனவரி முதல் நீக்கப்பட்டுவிட்டது. அதனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கூடுதல் கவரேஜ் அளித்து, அதற்கு ஏற்ப பிரீமியத் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
பிரீமியச் செலவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
வாகன இன்ஷூரன்ஸ் எடுப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாகன சங்கத்தின் உறுப்பினர் என்றால், பாதுகாப்பு பற்றி அவர் விழிப்பு உணர்வு மிக்கவராக இருப்பார் என்று கருதி, அவருக்கு பிரீமியத்தில் 5 சதவிகிதம் (அதிகபட்சம் 100-500 ரூபாய்) தள்ளுபடி தரப்படுகிறது.
திருட்டுத் தடுப்புக் கருவி, வாகனத்தில் பொருத்தி இருந்தால், பிரீமியத்தில் சலுகை இருக்கிறது.
வாகனத்தைப் பயன்படுத்தாதபோது…
வேலை விஷயமாக வெளிநாடு அல்லது வெளி மாநிலத்துக்கு 3 அல்லது 6 மாத காலத்துக்குச் சென்றால், வாகனத்தை கார் ஷெட்டில் பாதுகாப்பாக நிறுத்தி விட்டுச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, அந்தக் காலத்துக்கான பிரீமியச் செலவு வீண்தானே? பிரீமியச் செலவைக் குறைத்து, அந்தக் காலத்தில் தீ, வெள்ளம், திருட்டு, கொள்ளை போன்றவற்றிலிருந்து மட்டும் வாகனத்தைப் பாதுகாக்க பாலிஸி எடுக்கலாம். இதை ‘லெய்ட் அப் பீரியட் பாலிஸி’ என்பார்கள். விஷயத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் தெரிவித்தால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் சொல்லும் முறையில் வாகனத்தை இந்தக் காலகட்டத்தில் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
ஊர் திரும்பிய பிறகு காரை ஷெட்டிலிருந்து எடுத்து விட்டு, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் தெரிவித்துவிட்டால், உங்கள் வழக்கமான பாலிஸி நடைமுறைக்கு வந்துவிடும். இந்த முறையில் பிரீமியச் செலவைக் குறைக்க முடியும்.
நோ கிளைம் போனஸ்
இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குக் கூடிய வரையில் நஷ்டம் வராமல் அதாவது, இழப்பீடு கோரும் சூழ்நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது நமக்கும் நல்லது; இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நல்லது. ஓராண்டில் இழப்பீடு எதுவும் பெறவில்லை என்றால் ‘நோ கிளைம் போனஸ்’ என்ற சலுகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அளிக்கின்றன.
ஓராண்டு இழப்பீடு எதுவும் இல்லாமல் பாலிஸி காலாவதியாகும் தேதிக்கு முன் புதுப்பித்தால், அடுத்த ஆண்டுக்கான பிரீமியத்தில் தள்ளுபடி கொடுக்கிறார்கள். சில நிறுவனங்கள் அதே பிரீமியத்துக்குக் கூடுதல் கவரேஜ் தருகின்றன.
அதே நேரத்தில், இழப்பீடு கோரப்பட்டிருந்தால், அடுத்து வரும் ஆண்டில் பிரீமியம் அதிகமாகும். இதை ‘மாலஸ்’ (Malus) என்பார்கள். இந்த அதிகரிப்பு 10 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதம் வரை இருக்கும்.
இந்த பிரீமியத் தள்ளுபடி ஓன் டேமேஜ் பாலிஸியின் பிரீமியத்துக்கு மட்டுமே கிடைக்கும். மேலும், தொடர்ந்து ‘கிளைம்’ செய்யவில்லை என்றால் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் தள்ளுபடி சதவிகிதம் அதிகரிக்கும். இடையில், கிளைம் செய்த பிறகு பாலிஸியைப் புதுப்பித்தால், போனஸ் சதவிகிதத்தைக் குறைத்து விடுவார்கள். இழப்பீடு தொகை ‘நோ கிளைம் போனஸ்’ தொகையைவிட குறைவாக இருந்தால், இழப்பீடு கேட்காமல் இருப்பது நமக்கு லாபம்.
உங்களுடைய பாலிஸி காலாவதி ஆகிவிட்டது, அதே நேரத்தில் நோ கிளைம் போனஸ் இருக்கிறது என்றால், பாலிஸி காலாவதியானதிலிருந்து 90 நாட்களுக்குள் புதுப்பித்தால், நோ கிளைம் போனஸ் பிரீமியத் தள்ளுபடியைப் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய வாகனம் வாங்குவதாக இருந்தால், பழைய வாகனத்தின் (விற்பனை செய்யும் பட்சத்தில்) நோ கிளைம் போனஸை புதிய காரின் பாலிஸிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு வாகனத்தை விற்கும் முன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு முன்கூட்டியே நோ கிளைம் போனஸ் இருப்பதைத் தெரிவிக்க வேண்டும்.
நோ கிளைம் போனஸ் எவ்வளவு?
ஒரு வாகனத்தை விற்றுவிட்டு, புதிய வாகனம் வாங்கும்போது ‘நோ கிளைம் போனஸை’ பயன்படுத்திக் கொள்ள முடியும். பாலிஸி காலாவதி ஆவதற்கு முன் இப்படி புதுப்பிப்பது அவசியம்.
‘வாலன்டரி டிடக்டிபிள்
‘வாலன்டரி டிடக்டிபிள்’ (Voluntary Deductible) என்று ஒரு விஷயம் இருக்கிறது. இதில் ‘ரூ.5,000 அல்லது ரூ.10,000 வரையிலான பாதிப்புகளை நானே சமாளித்துக் கொள்கிறேன். அதற்கு இழப்பீட்டுத் தொகை வேண்டாம்’ என்று சொல்லிவிட்டால், பிரீமியம் குறையும். இது பாலிஸிதாரருக்கு லாபகரமாகவே இருக்கும். சிறிய தொகைக்கு இழப்பீடு கோரிவிட்டு, நோ கிளைம் போனஸ் சலுகையை இழக்க வேண்டாம் இல்லையா?
உடல் ஊனமுற்றவர்களுக்கு, அவர்கள் ஓட்டுவதற்கு வசதியாக வாகனம் மாற்றி வடிவமைக்கப்பட்டு இருந்தால், பிரீமியத்தில் (ஓன் டேமேஜ்) 50 சதவிகிதம் தள்ளுபடி இருக்கிறது. ஊனமுற்றோருக்கு பிரத்யேக சேவை செய்யும் நிறுவனங்களுக்கும் இதேபோல் சலுகை இருக்கிறது.
பழைய கார் வாங்கும்போது…
பழைய வாகனத்தை வாங்கும்போது, அந்த வாகனத்தின் இன்ஷூரன்ஸ் பாலிஸியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தேதி முடிந்திருந்தால், புதிய பாலிஸி எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதிய வாகனமாக இருந்தாலும் சரி, பழைய வாகனமாக இருந்தாலும் சரி, தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்து கொடுக்க மாட்டார்கள்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுக்கும்போது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (Terms and Conditions) நன்கு படித்துப் புரிந்து கொண்டு கையெழுத்துப் போடுவது அவசியம். இது சிறிய எழுத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும். அர்த்தம் புரியவில்லை என்றால், இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேளுங்கள். இதனைச் செய்தால், பிறகு கிளைம் செய்யும்போது பிரச்னைகள் வர வாய்ப்பு இல்லை.
எதற்கெல்லாம் இழப்பீடு இல்லை?
எதை எல்லாம் செய்தால் கிளைம் கிடைக்கும், கிடைக்காது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படுவது ஒன்றே மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதன் லாபத்தை முழுமையாகப் பெற உதவும்.
இதர உபயோகம்: தனி நபர் வாகன பாலிஸியில், வாகனத்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். அந்த வாகனத்தை வாடகை டாக்ஸியாக அல்லது சரக்கு போக்குவரத்து வாகனமாகப் பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு இழப்பீடு கோரினால் எதுவும் கிடைக்காது.
ஓட்டுநர் உரிமம்: வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) முறையான மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்து நடந்தால், இழப்பீடு கிடைக்காது.
மது/போதை மருந்து பயன்பாடு: வாகனத்தை ஓட்டுகிறவர்கள் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) மது அருந்திவிட்டு அல்லது போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு இல்லை.
பிரேக் டவுண்: வாகனம் பிரேக் டவுண் ஆனால் இழப்பீடு இல்லை.
டயர் சேதம் அடைந்தால்: டயருக்கு மட்டும் தனியே சேதம் ஏற்பட்டால் இழப்பீடு இல்லை. அதே நேரத்தில், வாகனம் சேதம் அடையும்போது டயரும் பாதிக்கப்பட்டால் இழப்பீடு உண்டு.
தேய்மானம்: நாளடைவில் ஏற்படும் வாகனத்தின் தேய்மானத்துக்கு இழப்பீடு இல்லை.
விபத்து எல்லை: விபத்தானது இந்திய நாட்டின் எல்லைக்கு வெளியே நடந்தால் இழப்பீடு கிடைக்காது.
போர் காலத்தில்: போர் நடக்கும் பகுதிகளில் இந்த பாலிஸியால் பலன் இல்லை.
தற்கொலைத் திட்டம்: உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலை எண்ணத்துடன் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டால், இழப்பீடு இல்லை.
வழக்கமான பராமரிப்பு: வழக்கமாக குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும் பராமரிப்புச் செலவுகளுக்கு கிளைம் கிடையாது.
வயது முக்கியம்: வாகனத்தை 16 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டியிருந்தால் இழப்பீடு இல்லை. பழகுநர் உரிமம் பெற்றவர் ஓட்டி வாகனம் விபத்துக்குள்ளானால், உடன் உரிமம் பெற்ற ஒருவர் இருந்திருந்தால்தான் இழப்பீடு கிடைக்கும்.
கிளைம் செய்வது எப்படி?
வாகனத்தின் உரிமையாளர்தான் இழப்பீடு கோர முடியும்.
இந்தியாவுக்குள் எந்தப் பகுதியில் வாகன விபத்து நடந்தாலும் இழப்பீடு உண்டு. மேலும், இழப்பீட்டை உடனே கிளைம் செய்ய வேண்டும். சிறிய ரிப்பேர்களுக்கான தனித் தனி கிளைமை மொத்தமாகச் சேர்த்து வைத்து, கிளைம் செய்தால் தரமாட்டார்கள்.
ஒருங்கிணைந்த பாலிஸி எடுத்திருந்தால், வாகனம் விபத்துக்குள்ளான சமயத்தில், அதனை சம்பவ இடத்திலிருந்து பணிமனைக்கு சீர் செய்ய எடுத்துச் செல்வதற்கான கட்டணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் அளிக்கும். இந்தக் கட்டணம், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.300. காராக இருந்தால் ரூ.1,500.
இதற்கு மேல் கூடுதல் தொகை தேவை என்றால், கூடுதல் பிரீமியம் கட்டி பாலிஸியை முதலிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட தொகை அல்லது உண்மையில் செலவான தொகை, இதில் எது குறைவோ அதனை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும்.
விபத்து நடந்தது என்றால், யாராவது காயம் அடையும்பட்சத்தில் மோட்டார் வாகனச் சட்டப்படி, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்க வேண்டும். விபத்தில் சிக்கிய இதர வாகனங்களின் பதிவு எண், சாட்சிகளின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை முதலில் சேகரித்துக் கொள்ள வேண்டும்.
விபத்து ஏற்பட்ட உடனே இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும். அவர்களின் அலுவலகத்துக்குச் சென்று அல்லது ஆன் லைன் மூலம் கிளைம் படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதனுடன் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்திருப்பதற்கான ஆதாரம், ஆர்.சி. புத்தகத்தின் நகல் மற்றும் அசல், ஓட்டுநர் உரிமத்தின் நகல் மற்றும் அசல், காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கை (விபத்தில் மூன்றாம் நபர் அல்லது வாகனத்துக்கு சேதம் என்றால்) போன்ற ஆவணங்களையும் தர வேண்டும்.
மேலும், வாகனத்தின் பாகங்களை மாற்றுவது, பாகங்களை சீர் செய்வது குறித்த மதிப்பீட்டைக் கொடுக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவனம் சர்வேயர் ஒருவரை நியமிக்கும். அவர் பரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்வார். அதன் பிறகு வாகனத்தின் சேதத்தைச் சரி செய்யலாம். தேவையான ரசீதுகளைச் சமர்ப்பித்தால் சேதம் அடைந்த பாகங்களுக்கு உரிய விலை மற்றும் அதனை சரி செய்ய ஆகும் கூலியை இழப்பீடாகக் கொடுப்பார்கள். இந்தத் தொகையை ரிப்பேர் செய்த நிறுவனம் அல்லது பாலிஸிதாரரிடம் கொடுப்பார்கள்.
வாகனம் முழுவதும் சேதம் அடைந்தாலோ அல்லது ஒருசில பாகங்கள் சேதம் அடைந்தாலோ அதற்கான இழப்பீட்டை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். நஷ்டம், ஐ.டி.வி. மதிப்பில் 75 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், அது மொத்த இழப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு முழுத் தொகையும் இழப்பீடாக வழங்கப்படும்.
இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்ட நகரத்தைத் தாண்டி வேறு இடத்தில் விபத்து நடந்தால், அருகிலுள்ள அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகத்துக்குத் தகவல் சொல்வதோடு, பாலிஸி எடுத்துள்ள அலுவலகத்துக்கும் தெரிவிக்க வேண்டும்.
மூன்றாம் நபருக்கு இறப்பு அல்லது காயம் ஏற்பட்டால்…
ஒருவரின் வாகனம் மூன்றாம் நபர் மீது மோதிவிட்டால், உடனே போலீஸ் மற்றும் இன்ஷூரஸ் நிறுவனத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.
மூன்றாம் நபர் பாலிஸியில், ஒரு வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் மாட்டிக் கொண்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள், வாகனத்தின் உரிமையாளர் பாலிஸி எடுத்திருக்கும்பட்சத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீடு கோர முடியும். உதாரணத்துக்கு, சுரேஷ் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் மீது அருண் என்பவரின் கார் மோதிவிட்டது. இதில் விபத்தில் சிக்கிய சுரேஷ் அல்லது அவரின் வாரிசுகள், அருண் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீடு கோரிப் பெற முடியும்.
சாலையில் போகும் ஏதோ ஒரு வாகனம் மோதி, மூன்றாம் நபருக்குக் காயம் ஏற்பட்டாலோ அல்லது அவரது வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டாலோ இதற்கு அவர் இழப்பீடு கோர முடியும். அதேபோல, வாகனம் மோதி மூன்றாவது நபர் உயிர் இழக்க நேரிட்டால், அவரின் வாரிசுகள் இழப்பீடு கோர முடியும்.
சிறிய காயம், மூன்றாம் நபர் சொத்து சேதம் போன்றவற்றுக்கு வழக்கமாக இன்ஷூரன்ஸ் நிறுவனமே இழப்பீடு அளித்து விடுகிறது.
விபத்தில் மரணம் அல்லது படுகாயம் ஏற்பட்டு இழப்பீடு கோர, எம்.ஏ.சி.டி. என்ற வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தை (MACT -Motor Accidents Claims Tribunal) பாதிக்கப்பட்டவர் அல்லது வாரிசுதாரர் அணுகி வழக்குத் தொடரலாம். உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செயல்படும் இந்தச் சிறப்பு நீதிமன்றம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை மட்டுமே விசாரித்து தீர்ப்பு வழங்கும்.
வழக்கு தொடரும்போது, போலீஸ் எஃப்.ஐ.ஆர், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், இறப்புச் சான்றிதழ், பாதிக்கப்பட்டவர் மற்றும் இழப்பீடு கோருபவரின் முகவரிக்கான ஆதாரம், மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தால் அதற்கான ஆவணங்கள், விபத்தால் ஊனம் ஏற்பட்டு இருந்தால் அதற்கான மருத்துவச் சான்றிதழ் போன்றவற்றை இங்கே இணைக்க வேண்டியிருக்கும்.
ஒருவேளை விபத்தில் மூன்றாம் நபர் உயிர் இழந்திருந்தால், மரணமடைந்தவரின் வயது, கல்வித் தகுதி, பணி, வருமானம் போன்றவற்றுக்கான ஆதாரங்களை வழக்கு தொடரும் அவரது வாரிசுகள் கொடுக்க வேண்டி வரும். பாலிஸிதாரரின் சார்பில் இன்ஷூரன்ஸ் நிறுவனம், வக்கீல் ஒருவரை நியமனம் செய்யும். அவருடன் பாலிஸிதாரர் ஒத்துழைக்க வேண்டும். இழப்பீடு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் சொல்லும், அதைப் பாதிப்படைந்த மூன்றாம் நபருக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் கொடுக்கும்.
மூன்றாம் நபர் சொத்து சேத வழக்கில், இழப்பீடு எவ்வளவு என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு அட்டவணையாக வைக்கப்பட்டு இருக்கிறது. சேதம் அடைந்த சொத்தின் மதிப்பு அல்லது ஏற்பட்டிருக்கும் காயம் – பாதிப்பு அல்லது ஊனத்தைப் பொறுத்து இழப்பீடு கிடைக்கும்.
இறப்பு வழக்குகளிலும் இது போன்ற ஓர் அட்டவணை வைத்திருப்பார்கள். மரணம் அடைந்தவரின் வயது, வருமானத்தைப் பொறுத்து அவரின் குடும்பத்துக்கு பாதிப்பு அமையும் என்பதால், இந்த விவரங்கள் கேட்கப்பட்டு அதற்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த வழக்குகளில் இழப்பீடு கிடைக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், தாமதமாகும் காலத்துக்கு வட்டி போட்டு, மொத்தத் தொகை தரப்படும்.
இந்த வகை வழக்குகளில், டிரைவரின் மீது தவறு இல்லை என்றாலும், மரணமடைந்த மூன்றாவது நபர்களின் வாரிசுகளுக்கு சுமார் ரூ.50,000 இழப்பீடு கிடைக்கும். டிரைவரின் மீது தவறு இருந்தால் இறந்தவரின் வயது, வருமானத்தைக் கணக்கிட்டு இதைவிட கூடுதலான தொகை இழப்பீடாகக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...