16 நவம்பர் 2024

இதழியல் அறிவோம் தொடர் 14 முதல் 16வரை

 அனைவருக்கும் வணக்கம். 

இதழியல் பற்றி அனைவரும் அறிந்துகொள்வதற்கு வசதியாக தினமும் தொடராக


 நுகர்வோர் அறிக்கை வாட்ஸ்அப் குழுவில் கடந்த 2024நவம்பர் 2 ஆம் தேதி முதல் பதிவிட்டு வருகின்றேன்.அதன் நகலை கொங்குத்தென்றல் வலைப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறேன்.அந்த வகையில் 

                      இங்கு தொடர் 14 முதல் 16வரை பகிர்ந்துள்ளேன்.தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டி பிழைதிருத்த உதவுங்க.....

15-11-2024

இதழியல் அறிவோம் -தொடர் 14

                  ஒவ்வொரு ஆண்டும் அரசு செய்தி அச்சுத்தாள் ஒதுக்கீட்டுக் கொள்கையை அறிவிக்கிறது. இதழ்களை வெளியிடுவோர் அரசின் கட்டுப்பாட்டுவிலையில் அச்சுக் காகிதம் பெற குறிப்பிட்ட படிவத்தில் எழுதி இந்தியாவின் செய்தித்தாள்களின் பதிவாளருக்கு விண்ணப்பித்து குறைந்தவிலையில் காகிதம் பெறலாம்.

  ஆண்டறிக்கையும் சோதனையும்...

                      ஒவ்வொரு பதிப்பாளரும் அவர் வெளியிடும் ஒவ்வொரு செய்தித்தாள் பற்றிய ஆண்டுவிவரங்களை பத்திரிகைப் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.

                ஆண்டுவிவரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பாமல் விட்டால் 1867 ஆம் ஆண்டின் பத்திரிகை, புத்தகங்களின் பதிவுச்சட்டத்தின் 19K பிரிவின்படி தண்டனை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கலாம்.

சோதனைமுறை...

                     பத்திரிகை,புத்தகங்களின் பதிவுச் சட்டத்தின் 19F பிரிவின்படி பத்திரிகைப் பதிவாளரோ, அல்லது அவர் அதிகாரமளிக்கும் பதிவுபெற்ற அலுவலரோ எந்த இதழின் அலுவலகத்திற்கும் சென்று இதழ் வெளியீடு பற்றிய விவரங்களை சரிபார்க்க உரிமை உண்டு. சுற்றிலிருக்கும் இதழ்களின் எண்ணிக்கையில் சோதனையிடும்பணியை திறமையாகச் செய்வதற்காக வடக்கு மண்டலத்திற்கு புதுடெல்லியிலும்,தெற்கு மண்டலத்திற்கு சென்னையிலும், மேற்கு மண்டலத்திற்கு பம்பாயிலும், கிழக்கு மண்டலத்திற்குக் கொல்கத்தாவிலும் என நான்கு மண்டலங்களாகப் பிரித்து செயல்படுகின்றனர்.

ஒரு இதழைத் தொடங்குவதைப் போன்றே நிறுத்துவதாக இருந்தாலும் மாவட்ட நீதிபதியிடம் இதழ் வெளியீட்டாளரும், அச்சிடுபவரும் அதற்குரிய விண்ணப்பத்தில் எழுதி தரவேண்டும்.இல்லையேல் இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

16-11-2024
இதழியல் அறிவோம்.
தொடர்: 15.
செய்தித்தாள் நிர்வாக அமைப்பு.
வார இதழ்களிலும்,சிறிய நாளிதழ்களிலும் பொதுவாக இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.
(1) அலுவலகம். (2) பணிப் பிரிவு.
நடுத்தர,பெரிய நாளிதழ்களில் பொதுவாக  மூன்று பிரிவுகள் இருக்கின்றன.அவை
(1) வாணிபப் பகுதி, (2) இயந்திரப் பகுதி, (3) ஆசிரியர் பகுதி.
நன்கு வளர்ச்சி பெற்ற பெரிய செய்தித் தாள்களில் ஆறு பிரிவுகள் இருக்கின்றன.அவைகளுக்கு 
பொதுமேலாளர் ஒருவர் இருப்பார்.
பொதுமேலாளரின் நேரடிப்பார்வையில் (1) ஆசிரியப் பிரிவு, (2) வாணிபப் பிரிவு, (3) இயந்திரப் பிரிவு, (4) வளர்ச்சிப் பிரிவு, (5) புள்ளிவிவரப் பிரிவு, (6) நிர்வாகப் பிரிவு ஆகிய ஆறு பிரிவுகள் செயல்படுகின்றன.இவைகளில்,
ஆசிரியப் பிரிவுக்குக் கீழ் (1) செய்தி அறை,(2) படி எடுக்கும் பகுதி, (3) தலையங்கப் பகுதி, (4)படப் பகுதி, (6) நூலகம். ஆகிய ஆறு அலுவலகங்களும்,
வாணிபப் பிரிவுக்குக் கீழ் (1) விளம்பரப் பகுதி, (2)விற்பனைப் பகுதி, (3) கணக்குப் பகுதி ஆகிய மூன்று அலுவலகங்களும், இயந்திரப் பிரிவுக்குக் கீழ் (1)தட்டச்சு அச்சிடும் பகுதி, (2) அமைப்புப் பகுதி, (3) படங்களைப் பதிப்பிக்கும் பகுதி, (4) அச்சிடும் பகுதி, (5) திருத்தும் பகுதி என ஐந்து அலுவலகங்களும் செயல்படுகின்றன.இனி வருகின்ற தொடர்களில் 
"செய்திகள்" என்ற முக்கிய பகுதியில்  - சேகரித்தல் மற்றும் எழுதுதல்.
செய்தியாளர் வகைகள்,செய்தியாளர் பணிகளும் பொறுப்புகளும், செய்தியாளரின் பண்புகள், செய்தியாளரின் கருவிகள், செய்தியாளருக்குரிய அடிப்படை விதிகள், செய்திகளாவது எவையெவை?, செய்தியின் இயல்புகள்,செய்தியின் வகைகள்,உள்ளடக்கங்கள்,செய்தி திரட்டும் முறைகள், என  விவரமாக அறிவோம்.

17-11-2024
இதழியல் அறிவோம் - 16
                                 ஒரு நாளிதழ் உருவாகி வெளிவர இதுவரை குறிப்பிட்டவாறு எத்தனையோ நடைமுறைகளைத் தாண்டி வாசகர்களின் கையில் தவழ்கிறது. 
இவ்வாறு வெளிவரும் இதழ்களின் நாடி நரம்புகளாக விளங்குபவர்கள் செய்தியாளர்களே.இவர்களை நிருபர் என்றும்,ரிப்போர்ட்டர் என்றும் அழைக்கப்படுகின்றன.பொதுமக்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புள்ளவர்களாதலால் பொதுமக்களிடம் மிகுந்த மரியாதை பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.அதேவேளை வெளியிடும் செய்திகளைப் பொறுத்து மக்களின் கோபங்களுக்கு ஆளாவதுடன் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர்.
                  ஒருகாலத்தில் செய்தியாளர்களின் பெயர்களை இதழ்கள் வெளியிடுவதில்லை.இப்பொழுது பெரிய நாளிதழ்களே முக்கியமான செய்திகளுடன் அந்த செய்தியை எழுதிய செய்தியாளருடைய பெயரையும் வெளியிடுகின்றன.
செய்தியாளர்கள் - விளக்கம்.
ஒரு செய்தித்தாளின் பெருமையும்,நம்பிக்கையும் அதனுடைய செய்தியாளர்களையே பெரிதும் சார்ந்துள்ளது.செய்தியாளர்கள்தான் ஒரு செய்தித்தாளுக்கு வாழ்வளிக்கும் குருதி போன்றவர்கள். இதழியலின் இதயமாக விளங்கும் செய்தியாளர்கள் தம் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
                             எல்லோரும் ஏதாவது ஒரு செய்தியினைப் பெற்று மற்றவர்களுக்கு பரப்பிக் கொண்டிருக்கலாம்.அதற்காக அவர்கள் எல்லோருமே செய்தியாளர்களாவதில்லை. ஒரு செய்தியாளர் பரப்புகின்ற செய்திகளை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை, தருகின்ற செய்தியின் பயன்பாடு மற்றும் சுவை, செய்தியாளராக செய்யும் தொழிலின் அறிவு,செய்முறை,நோக்கம் ஆகியவற்றால் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.செய்தியாளர் மற்றவர்களைப் போன்று சாதாரணமனிதர் என்றாலும் செய்தியாளராகிய தொழிலைச் செய்கின்றபோது சகலகலா வல்லவராக பணியாற்ற வேண்டியுள்ளது.சிறந்த செய்தியாளர் வரலாறு படைத்திருக்கின்றனர்.உயிரை துச்சமாக எண்ணி துணிச்சலுடன் ஆபத்தான இடங்களில் களமிறங்கி புலனாய்வு செய்து பல செய்திகளை வெளிக்கொண்ட வந்து மக்களிடம் பரப்பியுள்ளனர்.அதனால்தாங்க ஓர் அறிவார்ந்த ஆசிரியரைவிட அறிவார்ந்த செய்தியாளர் மிகவும் மதிப்புடையவர் என்கின்றனர்.
தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...