19 ஆகஸ்ட் 2016

சிறு தானியங்களின் மகத்துவம்-


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நமது பழங்கால உணவுமுறையான,ஏழைகளின் உணவுகளான சிறுதானிய உணவுகள் தற்போது வசதி படைத்தவர்களின் உணவாக கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.அதாவது நமது பாரம்பரிய உணவு தற்போது மீண்டெழுந்து முக்கிய உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.அவ்வாறான சிறுதானியங்களின் உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இக்க்கட்டுரையில் படியுங்க.வெளியிட்ட தின மணி நாளிதழுக்கு நன்றிங்க..

சிறு தானியங்களின் பெரும் பலன்கள்

மக்களின் இன்றைய உணவு முறை இயற்கைக்கு மாறானதாக உள்ளது. செயற்கை உணவுகளால் மனித உடலுக்கும் நன்மை இல்லை,
மக்களின் இன்றைய உணவு முறை இயற்கைக்கு மாறானதாக உள்ளது. செயற்கை உணவுகளால் மனித உடலுக்கும் நன்மை இல்லை, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பலன் இல்லை. இயற்கையோடு இயைந்த தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் சிறுதானியங்கள் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. அவற்றின் வரலாறு, நற்குணங்கள் மற்றும் மருத்துவப் பலன்களை அறிந்துகொள்வதன் மூலம் நன்மை அடைவதுடன் சிறு தானியங்களின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்த முடியும்.
 சிறு தானியங்களாகத் தினை, சாமை,கம்பு, கேழ்வரகு (அல்லது) ராகி, குதிரை வாலி, காடைக்கண்ணி (பனிவரகு), வரகு,சோளம் ஆகியவற்றைப் பட்டியலிடலாம். இந்த அதிர்ஷ்டவசமான தானியங்கள் நமக்காகவே மேலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன என்று சிறு தானியங்களின் சிறப்பைச் சீன நாடோடிப் பாடல் ஒன்று சித்திரிக்கிறது.
 இந்தச் சிறு தானியங்கள் தமிழர் உணவு முறையிலிருந்து சிறிது சிறிதாக விட்டு விலகிக் காணாமல் போய்விட்டன. சிறு தானியங்கள் என்றொரு தானிய வகை இருப்பதையே இன்றைய தலைமுறையினர் அறியாமல் உள்ளனர்.
 சிறு தானியங்களின் மகத்துவத்தை மக்கள் அறியாமல் இருப்பது காலத்தின் கோலமே. சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் மழை பெய்வதிலும் முறை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் மழையை நம்பி விளையும் மானாவாரிப் பயிர்களையும் பாதித்துள்ளது. மானாவாரிப் பயிர்களான சிறு தானியப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளும் மிகமிகக் குறைவே.
 பசுமைப் புரட்சியால் மானாவாரிப் பயிர்கள் புறம் தள்ளப்பட்டன என்று பன்னாட்டு உணவுப் பயிர்கள் ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வில்லியம்தார் கூறியிருப்பது இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது. நஞ்சை நிலப் பயிர்களுக்கு உள்ள விலைப் பாதுகாப்பு புஞ்சை நில மானாவாரிப் பயிர்களுக்கு இல்லை என்பதால் அவற்றின் உற்பத்தியும், அவற்றைச் சாகுபடி செய்யும் நிலப்பரப்பும் ஒன்றுக்குப் பாதியாகக் குறைந்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஆர்.எஸ். நாராயணன்.
 விளைவு? கேள்விப்படாததும் விநோதமுமான நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. நமது பாரம்பரிய சிறு தானியங்களைக் கைவிட்டு நவீன உணவு முறைக்கு மாறியதால் ஏற்பட்டதன் பலன் இது.
 நம் உடல்நலத்திற்கு அதிகம் கேடு விளைவிப்பது துரித உணவுகளே (Fast Food) ஆகும். குழந்தைகள், பதின் பருவத்தினரின் அதீத உடற் பருமனுக்குத் துரித உணவுகளை உட்கொள்வதே காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 சிறு தானியங்களை ஏழைகளின் உணவு என்று சொல்வார்கள். இன்று அவை வசதியானவர்களின் உணவாக, நோயாளிகளுக்கான உணவாக மாறியுள்ளது. இந்திய மக்களின் உணவு கலாசாரத்தைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் அதில் சிறு தானியங்களின் முக்கியப் பங்கை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
 தமிழர்களின் உணவுமுறையில் சிறு தானியங்களின் மறுபிரவேசம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று கூறலாம். சிறு தானியங்களின் மருத்துவக் குணங்களையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்ட நகர வாசிகள் அவற்றைத் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 மக்கள் பெருமளவில் காதி, சர்வோதயா மற்றும் ஆர்கானிக் கடைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். சிறு தானியங்களை விளைவிக்க விவசாயிகளும் இப்பொது முன்வந்துள்ளனர். மத்திய-மாநில அரசுகளும் மானாவாரியில் விளையும் சிறு தானிய உணவுப் பயிர்களை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன.
 பழந்தமிழ் இலக்கியங்களில் சிறுதானியங்கள் கூலம் என வழங்கப்படுகின்றன. சிறு தானியங்கள் குறிஞ்சி, முல்லை என்ற இரு நிலங்களிலும் பயிரிடப்பட்டன. சிறு தானியங்களை மழையை நம்பி விளையும் மானாவாரிப் பயிர்கள் அல்லது புஞ்சைநிலப் (புன்செய்) பயிர்கள் என்றும் கூறுவர்.
 சிறுதானியங்கள் தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பண்பாட்டில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. இறை வழிபாட்டிலும் சிறு தானியங்களின் பங்கு இருந்திருக்கிறது. முருகக் கடவுளுக்குத் தினை மாவும், திருமாலுக்குத் தினைப் பாயசமும் படைக்கப்பட்டன.
 பூப்பெய்தும் பெண்களுக்குத் தினை மாவிடித்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி உண்ணக் கொடுப்பது தமிழக நாட்டுப்புற மக்களிடம் இன்றும் வழக்கில் உள்ளது. சிறு தானியங்களைப் பயிரிடும் வேளாண் முறைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் தெரிந்து வைத்திருப்பதுடன் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.
 நமது உடலுக்கு நன்மை அளித்து விவசாயத்துக்கும் அனுகூலமாக இருந்ததாலேயே சிறு தானியங்களுக்கு பழந்தமிழகத்தில் அவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்கிறது. சிறு தானியங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான வரலாறும் சிறப்பு மருத்துவக் குணங்களும் உண்டு.
 தினை (Foxtail Millet): இந்தத் தானியம் உலக அளவில் பயிரிடப்படுகிறது. தினை உற்பத்தியில் இந்தியா முதன்மை வகிக்கிறது. தினையில் செய்யப்படும் உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்குத் தினையைக் கூழாக்கித் தருவது தமிழர் மரபாக உள்ளது. இது புரதச் சத்து, நார்ச் சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து, இரும்புச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் (beta-Carotene) நிறைந்தது.
 குதிரைவாலி (Barnyard Millet): மானாவாரி நிலங்களில் விளையக்கூடிய இத் தானியம் குறைந்த நாள்களில் நிறைந்த விளைச்சல் தரக்கூடியது. இப்பயிரின் கதிர், குதிரையின் வால் போல் காணப்படுவதால் குதிரைவாலி என அழைக்கப்படுகிறது. குதிரைவாலி தானியத்தில் சமைக்கப்படும் உணவு உடல் உறுப்புகளைத் தூய்மைப்படுத்தும் நற்குணம் கொண்டது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
 சாமை (Little Millet): சாமை எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு. வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி, மலச்சிக்கல் வராமல் தடுக்கும் தன்மை முதலான ஏராளமான மருத்துவக் குணங்கள் சாமை உணவுக்கு உண்டு.
 கேழ்வரகு (Finger Millet): நகர்ப்புறங்களில் ராகி என்றும் நாட்டுப் புறங்களில் கேப்பை என்று வழங்கப்படுகிறது. இதை ஏழைகளின் உணவு என்று கூறுவார்கள். கேழ்வரகு உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும் குணமும் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகமிக நல்லது.
 கம்பு (Pearl Millet): ஆப்பிரிக்கக் காடுகளில் விளைந்து கிடந்த இந்தத் தானியத்தை அங்கு வசித்த பழங்குடிகளே உலகுக்கு அறிமுகம் செய்தார்கள். அமெரிக்கா இந்தத் தானியத்திலிருந்து எரிபொருள் எடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில்தான் கம்பு அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இதனைத் தென் தமிழகக் கிராமப் பகுதிகளில் கம்மம்புல் என்று அழைக்கின்றனர்.
 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் உணவில் கம்பு இரண்டறக் கலந்திருக்கிறது. தமிழகத்தின் கரிசல் பகுதிகளில் கம்மஞ் சோறு உருண்டை மிகவும் பிரபலம். கம்பு கால்சியம், இரும்பு, புரதம், மாவுச் சத்து நிறைந்தது. வயிற்றுப் புண் மற்றும் குடல் புண்ணை ஆற்றும் குணம் கொண்டது. குழந்தைகள், கர்ப்பிணிகள் கம்பு உணவைத் தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களும், உணவியல் நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர்.
 மன அழுத்தத்தைப் போக்கிப் புத்துணர்வு ஏற்படுத்தும் சக்தி கம்புக்கு இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண்பார்வை மற்றும் பாலியல் குறைபாடுகளுக்கும் இதில் மருந்து பொதிந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறு தானியங்களிலே அதிக புரதச் சத்து நிறைந்தது கம்பு.
 சோளம் (White Millet): ஐரோப்பியர்கள் வழி இந்தியாவுக்கு வந்த சோளம் தமிழகத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் நாட்டுச் சோளம் (வெள்ளைச் சோளம்), கருஞ்சோளம், செஞ்சோளம், நாத்துச் சோளம், மக்காச் சோளம், இரும்புச் சோளம் எனப் பல வகைகள் உண்டு. நாட்டுச் சோளம் சுவையும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த தானியம். தமிழர்களின் உணவில் சோளம் இரண்டறக் கலந்துள்ளது. பொங்கல் திருநாளில் சோளம் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. தென் மாவட்டக் கிராமங்களில் சோளத் தோசையின் மணமும் ருசியும் அலாதியானது. சோளத்தில் செய்த உணவுகள் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது.
 வரகு (Kodo Millet): வறண்ட பகுதிகளில்கூட விளையக்கூடிய தன்மை வரகிற்கு உண்டு. வரகு தானியத்தின் மேல் பகுதி ஏழு அடுக்குகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் விதைகள் ஆயிரம் வருடங்கள் விதைப்புத்திறன் கொண்டவை என வேளாண் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வரகில் செய்த உணவுகள் உடல் பருமனைக் குறைத்துக் கண்களுக்கு ஒளி தரக் கூடியவை. பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளைச் சீர் செய்யும் தன்மை கொண்டது.
 மொத்தத்தில் சிறு தானிய உணவுகள் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காதவை. சிறு தானியங்கள் குறைந்த நீரில் விளையும் தன்மை கொண்டவை. குறுகிய காலப் பயிர்கள் வரிசையில் சிறு தானியங்கள் முதலிடம் பெறுகின்றன. குறைந்த எரிபொருளில் சிறு தானிய உணவைச் சமைக்க முடியும். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினர்க்கும் உகந்த நுண்ணூட்டச்சத்து கொண்டதாகச் சிறு தானியங்கள் விளங்குகின்றன.
 மனித உணவுத் தேவையை கலோரி சக்தியை வைத்துக் கணக்கிடாமல், புரதம், நல்ல கொழுப்பு, தாதுப்பு, வைட்டமின் சத்துக்களை வழங்கும் மானாவாரியில் விளையக்கூடிய சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி, வரகு முதலான சிறு தானியங்களை வைத்துக் கணக்கிட வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள் வற்புறுத்துகின்றனர்.
 பாரம்பரியச் சிறு தானிய உணவுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நம் வலிமையான, ஆரோக்கியமான உடலுக்குப் பாரம்பரிய சிறு தானிய உணவுகளைப் பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.
 சிறு தானிய விளைச்சலில் தன்னிறைவு அடைய மத்திய-மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். சிறு தானிய உற்பத்தி மற்றும் உணவுகளால் எதிர்கால இந்தியப் பொருளாதாரமும், சந்ததியினரும் பெரும் பலன் அடைவது திண்ணம். உடல்நலத்திற்கு அதிகம் கேடு விளைவிப்பது துரித உணவுகளே (Fast Food). குழந்தைகள், பதின் பருவத்தினரின் அதீத உடற் பருமனுக்குத் துரித உணவுகளை உட்கொள்வதே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 கட்டுரையாளர்:
 பேராசிரியர்.தின மணி நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக