18 அக்டோபர் 2011

பசுமை ஆக்கும் திட்டம்


             தமிழக காடுகளில் உயிர்ப்பன்மை மற்றும்  

                 பசுமை ஆக்கும் திட்டம்:

           ஜப்பான் நிதியில் விரைவில் துவக்கம்



      தமிழகத்தில் குறைந்து வரும் காடுகளின் பரப்பளவு மற்றும் வெளிநாட்டு தாவரங்களின் ஆக்கிரமிப்பை சீர் செய்யும் வகையில், உயிர்ப்பன்மை மற்றும் பசுமை ஆக்கும் திட்டம், 686 கோடி ரூபாய் செலவில், விரைவில் துவங்கவுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு இரண்டு கோடி மரங்களை தனியார் நிலங்களில் வளர்க்கவும், காடுகளின் உயிர்பன்மையை பாதுகாக்கவும், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவன நிதியுதவியுடன் செயல்படுத்த, தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளது.

       உயிர்ப்பன்மை திட்டம்:
காடுகளை பொறுத்தவரை "லன்டானா, வேலி கருவை முள் மரம்' உள்ளிட்ட வெளிநாட்டு புதர் செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இவை உள்நாட்டு வகைகளை வளரவிடாமல் தடுக்கின்றன. மேலும், இவை விலங்குகளின் உணவுக்கு உகந்தது அல்ல. உள்நாட்டு தாவரங்கள் வளரும் இடத்தில் ஆக்கிரமித்துள்ள லன்டானா, வேலி கருவை போன்றவற்றை வேரோடு அகற்றி, அந்த இடத்தில் உள்ளூர் மரங்கள் நடுவதற்கு புதிய திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும். குறிப்பாக, யானைகளின் உணவான மூங்கில், புல் வகைகள், விலா மரங்களின் கன்றுகளை நட்டு உருவாக்கும் திட்டமாக உயிர்ப்பன்மை திட்டம் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலை, தர்மபுரி,சேலம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சூழல் சுற்றுலா:
இத்திட்டத்துடன் இணைந்து "சூழல் சுற்றுலா' ஆரம்பிக்கும் திட்டமும் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. சரணாலயம் அமைந்த காடுகளில் பழங்குடி மக்கள் ஒத்துழைப்புடன் ஆங்காங்கே சூழல் சுற்றுலா உருவாக்கப்படுகிறது. சுற்றுலாவுக்கு வரும் மக்கள் தங்கும் விடுதிகளை பராமரிக்கவும், அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவதற்கும், மலை வாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் இத்திட்டம் பயன் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஒகேனக்கல், முதுமலை, கோவை, சத்தியமங்கலம், ஆசனூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய காடுகளில் "சூழல் சுற்றுலா' உருவாக்கும் இடமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

பசுமை ஆக்கும் திட்டம்:
வனங்களுக்கு வெளியே தனியார் நிலங்களில் மரங்களை வளர்க்கும் இத்திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி மரங்கள் வீதம் ஐந்தாண்டில், 10 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தரிசு நிலங்களில் தேக்கு, குமிழ், மலை வேம்பு, சவுக்கு, பெருமரம் போன்ற மரக்கன்றுகள் வனத்துறை சார்பில், தனியார் நில உரிமையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அம்மரங்களை வளர்க்க ஆண்டு தோறும் ஒரு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகையும் வனத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு பின் வளர்ந்த மரங்களை வெட்டி, அதை விற்பனை செய்து கொள்ளும் உரிமையும் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மரங்களை சந்தையில் விற்பதால் கிடைக்கும் பணம் விவசாயிகளுக்கு லாபத்தை தருகிறது. இதனால், இத்திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுவர். அப்போது தான் மரப்பரப்பளவு அதிகரிக்கப்படும் என வனத்துறை கருதுகிறது.

ஜப்பான் நிதி
இந்த இரண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கு, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் சார்பில், 686 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கடன் வழங்கவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு அறிவிக்கும் என, வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு, ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுர கி.மீ., இதில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். அப்போது தான் இயற்கை சமன்பாடு கிடைக்கும்; மழை பொழியும்; சுத்தமான காற்று வீசும். எனவே மரப்பரப்பு அதிகரிக்க வைக்கும் வகையில் தனியார் நிலங்களில் பசுமையாக்கும் திட்டம் தர்மபுரி, கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் செயல்படவுள்ளது. நில உரிமையாளர்களுக்கு இலவச மரக்கன்றுகளை, வன விரிவாக்கம் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் வழங்கி விடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள்...

லன்டானா, வேலி கருவை முள் மரங்களை வெட்டாமல் விட்டால் சுற்றுச்சூழல் பாதிக்குமா என்ற கேள்விக்கு, தாவரவியல் ஆராய்ச்சியாளர் முத்துகார்த்திக் அளித்த பதில்: அவற்றை வெட்டாமல் விட்டால் கண்டிப்பாக பாதிக்கும். உலகளவில் ஆக்கிரமிப்பு செடி வகைகளில் இடம் பெற்ற பத்து மரங்களில் லன்டானா, வேலி கருவை முள் இடம் பெற்றுள்ளது. கோல்கட்டாவில் உள்ள பொட்டானிக்கல் கார்டனின் அழகு கண்காட்சியில் வைப்பதற்காக லத்தீன், அமெரிக்கா காடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட செடி தான் லன்டானா. விறகு தட்டுப்பாட்டை போக்க, மெக்சிக்கோ நாட்டிலிருந்து வேலிகருவை முள் மரம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு மரங்களும் வனவிலங்குகளின் தாவரங்களை வளர விடாமல் தடுக்கின்றன. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டத்திற்கும் இந்த மரங்கள் இடையூறாகவே விளங்குவதால், இதை அழிக்கும் திட்டம் வரவேற்கக்கூடியது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...