09 ஜூலை 2016

தாளவாடியில் கருத்தரங்கு.

                                                

                                                 ' வாசிப்பே நமது சுவாசிப்பு '
மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். 2016ஜூலை 9 ந் தேதி சனிக்கிழமை இன்று காலை11.00மணியளவில்
                 ஈரோடு மாவட்டம் தாளவாடியில் READ எனப்படும்  கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மைய அலுவலகத்தில் 

                   சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக,
              திருமிகுN.நஞ்சுண்ட நாயக்கர்,தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் தலைமையில்,
''வாசிப்பே நமது சுவாசிப்பு'' என்ற தலைப்பில்
         கருத்தரங்கம் நடைபெற்றது..
READ அமைப்பின் இயக்குநர் திருமிகு.R.கருப்புசாமி அவர்களும்,
PALM2NGO அமைப்பின் நிர்வாகி திருமிகு S.யேசுதாசன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் திருமிகு.C.பரமேஸ்வரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
வாசிப்பே நமது சுவாசிப்பாக இருக்க வேண்டும் என திருமிகு A..பாபு அவர்கள் மனித உரிமைகள் தலைவர் உரையாற்றினார்.
கருத்தரங்கில் ''மாணவ - மாணவியர் தனி மனித ஒழுங்குடன் துணிந்து செயல்பட்டு தம் வாழ்க்கையில் முன்னேறுவதுடன் சமூக ஒற்றுமை காப்பதற்கான வழிகாட்டல்'' என்ற தலைப்பில்  பத்திரிக்கையாளர் திருமிகு. T.V.ஆனந்த நாராயணன் அவர்களும்,திருமிகு அல்போன்ஸ் மணி PALM2NGO அவர்களும் திருமிகுP. ராஜூ TNSTC THALAVADI  அவர்களும் உட்பட அனைவரும் விவாதிக்கும்போது,   அரசியல்,சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி சமூக ஒற்றுமை காப்பதற்காகவும்,தேச ஒற்றுமை காப்பதற்காகவும்,இளைய சமூகத்தின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு நல்வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
 அதன் பின்னர்  
கீழ்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    (1) மாணவர் நூலகம் வருகிற 2016ஜூலை 15 ந் தேதி காலை 10.30மணியளவில் தாளவாடியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துவக்குவது.
  (2)சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் சார்பாக மாணவர் நூலகம்  செயல்படுவது,மாணவர் நூலகம் அரசியல்,சாதி,மத,இன,மொழி,வேறுபாடின்றி செயல்படுத்துவது.
          (3) மாணவர் நூலகத்திற்கு கௌரவ ஆலோசகராக தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் திருமிகு.N.நஞ்சுண்ட நாயக்கர் அவர்களை ஒருமனதாக தேர்ந்தெடுப்பது. 
   மாணவ வாசகர் வட்டம் துவக்கி செயல்பட
.(4)ஆர்வமுள்ள சமூக சேவை அமைப்புகளையும்
       விருப்பமுள்ள  தன்னார்வலர்களையும்  பங்கேற்க அழைப்பது.
(5) கல்வித்துறை உட்பட அரசு சார்ந்த அனைத்து துறைகளையும்,பங்கேற்க அழைப்பது.
(6)முதற்கட்டமாக தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவக்குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்ப்பது.அப்போது  8ம் வகுப்பு மாணவக்குழந்தைகளுக்கு மட்டும் புத்தகங்கள் சுழல்முறையில் வழங்குவது.
 (7)வருகிற2016 ஆகஸ்டு 5ந் தேதி ஈரோட்டில் துவங்கும் 12 வது புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கான புத்தகங்களை இயன்றளவு வாங்குவது.
 (8) கடம்பூர் தொடங்கி கோட்டமாளம்,கேர்மாளம்,கோட்டாடை,ஆசனூர்,பெஜலட்டி,தலமலை,திகனாரை,
சூசைபுரம்,குன்னன்புரம்,கெட்டவாடி,பனகள்ளி, என தேவைக்கேற்ப செயல்படும் திறனுக்கேற்ப  மையங்களை ஏற்படுத்துவது.
 (9)அரசு நூலகங்களை அனைவரையும் பயன்படுத்த விழிப்புணர்வு கொடுப்பது.
(10)மாணவ வாசகர் மன்றம் துவக்கி செயல்பட வழிகாட்டுவது.
  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக R.பிலவேந்திரன் PALM 2N.G.O.அவர்கள் தம் நன்றியுரையில் வாசிப்பே நமது சுவாசிப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் இடவசதி அளித்து உதவிய READ அமைப்பின் இயக்குநர் திருமிகு.R.கருப்புசாமி அவர்களுக்கும், மாணவர் நூலகம் செயல்பட இடவசதி அளிக்க ஒப்புதல் அளித்த திருமிகு. N.நஞ்சுண்ட நாயக்கர் தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்களுக்கும், PALM2NGO நிர்வாகி திருமிகு S.யேசுதாசன் அவர்கள் உட்பட கலந்துகொண்டPALM2NGO பொறுப்பாளர்கள் அனைவருக்கும்,மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் திருமிகு. A.பாபு அவர்களுக்கும்,T.V.ஆனந்த நாராயணன் அவர்களுக்கும்,P.ராஜூ அவர்களுக்கும் நன்றி கூறினார்.

      

02 ஜூலை 2016

வாசிப்பது சுவாசிப்பது போன்று தொடர்ச்சியாக இருக்கட்டும்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
எழுத்தறிவு இல்லாமலிருப்பது பெருங்குற்றமல்ல!
.எழுத்தறிவுள்ளவர்கள் வாசிக்காமல் இருப்பதே பெருங்குற்றம்!!
                   இன்றைய சமூகம் வாசிப்பின் அவசியம் பற்றி தெரியாமலேயே பள்ளிப்படிப்பிலிருந்து பட்டப்படிப்பு முடித்து பலதரப்பட்ட தொழில்களிலும் பலதுறைகளில் பணியாற்றியும் வருகிறார்கள்.  நிறைய சம்பாதிக்க வேண்டும்,தான் நன்றாக இருக்க வேண்டும்.தம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே தம் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.paramesdriver@gmail.com
 இதுவே இன்றைய சமூகத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகளை உருவாக்குகிறது.வாசிப்பு என்றால் என்ன?வாசிப்பதால் பயன் என்ன?எதை வாசிப்பது?எப்படி வாசிப்பது? பள்ளிக்கூடத்திலும் பிறகு கல்லூரியிலும் புத்தகங்கள் வாசித்தாயிற்று! இன எதற்கு வாசிக்க வேண்டும்?என்றெல்லாம் கேள்விக்கணைகள் எழுப்புகிறார்கள்.இதனை சமூகத்தின் அறியாமையா அல்லது அறிந்தும் சோம்பலின் காரணமாக இவ்வாறு சாக்காடு பேசுகிறார்களா?எனத்தெரியவில்லை.
  பணம் சம்பாதிக்கவும்,வேலைகளுக்கு செல்லவும்,தொழில்களை செய்யவும் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பு உதவுகிறது.ஆனால் பண்பட்ட மனிதனாக,அறிவார்ந்த மனிதனாக,மேம்பட்ட வாழ்க்கை வாழ பலதரப்பட்ட புத்தக வாசிப்பே உறுதுணை செய்கிறது.
வாழுகின்ற நமக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி என்ற வரிகளுக்கேற்ப நம் முன்னோர்கள் அனுபவத்தொகுப்பினை வாசித்து அதன் கருத்தினை  நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக ஏற்று நடக்க முடியும்.
 புத்தகங்கள் உயிரற்ற காகிதக்கட்டு அல்ல! புத்தகங்கள் உயிர்ப்புள்ள மனித மனங்கள்.அவ்வாறான நல்ல அறிவு சார்ந்த புத்தகங்கள் தொடர்ந்து வாசிப்பது மூலமே ஒருவன் தம் வாழ்க்கையில் உயர்வடைய முடியும்.அறிவுக்கு வேர் நல்ல புத்தகங்களே,வாசித்தலால்தான் நமக்கு அறிவு வளர்கிறது.அறிவுடைய சமூதாயத்தை உருவாக்க முடிகிறது.வாசிப்பு என்பது குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே சார்ந்தது அல்ல.தனிப்பட்ட மொழிக்கோ,இனத்துக்கோ,சமயத்துக்கோ உட்பட்டதல்ல.சாதி,சமய,மொழி வேறுபாடின்றி ஆண்,பெண் என அனைத்து மக்களும் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கலாம்.வாசிக்க என காலம் நேரம் கிடையாது.எந்நேரமும் வாசிக்கலாம்.அதனால்தான் வள்ளுவப்பெருந்தகை,''தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு'என்றார்.
            என வாசிப்பு பரப்புரையில் ஈடுபாடுகொண்ட
         அன்பன்,
   C.பரமேஸ்வரன்,
தாளவாடி 
9585600733

29 ஜூன் 2016

மாணவர் இலவச நூலகம்-தாளவாடி அறிவிப்பு

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
 ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மாணவர்களுக்காக நடமாடும் இலவச நூலகம் துவக்கி செயல்படுத்த உள்ளோம்.தங்களின் மேலான ஆலோசனைகளை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
.தொடர்புக்கு
 C.பரமேஸ்வரன்,paramesdriver@gmail.com +91 9585600733
அரசுப் பேருந்து ஓட்டுநர்,தாளவாடி -638461

17 ஜூன் 2016

வாசிப்பை நேசிப்போம். கவிதை

வாசிப்பை நேசிப்போம்....

வீட்டிற்கு வெளிச்சம்
சாளரத்தின் ஊடே....
அறிவிற்கு வெளிச்சம்
வாசிக்கும் நூலே!!!!

வாசிக்காமல் யார்க்கும்
வளர்வதில்லை அறிவு...
இதனை நேசிக்காமல் போனால்..
வளர்ச்சிக்கே முறிவு!!!

பொது அறிவு பெற்றிடவே
எப்பொழுதும் நீ வாசி
அறிவுள்ள புத்தகங்கள்
அனைத்தையுமே நேசி!!!!

அடிமைகளின் சூரியனாம்
அபிரகாம் லிங்கனுமே
அமெரிக்க குடியரசு தலைவனென்று
ஆக்கி உயர்த்தியதும் புத்தகமே!!!

மாணவப் பருவத்திலே
பாட புத்தகங்களின் வாசிப்பு
சதத்தினையும் தொட வைக்கும்
வாசிப்பு சாதிக்க வழி வகுக்கும்!!!

ஊருலகம் யாவும் யாவும்
சுற்றி அறிய காலம் கொள்ளும்
புத்தகங்கள் அனைத்தும் விளக்கும்
கற்றறிய குறுகிய காலம் போதும்!!!

இருந்த இடத்தில் எல்லாம் அறிய
கையடக்க நூலே போதும்
கற்றறியும் வழக்கமிருந்தால்
சுடர் விடும் உன் அறிவெப்போதும்!!!

கற்பனை உலகிற்கே - நம்மை
இட்டுச் செல்லும் புத்தகங்கள்
மூளைக்கும் சிறகு முளைக்கும்
மூவுலகும் இட்டுச் செல்லும்!!!

நூலகங்கள் சென்று வர
நாளும் நீ தவறிடாதே
நுண்மதி பெருக்கி வைக்கும்
நூல் கற்க மறந்திடாதே!!!

புதுப்பித்துக் கொள்ள நீயும்
புத்தகம் வாசித்தே பழகு - உன்னை
புதுப்பிக்க புதுப்பிக்க
புறந்தள்ளாது இந்த உலகு!!!!

வாசிப்பை நாளும் நேசிப்பாய்
நல்ல நூலனைதுமே சுவாசிப்பாய்  
அறிவாளியாக்கும் உன்னை அறிவாய்
அனைவர் மதித்திட நீ உயர்வாய்!!!

12 ஜூன் 2016

மாணவர் நூலகம்-இலவசமா! அதெப்படிங்க சாத்தியமாகும்?

மரியாதைக்குரியவர்களே,
       அனைவருக்கும் இனிய வணக்கம்.தாளவாடி வட்டத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களிலிருந்து பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஒழுக்கமும்,சிந்தனையும்,பொது அறிவும்,தன்னம்பிக்கையும்,மேலோங்கச்செய்யும் விதமாக நாம் நம்ம தாளவாடிவட்டத்தில் ''மாணவர்கள் இலவச நூலகம்'' வருகிற 2016ஜூலை மாதம் 15ந் தேதி துவக்கி செயல்படுத்த உள்ளோம்.அதுவும் மாணவர்களின் இருப்பிடம் சென்று புத்தகங்களை வழங்க உள்ளோம்சுழற்சிமுறையில் இலவசமாக!>.......... அதற்கான முயற்சியின் முதல்படியாக இன்று ஃபேஸ்புக் தளத்தில் மாணவர் நூலகம் என்ற புதிய குழுவினை துவக்கி ஆர்வமுள்ள நெருக்கமான நண்பர்களை உறுப்பினர்களாக இணைத்து பகிர்ந்து இருந்தேன்.உடனே இன்னுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக முதல் ஆதரவு கொடுத்த  தன்னார்வலர் திரு கருப்புசாமி READ எனப்படும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்அவர்களுக்கு சமூகம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

           சான்றோர்களே,
                மாணவர் நூலகம் துவக்க இருப்பதாக ஆதரவு மற்றும் நல்லதொரு ஆலோசனை கேட்டு  ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்தவுடன் நண்பர் ஒருவர் கேட்ட வினாவும் எனது பதிலுரையும் 
        தங்களது மேலான பார்வைக்காக இதோ..........
   
 மாணவர் நூலகம் இலவசமா? அதெப்படிங்க நடத்துவது?அதற்கான மூலதனம் சேகரிப்பது எப்படி?இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?என்றெல்லாம் தொடர்பில் கேட்டார்.எனக்கு சிந்தனையைத்தூண்டிவிட்ட அருமை நண்பருக்கு வாழ்த்துக்கள்.அதே நேரத்தில் எனது பதில் மாணவர் நூலகத்தினை அதுவும் சிறப்பாக செயல்படுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொடுத்த அனுபவம் ஒன்றே போதுமானதுங்க.செயல்பாட்டில் தெரிந்துகொள்ளுங்க..மாணவர் சமுதாயத்தில் ஏற்படும் எழுச்சிமிகு மாறுபாட்டினை விரைவில் காண்பீர்கள்..
என அன்பன், 
C.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுநர்,
தாளவாடி கிளை. 
paramesdriver@gmail.com 9585600733

05 ஏப்ரல் 2016

காலைக்கதிர் நாளிதழ் ஈரோடு பதிப்பு.......


தேர்தல் கமிஷனின் விதிமுறைகளும் சமூக ஆர்வலர்களின் எண்ணங்களின் பதிவுகளும்............

வருவது தெரியும்! போவது எங்கே?
பறக்கும்படைக்கு நுகர்வோர் சங்கம் சார்பாக எனது கேள்வி...
மரியாதைக்குரியவர்களே, அனைவருக்கும் வணக்கம்.சத்தியமங்கலம் வட்டம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவரும் பிரபல செய்தியாளருமான திரு.வேலுச்சாமி ஐயா அவர்களிடம் நான் முன் வைத்த கேள்வியும் அதற்கான பதிலை சேகரித்து நேற்றைய அதாவது2016 ஏப்ரல்5ந் தேதியிட்ட ஈரோடு பதிப்பில் 6 வது பக்கத்தில் வெளியான செய்தியும் தங்களது பார்வைக்காக பதிவிடுகிறேன்.(நாளிதழ் செய்தி நகலை பின்னர் பதிகிறேன்.)

வருவது தெரியும் போவது எங்கே?
பறக்கும் படைக்கு நுகர்வோர் சங்கம் கேள்வி

பணம் எடுத்துச்செல்வோரிடம் உரிய ஆவணம் கேட்கும் பறக்கும்படை அதிகாரிகள்அந்தப் பணம் எங்கு சென்று சேர்கிறது என்பதைக் கண்காணிக்காமல்,பணப்பட்டுவாடாவைத் தடுப்பது எப்படி? என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பின் மாநில செயலாளர் பரமேஸ்வரன் கூறியதாவது!

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பறக்கும்படையினர் வாகனங்களை சோதனை செய்து,ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது..இதில் அந்த பணம் கறுப்பு பணமா?இல்லையா? என்பதை மட்டுமே கண்டறிய முடியும்.ஆனால் தேர்தல் கமிஷனின் நோக்கமே வாக்களர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பதுதான்.அப்படியானால் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறியும் பறக்கும்படை அதிகாரிகள் அந்த பணம் எங்கு சென்று சேர்கிறது என்பதையும் தீவிரமாக கண்காணித்தால் மட்டுமே தேர்தலில் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க முடியும்.அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து பவானிசாகர் தேர்தல் அலுவலர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது,அவர் கூறியதாவது; பணத்தை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதற்கு தகுந்த ஆவணம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் பறிமுதல் செய்து உரிய ஆவணத்தை காட்டிய பிறகு ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்களுக்கு உத்தரவு.தேர்தல் கமிஷன் வகுத்துக்கொடுத்த விதிமுறைகளை நாங்கள் செயல்டுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறாக செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.தங்களது கருத்துக்களையும் இங்கு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஜனநாயகம்தழைக்க
சமூக நலன் கருதி
அன்பன் பரமேஸ்வரன்,9585600733

09 மார்ச் 2016

எளிதான பயணம், மோசமான விபத்தானது!


சிந்தியுங்க!
இது தலைவிதி அல்ல.சாலைவிதி மதியாமையே !..


மரியாதைக்குரியவர்களே,
                 அனைவருக்கும் வணக்கம். கடந்த 2016 மார்ச் 6 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கோபி அருகிலுள்ள பவளமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற எனது உறவினர் இல்ல திருமண விழாவிற்காக அன்றை அதிகாலை5.45 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து TN59/ 0304 எண்ணிட்ட பயணிகள் ஆட்டோவில் என் உறவினர் லோகநாதன்,சரஸ்வதி ஆகியோருடன் பயணித்தபோது கோபி - பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவு கறிக்கடை அருகில் சைக்கிளுடன் மோதி ஆட்டோ கவிழ்ந்து உருண்டதில் எனக்கு தலையில் ஆட்டோவின் இரும்பு பட்டா குத்தி வெட்டுக்காயமும்,இடுப்பில் மொக்கை அடியும்,காலிலும் கையிலும் சிராய்ப்புக்காயமும்,லோகநாதனுக்கு நெற்றியிலும் கையிலும் சிராய்ப்பு மற்றும் மொக்கை அடியும்,சரஸ்வதிக்கு தோள்பட்டையின் இரு பக்கமும் உள்ள முன் காரை எலும்புகளும் உடைந்தும் ,ஆட்டோ ஓட்டுநருக்கு காலில் அடியும்,சைக்கிள் ஓட்டிவந்தவருக்கு தோள்பட்டை அடிபட்டும் மோசமான விபத்து ஏற்பட்டுவிட்டது.தகவலறிந்த உடனே கோபி பேருந்துநிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் விரைந்து வந்து எங்களை மீட்டு கோபி அபி மருத்துவமனையில் சேர்த்தனர்.சைக்கிள் ஓட்டியை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
 


சரி...
        விபத்துக்கு காரணம் என்ன? என்பதை அறிவோம்.
நாங்கள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரின் எதிர்பார்ப்பில்லா இயக்கமும்,எதிரில் வந்த மற்ற வாகனங்களின் டிம் செய்யாத பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சமும்,சாலைவிதி அறியாத சைக்கிளோட்டியின் சாலையில் குறுக்கிட்டதும்தான்! மிக எளிதான சாலைப்பயணத்தை மிக மோசமான விபத்துக்கு ஆளாக்கிவிட்டன.
(1)ஆட்டோ ஓட்டுநர் எதிரில் வந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தால் கண் கூச்சமடைந்தபோது பாதையின் தன்மை தெரியாத சூழலில் ஆட்டோவின் வேகத்தை குறைத்து தற்காப்புடன் ஓட்டத் தவறியது.
(வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோ இருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது).
(2)எதிரில் வந்த வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தும் ஹெட்லைட்களின் வெளிச்சத்தை தாழ்த்தாமல் பிரகாசமான வெளிச்சத்துடன் ஓட்டியது.
(இரவு நேர இயக்கத்தில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு கண் கூசும் பிரகாசமான வெளிச்சத்தை தாழ்த்தி இயக்கியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)
(3)சைக்கிள் ஓட்டி வாகனங்களின் பின்னால் சாலையில் வரும் மற்ற வாகனங்களைக்கவனிக்கத்தவறி குறுக்கிட்டது. 

(வாகனங்கள் கடந்தவுடன் சாலையில் மற்ற வாகனங்கள் போக்குவரத்து செய்கின்றனவா?என இரு புறமும் கவனித்து சாலையை கடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)

           இது போன்ற காரணங்களால் ஆட்டோ ஓட்டுநர் மிக குறைந்த இடைவெளியில் கண்ட சைக்கிள் மீது மோதாமல் இருக்க தான் சென்ற வேகத்திலேயே வலது பக்கமாக திருப்பியும் சைக்கிள் மீது மோதி ஆட்டோ உருண்டு கவிழ்ந்து மிக மோசமான விபத்தை ஏற்பட்டது.இதனால் எங்கள் உறவினர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போனதுடன்,அன்றைய தினம் எனது பணியான பேருந்து இயக்குவதற்காக தாளவாடிக்கு செல்ல முடியாமல் போனது.என் உறவினர் லோகநாதனுக்கு சென்னை செல்லும் (மென்பொருள் பொறியாளர்) பணியும் தடைபட்டது.உறவினர் சரஸ்வதிக்கு இரு தோள்பட்டைகளும் எலும்பு முறிவு ஏற்பட்டு சொல்லமுடியாத வேதனையுடன் கோபிசெட்டிபாளையத்திலுள்ள  அபி S.K.மருத்துவமனையில் இருநாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் ஈரோடு அருகில் உள்ள பவானி பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள 
(டாக்டர் M.A.N.லோகநாதன் ,MBBS.,MS(Ortho)மருத்துவமனை-
            தொலைபேசி எண் 04256 - 231702) 
          விபத்து எலும்புமுறிவு,முதுகு தண்டுவட -மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனையில் இரு பக்க எலும்புகளும் அறுவை சிகிச்சை செய்யப்படுள்ளது.ஆட்டோவும் சேதம் ஏற்பட்டுள்ளது.ஆட்டோ ஓட்டுநரும் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக தகவல்...சாலைப்பயணத்தில் விபத்துக்கு காரணம் சாலையில் போக்குவரத்து செய்யும் அனைவரின் அலட்சியத்தால் பயணித்த நாங்கள் மருத்துவமனையிலும்,பணிக்கு செல்லமுடியாமலும்,உறவினர்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நேர இழப்பும்,அலைச்சலும்,மன வேதனையும் உடல் வேதனையும் என துன்பங்களோடு இழப்புகளையும் சந்திக்க நேர்ந்துவிட்டது...இது தலைவிதி அல்ல.சாலைவிதி மதியாமையே !..