20 பிப்ரவரி 2015

பஞ்சம்னா என்னவென்று தெரியுமா?

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். பஞ்சம் என்றால் என்ன? உங்களுக்குத்தெரியுமா??? இதோ தெரிந்துகொள்ளுங்க...
          
                     1640 இல் துவங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் குடித்திருக்கின்றன.அவற்றில் முக்கியமானதும் மறக்கமுடியாததும் 1876 ஆம் ஆண்டின் தாது வருஷப் பஞ்சமே..
1857ல் நடந்த சிப்பாய் கலகத்திற்கு முன்புவரை இந்தியாவைக் கிழக்கிந்தியக் கம்பனி தான் நிர்வகித்து வந்தது.சிப்பாய்
கலகத்திற்குப் பிறகு 1858 இல் சென்னை மாகாணம், கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடிக் கட்டுப்பாடின் கீழ் வந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், புகைவண்டிகள், தந்தி,தானிய ஊக வாணிகம், புதிய பணப் பயிர்கள், ஏற்றுமதி என பல நவீன முறைகளை இந்தியாவில் அறிமுகப் படுத்தினர். இதனால் உள்ளூர்ச் சந்தைகள் நலிவடைந்து, தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டது
1876ம்ஆண்டில் வழக்கமாக தாராளமாகப் பெய்யும் தென்மேற்கு பருவமழை சில மாவட்டங்களில் வெறும் தூரலுடனும், பல மாவட்டங்களில் அதுவும் கூட இல்லாமல் பொய்த்துப் போனது. தென்மேற்கு பருவமழை அவ்வப்போது இது போன்று பொய்த்துப் போகும்போது குளிர் காலத் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை வந்து காப்பாற்றும்.
ஆனால் அந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துப் போனது மக்கள் எதிர்பாராதது. 1876 ஆம் ஆண்டு முழுமைக்கும் 6.3 அங்குலம் மழையே பெய்திருந்தது. அதற்கு முந்தைய வருடங்களில் சராசரியாக 27.6 அங்குலம் மழை பெய்வது வழக்கம். 1877ம் ஆண்டிலும் பருவமழைகள் மிகவும் குறைந்த அளவே பெய்தது.
தமிழர்களை வரலாறு காணாத வறட்சியில் ஆழ்த்தியது. அளவிற்கதிகமான வெப்பம், வறண்ட நிலங்கள், காய்ந்த புதர்கள், அனல் காற்று வீசி எங்கும் புழுதி மண் பறக்க சென்னை மாகாணத்தின் பல பகுதிகள் பாலைவனம் போன்று காட்சியளித்தன.
இதுதான் 1876-78, சென்னை மாகாணப் பஞ்சம், 1877-தாது வருடப் பஞ்சம் என்று அழைக்கப்படுகிறது.

உணவு தானியங்களின் விளைச்சல் பெருமளவு குறைந்தது. உணவு தானிய உற்பத்தி குறைந்தாலும், ஏற்றுமதி குறையவில்லை. சந்தைப் பொருளாதாரத்தில் அசையா நம்பிக்கை கொண்டிருந்த காலனிய ஆட்சியாளர்கள், ஏற்றுமதியை தடை செய்து, பற்றாக்குறையைப் போக்க விரும்பவில்லை.
பதுக்கல் பரவலாகி, உணவு தானியங்களின் விலை கட்டுக்கடங்காமல் போனதால், விவசாயிகள் அடுத்த வருடத்திற்கான விதை நெல்லை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் அடுத்த வருடம் பயிரிடப்பட்ட நில அளவு வெகுவாகக் குறைந்து, உணவுப் பற்றாக்குறை தீவிரமடைந்தது.
விவசாயம் பொய்த்துப் போகவே உள்ளூர் சந்தைகளில் தானியங்களின் வரத்து முற்றிலுமாக நின்று போனது. விற்க தானியமற்று கடைகள் மூடிக்கிடந்தன. பெருமுதலாளிகள் ஆங்கிலேயரின் உதவியுடன் வடமாகாணங்களில் இருந்து தொடர்வண்டிகளிலும், பர்மாவிலிருந்து கப்பல்களிலும் தானியங்களை கொண்டுவந்திறக்கினர்.
ஆனால் அவற்றைப் பதுக்கி கள்ளச்சந்தையில் மூன்று, நான்கு மடங்கு கொள்ளை விலையில் விற்றனர். உயர்ந்த விலைகளில் விற்பதற்காக மிக குறைந்த நேரமே பெரு முதலாளிகள் கடைகளை திறந்தனர்.
மூன்று வேளை தினம் உணவருந்திய மக்கள், படிப்படியாக உணவைக் குறைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு வேளை உணவருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிலும் தானியங்கள் வாங்க இயலாத மக்கள் காடு மலைகளில் கிடைக்கும் கிழங்கு கொட்டைகளைத் தேடி சமைத்து உண்டனர்.
நஞ்சு என்று ஒதுக்கப்படும் ஒரு வகையான காட்டு கூம்புக் கிழங்குகளை (ஆங்கிலத்தில் இதை Sauci root என்று எழுதியிருக்கிறார்கள்) கூட மூன்று நாட்கள் வேக வைத்தால் நச்சுத்தன்மை இறங்கி விடும் என்ற நம்பிக்கையில் வேகவைத்து உண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மெக்குகே மக்கள் எறும்பு புற்றுகளைத் தேடி அதிலிருந்து தானியங்களை எடுத்து உண்பதைப் கண்டதாக வருத்தத்துடன் கூறி இருக்கிறார். பழக்கமில்லாத உணவினாலும், சில நச்சுள்ள காய், கொட்டை, கிழங்குகளை உண்டதாலும் பலர் நோயுற்று இறந்தனர்.
வயல் வேலைகள் அற்ற நிலையில், கடைகளனைத்தும் மூடப்பட்ட நிலையில், பருத்தி, நூல் சார்ந்த தொழிற்சாலைகளும் முடங்கிய நிலையில் மக்கள் வேலை வாய்ப்பினை முழுதாக இழந்தனர். வருமானமற்ற நிலையில் நகைகள், பாத்திரங்கள், ஆடு மாடுகள், துணிகள், வீட்டு கதவு, ஜன்னல்கள் என்று அனைத்தையும் விற்று பெரும்பாலான மக்கள் நாடோடிகளாயினர்.
கிராமங்களை காலி செய்து மக்கள் சாரை சாரையாக நடை பயணமாக பெரு நகரங்களை நோக்கி வேலைதேடிச் சென்றனர். கொடிய வெப்பத்தில் உணவும் நீரும் இன்றி நெடு நாட்கள் நடப்பது அனைவருக்கும் இயன்ற செயலல்ல. வயதானவர்களும், குழந்தைகளும் பாதி வழியிலே ஆங்காங்கே விழுந்து இறந்தனர்.
சாலையோரங்களில் கிடந்த சடலங்களை நாய்களும் நரிகளும் கடித்து குதறிக் கொண்டிருப்பதை பார்த்தாலும், எதுவும் செய்ய ஆற்றலின்றி மக்கள் மௌனமாக கடந்து சென்று கொண்டிருந்தனர்.
சில இடங்களில் வெள்ளைக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களின் தானியக்கிடங்குகளை சூறையாடி மக்கள் பகிர்ந்துகொண்டனர். சந்தைகளில் பூட்டியிருந்த கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பசியின் கொடுமை தாளாமல் சிறுவர்களும் பெரியவர்களும் பல இடங்களில் வன்முறையுடன் கூடிய கொள்ளைகளில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பல இடங்களில் ஆங்கிலேய அரசிற்கு பெரும் சிக்கலானது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வெள்ளைக்கார அதிகாரிகள் ஆங்காங்கே வேலைத் திட்டங்களை செயல்படுத்த முன்வந்தனர். பல இடங்களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளையும் சாலைகள் அமைக்கும் பணிகளையும் ஏற்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வெள்ளைக்கார அதிகாரிகள் முயன்றனர்.
இன்றைய சென்னை நகரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் பெரும்பகுதி தாது வருஷப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது. பல ஆண்டுகள் தமிழகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிடையே போக்குவரவுக்குப் பயன்பட்ட இந்தக் கால்வாய் இன்று சாக்கடையாகச் சுருங்கி விட்டது .
மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சம் பிழைக்க இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாம்பன் துறைமுகத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தினம் ஆயிரக்கணக்கானோர் படகுகளில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேயிலைத்தோட்டங்களில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
இலங்கை, உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றைத் தமது கப்பல் படைகள் மூலம் வெற்றி கொண்ட தமிழர்கள், பஞ்சம் பிழைக்க இந்த நாடுகளுக்குக் கூட்டம் கூட்டமாகக் கப்பல்களில் சென்றது காலத்தின்கொடூரமல்லவா..
பஞ்சத்தின் கடுமை காலனிய அரசாங்கத்திற்குத் தெளிவானது. அப்போது சர் ரிச்சர்ட் டெம்பிள் இந்திய அரசாங்கத்தின் பஞ்சக்குழு ஆணையராக (Famine Commissioner) இருந்தார். பஞ்சம் தீவிரமடைந்தபின், நிவாரணப் பணிகள் மெல்லத் தொடங்கின. ஆனால் நிவாரணம் பெறுவோர் கடுமையான விதிகளுக்குட்படுத்தப்பட்டனர்.
டெம்பிள் ஊதியம் (Temple Wage) என்றழைக்கப்பட்ட நிவாரணத் திட்டத்தில் ஆண்களுக்கு 2 அணா, பெண்களுக்கு 1 1/3 அணா, சிறுவர்களுக்கு ¾ அணாவும் கூலியாக கொடுக்கப்பட்டது. (ஒரு அணா ஒரு ரூபாயில் 1/16 க்கு சமம்.) சாதாரண நாட்களில் ஆண்களுக்கான கூலி ஐந்து அணாவாக இருக்கவேண்டியது பஞ்சத்தால் குறைத்து இரண்டு அணாவாக கொடுக்கப்பட்டது.
இந்த கூலிக்கு தானியங்கள் வாங்க இயலாததால் பல இடங்களில் கூலிக்கு பதில் தானியங்களே கொடுக்கப்பட்டன. விலை உயர்ந்த ஆடைகளை உடுத்திய பெண்கள் பழக்கமில்லாத குழி தோண்டும் வேலைகளை சிரமத்துடன் புழுதியில் புரண்டு செய்து கொண்டிருந்தது பஞ்சம் அனைத்துத் தர மக்களையும் ஆட்டிப்படைத்ததையே காட்டுகிறது.
பல நாட்கள் பட்டினியுடன் நோய்வாய்ப்பட்டு பலவீனமான உடல் நிலையில் சிரமமான பணிகளில் ஈடுபட்ட மக்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிர்விட்டனர்..
இப்பெரும் பஞ்சத்தால் பல லட்சம் பேர் மாண்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாக கணிக்கப் படவில்லை. அரசாங்கக் கணக்கின்படி பிரிட்டிஷ் மாகாணங்களில் மட்டும் 52 முதல் 55 லட்சம் பேர் மாண்டனர். ஆனால் மற்ற அறிஞர்களின் கணிப்புகள் இறந்தவர் எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் எனக் கூறுகின்றன.
ரொனால்ட் சீவாய் 61 லட்சம் எனவும், அரூப் மகாரத்னா 82 லட்சம் எனவும், டிக்பி அதிகபட்சமாக ஒரு கோடியே மூன்று லட்சம் எனவும் மாண்டவர் எண்ணிக்கையைக் கணிக்கின்றனர்.
பல இலட்சம் தமிழர்கள் உணவின்றி மரணத்து கொண்டிருந்த நேரத்தில் அப்போது இந்தியாவை ஆண்டவர் வைஸ்ராய் லைட்டன் பிரபு.இவர் அன்றைய விக்டோரியா மகாராணிக்கு மிகவும் பிடித்த கவிஞர்.
சென்னை மாகாணத்தின் பஞ்சத்தைப் பற்றி கவலைப்படாமல்.. இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா பொறுப்பேற்கும் விழாவிற்கு டில்லியில் 68000 பிரபுக்களையும், மகாராஜாக்களையும், அதிகாரிகளையும்அழைத்து ஒரு வாரத்திற்கு மாபெரும் விருந்தை நடத்திக்கொண்டிருந்தார் அன்றைய இந்தியாவின் நீரோ...லைட்டன் பிரபு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...