01 அக்டோபர் 2014

தமிழரால் ஒதுக்கப்பட்ட அந்த கருவியில் தான் எத்தனை இசைகள்...ஒவ்வொன்றும்...தாளமிட ,கால்களை தானாக ஆட வைக்கும் திறனுடையதாய்..
பறை குறித்து பயிற்சியாளரும், சொய்ங்சொய்ங் பாடிய மகிழினியின் கணவருமான மணிமாறன் அவர்கள் கூறியது....
ஆதிகாலத்தில் தகவல் தொடர்பு சாதனமாய் வேட்டையாடும் பொழுது விலங்குகளை அச்சுறுத்தவும்,தகவல் பரிமாற்றத்திற்கும் பயன் பட்டது பறை..அதனம்மா என்ற ஒரு விலங்கு உண்டு..அது பறை அடித்தாலே இறந்து விடுமாம்...யாழ் இசைத்தால் மீண்டும் உயிர்க்கும் என்று சங்க இலக்கியத்தி உள்ளதென ஆய்வாளர் முனைவர் வளர்மதி கூறுவார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் முழங்கிய பறை சத்தம் கேட்ட பின்பே திருமலைநாயக்கர் உணவு உண்டதாக வரலாறு ..சொல்கிறது..
பாரதிதாசனின் கூற்றாய்” தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பிடடா”.பறையை தனது கவிதைகளில் புகுத்தியவர்.
பறை ஆட்டம் என சொல்லவே தயக்கம் உள்ளது...உண்மையில் பறை அடித்ததால் தான் அவர்கள் பறையை ஆனார்கள்...பறைக்கும் பறையர்களுக்கும் தொடர்பு இப்படித்தான் ஏற்பட்டது...
தேவராட்டம் என்பது தமிழர் கலைகளில் ஒன்று...ஆனால் அதை ஆடுபவர்கள் காட்டு நாயக்கர்களே...ஆனால் தேவராட்டம் எல்லோராலும் மதிக்கப்படுகின்றது...
பறையாட்டம் என்றால் ஏற்க மறுப்பவர்கள் பறை இசை நடனம் என்பதை ஏற்கிறார்கள்...இங்கு ஆட்டம் என்பது தீண்டாத சொல்லாகின்றது .சோறு என்ற சொல் கீழானச்சொல்லாகக் கருதப்படுகின்றதைப்போல..சொற்களுக்கும் தீண்டாமை உண்டு.
உயர்வாய் கருதப்பட்ட பறை இன்று தாழ்வாய் போனது கொடுமை...பெரியார்,அம்பேத்கரின் வருகைக்குப்பின் பறை தொட்டால் நம் சிந்தனையில் உள்ள தீட்டு அழிகின்றது...ஆனால் அரசால் புறந்தள்ளப்பட்ட கலையாகவே பறை உள்ளது..இந்த கலைக்கும் விருதுகள் வழங்கி அங்கீகரிக்க வேண்டும்..
பள்ளியில் தமிழர்க்கலைகளை வளர்க்க ஆவண செய்ய வேண்டும்...
”சாவுக்கு அடிப்பதில்லை,சாராயம் குடிப்பதில்லை”என்பதே இவர் நடத்தும் புத்தர் கலைக்குழுவின் முழக்கமாக உள்ளது.
இவரின் சிறப்புகள்
தமிழக அரசு கலைச்சுடர் மணி விருது,புதிய தலைமுறையின்2014ஆம் ஆண்டிற்கான” நம்பிக்கை நட்சத்திரம்”விருது
இலங்கை ,மலேயா.கென்யா போன்ற நாடுகளில் பறை நிகழ்ச்சியும் பயிற்சியும் நடத்தியுள்ளார்..அடுத்த வாரம் குவைத் செல்கின்றார்..
சென்னையில் ஞாயிறு தோறும் பறை பயிற்சி அளிக்கப்படுகின்றது .அதில் கடைநிலை ஊழியர் முதல் இரயில்வே துறை தலைமை நிர்வாகத்தைச்சேர்ந்த ஐ.ஏ.எஸ் வரை பறை பயிற்சி எடுக்கின்றனர்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வேடந்தாங்களில் பறைப்பயிற்சி அளிக்கப்படுகின்றது என்றார்.
பயிற்சியில்
--------------------
இந்த பயிற்சிக்காக இடம் தேர்ந்தெடுப்பதே மிகப்போராட்டமாக இருந்தது...பறை நடக்கும் இடத்தை சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு வீடுகள் இருக்க கூடாதென்றார்கள்..பல இடங்களில் இறுதியாக குடுமியான் மலைக்கு அருகில் உள்ள ஒருபண்ணை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது....அருமையான சூழல்...பறையின் சத்தம் சுற்றியுள்ள வயல்வெளிகளில் முழங்கியது....
முதல் நாள் மதியம் முதல் முதலாக பறையைத் தொட்ட போது இனம் புரியாத உணர்வொன்று....பழகப்பழக.....எல்லோரையும் ஆடவைத்து ஆட்டிப்படைத்தது...தீபக் என்ற மாணவன் பிறவிக்கலைஞனாய் அடித்து அசத்தினான்.ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.கியூபா ஏழு வயது குழந்தை ஆட்டத்தோடு ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்றார்...
பறை கத்துக்கப்போறேன்னு சொன்னபோது அருவருப்பாய் என்னை பார்த்தவர்களை இப்போது நான் பரிதாபத்துக்குரியவர்களாகப் பார்க்கிறேன்.எப்பேர்பட்ட இசையை தாழ்வாக நினைக்கின்றனர்...
இறந்தவர் காதில் பறை அடித்தால் உணர்வுகளைத்தூண்டி உயிர்க்க வைத்து விடுமாம்...அதனால் தான் சாவிற்கு அடிக்கின்றனர்...நான் கூட சோகத்தை அறிவிக்க தான் அடிக்கின்றனர் என இது நாள் வரை நினைத்திருந்தேன்...பறை அடித்தும் எழவில்லை என்றால் தான் அவர் இறந்து விட்டதாகப் பொருளாம்...
வாழ்வில் ஒருகலையை கற்றுக்கொண்ட மனநிறைவு..இதை மாணவர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்...தமிழிசைக்கருவிகளின் மேன்மையை அவர்கள் உணர வேண்டும்....
இந்நிகழ்ச்சி நிறைவாக நடக்க திரு. வில்வம் மிகவும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள்...புதுகையில் பறை ஒலித்தது வெற்றி முழக்கமாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...