13 ஆகஸ்ட் 2011

வாழ்க்கைத் துணை நலம் -


மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. - திருக்குறள்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம் அவளது திருமணம்தான். திருமணம் ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. திருமணம் அதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையைத் திருப்பிப்போட்டு முற்றிலும் மாற்றிவிடுகின்றது. திருமணத்திற்குப் பிறகு வாழ்ககையில் ஏற்படும் மாற்றம் நல்லதாகவும் இருக்கலாம் அல்லது வேறுவிதமாகவும் இருக்கலாம். விளைவு எப்படி இருந்தாலும் அவசியம் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அது இயற்கையின் நியதி. அதை மாற்றவோ மீறவோ முயற்சிக்கக்கூடாது.

நமது ஒட்டுமொத்தமான எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் திருமணத்தை நாம் எவ்வளவு பொறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் மேற்கொள்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சந்தையில் மாடு பிடிப்பது போலவும் ஒரு இன்பச்சுற்றுலாப் போவது போலவும் சற்றும் அறிவுக்குப் பொருத்தமற்ற வாழ்க்கைக்கு ஒட்டாத சில அதிரடி ஏற்பாடுகளாக இன்றைய திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

இத்திருமணங்களில் ஆண் பெண் இருவீட்டு பெற்றோர் யாருமே பொறுப்புடன் நடந்து கொள்வது இல்லை. ஆதலால் இத்திருமணங்கள் போட்ட பந்தல் பிரிக்கும் முன்னரே விரிசல்கள் தோன்றி சீர்குலைத்து விடுகின்றன.

வாழ்க்கை என்றால் என்ன?
நாம் துன்பங்ளை விலக்கிக் கொண்டு இன்புற்று வாழ்தல். அது போல் மற்றவர்க்கு நேரும் துன்பங்களை விலக்கி நம்மைப் போல் அவர்களும் இன்புற்று வாழ உதவி செய்து மகிழ்வதே வாழ்க்கை எனப்படும்.

இல்லறம் என்றால் என்ன?

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. - திருக்குறள்

நாம் உயிர்வாழ்கின்றவரை நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் அதுபோல் நம்மைச் சார்ந்துள்ள குழந்தைகள் சிறுவர்கள் தாய் தந்தையர் உடன் பிறந்தார் சுற்றத்தார் மிக முக்கியமாக எவ்வித ஆதரவுமில்லாத அன்னியர்க்கும் ஆதரவு தந்து நம்மைப் போல் அவர்களது தேவைகளையும் நிறைவேற்றி வைத்து இன்புறச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் இல்லறம். அதாவது உயிர் உபகாரம் செய்ய ஏற்பட்ட அமைப்புதான் இல்லறம்.

திருமணம் செய்து கொள்வது ஏன்?

ஆணோ பெண்ணோ தனியாக நின்று உயிர் உபகாரத்தைச் சிறப்பாகச் செய்ய இயலாது. அறிவும் அன்பும் இணைந்தால் தான் இன்பம் விளையும். ஆதலால் உயிர் உபகாரம் செய்து அதாவது அறம் செய்து இன்பத்தை ஈட்ட இரு கைகள் இணைய வேண்டும் என்பதற்காக ஆண் என்றஅறிவும் பெண் என்றஅன்பும் இணைவதுதான் திருமணம் எனப்படும்

பிள்ளைப் பெறுவது எதற்காக?

கணவன் மனைவி செய்துவந்த உயிர் உபகாரப்பணிகள் நமக்கு வயதான பிறகும் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக நாம் விட்டுச் செல்கின்றஅறப்பணிகளைச் செம்மையாகச் செய்து வரவேண்டும் என்பதற்காகப் பிள்ளைகளைப் பெறுகின்றோம்.

அதாவது நம் இலட்சியங்களுக்கு வாரிசாக மகப்பேறு பெறுகின்றோம்.

வாழ்க்கை என்பது அன்பையும் இன்பத்தையும் எல்லார்க்கும் பங்கிட்டு கொடுப்பது. இல்லறம் என்பது அன்பையும் இன்பத்தையும் விளைவிக்கும் விளைநிலம். தலைவனும் தலைவியும் அன்பைப் பெறுக்கி இன்பத்தை வாரிக்கொடுத்து மகிழும் வள்ளல்கள்.

அன்பு வித்திட்டு அறிவு நீர்ப்பாய்ச்சி இன்பப் பயிர் வளர்க்கும் தம்பதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதி என்ன?

இருவரிடமும் உண்மை அன்பு அறிவு பிறர் குற்றம் குறியாமை சகிப்புத்தன்மை இரக்கம் ஈகை முதலியன. இந்த அடிப்படை நற்பண்புகள் இல்லாதவர் இல்லறவாழ்க்கைக்குத் தகுதியற்றவர் ஆவார்.

திருமணம் செய்து பிள்ளைக்குட்டிகளைப் பெற்றுப் போட அல்ல அன்பு செய்து இன்புற்று வாழ்வதற்காக. ஆணோ பெண்ணோ தகுதியற்றவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு விட்டால் வாழ்க்கையே பறிபோய்விடும். இன்பம் கானல் நீராகிவிடும்.

வாழ்க்கைத் துணைவர் பொய் சொல்லாதவராக அன்பு அறிவு இரக்கம் ஈகை பரோபகார சிந்தனையுள்ளவராக இருப்பது அவசியம். அப்படிப் பட்டவரை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் பெரும்பாலும் சாதி மதம் படிப்பு வேலை பணம் சொத்து அந்தஸ்து வரதட்சணை என்று இல்லறவாழ்க்கைக்கு சம்பந்தமில்லாதவற்றைப் பார்த்து நிச்சயிக்கப்படுகின்றன. அவர்கள் வாழப் போகும் இருவரின் விருப்பம் குணம் பண்பு நலன்களைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லைஆணும் பெண்ணும் சாதி சம்பிரதாயம் ஊர் உலகத்துக்கு பயந்து குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பொருந்தாத வாழ்க்கையை காலமெல்லாம் கட்டி அழவேண்டியுள்ளது.

காதல் திருமணங்கள் முன்னதைவிட மோசமாக உள்ளன. தொண்ணூறு சதவீத காதல் திருமணங்கள் வெகுவிரைவிலேயே சிதறி சின்னாபின்னமாகின்றன. பருவக் கோளாறு காரணமாக ஒருவித வேகத்தில் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கின்ற ஒருவகை மூர்க்கத்தனமான முடிவுதான் காதல் திருமணம். பெரும்பாலும் அழகு நடை உடை அலங்காரம் ஆரவாரத்தைப் பார்த்து வருகின்றமன ஈர்ப்புக்கு காதல் என்று பெயர் சூட்டிக் கொச்சைப்படுத்தி விடுகின்றனர்.

எவ்வித கைமாறும் கருதாமல் எதிர்பார்ப்புமில்லாமல் அடுத்தவர் மீது செலுத்தப்படும் உண்மையான அன்பே காதல் எனப்படும்.
ஒருசில காதல் திருமணங்கள் பெற்றோர் நிச்சயித்த ஒரு சில திருமணங்கள் நீங்கலாக பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில்தான் முடிகின்றன.
திருமணங்கள் தோற்றுப் போவதால் வாழ்க்கை இருண்டு சூண்யமாகிவிடுகின்றது. தனி மனித ஒழுக்கம் கெட்டுச் சீரழிகின்றது. சமுதாயச் சீர்க்கேடுகளும் வளர்ந்து வருகின்றன.
பெண்கள் திருமணத்தில் மிக்க நிதானமும் துணிவும் காட்ட வேண்டும். திருமணத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியவர் பெண்தான். அவள் விருப்பப்படியே திருமணம் நிச்சயிக்கப்பட வேண்டும். அதில் மற்றவரின் கட்டாயமோ திணிப்போ இருக்கவே கூடாது. அதுபோல் ஒரு பெண் ஆசை மயக்கத்தில் முடிவு எடுக்காமல் நிஜத்தைப் பார்த்து அறிவுப் +ர்வமான முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு பெண் அன்பு அறிவு பண்பு மிக்க ஒழுக்கமுள்ள ஆடவனையே வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும். இந்த தகுதியில்லாதவனை வேறு எந்த காரணத்தை முன்னிட்டும் கணவனாக ஏற்க சம்மதிக்கக் கூடாது.

மணந்தால் நல்லவரையே மணக்க வேண்டும். இரக்கமற்ற அறிவு விளங்காத ஒழுக்கம் கெட்ட ஒருவனை மணப்பதைவிட மணம் செய்து கொள்ளாமல் வாழ்வதே சிறப்பு.
பெண்கள் காதலிப்பதில் தவறில்லை. ஆனால் அவர் ஒழுக்கமுள்ள நல்லவராக இருத்தல் மிகமிக அவசியம். காதல் கண்டதும் காதல் பரிதாபக் காதல் சாகசக் காதல் என கண்மூடித் தனமான காதலாக இருக்கக் கூடாது.

ஒருவரை கைப்பிடித்தால் அவர் நம்மைக் கண் கலங்காமல் கருத்துடன் பாதுகாப்பாரா என்று நன்கு உறுதி செய்து கொண்ட பின்பு அவரை விரும்பலாம். பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் வாங்கி முறையாக அவரையே மணக்கலாம். இதில் பெண்கள் அவசரப்படவோ உணர்ச்சி வசப்படவோ கூடாது. பொறுமையாக நிதானமாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். பெண்கள் காதலில் நிதானமாகவும் அறிவுடனும் துணிவுடனும் உறுதியாக இருக்க வேண்டும்.

பெற்றோரும் கூட பிள்ளைகள் விருப்பத்தை மதித்து அவர் விரும்பும் ஆடவர் நல்லவராக இருப்பின் மணம் முடித்து வைக்க வேண்டும்.

திருமணத்திற்கு வேண்டியது மனப்பொருத்தம் நல்ல உள்ளம் நல்ல ஒழுக்கம் அவ்வளவே. இவை இல்லாமல் இருவரை இணைப்பது கொலைக்குச் சமம். அந்த தவறை எந்தப் பெற்றோரும் செய்யக்கூடாது.

காதலித்துக் கல்யாணம் செய்த இடத்திலும் சரி பெற்றோர் செய்து வைத்த இடமானாலும் சரி திருமணமான சில நாட்களிலேயே கணவனின் சுயரூபம் தெரிய வந்துவிடும். தினமும் குடி போதைப் பொருள் சூதாட்டம் மற்றப் பெண்களிடம் தொடர்பு வேலைக்குப் போகாமல் கண்டபடி கடன் வாங்கி கும்மாளம் போடுவது என விதவிதமான கெட்ட பழக்கங்கள் இருப்பது தெரியவரும். அதைத் தொடர்ந்து சண்டை சச்சரவு அடி உதை சித்ரவதைகள். இதையெல்லாம் தாங்கிக் கொண்டு கணவனோடு இருந்து வாழவும் முடியாமல் வெளியே வந்து விடவும் வழி துறைதெரியாமல் நெருப்பில் விழுந்த புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றனர் பல இளம்பெண்கள்.

இதற்கு என்ன காரணம்?

பெண்ணின் அறியாமை துணிவின்மை முதலாவது காரணம். பெற்றோரின் சுயநலம் பேராசை பயம் அறியாமை மூட நம்பிக்கைகள். இரண்டாவது காரணம் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவது அப்பாவிப் பெண்கள்தான். இந்த கொடுமைகள் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இன்னும் சிலரைக் கணவனும் அவரது வீட்டாரும் சேர்ந்து கொன்றுவிடுகின்றனர். இப்படித் திருமணமென்னும் புதைக்குழியில் சிக்கிக் கொண்டு பெண்கள் மீண்டு வர என்னதான் வழி?

நிச்சயம் தற்கொலை ஒரு தீர்வல்ல. அந்தப் பெண் நம்பிக்கையை துணிவைக் கைநழுவ விடக்கூடாது. இயன்றவரை கணவருடன் இருந்து அவருக்கு நிலைமையைப் புரியவைத்து அவர் உணர்ந்து திருந்தத் தேவையான எல்லா முயற்சிகளையும் தாயன்போடு செய்து பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அவர் மீது கோபம் வருத்தம் கொள்ளாமல் அன்பையும் பரிiவும் பொழிந்து அவரை நல்வழிப்படுத்த உள்ளபடியே உண்மையாக பாடுபட வேண்டும் அது பயனளிக்கும். அவர் திருந்துவார். திருந்திய பிறகு அந்த மனைவியைத் தெய்வத்துக்கும் மேலாக நேசிப்பார் +சிப்பார்.

ஒருவேளை அவருடைய கெட்ட காலம் திருந்தவில்லையென்றால் அதற்காக அந்தப் பெண் தன் பொன்னான உயிரை இழக்கத் தேவையில்லை. எல்லா முயற்சிகளும் தோற்றபிறகு அந்தப் பெண்ணும் அவளது பெற்றோரும் ஒரு துணிச்சலான முடிவை எடுக்கத்தான் வேண்டும். அந்த கணவனைவிட்டு அந்தப் பெண் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை.

உடம்பாடு இல்லாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று. - திருக்குறள்

மனப்பொருத்தம் இல்லாதவருடன் சேர்ந்து வாழ்வது என்பது ஒரு குடிசையில் பாம்புடன் சேர்ந்து வாழ்வதைப் போன்றதாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே. நம் வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லை என்பதற்காக நமது வாழ்க்கையையும் தொலைத்து விடக் கூடாது. அந்தப் பெண் அவரைவிட்டு விலகி வந்து தனது சொந்தக் காலில் நின்று சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமுண்டு. ஒரு பயன் உண்டு. பொருந்தாத திருமணத்தில் எங்கோ சிக்கிக் கொண்டு விட்டோம் என்பதால் நமது வாழ்க்கையை அப்படியே வெந்து கருகிவிட விட்டுவிடுவது அறிவீனம். இந்த உடல் உயிர் படைக்கப்பட்டது மற்றவர் கண்ணீரைத் துடைப்பதற்காகவே. நாம் யாருக்காவது பயன்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நாம் நமது ஏமாற்றங்களையும் வேதனைகளையும் நினைத்து நினைத்து வெம்பி வெம்பி உளுத்துப் போகக் கூடாது. மற்றவர் துயரங்களை நோக்கும் போது நமது துன்பங்கள் அற்பமானதாகச் சிறுத்துவிடும். மற்றவர்க்காக இரக்கப்பட்டு மற்றவர்க்கு உபகாரம் செய்து திருப்திபடுத்துவோமானால் அவர் அடையும் சந்தோஷம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுவே உண்மையான நிலையான மகிழ்ச்சி என்று அறிய வேண்டும்.

உடலால் வாழ்கின்றவாழ்க்கை வாழ்க்கையன்று. உறவுகள் செல்வங்கள் வெற்றிகள் வரும் போகும். அவை நிரந்தரமல்ல. உண்மையுமல்ல.

மகளே உள்ளத்தால் வாழ்கின்றவாழ்வே சுவையான சுகமான வாழ்க்கை.

நம் வாழ்க்கையை நாம்தான் தௌ;ளிய அறிவால் அன்பால் இரக்கத்தால் வளமாக்கிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஜெயித்துக் காட்ட வேண்டும்.

எல்லா உயிர்க்கும் இன்பம் செய்து இன்புறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...