கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு
வருகைபுரிந்துள்ள இணையதள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
உலகின் முதல் தொழிற்நுட்ப வல்லுநர் மண்ணை நயம்பட பிசைந்து பக்குவமாக்கி மட்பாண்டங்களையும்,உருவங்களையும் வடிவமைக்கும் மட்பாண்டத்தொழிலாளர்தாங்க. அதனால்தாங்க சங்க இலக்கியமான புறநானூற்றுப்பாடல்களில் கோவே என அழைக்கப்படுகின்றனர்.
இதில் தனிச்சிறப்பு என்னவெனில் உலகத்திலேயே மட்பாண்டம் செய்வோரை அரசனுக்கு இணையாகப் போற்றி கொண்டாடியது சங்க இலக்கியத்தமிழ்நூல்கள்தாங்க.
கோ என்றால் தலைவன் எல்லாவற்றுக்கும் மேலானவன்,உயர்ந்தவன் என்று பொருள்.தலைவன் இருக்கும் இடம்தான் கோயில். அதன்பொருள் வருகின்ற சொற்கள் எல்லாம் கோ,கோன்,கோட்டை என வரும்.இது ஆளுமையுடைய , ஆற்றலுடைய, அதிகாரமுடைய அதனால்தாங்க கடவுள் வழிபடும் இடத்தை கோவில் அல்லது கோயில் என்கிறோம்.
நமது முனோர்களின் வாழ்வியல் மற்றும் வரலாற்றுச்சான்றுக்கு ஆதாரமாக விளங்குபவை...
(1)அகழ்வாராய்ச்சி,
(2) கல்வெட்டுகள் ஆராய்ச்சி,
(3) செவிவழிச்செய்திகள்,
(4) சங்கத் தமிழ் இலக்கியங்கள்...
ஒரே நிகழ்வு, ஒரு சாவு, ஒரே போன்ற துயரம், அதனால் ஒரே போன்ற கோரிக்கை. அதிலும் ஓன்று போலவே தொடங்கும் இரண்டு பாடல்கள், இரண்டும் மரணத்தைப் பற்றிப் பேசுகிறது.இரண்டிலும் மண் வினைஞர்களான மட்பாண்டத்தொழில் செய்வோரை தலைவனாக விளிக்கும் ஓரசைச்சொல்லான 'கோ' என அழைத்து கோரிக்கை விடுக்கின்றனர்.ஏனென்றால் மன்னனுக்கும் பானை செய்பவன் குயவனே, சாமான்யனுக்கும் பானை செய்பவன் குயவனே.... சங்க இலக்கியத்தில் இறையாண்மைக்குத்தலைவனாக போற்றப்பட்டவன்..ஆன்மீகத்துக்குத் தலைவனாக போற்றப்பட்டவன்...(அன்றாட வாழ்க்கையில் திருவிழாவினை மக்களுக்கு அறிவிப்பவனாகவும்இருந்துள்ளான்) உலகத்தில் சிறந்த விஞ்ஞானியாக அன்றாடம் மட்பாண்டம் செய்வோன் இருந்துள்ளான்.சுரையில் தண்ணீர் கொண்டுசெல்லும்நிலைக்கு மாற்றாக மண்பானை செய்து உலக நாகரீகத்துக்கு முன்னோடியாக இருந்துள்ளான்.சிந்துச்சமவெளியில் கட்டிடங்கள் எல்லாம் சுட்ட செங்கற்களால் ஆக்கப்பட்டிருந்தன.அனைத்து செங்கள்களும் ஒரே அளவில் சிறிதளவும் பிசகாமல் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன.அவ்வாறு மூதறிஞனான குயவனை சங்கஇலக்கியத்தமிழ்ச்சமூகம் தலைவனாக கொண்டாடப்பட்டு வந்த நிலையை அதன்பின்னர் வந்த கி.பி.7நூற்றாண்டுகாலமான வேதகாலத்தில் புறக்கணிக்கப்பட்டு தூற்றப்பட்டனர்.சிந்துவெளி நாகரீகத்தில் மிக உயர்வாகப்போற்றப்பட்ட குயவன் வேதகாலத்தில் சூத்திரனாக மாற்றப்பட்டு சரிந்துவிழச்செய்துவிட்டனர்.ஆக நாம் மன்னர் வரலாறு மட்டும் தெரிந்துகொண்டால் போதாது.மக்களின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.அதற்கு சங்க இலக்கியங்களை வாசிக்கவேண்டும். இனி கலம்செய் கோவே என குயவனை போற்றிய சங்க இலக்கியப்பாடல்கள் இரண்டினை பார்ப்போம். |
சங்கத்தமிழ்இலக்கிய நூலான புறநானூற்று நூல் 228 வது பாடலில் புலவனுக்கு ஆதரவளித்த அரசன் இறந்து போகின்றான்.அதனால் அந்தப்புலவன் 'கலம் செய் கோவே' என குயவனிடம் கீழ்கண்டவாறு கோருகிறான்.
புறநானூறு 228
பாடியவர்: ஐயூர் முடவனார்,
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,
திணை: பொதுவியல்,
துறை: ஆனந்தப் பையுள்.
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
5. அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
10. கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை
15. மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?
இறந்த மன்னன் அதாவது நாட்டின் தலைவனுடைய பெருமையை புலவர் பாடத் தொடங்குகிறார். எப்படிப்பட்ட தலைவன் இவன் தெரியுமா ? நிலப்பரப்பு முழுவதும் பரந்து விரிந்த படையின் தலைவன் இவன், புலவர்கள் பாடும் பொய்யே இல்லாத புகழ் பெற்றவன், புகழில் வானில் கதிர் வீசி ஒளிரும் ஆதித்யனுக்கு சமமானவன், செம்பியன் ( சோழ ) குலத்தில் பிறந்தவன். யானையின் மீது வலம் வரும் நெடுமாவளவன் இவன். இன்று இவன் அமரர் உலகம் சென்றுவிட்டான்,
இருள் கவ்வுவது போல புகையை எழுப்பி நீ இவனுக்கு ஈமத்தாழி செய்யத் தொடங்கி இருக்கிறாயே, இவன் புகழுக்கு ஏற்ற அளவில் தாழி செய்யவேண்டுமென்றால் இந்த நிலம் அளவுக்கு சக்கரம் செய்து, மலையளவு மண்ணை வைத்தல்லவா செய்ய வேண்டும். அதனை பெரிய தாழியை, ஈமத்தாழி செய்யும் கோமகனே ! உன்னால் செய்ய முடியுமா ? முடிந்தால் அத்தனை பெரிய தாழியை செய் என்று 'கலம்செய் கோவே' என கோருகிறான்.
இன்னொரு பாடல் 256 வது பாடல்...
தலைவன் இறந்து விடுகிறான். அநேகமாக போரில்தான் அவன் இறந்தது போய் இருக்கவேண்டும். அவனுக்கான இறுதிச் சடங்குகள் தொடங்கப் போகின்றது. அன்றய பழக்கத்தில் அவனை மண்ணில் புதைக்க ஈமத்தாழி செய்யவேண்டும். அப்போது தலைவனை இழந்த தலைவி குயவனிடம் ..
புறநானூறு 256,
பாடியவர்: பெயர் தெரியவில்லை,
திணை: பொதுவியல்,
துறை: முதுபாலை
கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடுசுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!
பொருள் விளக்கம்... வண்டிச்சக்கரத்தில் உள்ள பல்லிபோல என் வாழ்க்கை அவனை மட்டுமே சுற்றி வந்துள்ளது. அவனில்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன், அதனால் என்னையும் உடன் வைத்துப் புதைக்கும் அளவுக்கு பெரியதாக ஒரு தாழியை செய்து கொடு. அதாவது... வண்டியின் ஆரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு வண்டியும் அதன் ஆரமும் போகும் வழி எது என்பதை அறியாது அது போகும் போக்கில் தானும் ஒட்டிக் கொண்டு சென்ற சிறிய வெண்ணிறம் உடைய பல்லியைப் போலவே இந்தத் தலைவனுடன் நானும் அவனை அன்றி வேறு வெளி உலகம் அறியாது இத்தனை காலம் வறண்ட பல நிலங்களை அவனுடன் ஒட்டிக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக என் வாழ்க்கையையும் கடந்து விட்டேன். இப்பொழுது அவனை இழந்த பின் நான் தனியே வாழ்வது எங்கனம்? ஆகவே அவனுடன் கூடவே எனக்கும் ஒரு இடத்தை அந்தத் தாழியில் இருக்குமாறு அதை அகலமாகச் செய்வாயாக என்கிறாள். இதில் இருக்கும் சோகம் மனதை கலங்க அடிக்கும் ஒரு மாபெரும் சோகம். ஆழியை விடப் பெரிய ஒரு சோகத்தை இத்தனை சிறு வரிகளில் அடைத்துவிட்டிருக்கிறார் புலவர்.... | ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக