23 பிப்ரவரி 2017

சமையலுக்கான பொடி வகைகளில் சில...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
               இன்றைய காலத்தில்  சமைப்பதிலும் நேரத்தை மிச்சப்படுத்தும் இயந்திரமான நிலையில் உள்ளோம்.அதனால் சமையலுக்குத்தேவையான பொருட்களை ஏற்கனவே பொடி செய்துகொண்டால் சமைப்பது எளிதாகும்.
பருப்புப்பொடி
                   தேவையானவை:
                           துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                  வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும்.

 செட்டிநாடு குழம்பு மிளகாய்ப்பொடி..
தேவையான பொருட்கள்; காய்ந்த சிவப்பு மிளகாய்- 35 முதல் 40 ,கொத்தமல்லி விதை - 1 கப், கடலை பருப்பு - 2 டீஸ்பூன்  துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் , சீரகம் - 2 தேக்கரண்டி,  கருப்பு மிளகு - 1  டீஸ்பூன்,   பெருங்காயம் பொடி - 1 தேக்கரண்டி,  மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை;
           வாணலியில்  மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும். பின் கொத்தமல்லி விதை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், மிளகு, இவை அனைத்தையும் கலந்து ஒன்றாக வறுக்க வேண்டும். கருகிவிடாமல் பார்த்து பதத்திற்கு வறுக்க வேண்டும். பின் மஞ்சள், பெருங்காயம், கலந்து கிளறி ஆறவைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். குழம்பு செய்யும் போது தேவையான அளவு பயன்படுத்தலாம்.

சாம்பார்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் – 250 கிராம், தனியா – 500 கிராம், துவரம்பருப்பு – 200 கிராம், கடலைப் பருப்பு – 100 கிராம், வெந்தயம், மிளகு – தலா 50 கிராம், மஞ்சள் – 2.

செய்முறை:
               வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை லேசாக வறுத்து (தனித்தனியாக வறுக்கவும்), மெஷினில் கொடுத்து அரைக்கவும் .
குறிப்பு: வெயிலில் காயவைத்து அரைப்பதைவிட வறுத்து அரைத்தால், சாம்பார் பொடி வாசனையாக இருப்பதுடன், நீண்ட நாள் கெடாது.

பூண்டுப்பொடி
              தேவையானவை:
                        பூண்டு – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

                      செய்முறை:
                        பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்… மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.

நெல்லிக்காய் பொடி
தேவையானவை:
                பெரிய நெல்லிக்காய் – 10, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                      நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.
நெல்லிக்காய்… வைட்டமின் ‘சி’, இரும்புச்சத்து மிக்கது.

தேங்காய்ப்பொடி
தேவையானவை:
                   முற்றிய தேங்காய் – ஒன்று, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                        தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து… தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

இட்லி மிளகாய்ப்பொடி
தேவையானவை:
                            காய்ந்த மிளகாய் – 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், எள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                          வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்… இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.


கொத்தமல்லிப் பொடி
தேவையானவை:
                பச்சை கொத்தமல்லி – ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, புளி – பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

 செய்முறை:
          வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.
(குறிப்பு: இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு சேர்க்கலாம்.)
மிளகு  சீரகப்பொடி
தேவையானவை:
              மிளகு, சீரகம் – தலா 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                   வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு – சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.
குறிப்பு: ‘சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.

கூட்டுப்பொடி
தேவையானவை:
                   கடலைப் பருப்பு, தனியா – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை:
                   வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்… சுவை அதிகரிக்கும்.
ரசப்பொடி
தேவையானவை:
               தனியா – 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10.
செய்முறை:
                       வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.(குறிப்பு: புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்… மணம், ருசி ஆளை அசத்தும்.)

மூலிகைப்பொடி
தேவையானவை:
            வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.(குறிப்பு: வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி – தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.)


எள்ளுப்பொடி
தேவையானவை:
                    எள், உளுத்தம்பருப்பு – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                   வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.


சுண்டைக்காய்பொடி
தேவையானவை:
         சுண்டைக்காய் வற்றல் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                 வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.(குறிப்பு: சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்)

கொள்ளுப்பொடி
தேவையானவை:
                 கொள்ளு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உளுத்தம்பருப்பு – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை:
               வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.
(குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.)


தனியாப்பொடி (கொத்துமல்லிவிதை பொடி)
தேவையானவை:
          மல்லிவிதை என்னும்   தனியா – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                   வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலை பொடி
தேவையானவை:
                கறிவேப்பிலை (ஆய்ந்தது) – 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                        வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.(குறிப்பு:  இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.)


ஓமப்பொடி
தேவையானவை:
         ஓமம் – 100 கிராம், மிளகு – 10, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
                வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.(குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.)

1. பருப்புப் பொடி
தேவையானவை
துவரம் பருப்பு                1 கப்
வரமிளகாய்                   1 (அ) 2
கருப்பு மிளகு                 1 டீஸ்பூன்
உப்பு                                    1 டீஸ்பூன்
புளி                                      1 கோலிகுண்டு அளவு
பெருங்காயம்                1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்         2 டீஸ்பூன்
செய்யும் முறை

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு அதில்  பெருங்காயம், புளி இரண்டையும் தனித்தனியே ஒன்றன் பின் ஒன்றாக  வறுத்துக் கொள்ளவும்.
மிச்சம் உள்ள  எண்ணெயில் துவரம் பருப்பு, மிளகாய், மிளகு இவற்றை சிவக்க வறுத்துக் கொண்டு நன்றாக ஆற வைக்கவும்.
வறுக்கும் சமயம் மிதமான தீயில் வறுப்பதும், ஆறிய பின்னே மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
காற்றுப்புகாத ஜாடியில் வைத்து கைகளால் தொடாமல் பயன் படுத்தவேண்டும்.
பயன்படுத்தும் முறை;
வடித்த சாதத்தில் நெய் அல்லது, நல்லெண்ணெய் சேர்த்து, இந்த பொடியோடு சாப்பிடலாம்.
   என அன்புடன்
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...