02 ஏப்ரல் 2012

தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு


தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(23.03.1893)



தோற்றம்: 23-03-1893
மறைவு:04-011974

இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் எனவும், அகிலம் போற்றும் அதிசய மனிதர் எனவும் புகழப்படுகிற ஜி.டி.நாயுடு மிகப் பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல, பிஸினஸ் உலகில் தன் முத்திரையை ஆழமாகவே பதித்தவர். நாயுடு சமூகம் தந்த இந்த பிஸினஸ்மேனை பற்றி இன்று நாம் பார்ப்போம்.

G.D.Naidu
பஸ்ஸில் தானாகவே டிக்கெட் தரும் மெஷினை கண்டுபிடித்தார். கணக்கு போடும் கால்குலேட்டரை உருவாக்கினார்.

கோபால்சாமி துரைசாமி நாயுடு (சுருக்கமாக ஜி.டி.நாயுடு) 1893-ல் பிறந்தார். கோவைக்குப் பக்கத்தில் சூலூருக்கு அருகில் இருக்கிற ஒரு குக்கிராமம்தான் கலங்கல். இந்த கிராமத்தில் ஜி.டி.நாயுடுவின் தந்தை ஓரளவுக்குப் பெரிய விவசாயி. நாற்பது ஏக்கரில் விவசாயம் செய்த கொண்டிருந்தார்.ஜி.டி.நாயுடுவுக்கு சிறுவயது முதலே பள்ளிப் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை. பள்ளிக்கூடத்தில், இல்லாத சேஷ்டைகளை எல்லாம் செய்தார். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்கு முழுக்குப் போட்டு விட்டார்.

ஆனால், பிற்பாடுதான் கல்வி என்பது ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய தேவை என்பதை உணர்ந்தார். அதனால், தனது பிற்காலத்தில் கோவையில் சில முக்கிய கல்வி நிலையங்களைத் திறந்தார்.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஜி.டி.நாயுடுவிற்கு, தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்கள் கிளர்ச்சி தருவதாக இருந்தது. அந்த சமயத்தில் கலங்கல் கிராமத்திற்கு நில சர்வே செய்வதற்காக லாங்கார்ஷயர் என்கிற வெள்ளைக்காரர் ஒரு மோட்டார் பைக்கில் வந்தார். அந்த நேரத்தில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம்.

கிராமத்திற்கு வந்த இந்த மோட்டார் பைக் திடீரென ரிப்பேரானது. அதை சரிசெய்ய ஜி.டி.நாயுடுவிடம் கொஞ்சம் பெட்ரோலையும் கந்தல் துணியையும் கேட்டார் அந்த வெள்ளைக்காரர். அந்த ரிப்பேரை அவர் எப்படி சரி செய்கிறார் என்பதை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜி.டி.நாயுடு. பிறகு, அந்த பைக்கை விலைக்குத் தரமுடியுமா? என அந்த வெள்ளைக்காரரிடம் கேட்க, ''தம்பி, இதை வாங்குற அளவுக்கு உன்னிடம் பணம் இருக்கா?'' என்று கேட்டார் வெள்ளைக்காரர்.
பணம் சம்பாதிக்க வேண்டியதன் அவசியத்தை அப்போதுதான் அவர் உணர்ந்தார். உடனடியாக கோவைக்குச் சென்று ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு சில ஆண்டுகள் கடுமையாக உழைத்ததில் கிட்டத்தட்ட 400 ரூபாய் சேர்த்தார். அப்படி சேமித்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் அந்த வெள்ளைக்காரரைச் சந்தித்து, அவர் வைத்திருந்த பைக்கை விலைக்கு வாங்கினார்.

பைக்கை வாங்கியவுடன் அதை எடுத்துக் கொண்டு தன் கிராமத்திற்கு வந்தார். அந்த பைக்கை தனித்தனியாக பிரித்துப் போட்டார். மீண்டும் சேர்த்தார். மீண்டும் பிரித்தார். இப்படி பலமுறை செய்ததில், மோட்டார் பைக் எப்படி இயங்குகிறது என்பது பற்றிய அத்தனை விஷயங்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

இப்படி சுற்றிக் கொண்டிருந்த ஜி.டி.நாயுடுவை பருத்தி விவசாயம் பக்கம் திருப்பிவிட்டார் அவரது அப்பா. காரணம், அந்த சமயத்தில் இந்தியாவிலேயே பருத்தி வர்த்தகத்தில் முக்கியமான நகரமாக மாறியிருந்தது கோவை. முதலில் பருத்தி விவசாயம் செய்த ஜி.டி.நாயுடு, பிற்பாடு பருத்தி வர்த்தகத்தில் இறங்கினார்.
தரமான பருத்தியை சட்டென கண்டுபிடித்த அவரது திறமை, பருத்தி வர்த்தகத்தில் அவரை பெரும் செல்வந்தராக மாற்றியது. பருத்தி வர்த்தகத்தை இன்னும் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று நினைத்து மும்பை சென்றார். ஆனால், மும்பையில் பருத்தி வர்த்தகம் என்பது ஏறக்குறைய ஒரு சூதாட்டமாகவே மாறியிருந்தது. சூதுவாது தெரியாமல் இந்த ஆட்டத்தில் சிக்கியதன் விளைவு, மிகப் பெரிய நஷ்டமடைந்தார் ஜி.டி.நாயுடு.

அதுவரை சம்பாதித்த பணம் அத்தனையையும் இழந்து, ராபர்ட் ஸ்டேன்ஸ் என்கிற வெள்ளைக்காரர் நடத்திய கம்பெனியில் மெக்கானிக்-ஆக வேலை செய்யத் தயாராக இருந்தார் ஜி.டி.நாயுடு. அந்த சமயத்தில் இந்தியாவில் பஸ்களை விற்றுக் கொண்டிருந்தார் ராபர்ட் ஸ்டேன்ஸ். ஒரு பஸ்ஸின் விலை நான்காயிரம் ரூபாய்.

பஸ்களின் வருகை மூலம் மக்கள் இன்னும் அதிக அளவில் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்வார்கள் என்பதைச் சரியாகவே கணித்தார் ஜி.டி.நாயுடு. தவிர, அந்த சமயத்தில் கோவையில் ஒரு பஸ்கூட இல்லை. எனவே, ஒரு பஸ்ஸை வாங்கி பொள்ளாச்சி - பழநிக்கு இடையே ஓட்ட முடிவு செய்தார். காரணம், அந்த சமயத்தில் பொள்ளாச்சியிலிருந்து பல ஆயிரம் பேர் மாட்டு வண்டி மூலமாக நாள் கணக்கில் பயணம் செய்து பழநிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.
சரி, பஸ் வாங்க பணத்திற்கு எங்கே போவது? நல்ல வேளையாக பஸ் கம்பெனி அதிபர் ராபர்ட் ஸ்டேன்ஸே இரண்டாயிரம் ரூபாய் பணம் தந்தார். தனக்குத் தெரிந்த மற்ற நண்பர்களிடமும் பணத்தை புரட்டி எடுத்து, ஒரு பஸ்ஸை வாங்கி, பொள்ளாச்சியிலிருந்து பழநிக்கு அவரே ஓட்டிச் சென்று வந்தார். யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்கிற பெயரில் அவர் நடத்திய இந்த போக்குவரத்துக் கம்பெனி நல்ல லாபத்தைத் தந்தது.

1920-
ல் அவரிடம் இருந்தது ஒரே ஒரு பஸ்தான். 1924-ல் 24 பஸ்ஸாக உயர்ந்தது. 1933-ல் அவரிடம் இருந்த பஸ்களின் எண்ணிக்கை 280. ஒரு கட்டத்தில் 600 பஸ்களுக்கும் மேலே வைத்திருந்தார் ஜி.டி.நாயுடு.
இந்த கம்பெனி நன்கு வளர்ந்த சமயத்தில் தன்னுடைய ஆராய்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக வடிவம் தர ஆரம்பித்தார். முக சவரம் செய்து கொள்ளும் மின் சாதனமான எலெக்ட்ரானிக் ரேஸரைக் கண்டுபிடித்தார். பஸ்ஸில் தானாகவே டிக்கெட் தரும் மெஷினை கண்டுபிடித்தார். கணக்கு போடும் கால்குலேட்டரை உருவாக்கினார்.
ஜி.டி.நாயுடு ஒரு கேமிரா பிரியர். படம் எடுக்கும் கேமிராவில் உள்ள தூரத்தை சரி செய்யும் லென்ஸை கண்டுபிடித்தார். 1930 வாக்கில் அவர் பல்வேறு மேற்கத்திய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது பல்வேறு காட்சிகளை படமெடுத்தார். ஜெர்மனிக்குப் போனபோது ஹிட்லருடன் சேர்ந்து படமெடுத்துக் கொண்டார்.

ஜி.டி.நாயுடு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை எனினும், 1936-ல் நடந்த கோவை புரவின்ஷியல் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இதன் விளைவாக, மோசடி செய்ய முடியாத மின் வாக்குப்பதிவு இயந்திரத்தை அப்போதே தயாரித்தார்.

1941-
ல் அவர் ஒரு ரேடியோவை உருவாக்கி, எல்லோரும் வாங்கும் வகையில் 70 ரூபாயில் கொடுக்க முடிவு செய்தார். இப்போது வந்திருக்கும் நானோ கார் போல 1940-லேயே வெறும் 2,000 ரூபாயில் இரண்டு சீட்கள் கொண்ட காரை உருவாக்கினார். ஆனால், இந்த புதுமையான முயற்சிக்கு அப்போதைய அரசாங்கம் அனுமதி அளிக்காததால், குறைந்த விலை கார் முயற்சி அப்படியே நின்று போனது.

தவிர, போத்தனூரில் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய ஆய்வு பண்ணை ஒன்றையும் அமைத்தார். இதில் அதிக விளைச்சல் தரக்கூடிய பருத்தி விதைகள் உள்பட பல்வேறு விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், மைசூர் அணையைக் கட்டிய விஸ்வேஸ்வரய்யா உள்பட பல அறிஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.
1944-
ல் ஐம்பது வயதுகூட நிரம்பாத நிலையிலேயே தொழில் துறையிலிருந்து ஒதுங்கிக் கொண்டார் ஜி.டி.நாயுடு. 1945-ல் ஆர்தர் ஹோப் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியைத் தொடங்கி, 1949-ல் அதை அரசாங்கத்திற்குத் தானமாக தந்தார்.

1974-
ல் ஜி.டி.நாயுடு இறந்தாலும், அவரது வாரிசுகள் இன்றளவும் தொடர்ந்து பிஸினஸ் உலகில் சாதனை படைத்துக் கொண்டே இருக்கின்றனர்.


அவரின் பொன்மொழி:

21
வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலை செய்,

பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்துத் தொழில் செய்.

குறைந்தது அடுத்து இருபது ஆண்டுகளுக்கு தொழில் செய்து பொருள் ஈட்டு.

பிறகு உன்னுடைய படிப்பு ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்.

ஜி.டி. நாயுடு என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர்.விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

கண்டுபிடுப்புகள்:

*
ஒரே வாழைத் தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர்.

*
தன்னிடம் பணியாற்றும் ஓட்டுநருக்கு ஒரு பேருந்தையே பரிசாகக் கொடுத்தவர். உலகம் சுற்றியவர். ஹிட்லரையும், முசோலினியையும் நேரில் சந்தித்து தமது கேமிராமூலம் படம் பிடித்தவர்.

*
முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்!

*
மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

*
எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

*
புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

*
இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.

*
விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

அறிவு தாகம் மிக்க அவருக்கு இளைஞர் சமுதாயத்தின் மீது அதீத அக்கறை இருந்தது. கோயமுத்தூரில் சில கல்வி நிறுவனங்கள் துவங்கக் காரணமாக இருந்த அவர் ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றம் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தைப் பொருத்தே அமைகின்றது என்று நம்பினார். அக்காலத்தில் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி வாழப்படுகிறது என்பதை அறிய அக்காலத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு புள்ளி விவரத்தைப் பெற்ற அவர் கூறுகிறார்: இளம் உள்ளங்கள் நன்மை தீமைகளை ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகின்றன. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எப்படி உண்பது? எப்போது உண்பது? எப்போது உறங்குவது, எப்படி உடை அணிவது? எப்படிக் குளிப்பது எப்படி பிறருடன் பழகுவது? எப்படி வேலைகளைச் செய்வது? என்ற ஆரம்பப் பாடம் கூடத் தெரிவதில்லை. அவர்கள் இதையெல்லாம் நாள் தோறும் செய்கிறார்கள். ஆனால் ஒழுங்கற்ற முறையில்! அவர்கள் கல்லூரிக்கு எதற்காக வந்தார்களோ அதை மறந்து விளையாட்டிலும், திரைப்படத்திலும், விழாக்களிலும், நாவல்களிலும் நேரத்தை வீணாக்குகின்றனர். அவர்கள் 15ஆம் வயது முதல் 25ஆம் வயது வரை உள்ள பத்தாண்டு காலத்தை எப்படி கழிக்கிறார்கள் என்பதற்கு ஒரு புள்ளி விவரம் கூறுகிறேன்.

செலவு செய்த முறை ---------------- வருடம்-------மாதம்------நாள்

உறக்கம் ------------------------------- 3 ------- 4 ------- 5

உணவு -------------------------------- 0 -----------7 --------- 18

கண்ணாடிக்கு முன் அழகு பார்த்தல் ------- 0 ---------7 ----------18

வீண் பொழுது போக்குகள் -----------------4 --------- 3 --------- 4

படிப்பு ---------------------------------- 1 ---------- 1 -------- 15”

இளைஞர்களின் எண்ணங்கள் களியாட்டங்களையும், வீண் பொழுது போக்குகளையும் சுற்றியே வட்டமிடுமானால் அவர்கள் சக்தி சிதறுவதுடன் உடலும், உள்ளமும் கெடுகின்றன என்று அவர் ஆணித்தரமாக நம்பினார். 1953 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் உரையாற்றிய போது அவர் இளைஞர்களுக்குக் கூறினார். நீங்கள் எந்தத் தீய பழக்கத்திற்கும் அடிமையாகி விடாதீர்கள். தவறி அடிமைப்பட்டு விட்டால் அதனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் பாழாவதோடு மனித சமுதாயமும் நஞ்சூட்டப்படுகிறது. சாதாரணமாக 15 வயது முதல் 25 வயதுக்குள் தான் தீய பழக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றை இளம் வயதிலேயே மாற்றா விட்டால் பிறகு எப்போதுமே மாற்ற முடியாது. மாணவப் பிராயத்தில் இயற்கையாகக் காணப்படும் ஊக்கமும் தைரியமும் தீய பழக்கத்தை எளிதாக ஒழித்து விடக் கூடியவை.

இளைஞர்கள் பட்டம் பெறும் காலத்தில் அறிவு முதிர்ச்சி பெறுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் ஏற்பட வேண்டும். பரந்த நோக்கு ஏற்பட வேண்டும். நீங்கள் முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் வகுப்பிலோ தேறா விட்டாலும் அல்லது தேர்ச்சியே பெறா விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தீய பழக்கங்களை விட்டு விட்டோம் என்ற நம்பிக்கையோடும், தைரியத்தோடும் நேர்மைக்காக போராடும் உள்ளத்தோடும், ஆழ்ந்து நோக்கும் பிரச்னைகளை ஆராயும் தன்மையோடும் நீங்கள் இங்கிருந்து வெளியேறுவீர்களேயானால் உங்கள் வாழ்நாள் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வாகை சூடுவீர்கள்

நீங்கள் நிறைய கற்பதற்கும், உங்களை முன்னேற்றிக் கொள்வதற்கும், வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இது தான் தக்க பருவம். உலகின் மிகப் பெரிய தலைவர்களது வாழ்க்கை வரலாற்றை நீங்கள் பார்ப்பீர்களேயானால் அவர்கள் கல்லூரிப் பட்டம் பெற்றிருந்தாலும், பெறா விட்டாலும் நிறைய உழைத்தவர்களாக, அறிவைத் தேடி ஓடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் தான் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிகளாக அமைகிறார்கள்

ஒழுக்கமான வாழ்க்கையும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் ஒருவருக்கு சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இது அவர் அடுத்தவருக்குச் சொன்ன அறிவுரை மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையிலும் அவர் முழுமையாகக் கடைபிடித்தார். செல்வந்தராக ஆன பிறகும் கட்டுப்பாடான சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்த அவர் காலத்தையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்தினார். அதனால் தான் அவரால் நிறைய சாதிக்க முடிந்தது.

தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை அவர் ஒரு போதும் எள்ளளவும் வீணாக்கியதில்லை. இயந்திரங்கள், தொழில் நுட்பம் சம்பந்தமாக உலகில் எங்கு கண்காட்சி நடந்தாலும் கண்டிப்பாக அங்கு சென்று முழு நேரமும் அங்கு இருந்து தன் அறிவு தாகத்தைத் தீர்த்துக் கொள்வார். 1939 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூயார்க்கில் உலகக் கண்காட்சி நடைபெற்றதைக் காணச் சென்றார். அதுபற்றி பின்னர் குறிப்பிட்ட போது அவர் கூறுகிறார்: நான் கண்காட்சிக்கு தினமும் தவறாமல் சென்று வந்தேன். தினமும் நான் தான் காட்சி சாலைக்குள் நுழைவதில் முதல் மனிதனாகவும், வெளி வருவதில் கடைசி மனிதனாகவும் இருந்தேன். காலை உணவை முடித்துக் கொண்டு காட்சி சாலைக்குப் போவேன். மாலை வரையில் ஒன்றுமே உண்ணாமல் இயந்திரங்களைப் பார்த்து விட்டு வீடு திரும்புவேன்

வாழ்க்கையின் ஆரம்பத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைந்த பிறகும் அவர் இப்படியொரு ஆர்வத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது அவருடைய உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். அதனால் தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் ஜி டி நாயுடுவைக் குறித்து சொல்கையில் இலட்சத்தில் ஒருவர் என்று சொல்வது கூட அவரைக் குறைத்துச் சொல்வது போலத் தான்என்றார்.

இளைஞர்களே அவர் கூறியதைப் போல உங்கள் இளமைக் காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கவனமாக இருங்கள். உங்கள் சக்தியையும், காலத்தையும் வீணக்காமல் முழுமையாகப் பயன்படுத்துங்கள். அப்படிச் செய்தீர்களானால் அவரைப் போல் நீங்களும் கால மணலில் காலடித் தடங்களை விட்டுப் போகலாம்!

1 கருத்து:

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...