09 ஆகஸ்ட் 2013

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்,01 NEER NATIONAL SONGS



                 

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
         நமது தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பினைப்போற்ற பாடுவோம்,''தமிழ்த்தாய் வாழ்த்து'' நீராருங்கடலுடுத்த.........பாடல்.கீழுள்ள இடுகையினைச்சொடுக்குக. 

01 NEER NATIONAL SONGS

             என்றும் சமூகநலனில் அக்கறையுள்ள,
                        பரமேஸ்வரன்.சி.,
                           ஓட்டுனர்,
                    தமிழ்நாடு  அரசு போக்குவரத்துக்கழகம்- கோவை.
                      தாளவாடி கிளை - ஈரோடு மண்டலம்.-638461

05 ஆகஸ்ட் 2013

தமிழ் வளர்த்த தமிழ்ச்சான்றோர்கள்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
            தமிழ் வளர்த்த தமிழ்சான்றோர்கள் பட்டியல் இங்கு பதிவிடுகிறேன்.கூடுதல் விவரம் தெரிந்த நண்பர்கள் தகவல் கொடுக்க வேண்டுகிறேன்.
 (1)உ.வே.சாமிநாத அய்யர்
 (2)தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
 (3)மறைமலை அடிகளார்
 (4)தேவநேயப் பாவலர்
 (5)கா.அப்பாதுரையனார்
 (6)சிதம்பரநாத செட்டியார்
 (7)ஆபிரகாம் பண்டிதர்
 (8)மு.வரதராசனார்
 (9)ச.வையாபுரி பிள்ளை
 (10)மயிலை சீனி.வெங்கடாசலம்
 (11)ரா.பி.சேதுபிள்ளை
 (12)சுப்பிரமணிய பாரதி
 (13)சேவியர் தனிநாயகம் அடிகளார்
        நம்  தாய்மொழியாம் தமிழுக்காக பாடுபட்ட இங்கு விடுபட்ட  அறிஞர் பெருமக்கள் பற்றிய   விவரம் அறிந்த நண்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.
                   பரமேஸ்வரன்.சி
                     ஓட்டுனர்
தமிழ்நாடு அரசு போகுவரத்துக்கழகம்-கோவை
 தாளவாடி கிளை - ஈரோடு மண்டலம்.

தமிழ் மொழி வளர்த்த வெளிநாட்டவர்கள்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                 இந்த பதிவில் தமிழ்மொழி வளர்த்த வெளிநாட்டு அறிஞர் பெருமக்களின் விவரங்களை பதிவிட்டு அவர்களை நமது நினைவில் கொள்வோம்.
 (1)ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன். (1841 - 1897)
 (2)ராபர்ட் கால்டுவெல் (1814 - 1891)
 (3)ஆலன் டேனியலூ (1907 - 1994)
 (4)ஜோகன் பிலிப் பேப்ரிசியஸ் (1711 - 1791)
 (5)ஹென்ரிக் ஹென்ரிக்ஸ்
 (6)ஹென்ரிக் அடிகளார்
(7)ஹூப்பர்
(8)ஜென்சன் ஹெர்மன்
( 9)எம்.ஏ.லேப்
(10) ஜான் லேசர்ஸ்
 (11) ஜான் முர்டாக் (1819 _1904)
 (12)ராபர்ட் டி நொபிலி (1577 - 1656) தத்துவ போதகர் என பெயரை மாற்றுக்கொண்டவர்.,தமிழகத்துறவியாகவே வேடமணிந்து கொண்டவர்.மயிலாப்பூரில் மறைவு.
 (13)பீட்டர் பெர்சிவல்
 (14) ஜீ.யூ.போப் (1820 - 1908) இவரது கல்லறையில் ''நான் ஒரு தமிழ் மாணவன்'' என்று எழுத வேண்டும் என்று கூறியவர்.
 (15)ரேனியல் சிட்டி (1790 -1838)
 (16) ஹில்கோ வியார்டோ ஸ்கோமெரர்ஸ்
 (17) ஜூனியர் வில்சன்
(18) வின்ஸ்லோமிரன் (1789 - 1864)
 (19)பார்த்தலோமியா சீகன் பால்கு (1682 -1719) இவர் 1714-இல் இந்திய மொழிகளிலேயே தமிழை முதன்முதலாக அச்சேற்றியவர்.தன்னை ஐய்யர் என்று கூறிக்கொண்டவர்.இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற செல்வத்தினுள் தமிழே முதன்மையானது என்று பிரிட்டன் நாட்டில் ஜார்ஜ் மன்னன் தலைமையில் நடந்த வரவேற்புரையில் தமிழில் பேசி தமிழனின்,தமிழின் சிறப்பை உலகறியச்செய்தவர்.
 (20)கமில்ஸ் சுலபில்- இவர் செக்கோஸ்லேவியா நாட்டைச்சேர்ந்த அறிஞர்.தமிழின் சிறப்பைப்போன்று ஆங்கிலம் உட்பட உலகின் எந்த மொழிக்கும் இல்லை என்று தமிழின் பெருமையை உணர்த்தியவர்.
(21)வீரமாமுனிவர். கான்ஸ்டன் ஜோசப் பெஸ்கி-(1682 - 1746 )தமிழ் அகராதிகளின் தந்தை,தமிழில் எழுத்து சீர்திருத்தம் செய்து எளிமையாக்கியவர்.
 (22)இரேனியஸ்
 (23)கிரண்டலர்
 (24)டாக்டர் வின்சுலோ
 (25)மாச்சுமுல்லர்
     (26)டாய்லர்

                   இதில் விடுபட்ட அறிஞர் பெருமக்களின் பெயர்கள் அறிந்த  அன்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.தமிழ் வளர்த்த தமிழ்ச்சான்றோர்கள் பட்டியல் அடுத்த பதிவில்.
                               என
                பரமேஸ்வரன்.சி.
                           ஓட்டுனர்.
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை
  தாளவாடி கிளை-ஈரோடு மண்டலம்.

Tamil'99 முறை தட்டச்ச எளிமையானது.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                 FACEBOOK என்னும் முகநூல் நண்பர்களுக்காக நமது தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பு,எளிமை,தெளிவு,முழுமை மற்றும் தமிழில் எளிதாகத்  தட்டச்சு செய்வது , மற்றும்  பலமொழி கற்றுத்தேர்ந்த மேலைநாட்டறிஞர்கள் தமிழின் சிறப்பினை உணர்ந்து தமிழுக்கு ஆற்றிய தொண்டு   ஆகியன இங்கு பதிவிடுகிறேன்.
       முதலாவதாக தமிழின் சிறப்பு பற்றி காண்போம்;-
                ஓர் எழுத்தினை உச்சரிக்கும்போது எழுகின்ற ஓசை நயத்திற்கேற்ப  அந்த எழுத்தின் வரிவடிமும் அமைந்திருப்பது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பு.இத்தகைய சிறப்பு  மற்ற திராவிட மொழிகள் உட்படஉலகில் எந்த மொழிக்கும் இல்லை என்பதை பலமொழி கற்ற ''செக்கோஸ்லோவாகியா'' நாட்டின் அறிஞர்  ''கமில்ஸ் சுலபில்'' அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உலகுக்கு எடுத்து உரைத்துள்ளார்.
 உதாரணமாக நாம் ''கிருஷ்ணா'' என்று எழுத வேண்டுமானால் தமிழில் தனித்தனி எழுத்தாக உச்சரிக்கும் ''கி- ரு -ஷ்- ணா' என்ற அதே எழுத்தை (கட்டடம் கட்ட செங்கல் அடுக்குவது போல்) சேர்த்தால் மட்டும் போதும்.ஆனால் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,இந்தி,உட்பட அனைத்து மொழிகளிலும் தனித்தனியாக உச்சரித்த எழுத்துக்களை சேர்க்கும்போது ''கிருஷ்'' ஆகிய மூன்றெழுத்துக்களும்- சம்யுக்தாக்ஷரங்கள் என்னும் ஒத்தெழுத்து வடிவில் பாதிபாதியாக வெட்டி ஒட்டப்பட்டுத்தான் எழுத முடியும்.(நான் மொழிப்பற்று காரணமாக ஆய்வுக்காக மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,இந்தி ஆகிய மொழிகளையும் அரபு மொழியினையும் கற்க துணிந்து ஓரளவு கற்றுள்ளேன்.எழுத படிக்க தெரியும்.ஆனால் அர்த்தம் புரியாது?அதன் விவரம் பின்னொரு பதிவில் புகைப்படமாக எடுத்து தருகிறேன்.)
இரண்டாவது தமிழில் தட்டச்சு செய்வது எளிது.;-
   கணினியுகத்தில் ஆங்கிலம் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தமையால் அனைத்து கணினி பயன்பாடுகளுக்கும் ஆங்கிலமே பயன்பாட்டில் அதுவும் பொதுக்குறியீட்டு முறை என்ற பொதுவான ஒரே முறை பயன்படுத்தப்பட்டு வந்தது..
                    ஆனால் தமிழ் போன்ற பிற மொழிகளின் பயன்பாடு மிக சமீபத்திய காலத்தில்தான் கணினியில் பயன்படுத்தப்பட்டது.அதிலும் வியாபாரத் தந்திரம் காரணமாக வணிகர்களின் சில சுயநலத்தின் காரணமாக ஒவ்வொருவரும் அவரவரின் வெளியீடுகளை மட்டுமே விற்பனையில் இருக்க வேண்டும்.எழுத்தின் ஒருமுறையை கற்றவர்கள் மீண்டும் அதே முறை எழுத்துக்குறியீடுகளை மட்டும் வாங்க வேண்டும்.வேறு நிறுவனத்தின் எழுத்துருக்களை வாங்கக்கூடாது என்ற நோக்கில் பலரும் பல குறியீட்டுமுறை எழுத்துருக்களை  வெளியிட்டு  நம்மை குழப்பிவிட்டனர்.
                          தட்டச்சு முறையும் சற்று கடினமாக தோன்றியதால் தட்டச்சு பயின்றவர்களும் பாமினி என்னும்அந்த முறையை விட்டு வெளியே வர பயந்துவிட்டனர்.
                            ஆனால் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டின்போது தமிழுக்காக தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களின் சீரிய முயற்சியால் தமிழ்99 தட்டச்சு முறை மிக எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுவெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசும் அங்கீகாரம் வழங்கி  Tamil'99 எழுத்து முறை பயன்பாட்டிற்கு  வந்துள்ளது.
                          ஆங்கிலத்தை விட எளிமையானது.இந்த தமிழ்99 முறை . அதைப்பற்றி பார்ப்போம்;-
   தட்டச்சுப்பொறியில் தட்டிய எழுத்துத்தான் பதிவாகும்.கணினியில் கட்டளை கொடுத்து தட்டச்சு செய்வதால் அதற்கேற்ப எழுத்து மாறிப்பதிவாகும்..இதுவே நமக்கு கிடைத்த வசதியாகும்.

                      தமிழ் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் ஆக முப்பது எழுத்துக்களும் சேர்ந்து அத்தனை தமிழ் எழுத்துக்களையும் உருவாக்குகின்றன.அதே முறையில்தான் தமிழ்'99 முறையும் செய்கிறது.
                            எனவே, முப்பது தமிழ் எழுத்துக்கள் எந்த எந்த விசைப்பொத்தானில் உள்ளது என்று மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.அதற்கு NHMWriter என்னும் சாப்ட்வேர் நமக்கு இலவசமாகக் கிடைத்துள்ள பரிசு ஆகும்.
              நான் பயன்படுத்துவது இந்த NHMWriter Tamil'99 தாங்க.இந்த என் எச் எம் ரைட்டரை இன்ஸ்டால் செய்வதும் எளிதானது.(NHMWriter மென்பொருளிலும் தமிழ்'99 முறை,பாமினி முறை,தட்டச்சு முறை,தமிங்கில முறை என அனைத்து (அதாவது) பலமுறைகளும் உள்ளன.நமக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
                 ஆனால் தமிழ்'99 முறைதான் எளிமையானது,விரைவானது.இனி எந்த தமிழ் எழுத்துக்கள் எந்த விசைப்பொத்தானில் என்பதைக் காண்போம்.இதனை மட்டும் மனதில் வைப்போம்.
     முதல் விசை அழுத்தத்தில்  அ-a., ஆ-q ., இ- s ., ஈ- w ., உ-d., ஊ-e ., எ-g., ஏ- t ., ஐ-r ., ஒ-c ., ஓ-x ., ஔ - z ., ஃ - f .,  க-h ., ங-b .,  ச -[ ., ஞ-] ., ட - O., ண-p ., த-l ., ந-; ., ப-j ., ம-k., ய - ' ., ர-m ., ல-n ., வ-v ., ழ -?., ள-y ., ற -u ., ன -i .,  ஆகிய எழுத்துக்கள் கிடைக்கும்.
     ஷிப்ட் அழுத்தியவாறு பின்வரும் ஆங்கில எழுத்து விசை அழுத்தினால்   ஸ-Q., ஷ-W., ஜ-E., ஹ-R., க்ஷ-T.,  ஸ்ரீ-Y., என வடமொழி எழுத்துக்கள் கிடைக்கும்.இவ்வளவுதாங்க. முயற்சி செய்து பாருங்க.
       http://software.nhm.in/products/writer1511 என்ற
     NHMWriter மென்பொருள் வலைத்தளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.இன்ஸ்டால் செய்யும் முறை பற்றியும் இதில் விவரமாக கொடுத்துள்ளது சிறப்பு ஆகும்.
பிறகு  மெய்யெழுத்துக்களையும் உயிரெழுத்துக்களையும் தட்டச்சு செய்து அனைத்து உயிர்மெய் எழுத்துக்களையும் பெறலாம்.
            (உயிர் மற்றும் மெய்யெழுத்துக்கள் ஆகிய முப்பது எழுத்துக்களால் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களும் கிடைக்கும்.)
         அதாவது  தமிழ் என தட்டச்சு செய்ய l (இது small L)  m s  / f  என தட்டச்சிட மென்பொருள் உதவியால்   த்+அ,ம்+இ,ழ் = தமிழ் என  தானே மாறிப் பதிவாகும்.
                  (கவனியுங்க!;-ஓட்டுனர் பணி புரியும் நான் எனது மகளின் பயன்பாட்டிற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் கணினி வாங்கினேன்.நானும் கணினி அருகில் அமர்ந்து எழுத்துக்களை தட்டச்சிட்டுப் பார்க்க,பதிவானது கண்டு  வியக்க,இரண்டு நாட்களில் தமிழில் தட்டச்ச பழகிக்கொண்டேன்.தற்போது வாய்ப்பு கொடுக்கும் இடங்களில் பயிற்சியும் கொடுத்து வருகிறேன்.அரை மணி நேரம் பயிற்சி மட்டும்).
        தமிழ் வளர்த்த மேல்நாட்டறிஞர்கள் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
                                                     என C. பரமேஸ்வரன் -
                                                    ஓட்டுனர்,
                                           தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் - கோவை.
                                            தாளவாடி கிளை.ஈரோடு மண்டலம்.
      
  

04 ஆகஸ்ட் 2013

திருமிகு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களை என்றும் மறவோம்!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                        2013 ஆகஸ்டு 03-ந்தேதி முதல் நம்ம ஈரோடு மாநகரில் புத்தகத்திருவிழா மிகச்சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது.
   


                மரியாதைக்குரிய ஐயா'' ஸ்டாலின் குணசேகரன்'' அவர்களை இவ்வுலகம் உள்ளவரை ஈரோடு மாநகர மக்கள் மட்டும்-இல்லைங்க!., நம்ம ஈரோடு மாவட்ட மக்களே மறக்கக்கூடாதுங்க! 
     (தவறி மறந்தால் அதைவிடக்கேவலம் இவ்வுலகில் இல்லை)
           புத்தகத்திருவிழா! என இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவது சாதாரண விசயம் இல்லைங்க!.அதிலும் 2005 முதல் வருடந்தோறும் எத்தனை சிக்கல்களை,சவால்களை,இடையூறுகளை,இன்னல்களை,எதிர்கொண்டு இருநூற்றைம்பது கடைகளை அறிவுப்பெட்டகமாம், புத்தக்ககளஞ்சியங்களைக் கொண்டு வந்து இந்த அற்புத திருவிழாவை நடத்தி வருகிறார் என்பதை சற்றேனும் சிந்தித்துப்பாருங்கள்.
                                 நமக்காக,நமது மக்களுக்காக,மாணவர்களுக்காக,இளைஞர்களுக்காக,இல்லத்தரசிகளுக்காக,பாமர மக்களுக்காக,தமிழர்களுக்காக,என்ற சமூக நோக்கில் எத்தனை துயரங்களை சந்தித்துக்கொண்டு,சகித்துக்கொண்டு இந்த அத்தியாவசிய நிகழ்வை நடத்தி வருகிறார்.மேலும் தமிழமெங்கும் வாசகர் வட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.


         நமக்காக இல்லையாகினும் நமது சந்ததியினருக்காகவாவது  நாமும் ஈரோடு புத்தகத்திருவிழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்குவோம். அல்லது ஒருமுறை நம்ம குடும்பத்தோடு சென்று கண்டு களிப்போம். மதிப்பிற்குரிய ஸ்டாலின் குண சேகரன் ஐயா  அவர்களது அயராத உழைப்பைப் போற்றுவோம்.
                     புத்தகத்திருவிழாவில் குவிந்துள்ள புத்தகப்புதையல் பற்றி ஊரெங்கும் பரப்புரை செய்வோம்.வாங்க!
                                                               என சமூக அக்கறையுடன்,
                                                                      பரமேஸ்வரன்.C, 
                                                                                 ஓட்டுனர், 
                                                                    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், 
                                                                             தாளவாடி கிளை.
 -                                                                         ஈரோடு மண்டலம்.
                                                                        கோயமுத்தூர் கோட்டம்.


03 ஆகஸ்ட் 2013

ஆடி பதினெட்டு கொண்டாடுவது ஏன்?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
          கொங்குத்தென்றல் வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். ஆடி பதினெட்டு கொண்டாட்டம் பற்றி காண்போம்..இந்த விவரத்தை பதிவிட்ட நண்பர் நாகூர் கனி காதர் மைதீன்பாஷா அவர்களுக்கு நன்றி.


ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடுவது ஏன்?

             ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி ... வாடியம்மா... எங்களுக்கு வழித்துணையாக..... என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம். அதிலும், ஆடியில் பொங்கும் நுரையுடன் பெருக்கெடுத்து வரும் புதுத்தண்ணீரைக் காண்பதும் அதில் நீராடுவதும் தனி சுகம்.

ஆடியின் சிறப்பு:

            புரட்டாசி, ஐப்பசி மழைக்காலத்திலும் காவிரியாறு இருகரையைத் தொட்டுத்தான் செல்லும். ஆனாலும், அதற்கு இல்லாத விசேஷம் ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் வந்தது? மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை ஆனிமாதம் துவங்கியதும், குடகுமழையில் பெருக்கெடுக்கும் காவிரி வெள்ளம், ஆனி கடைசியில் கொங்கு, சோழமண்டலங்களைத் தொடும். சித்திரை, வைகாசி வெயிலில் காய்ந்து கிடந்த நிலங்களும், நீர்நிலைகளும் ஆடியில் வரும் புதுதண்ணீரால் நிரம்பும். ஆடிப்பட்டத்தில் அந்தாண்டு முதன்முதலாக விவசாயிகள் தங்கள் நெல்சாகுபடியைத் துவங்குவார்கள். 

         நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே "ஆடிப்பெருக்கு' விழாவின் முக்கிய குறிக்கோள். ஆன்மிக   ரீதியில் மட்டுமின்றி, தங்கள் தொழிலைக் காக்கும் காவிரி அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்திலும் இவ்விழாவை, காவிரிக்  கரையோர மக்கள் கொண்டாடுகின்றனர்.

வந்தாள் காவிரித்தாய்:

             சிவனின் மனைவியாக காவிரி போற்றப்படுகிறாள். கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணத்தின்போது வடபுலம் தாழ்ந்தது. இதனால், அகத்திய முனிவரை "தென்புலம் சென்று பூமியை சமநிலையாக்குமாறு' சிவபெருமான் பணித்தார். சிவனைத் திருமணம் செய்வதற்காக, பார்வதிதேவி ஒற்றைக்காலில் தவம் இருந்தபோது, கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி அகத்திய முனிவரிடம் வழங்கினாள் பார்வதிதேவி. அவரும் அந்தப் பெண்ணைக் கமண்டலத்தில் அடக்கி தென்னகம் நோக்கி வந்தார். அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரியானது. 

               கமண்டலத்தில் மீதிருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று, தான் வசித்த பொதிகை மலையில் கொண்டு விட, அதுவே தாமிரபரணியானது. இக்காரணத்தால் சிவபெருமானின் மனைவியாக போற்றப்படுகிறாள் காவிரி.

          திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் மகேந்திர பல்லவனின் குடவரைக்கோயில் ஒன்றுள்ளது. இங்கு சடைமுடியில் கங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருக்கும் சிவபெருமானும், பக்கத்திலேயே பார்வதி தேவி நின்ற கோலத்தில் இருப்பதையும், தேவகணங்கள் சுற்றி இருப்பதையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. "ஏற்கனவே சடைமுடியில் இரண்டாவது மனைவியைத் தாங்கிய சிவபெருமான், மலைக்கோட்டையின் பக்கத்திலேயே ஓடும் காவிரியின் மீதும் மோகம் கொண்டு விடக் கூடாது' என்ற கவலையில் பார்வதிதேவி நின்ற படியே காவல் இருக்கிறாராம். சிவபெருமானின் மனைவியாக கருதப்படும் காவிரியன்னை, விஷ்ணுவுக்கு தங்கையாக கருதப்படுகிறாள்.

           குணசீலம் வரை அகண்ட காவிரியாகவும், குணசீலத்தை அடுத்த முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாகவும் பிரியும் காவிரி, மீண்டும் கல்லணையில் ஒன்றிணைகிறாள். ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதரை வணங்கும் விதத்தில் ஸ்ரீரங்கத்தீவுக்கு மாலை அணிவிக்கும் விதத்தில் காவிரியும், கொள்ளிடமுமாக வளைந்து செல்கிறாள். பழம்பெருமை மிக்க இந்த நதிகளெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே, ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாடுவதின் நோக்கம்.

காவிரி பாயும் பகுதிகள்:

            காவிரி நதி, கர்நாடகாவில், குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவேரி எனும் பகுதியில் உற்பத்தியாகிறது.இது கடல் மட்டத்திலிருந்து 4,400 அடி உயரத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. காவிரி, கர்நாடக மாநிலத்தில் 320 கி.மீ , தமிழ்நாட்டில் 416 கி.மீ., இரு மாநில எல்லையில் 64 கி.மீ., என மொத்தம் 800 கி.மீ., தூரம் ஓடுகிறது. இது மைசூர், கொள்ளேகால், மேட்டூர், திருச்சி, தஞ்சாவூர், பூம்புகார் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இதன் துணை நதிகளாக கர்நாடகாவில் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, லட்சுமண தீர்த்தம், ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி மற்றும் தமிழகத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய நதிகளும் உள்ளன. 

                    கிருஷ்ணராஜசாகர் (45 டி.எம்.சி.,), கபினி அணை (19 டி.எம்.சி.,), ஹேமாவதி அணை (34 டி.எம்.சி.,), ஹேரங்கி அணை (6 டி.எம்.சி.,), மேட்டூர் அணை (93.50 டி.எம்.சி.,), மேலணை, கல்லணை, கீழணை ஆகியவை காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளாகும். பல தடுப்பணைகளும் உள்ளன. காவிரி, கர்நாடகாவில் சிவசமுத்திர அருவி, தமிழகத்தில் ஒகேனக்கல் அருவி ஆகிய இரு அருவிகள் வழியே பாய்கிறது.

                தமிழகத்திற்கு ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்தடையும் காவிரி, அங்கு ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்து தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானியில், பவானி ஆறும்,ஈரோடு கடந்தபின் கொடுமுடி அருகே நொய்யல் ஆறும், கரூர் அருகே கட்டளை எனும் இடத்தில் அமராவதி ஆறும் சங்கமிக்கின்றன. 

         கரூரிலிருந்து திருச்சி வரை வரும் காவிரி அகலமாக காணப்படுவதால் இங்கு "அகண்டகாவிரி' எனப்படுகிறது. முசிறி, குளித்தலையை கடக்கும் காவிரி, முக்கொம்பு எனும் பகுதியில் மேலணையை அடைகிறது. 
           இங்கிருந்து கொள்ளிடம், காவிரி என இரு கிளை நதிகளாக பிரிகிறது. கொள்ளிடம், வெள்ள வடிகாலாக இருப்பதால், பெரும்பாலும் இது வறண்டே காணப்படும். இரு கிளைநதிகளுக்கும் இடையே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்கும் காவிரி, பின் கல்லணையை அடைகிறது. இங்கிருந்து பல சிறு கிளைகளாக பிரிந்து, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி பின் கடலில் கலக்கிறது. 
         காவிரி டெல்டாவில் பாயும் கிளைநதிகள் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகியவை. தமிழகத்தில் 34 சதவீதம், கர்நாடகாவில் 18 சதவீதம், கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்புகள் காவிரி டெல்டாவில் உள்ளன. 
      தமிழகத்தில் 28 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி, காவிரி நீரால் பயன் பெறுகிறது. காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முக்கிய தொழிலாக நெல் சாகுபடி உள்ளது. இங்கு பருவத்திற்கு ஏற்ற வகையில் குறுவை, சம்பா, தாலடி வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. 
            குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கரிலும், சம்பா சாகுபடி 12 லட்சம் ஏக்கரிலும் நடக்கிறது. புதுச்சேரியின் காரைக்கால் பகுதி, காவிரி டெல்டாவில் உள்ளது. கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி., தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில் கலப்பதால், கேரளாவும் காவிரிநீருக்கு உரிமை கொண்டாடுகிறது.

வளம் பெருக்கும் திருநாள்:

                 "பெருக்கு' என்றால் "பெருகுதல்' என்பது மட்டுமல்ல, "சுத்தம் செய்தல்' என்பதும் அதன் பொருள். ஆடி மாதத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடி வரும். சில நேரங்களில் கரையையும் தாண்டும் நிலை கூட ஏற்படும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டு விடும். ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும். மனித மனங்களிலும் ஆசை, பொறாமை, தீய எண்ணம், ஆணவம் உள்ளிட்ட கெட்ட குணங்கள் நிரம்பியுள்ளன. இதை பக்தி என்னும் வெள்ளத்தை உள்ளே பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதையும் பெருக்கு என்னும் சொல் நமக்கு உணர்த்துகிறது. 

          ஆடிப்பெருக்கு அன்று துவங்கும் தொழில்கள் பலமடங்கு செல்வத்தை தரும் என்பது ஐதீகம். அதுபோல், மனதின் மாசைக் கழுவி, உள்ளத்தில் பக்தியை நிரப்பி வைத்து விட்டால் அன்பு பெருகி உலகமே திருந்தி விடும்.

நகை வாங்க கிளம்பலாமா!

         அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பலமடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு நன்னாள் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது.

மறக்காம கோலம் போடுங்க!

          ஆடிப்பெருக்கன்று மாலையில் திருவிளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் திருமகள் நித்யவாசம் செய்வாள். கோலத்தில் மாக்கோலம், இழைக்கோலம், புள்ளிக்கோலம், ரங்கோலி என்று எத்தனையோ வகை உண்டு. கோலத்தை"சித்ரகலா' என்பர். இதற்கு "சித்திர தாமரை போன்ற லட்சுமி' என்று பொருள்.

           என்னங்க? ஆடிப்பெருக்கின் பெருமையும்,வரலாறும் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.உங்களுக்கும் உறவினர்களுக்கும் ஆடித்திருவிழா நல்வாழ்த்துக்கள்... என PARAMESWARAN.C செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

01 ஆகஸ்ட் 2013

Tamilcube என்னும் தமிழ் கியூப் டிக்ஸ்னரி

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                        கொங்குத் தென்றல் வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்த பதிவில் அனைத்து மொழிகளுக்கான  மிகச்சிறந்த அகராதியான Tamilcube.com  என்னும் தமிழ்கியூப் டாட் காம் வலைத்தளத்தின் சிறப்பு பற்றி காண்போம்.பயன்பெறுவோம்..இந்த Tamilcube.com வலைதளத்தில்
   
                    (அ) ON LINE  INDIAN DICTIONARIES களான
                    (1)  ENGLISH TO TAMIL .,(2)ENGLISH TO HINDI., (3)ENGLISH TO TELUGU.,(4)ENGLISH TO KANNADA.,(5)ENGLISH TO MALAYALAM.,(6)ENGLISH TO MARATHI.,(7)ENGLISH TO BENGALI.,(8)ENGLISH TO GUJARATHI.,(9)ENGLISH TO BUNJABI.,(10)ENGLISH TO SANSKRIT.,(11)ENGLISH TO PALI.,(12)ENGLISH TO URUDU  ஆகிய மொழிகளுக்கான அகராதிகள் Tamilcube.com வலைத்தளத்தில் கிடைக்கின்றன.
  
           (ஆ) ON LINE  ASIAN  DICTIONARIES களான
                      (1) ENGLISH TO MALAI.,  (2) ENGLISH TO INDONESIAN., (3)ENGLISH TO SINHALA., (4)ENGLISH TO CHINESE., (5) ENGLISH TO THAI., (6)ENGLISH TO TAGLAG(Filipino)., (7)ENGLISH TO JAPANESE., (8)ENGLISH TO ARABIC..ஆகிய மொழிகளுக்கான அகராதிகள் Tamilcube.com  வலைத்தளத்தில் கிடைக்கின்றன.
   
        (இ) MOBILE TAMIL DICTIONARY அலைபேசிகளில் பயன்படுத்தும் வசதிகளை - ஐபோன்.,ஆன்டிராய்டு போன்.,ஐபேடு.,ஐபேடு டச் அல்லது பிளாக் பெர்ரி ஆகிய வகைகளுக்கு  Tamilcube.com வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

        (ஈ) LANGUAGE TRANSLATION / CONVERSION TABLE என்ற மொழிமாற்றிகளுக்கான
  (1) ENGLISH TO TAMIL ., (2)ENGLISH TO HINDI., (3)ENGLISH TO TELUGU., (4)ENGLISH TO KANNADA., (5)ENGLISH TO MALAYALAM., (6)ENGLISH TO NEPALI., (7)ENGLISH TO ORIYA., (8)ENGLISH TO  PUNJABI., (9)ENGLISH TO SINHALESE., (10)ENGLISH TO ARABICஆகிய  வசதிகளும் Tamilcube.com  வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

              (உ)  DOWN LOAD FREE BOOKS என புத்தகப்பிரியர்களுக்கான இலவச புத்தகங்களை,நாவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ள
          இலவச(1) தமிழ் புத்தகங்களும், (2)தமிழ் நாவல்களும், (3)தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களும், (4)தமிழ்ப்பாட தேர்வுத் தாள்களும்., மற்ற மொழிகளில் (5)HINDI BOOKS,(6)SANSKRIT BOOKS, (7)MARATHI BOOKS, மற்றும் அலைபேசிகளுக்கான (8)மின் புத்தகங்களும் கிடைக்கின்றன.
        
          (ஊ) HOROSCOPE என்னும் Astrology சோதிட நம்பிக்கையுள்ளவர்களுக்கு
            (1) தமிழில் சோதிடம்., (2)தமிழில் தினசரி ராசி பலன்., (3)தமிழில் வாரத்திற்கான  ராசி பலன்., (4)தமிழில் மாதத்திற்கான  ராசி பலன்., (5)தமிழில் தற்போதைய வருடாந்திர ராசி பலன் மற்றும் (6) இவ்வருடத்தின் குரு பெயர்ச்சி பலன் அறிந்துகொள்ளலாம். 
             மேலும் Tamilcube.com  வலைத்தளத்தில் (1)ஜாதகம் கணிக்கலாம்., (2)பஞ்சாங்கம் பார்க்கலாம்., (3)ராசி,நட்சத்திரம்,லக்னம் Calculate என்னும் கணக்கிடலாம்., (4)ஜாதகப் பிறப்பு அட்டவணை (BIRTH CHART) இலவசமாகப் பெறலாம். என சோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கான வசதிகள் உள்ளன.
         இவ்வாறு எண்ணற்ற வசதிகளைக்கொண்ட வலைத்தளம் நம்ம Tamilcube.com வலைத்தளமுங்க.பாருங்க,பயன் பெறுங்க...
                                                                               என பரமேஸ்வரன்.C /
                                                                                    செயலாளர், ''
                                                                                      சிபர்ஸ்ஆர்க்'' என்னும்
                                                                            நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                                                              சாலை பாதுகாப்பு சங்கம் -                                                                           தமிழ்நாடு.பதிவு எண் 26 / 2013 
                                                 நன்றிங்க.