07 ஆகஸ்ட் 2018

படமெடுக்கப்போறீங்களா?




1.     காட்சியியல் ஆழம்:
படத்தில் காட்சிகளில் உள்ள அனைத்து Depth-ம் ஒரு மாயை என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். நாம் இயல்பு வாழ்க்கையில் ஒரு காட்சியைப் பார்க்கிறோம். நம் கண்களிலிருந்து பார்க்கிறபொழுது, நாம் எதில் கவனம் செலுத்திப் பார்க்கிறோமோ அது துல்லியமாகவும், அதற்குப் பிந்தைய பகுதியும், முந்தைய பகுதியில் உள்ள பொருட்களும் மங்கலாகக் காட்சிதரும். அதுவே கேமராவில் படம்பிடிக்கிறபொழுதும் கடைப்பிடிக்கப் படுகிறது. அதாவது தட்டையான ஒரு பிம்பத்தில் முப்பரிமாணத் தோற்றத்தைக் கொண்டுவருவதற்காக Depth-ஐ பயன்படுத்துகிறோம். இது காட்சியில் ஒரு வசீகரத்தையும், பார்வையாளர்கள் எதைக் கவனிக்க வேண்டும் என்ற சமிக்ஞைகளையும் கொடுக்கிறது.

கதை சொல்லலில் இதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இதன் பலன் தெரியும். காட்சியில் ஆழத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. மேலும் நீங்கள் ஒளிப்பதிவு நுட்பங்களை அடுத்த நிலைக்கு நகர்த்த விரும்பினால்,  இதுபோன்ற சில தந்திரங்களை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.
Best Cinematography Techniques and TIps - The Depth Of Field Is Toyed With To Emphasize The Impact Of The Moment Of Terror In Jaws
’Jaws’ படத்தில், பயங்கரவாதத்தின் தாக்கத்தை வலியுறுத்த ‘Depth of field’-உடன் சிறு கேமரா அசைவும் பயன்படுத்தப்படுகிறது. இது ‘Dolly zoom’ எனப்படும்.

2.     போஸ்ட் புரொடக்‌ஷனில் பார்த்துக்கொள்ளலாம் என எதையும் ஒத்திப்போடாதீர்கள்:
சரி, இந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லலாம். சில நேரங்களில் இப்படிச் சொல்வது உங்களுக்கே கூட வேடிக்கையாக இருக்கும். தவிர்க்கமுடியாத பட்சத்தில்  இது பயன்பாட்டிற்கு வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷனில் பார்த்துக்கொள்ளலாம், எடிட்டிங்கில் சரி செய்துவிடலாம், கலர் கரெக்‌ஷனில் பார்த்துக்கொள்வோம் என்று ஒவ்வொரு காட்சியின் தரத்திலும் நீங்கள் சமரசம் செய்துகொண்டே வருவது நல்லதல்ல.
போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு ஒத்திப்போடும் மனநிலையைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
சிறந்த ஒளிப்பதிவு என்பது படப்பிடிப்புத் தளத்திலிருந்தும், லைட்டிங்கிலிருந்துமே உருவாகிறது. மாறாக, போஸ்ட் புரொடக்‌ஷனில் பயன்படுத்துகிற மென்பொருளிலிருந்து அல்ல. ஒளிப்பதிவு நுட்பங்கள் என்ற பட்டியலில் போஸ்ட் புரொடக்‌ஷனைக் கொண்டுவர முடியாது. நீங்கள் செய்திருக்கிற ஒளிப்பதிவு சிறப்பான முறையில் தோற்றம் தருவதற்கு அதனை ஒரு ஆதாரமாக வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், படப்பிடிப்புத்தளத்தில் எதை உங்களால் இயல்பாக உருவாக்க முடியவில்லையோ, அதனை போஸ்ட் புரொடக்‌ஷனில் மறுஉருவாக்க அதிக பணமும், நேரமும் செலவாகும். இதைத்தவிர்க்க,  படப்பிடிப்பைக் கவனமாகத் திட்டமிட வேண்டும் என்று அர்த்தம், ஒரு திறமையான ஷாட் லிஸ்டை உருவாக்குவது சரியான காட்சியை, ஷாட்டை ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும் என்பதை உறுதி செய்யும். அல்லது படப்பிடிப்பில் போதிய நேரம் கிடைக்கும் என்பதை நம்ப முடியாது. நான் இன்னும் துரிதமாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தால், ஸ்டோரி போர்டை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
இதற்கு நீங்கள் திரைப்பட முன் தயாரிப்பில் அதிக நேரத்தை செலவிட வேண்டும். இதனால், படப்பிடிப்பில் ஒரு காட்சிக்காக மண்டையை உடைத்துக்கொள்ளும் நேரம் குறைக்கப்படுகிறது. ஒரு படம் எப்படி வரவேண்டும் என்பதையே கூட ஸ்டோரிபோர்டின் மூலம் உருவாக்க முடியும். பின்னர் அதற்கே கூட சில மென்பொருட்கள் வந்திருக்கின்றன. அதைப் பயன்படுத்தியும் ஒரு திரைப்படத்தின் காட்சியமைப்புகளை படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன்னரே உங்களால் உருவாக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஸ்டோரிபோர்டில் காட்சி பார்ப்பதற்கு நன்றாக இருந்தால், படப்பிடிப்புத் தளத்தில் அது உருவாக்கப்பட்டு திரையில் பார்க்கும்பொழுதும் நன்றாகவே இருக்கும். ஒரு காட்சியின் முன் மாதிரியைத்தான் நாம் ஸ்டோரிபோர்டில் உருவாக்குகிறோம்.
ஒளிப்பதிவு நுட்பங்களில் உங்களின் நிபுணத்துவத்திற்காக நீங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயாரிப்பாளரின் பணத்தை நீங்கள் விரயம் செய்யாமலிருக்கும்பொழுது, அவர் உங்களை நேசிக்கத் துவங்குகிறார். ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷனில் குறைபாடுகளைத் திருத்துவதற்கு அதிகமான பணம் வசூலிக்கப்படுகிறது. வேறு வழிகள் இல்லாத பட்சத்தில் வேண்டுமானால் இதன் உதவிகளை நாடலாம்.

3.     சரியான குழுவை உடன் வைத்திருங்கள்:
படப்பிடிப்புத் தளத்தில் அதிகமான அனுபவம் பெற்ற மனிதராக நீங்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை… ஏனென்றால், மற்றொரு அதி அனுபவசாலியான மனிதர் உங்கள் படத்திற்காக வேலை செய்ய வந்திருக்கலாம். திரைப்படத்துறையின் பல்லாண்டுகால பழுத்த அனுபவம் வாய்ந்த அந்நபரை நீங்கள் உடன் வேலை செய்ய அழைத்திருக்கலாம். அதன்படி படப்பிடிப்புத்தளத்தில் உங்களுடன் வேலை செய்கிறார்.
ஆனால், நீங்களோ படப்பிடிப்புத் தளம் என்ற சூழ்நிலைக்கே முற்றிலும் புதியவர். என்ன செய்யப்போகிறோம்? எப்படி இந்தக் குழுவைச் சமாளிக்கப்போகிறோம்? எப்படி வேலை வாங்கப்போகிறோம்? போன்ற பல்வாறான பதட்டங்கள் எழுவது இயற்கையே. சினிமா என்பது குழு முயற்சியால் உருவாகிற ஒன்று. அதன்படியே உங்களுக்கும் ஒரு குழு கொடுக்கப்படுகிறது. நீங்கள் திறமையானவராக இருந்தாலும், படப்பிடிப்பு என்ற அனுபவம் உங்களுக்கு இல்லாமலிருப்பதே இப்போதைய ஒரு குறையாக இருக்கிறது. உங்களுக்குத்தான் அந்த அனுபவம் இல்லையே தவிர, உங்களுடன் இருப்பவர்கள் அந்த அனுபவத்தில் ஊறித்திளைத்தவர்கள். பின்பு எதற்காகக் கவலைப்பட வேண்டும்?
ஏதாவது ஒரு சிக்கல் நேர்ந்தால், சந்தேகங்கள் எழுந்தால் அந்த அனுபவசாலிகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் எல்லாவற்றையுமே சொந்தமாகக் கண்டுணர நேரம் கடத்தவேண்டியதில்லை.
ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைவதற்கு முன், வாசலிலேயே உங்கள் ஈகோ-வை உதறிவிட்டு வாருங்கள்.
யார் சொல்கிறார்கள் என்பதும், அவர் எப்படி நமக்கு அறிவுரை சொல்லலாம்? என்பதையும் விட அவர் சொல்கிற பொருளில் உண்மையுள்ளதா? என்பதைப் பாருங்கள். அது சரியெனில் ஏற்றுக்கொள்ளவும், இல்லையெனில் மறுக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அந்த யோசனையை முற்றிலும் புறக்கணிக்க வேண்டாம்.
அந்த மனநிலையை அடைவதற்கு உங்களிடம் தன்முனைப்பு என்ற நிலை இருக்கக்கூடாது.
4.     உங்கள் குழுவை வழிநடத்துங்கள்
திரைப்பட உருவாக்கத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான குறிப்பு என்பது சினிமா தொழில்நுட்பங்கள் பற்றியதல்ல, மனிதர்களை எப்படிப் பயன்படுத்துகிறோம், மக்கள் திறனை எப்படிக் கட்டுப்படித்தி வேலை வாங்குகிறோம் என்பதுதான்.
சிறந்த குழுவை நிர்வகிப்பதன் மூலம் தெளிவான, விரைவான முடிவுகளை உடனடியாக எடுக்க முடியும். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு வேலைகளை உருவாக்குகிறீர்கள் என்பதில் விழிப்போடு இருக்க வேண்டும்.
குழுவினர் பெரும்பாலும் வேலை செய்வதை மகிழ்ச்சியாகத்தான் உணர்வார்கள். ஒரு ஷாட் தயாராகிக்கொண்டிருக்கும்பொழுது, குழுவில் உள்ளவர்கள் உதாரணத்திற்கு லைட் மேனின் உதவி கூட மிகவும் முக்கியமானது. அவரும் ஆரம்பத்தில் சொன்ன இடத்தில் ஊக்கத்தோடு விளக்கைக் கொண்டுபோய் வைப்பார். ஆனால், ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அந்தக் கோணம் திருப்தியில்லாமல் போகும். எனவே லைட் இருந்த இடத்தை மாற்ற வேண்டும். இப்போது லைட் மேன் இடம் மாறுவார். இப்படியே தொடர்ந்து நடக்கிறபோதுதான் வேலையின் மீது ஒரு அலுப்பு உண்டாகிறது. எனவே, ஒளிப்பதிவாளராகிய உங்களுக்கும் தெளிவாக அன்றைக்கு எந்த ஷாட், எந்தக் கோணத்தில் எப்படிப் படமாக்கப் போகிறோம் என்று தெரிந்திருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களை மரியாதையாக  நடத்த வேண்டும். பொறுப்பான தலைவராக இருங்கள். தவறுகள் நடந்தால்கூட அதற்கான பழியை எப்போதும் அடுத்தவர்கள் மீது திருப்புவதையே குறிக்கோளாய்க் கொண்டிருக்காதீர்கள்.
திறமையான ஒளிப்பதிவாளர்கள், குழுவினரின் கண்களுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர்களே. ஏனென்றால், நல்ல ஒளிப்பதிவு என்பது, வேகமாக படப்பிடிப்புத் தளத்தை காட்சிக்குத் தயாராக அமைப்பது, அதற்குரிய நேரத்திற்குள் அந்த ஷாட்டை முடித்துவிடுவது.
StudioBinder போன்ற வசதிகளைப் பயன்படுத்தி யாருடன் வேலை செய்ய வேண்டும்?, என்ன வேலை? போன்ற அட்டவணைகளை உருவாக்க முடியும்.
நீங்கள் எவரையும் இழக்கவோ, மறந்துவிடவோ வாய்ப்பில்லை.
உங்கள் குழுவை நிர்வகிப்பதும், பயன்படுத்துவதும் கூட நல்ல ஒளிப்பதிவு உத்திகள் ஆகும்.

5.     எப்போதும் தயாராக இருங்கள்:
ஒருவேளை நீங்கள் ஒளிப்பதிவாளரின் வேலை படப்பிடிப்புத்தளத்தில் என்ன? என்பதைப் பற்றி சிலவற்றை அறிந்ததோடு, திரைப்படக் கல்லூரிகளிலிருந்து வெளியேறியிருக்கலாம்.
ஆச்சரியம்!
ஆனால், அது எப்போதும் அதன் பாதையிலேயே இருக்காது.
சில வேலைகளில் நீங்கள் சொந்தமாகப் பணியாற்ற வேண்டும். மின்சார சாதனங்களை இயக்குதல், இறுகப் பிடித்துக்கொள்ளுதல்…. தயாரிப்பு வடிவமைப்பாளர் என்று இந்தப் பட்டியல் இன்னும் நீளும்.
ஆக, நீங்கள் திரைப்படக் கல்லூரிகளில் இதுதான் ஒளிப்பதிவாளரின் வேலை என்று வரையறுத்துக்கொண்டதெல்லாமே, உதவாததாகிறது. படப்பிடிப்புத் தளத்தில் அனைத்து வேலைகளையும் நீங்கள் செய்திருக்கிற அனுபவம் இல்லாவிட்டாலும், அதெல்லாம் என்னென்ன வேலைகள் என்பதைப் பற்றிய புரிதல் உங்களிடத்தில் இருக்க வேண்டும்.
நீங்கள் வந்துதான் பூர்த்தி செய்யவேண்டும் என்ற கட்டாயம் இந்த வேலைகளில் இல்லை. யாரும் இதை உங்களிடம் நிர்ப்பந்திக்கப்போவதும் இல்லை.
ஆனால், இந்தச் செய்கைகளின் மூலம் எல்லோருடைய வேலைகளையும் உங்களால் புரிந்துகொள்ளவும், மதிக்கவும் முடியும்.
முடி மற்றும் மேக்கப் போடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். படப்பிடிப்புத்தளத்தில் தங்குதடையில்லாமல் நீரோட்டம் போல வேலைகள் தொடர்ந்து நடக்க வேண்டுமானால், நீங்கள் அங்கு வேலை செய்கிற அனைவருடனும் ஒத்திசைந்து பழக வேண்டும்.
அதைத் தவிர்த்து நீங்கள் ஒரு தீவு போலச் செயல்படுவது சிறந்ததல்ல.
எனவே, படப்பிடிப்பின் முழு செயல்முறையையும் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆள் இல்லாதபொழுது, அதனை நிரப்பவும் தயாராகயிருங்கள்.

6.     விலையுயர்ந்த கேமராவால் மட்டுமே நல்ல காட்சி உருவாவதில்லை
சில விஷயங்கள் முறியடிக்கப்பட வேண்டும். நல்ல விலையுயர்ந்த கேமராக்கள் வைத்திருந்தால்தான் வேலைகள் உங்களைத் தேடி வரும் என்ற நினைப்பே தவறு.
நீங்கள் ஒரு ஒளிப்பதிவாளர், மாறாக விலையுயர்ந்த கேமராக்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர் அல்ல.
சிறந்த ஒளிப்பதிவாளர்களிடம் எந்தக் கேமராவைக் கொடுத்தாலும் அதிலிருந்து ஒரு உன்னதமான காட்சியை உருவாக்கிக்காட்டுவார்கள். எந்தக் கேமராவிலிருந்தும் சிறந்த ஒளிப்பதிவைக் கொண்டுவந்துவிடுவார்கள்.
இந்தச் சினிமா, ஒளிப்பதிவாளர்களாகிய உங்களுக்கு சில வரம்புகளை நிர்ணயிக்கிறது. நீங்கள் ஏற்கனவே கற்று வைத்திருக்கிற திரைப்பட நுணுக்கங்கள், ஒளிப்பதிவு நுட்பங்கள் உங்கள் சட்டைப்பையில் இருக்கின்றன. எனவே, அந்த வரம்புகளுக்குட்பட்டு மிகச்சிறந்த பிம்பங்களை நீங்கள் உருவாக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

சிறந்த ஒளிப்பதிவாளராக அறியப்படுகிற பாலுமகேந்திராவிடம், யாராவது “இந்தப் படத்தை எந்தக் கேமராவில் எடுத்தீர்கள்?” என்று கேட்டால், அவரது பதில் இப்படித்தான் இருக்கும். “ஒரு நல்ல கவிதையைப் படிக்கிறோம். அதை எந்தப் பேனாவில் எழுதினீர்கள்? என்று யாராவது கேட்பார்களா? ஆனால், சினிமாவில் மட்டும் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.  பேனா ஒரு ஊடகம். அதை வைத்து கவிதை எழுதுகிறோம். அதேபோல கேமரா ஒரு ஊடகம். அதைவைத்து படமெடுக்கிறோம். நீங்கள் எழுதுவது காவியமாக இருக்கையில் அதை டாய்லெட் பேப்பரில் எழுதினாலும், காவியம்தான்” என்பார்.
உபகரணங்கள் வரும்…, போகும்…. எனவே, அதை அதிகமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் நிபுணத்துவம் மற்றும் படப்பிடிப்புத்தளத்தில் திறமை மட்டுமே சிறந்த தருணங்களை உருவாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...