31 ஜூலை 2018

நல்வழி கூறும் நீதி.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
விளக்கம்: 
அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.

===============================================
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து
விளக்கம்: 
ஆறு வரும் வழியில் உண்டாக்கும் மேடும் பள்ளம் போல, நம்முடைய செல்வம் ஒருநாள் அதிகமாகும் அல்லது குறையும். பூமியில் வாழும் மனிதர்களே இதை உணர்ந்து உங்களிடம் செல்வம் இருக்கும் போதே பசி என்று வந்தவருக்கு அன்னம் இடுங்கள், தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள், நீங்கள் செய்த தர்மம் உங்களின் தலை காக்கும், அதுவே உங்கள் உயிர் உயரும் உபாயம் ஆகும்.

==========================================

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்


விளக்கம்: 
நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.

===============================================
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது
ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிரே நீ கேட்க்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். நாள் தவறாமல் ஒவ்வொரு வேலையும் உன்னையை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.
=====
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால
நாழி அரிசிக்கே நாம்

விளக்கம்: 
பிறருக்கு சலாம் போட்டும், அடுத்தவரிடம் சென்று இரங்கி உதவி கேட்டும், உறவுகளை விட்டு அகலமான கடல் கடந்தும், தன் இயல்பான பழக்க வழக்கங்களை மாற்றி தனக்கு உதவி புரியும் மனிதரோடு இணைந்தும், அவர்களை நல்லவர், வல்லவர் என்று பொய்யாகப் புகழ்ந்து பாடியும் வாழ்வது இந்த பாழாய்ப்போன வயிறால் தான், இந்த ஒரு சான் வயிறை நிரப்ப உள்ள நாழி அரிசி சோறு பெறுவதற்காக இத்தனை பாடு பட வேண்டி உள்ளது.

===========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...